Thursday, August 08, 2013

the conjuring - சினிமா விமர்சனம்


ஹாலிவுட்டில் ஹாரர் பட்டியலில் வருகின்ற சமீபத்திய திரைப்படங்கள் யாவும் முகம் சுளிக்க வைக்கும் கோரக் காட்சிகள், ஆபாசக் காட்சிகளைக் கொண்டுதான் திகழ்கின்றது. விஎஃப்க்ஸிர்க்கும், மேக்கப்பிற்கும் முக்கியத்துவம் தரும் அளவிற்கு கதைக்கோ, கதை மாந்தர்களுக்கோ அளிக்கப்படுவதில்லை.  சமீபத்தில் வெளியாகிய ‘ஈவில் டெட்(2013)’, ‘ஹேட்செட்-3’, ‘டெக்ஸ் செயின்’, ‘சா,’ ‘மாஸெகர்’ இதற்கொரு சாம்பிள்.

திரைக்கதையை ஒளி-ஒலி அமைப்பை சாதுர்யமாக கையாண்டு ரசிகர்களை திகிலடையச் செய்வதில் பலே கில்லாடி ‘ஜேம்ஸ் வான்’.  இவர் இயக்கிய ‘சா’, ‘இன்சீடியஸ்’, ‘டெட் சைலன்ஸ்’ முதலிய படங்கள் கதையிலும் கையாளப்பட்ட விதத்திலும் தனித்தன்மை பெற்று விளங்கியது. 


உண்மை சம்பவத்தின் அடிப்படையில் அமைந்ததாக எடுக்கப்பட்டுள்ள ‘தி கான்ஜுரிங்’ திரைப்படமோ ‘எக்ஸார்ஸிஸம்’, ‘இன்சீடியஸ்’, ‘போல்டர் கீஸ்ட்’ முதலிய படங்களின் உட்டாலக்கடியாகத் தான் திகழ்கின்றது.  என்ன ஒரு வித்தியாசம் முந்தைய படங்களில் நிகழ் காலத்தில் உரைக்கப்பட்ட கதை இப்படத்தில் பீரியாடிக் நிகழ்வாக சித்தரிக்கப்பட்டுள்ளது.



புதிதாக ஒரு பெரிய வீட்டிற்குள் குடியேறும் மிடில் ஏஜ் தம்பதியினர் அவர்களின் ஐந்து மகள்கள்.  வீட்டிற்குள் நடக்கும் ஒவ்வொரு நிகழ்வுகளும் இவர்களை ஸ்தம்பிக்கச் செய்கிறது.  பாதாள அறை, மரக் கப்போர்டின் பின் ஒளிந்திருக்கும் பாதை, இப்படி வீட்டைச் சுற்றி பல மர்மங்கள். வீட்டிலிருக்கும் நாய் இறக்கிறது.  அடுத்தடுத்து வீட்டிலுள்ள அனைவரும் பல திக் திக் அனுபவங்களை சந்திக்கின்றனர்.  கண்டிப்பாக வீட்டில் அமானுஷ்ய சக்தி ஒளிந்திருப்பதை வீட்டார்கள் உணர, ஹாரர் ஹன்டர், லாரைன் மற்றும் எட்வாரன் தம்பதியினரின் துணையை நாடுகின்றனர்.

வீட்டிற்கு வந்து ஆய்வு செய்யும் இத்தம்பதியினர், வீட்டிலுள்ள மனிதர்கள் மீது அமானுஷ்ய சக்திகளின் தடம் பதிந்துள்ளதாகவும் இவர்கள் வீட்டை விட்டு வெளியேறினாலும் அது இவர்களை விடாது என அதிர்ச்சி அடைய வைக்க, மேலும் இதற்கு ஒரே விடை எக்ஸார்ஸிஸம் தான் ஆனால், இதன் முடிவுகள் விபரீதமாக அமையும் என எச்சரிக்கின்றனர். கடைசியில் பேயை விரட்டினார்களா, குடும்பம் தப்பித்ததா என்பது மீதம்.

மனித நடமாட்டம் குறைந்து காணப்படுகின்ற ஒரு கிராமம். அங்கே ஒரு நதி. அதன் அருகே பெரிய ஆலமரம், சுற்றி நிசப்தம். இந்த சூழலில் அமைந்திருக்கும் ஒரு பூத் பங்களா.  போதாக்குறைக்கு 1970ல் நடக்கும் கதையென்பதால் விஞ்ஞான ரீதியில் பெரிய தொலைத் தொடர்பும் அமையப் பெற முடியாத ஒரு சூழல். கதைக்கேற்ற கதைக்களத்தை அமைத்ததிலேயே ‘ஜேம்ஸ் வான்’ முதல் வெற்றி பெறுகிறார்.



பேய் வரும் காட்சியை விட, அதற்கு கொடுக்கப்படுகின்ற பில்டப் காட்சிகள் தான் திகிலாக அமைந்துள்ளது.  முகமெங்கும் வெள்ளை நிற பெயின்ட் அடித்து வருகின்ற பேயைப் பார்க்கும் போது சிரிப்பு எழுகின்றது.

படத்தில் அமையப் பெற்றிருந்த கலர் டோனே படத்திற்கு பெரிய பலம்.  யாவரும் நலம் திரைப்படத்தில் காணப்பட்ட ஒரு விதமான டார்க் வைட் டோனில் படம் முழுவதும் அமைந்துள்ள விதம், தேவையற்ற ஆப்ஜெட்களின் மீது மனதை சிதறடிக்காமல் கதையோடு தங்க வைக்கிறது. ‘ஜேம்ஸ் வான்’ இயக்கிய அனைத்து பேய் படங்களிலும் இதைப் போன்ற நிழற்படம் அமைந்திருக்கும்.

படத்தில் வரும் பல காட்சிகள் ஜேம்ஸ் வான் முன்பு இயக்கிய ‘இன்சீடியஸ்’ திரைப்படத்தின் கூடுதல் பிம்பமாக விளங்குகிறது.  வீட்டிற்குள் பேய் இருப்பதை உணர்ந்து நாய் குரைப்பது, ஆங்காங்கே கதவு டப் டப் என்று அடித்துக் கொள்வது, தொலைக் காட்சி தானாக இயங்குவது இதைப் போன்று பழக்கப்பட்ட சில க்ளீச்சே காட்சிகள் அமைந்திருந்தாலும், படமாக்கிய விதத்திலும், கதாபாத்திரங்களின் நடிப்பிலும் ‘தி கான்ஜுரிங்’ வேறுபட்டு நிற்கிறது.

மொத்தத்தில் தேவையற்ற ரத்த கோரங்களோ, ஆபாசமோ திணிக்கப்படாமல் ரசிகர்களை சீட்டின் நுணியில் அமர வைத்து அலற வைக்கும் ப்யூர் ஹாரர். வெகு நாளைக்குப் பிறகு ஒரு நல்ல பேய் படம் பார்த்த திருப்தியைத் தருகின்றது.


thanx - dinamalar


0 comments: