Saturday, February 08, 2014

புலிவால் - சினிமா விமர்சனம்

 
தினமலர் விமர்சனம்


'டிராபிக் ஜாம்' மலையாள திரைப்படம், 'சென்னையில் ஒரு நாள்' தமிழ்படமாக இங்கும் சக்கைபோடு போட்டதைத் தொடர்ந்து ஆர்.ராதிகா சரத்குமாரும், லிஸ்டின் ஸ்டீபனும் மீண்டும் இணைந்து மலையாளத்தில் 'சப்பாக் குரிச்' எனும் பெயரில் பெரும் வெற்றி பெற்ற படத்தை ரீ-மேக் செய்து 'புலிவாலாக' தயாரித்து தந்திருக்கின்றனர். (இது கொரிய மொழியில் 'போலீஸ்யூத்' என்ற பெயரிலும் இவர்கள் எல்லோருக்கும் முன்பாக சக்கைபோடு போட்டது தனிக்கதை!)

கதைப்படி பெரும் பணக்கார வீட்டுப்பிள்ளை கார்த்திக் எனும் பிரசன்னாவுக்கு, பவித்ரா எனும் இனியாவுடன் திருமணம் நிச்சயிக்கப்படுகிறது. இத்தருணத்தில் கொஞ்சம் சபலபுத்திக்காரரான கார்த்திக் எனும் பிரசன்னா உடன் பணிபுரியும் மோனிகா எனும் ஓவியாவிடம் தனக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்ட தகவலையே சொல்லாமல் கட்டில் காதல் களியாட்டம் நடத்தி விடுகிறார். அதுசமயம் சும்மா இருக்காமல் ஒரு கிரேஸூக்கு அதை தன் விலை உயர்ந்த செல்போனிலும் படமாக்கி வைத்து கொண்டு அவ்வப்போது பார்த்து மகிழும் பிரசன்னா, ஒருநாள் தன் செல்போனை தொலைக்க, அது கிட்டி சூப்பர்மார்க்கெட் ஒன்றில் சேல்ஸ்மேனாக வேலைபார்க்கும் காசி எனும் விமலின் கையில் கிடைக்கிறது. அந்த போனை சந்தோஷமாக தன் வசம் வைத்துக் கொண்டு பிரசன்னாவை சுத்தலில் விடுகிறார் விமல்!

ஒருகட்டத்தில் அந்த செல்போனை அவசரமாக சார்ஜ் செய்ய தனக்கு தெரிந்த செல்போன் கடையில் கொடுக்கிறார் விமல். அதில் இருக்கும் பிரசன்னா - ஓவியா செக்ஸ் வீடியோ ஏற்றப்பட்டு உலகெங்கும் ஒலி-ஒளி பரப்பப்பட, விஷயம் தெரிந்ததும் டென்ஷனாகும் பிரசன்னா விமலைதேடி பிடிக்க துரத்துகிறார். ஓவியா தற்கொலை முயற்சிக்கிறார். தன் காதலி செல்வி எனும் அனன்யாவுடன் தன் செயலுக்கு வருந்தும் காசி-விமல், கார்த்திக்-பிரசன்னா கையில் சிக்கினாரா?, மோனிகா-ஓவியா உயிர்பிழைத்தாரா.?! இல்லையா.?! என்பது வித்தியாசமாகவும், விறுவிறுப்பாகவும் படமாக்கப்பட்டிருக்கும் மீதிக்கதை!

காஸ்ட்லி இடத்து பையன் கார்த்திக்காகவே வாழ்ந்திருக்கிறார் பிரசன்னா! கார்த்திக் எனும் பெயருக்கேற்றபடியே சபலபுத்திக்காரராக அல்லல்படுவதிலும் அலட்டிக் கொள்ளாமல் நடித்திருக்கிறார் பலே!

காசி எனும் விமல், யதார்த்தமான சூப்பர் மார்கெட் சேல்ஸ்மேனாக வழக்கம்போலவே ஸ்கோர் செய்திருக்கிறார். நடுத்தர வர்க்கத்து இளைஞரின் காஸ்ட்லீ செல்போன் ஆசையை கனகச்சிதமாக பதிவு செய்திருப்பதற்காக பாரட்டலாம் மனிதரை!

அனன்யா, ஓவியா, இனியா மூவரில் ஓவியா 'அந்தமாதிரி' காட்சிகளில் செம ஸ்கோர் செய்திருக்கிறார் என்றால் அனன்யா, இனியா இருவரும் ஹோம்லி குத்துவிளக்குகளாக மின்னியிருக்கின்றனர்.

தம்பி ராமைய்யா, சூரி இருவரும் காமெடியில் கலக்கி இருக்கின்றனர். நோஜன் கே.தினேஷின் அழகிய ஒளிப்பதிவு, என்.ஆர்.ரகுநந்தனின் இனிய இசை உள்ளிட்ட ப்ளஸ் பாயிண்ட்டுகளுடன் ஜி.மாரிமுத்துவின் எழுத்து-இயக்கத்தில் ஒருசில லாஜிக் மிஸ்டேக்குகள்(குறிப்பாக பிரசன்னா தன்னை தேடி வருவது தெரிந்தும் தன்னிடம் உள்ள அவரது செல்போனை ஆப் செய்யாமல் வைத்திருக்கும் விமல்... போன்று...) இருந்தாலும் ''புலி வால்'' - ''வெற்றி வாள்'' என்றால் மிகையல்ல!
  • நடிகர் : விமல், பிரசன்னா
  • நடிகை : ஓவியா, அனன்யா,
  • இயக்குனர் :ஜி.மாரிமுத்து

thanx - dinamalar
 

3 comments:

கதம்ப உணர்வுகள் said...

அருமையான விமர்சனம்..

கதம்ப உணர்வுகள் said...

உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது, வாழ்த்துகள்.

மேலும் விவரங்களுக்கு கீழுள்ள இணைப்பை சொடுக்கவும் நன்றி.

வலைச்சர தள இணைப்பு : http://blogintamil.blogspot.com/2014/02/blog-post_14.html

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம

இன்று வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள் சென்று பார்வையிட இதோமுகவரி

http://blogintamil.blogspot.com/2014/02/blog-post_14.html?showComment=1392345054173#c3645696457445373131

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-