Sunday, August 04, 2013

ஈரோடு - புத்தக திருவிழா - 2013


ஈரோட்டில், மக்கள் சிந்தனைப் பேரவை சார்பில், புத்தக திருவிழா நேற்று துவங்கியது. கலெக்டர் சண்முகம் தலைமை வகித்தார். மக்கள் சிந்தனை பேரவை தலைவர் ஸ்டாலின் குணசேகர் வரவேற்றார். எஸ்.கே.எம்., மயிலானந்தன் வாழ்த்திப் பேசினார்.


மக்கள் சிந்தனையின், ஒன்பதாவது புத்தகத் திருவிழாவை, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சதாசிவம் துவக்கி வைத்தார். வரும், 14ம் தேதி வரை, 12 நாட்களுக்கு, 225 அரங்குகளில் புத்தகங்கள் விற்பனை நடக்கிறது.


அதில், 150 தமிழ்புத்தக அரங்கு, 68 ஆங்கில புத்தக அரங்கு, 17 கல்வித் குறுந்தகடு அரங்குகள் உள்ளன. கடந்தாண்டை போலவே, உண்டியல் திட்டம், அலமாரித் திட்டம், தொழிலாளர்கள் புத்தகம் வாங்கும் திட்டம் ஆகியவற்றுடன், படைப்பாளிகள் மேடை, பழங்கால முதல்பதிப்பு புத்தக கண்காட்சி ஆகியவை வைக்கப்பட்டுள்ளது.


வாசகர்கள் வாங்கும் புத்தகங்களுக்கு, பத்து சதவீதம் தள்ளுபடி, நூலகம் மற்றும் கல்வி நிறுவனங்கள் வாங்கும் புத்தங்களுக்கு கூடுதல் தள்ளுபடியில் புத்தகங்கள் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. துவக்க நிகழ்ச்சியான நேற்று, ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று, அரங்குகளை சுற்றிப்பார்த்தனர்.நல்ல நூல்களே; நல்ல நண்பர்கள்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி

 

 

அறிவை மேம்படுத்தும் நல்ல நூல்களே, நல்ல நண்பர்கள் என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.சதாசிவம் தெரிவித்தார். 


மக்கள் சிந்தனைப் பேரவை சார்பில் ஈரோடு வஉசி பூங்கா மைதானத்தில் சனிக்கிழமை தொடங்கிய புத்தகத் திருவிழாவை துவக்கி வைத்து, நீதிபதி பி.சதாசிவம் பேசியது:


அரசு உயர்நிலைப் பள்ளியில் தமிழ் வழியில் படித்தேன். சட்டம் பயிலும்போது ஆங்கிலம் அவசியம் என்பதை உணர்ந்துக் கொண்டேன். அதனால், ஆங்கில நாளிதழ்களை அதிகம் படித்து அறிவை வளர்த்துக் கொண்டேன். 


வழக்கறிஞராக 1973-ல் பதிவு செய்து கொண்டபோது, உயர்நீதிமன்றங்களில் வழக்கறிஞர்கள் ஆங்கிலத்திலேயே வாதாட வேண்டும். தீர்ப்புகளும், ஆங்கிலத்திலேயே வழங்கப்பட்டன. சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்தபோது, திடீரென பஞ்சாப் தலைமை நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டேன். எனது மகனுக்கு திருமணம் நிச்சயம் செய்யப்பட்டிருந்த நிலையிலும், உத்தரவு கிடைத்த மறுநாளே பதவியேற்றுக் கொண்டேன். 


கடமை தவறாமைக்கு கிடைத்த வெகுமதியாக உச்சநீதிமன்ற நீதிபதி பதவி கிடைத்தது. அரசு அலுவலர்களாக இருந்தாலும், மாணவர்களாக இருந்தாலும், கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை எங்கும் பணியாற்றத் தயாராக இருக்க வேண்டும். விழாக்களில் சால்வை, மாலை போடுவதைத் தவிர்த்து பரிசாக புத்தகங்களை அளிக்க வேண்டும். 


சட்டக் கல்லூரி மாணவர்களுக்கு நான் இந்திய அரசமைப்புச் சட்ட புத்தகத்தையே பரிசாக வழங்குவேன். நல்ல நூல்களே, நல்ல நண்பர்கள். மாணவர்கள் புத்தகத்தையும்,  பெற்றோருக்கு அடுத்து ஆசிரியர்களையும் மதித்து நேசிக்க வேண்டும். உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவி கிடைத்தபோது, எனக்கு பாடம் கற்பித்த ஆசிரியர்களிடம் ஆசி பெற்றேன். 


காலம் கடந்த நீதி, இறந்த நீதி என்பார்கள். நீதிமன்றங்களில் பல லட்சம் வழக்குகள் நிலுவையில் உள்ளன. இது தவறில்லை என்றாலும், மக்கள் மத்தியில் விழிப்புணர்வு குறைவாக உள்ளது. சாதாரண வழக்குகளை லோக் அதாலத் எனப்படும் மக்கள் நீதிமன்றங்கள் மூலமாக தீர்க்கலாம். 


தற்போது பெண்கள், சிறுவர்கள் தொடர்பாக வழக்குகள் அதிகளவில் வருகின்றன. தலைமை நீதிபதியாக பதவியேற்ற இரு வாரத்தில், வழக்குகள் குறைக்க நடவடிக்கை எடுத்து வருகிறேன். உயர்நீதிமன்ற, மாவட்ட நீதிபதிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பி ஒரு வழக்கை எடுத்தால், அதனை முடித்துவிட்டு அடுத்த வழக்குக்கு செல்ல வேண்டும் என அறிவுறுத்தியுள்ளேன். 


30 நாளில் எத்தனை வழக்குகள் முடிக்கப்பட்டுள்ளது என தகவல் தர வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளேன். மாவட்ட நீதிமன்றங்கள் கூடுதலாக தேவைப்பட்டால், மத்திய சட்ட அமைச்சகத்துக்கு தெரிவித்து நடவடிக்கை எடுக்கப்படும். 


மக்கள் நீதிமன்றங்களில் இருவர் அமர்ந்து நேருக்கு நேர் பேசி வழக்குகளின் வெற்றிக்கான அளவுகளைத் தெரிவித்து, சமாதானமாக செல்வதன் மூலம் வழக்குகளின் எண்ணிக்கையைக் குறைக்கலாம். வழக்குத் தொடர்ந்த இருவரும் சமாதானமாகச் சென்று தீர்க்கப்படும் வழக்குகளுக்கு மேல்முறையீடு கிடையாது என்றார்.



: ஈரோட்டில் நடந்த புத்தக திருவிழா துவக்க விழாவில், பத்திரிகை சுதந்திரம் குறித்து பேசினார்.

ஈரோட்டில், மக்கள் சிந்தனைப் பேரவையின் சார்பில், புத்தக திருவிழா துவங்கியது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சதாசிவம், புத்தக திருவிழாவை துவக்கி வைத்து பேசியதாவது:

என் கிராமத்தில் உள்ள அரசுப் பள்ளியில் படித்தேன். உயர் கல்வியாக சட்டப்படிப்பு பயின்ற போது, ஆங்கில அறிவை வளர்த்துக் கொள்ள, ஆங்கில தினசரி பத்திரிகைகளை படித்தேன்.
சென்னை உயர்நீதிமன்றத்தில், 11 ஆண்டுகாலம் பணியாற்றிய போது, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியிடம் இருந்து, தொலைபேசியில் அழைப்பு வந்தது. அவர், "உங்களை பஞ்சாப், ஹரியானா மாநிலத்தின் சண்டிகர் உயர்நீதிமன்றத்துக்கு, இடமாற்றம் செய்துள்ளேன், என்றார். எவ்வித மறுப்பும் தெரிவிக்காமல், நான் சண்டிகர் உயர்நீதிமன்றத்தில் பணியை தொடர்ந்தேன்.
சண்டிகரில் பணியாற்றிய போது, "ட்ரைப்பூ' என்ற தினசரி பத்திரிகையில், நான், சண்டிகரின் தலைமை நீதிபதியாக பொறுப்பேற்க போவதாக செய்தி வெளியிடப்பட்டதால், நான் அதிர்ச்சி அடைந்தேன். அப்போது, அந்த செய்தி வெளியிட்ட நிருபரை அழைத்து வர உத்தரவிட்டேன்.

என்னை சந்தித்த டிரைப்பூ பத்திரிகையின் நிருபரிடம், இந்த செய்தி உங்களுக்கு எப்படி வந்தது என கேட்டேன். அதற்கு அவர், "எங்களுடைய தில்லி ஏஜென்ஸிகள் மூலம் தெரிந்தது' என்றார். அதற்கு மேல், அவரிடம் கேட்க எனக்கு உரிமையில்லை. அது பத்திரிக்கையாளர்களுக்கு உள்ள சுதந்திரம்.

பூங்கொத்து, சால்வை, விலை உயர்ந்த பொருட்களை, நிகழ்ச்சிகளில் வழங்குவதை விட, புத்தகங்களை வழங்குங்கள்.

வீடுகள், ஊர்கள் தோறும் நூலகங்கள் இருக்க வேண்டும். தாய், தந்தைக்கு அடுத்தப்படியாக உள்ளவர் ஆசிரியர். எவ்வளவு பெரிய பதவியில் இருந்தாலும், அவர்களுக்கு மரியாதை செய்ய வேண்டும், என்றார்.

மக்கள் சிந்தனைப் பேரவைத் தலைவர் ஸ்டாலின் குணசேகரன், எக்.கே.எம்.மயிலானந்தன், நீதிபதிகள், வக்கீல்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.



விழாவுக்கு, ஆட்சியர் வே.க.சண்முகம் தலைமை வகித்தார். பேரவைத் தலைவர் த.ஸ்டாலின் குணசேகரன் அறிமுகவுரையாற்றினார். தேசிய நல விழிப்புணர்வு இயக்கத் தலைவர் எஸ்கேஎம்.மயிலானந்தன் வாழ்த்துரை வழங்கினார். தொடர்ந்து 12 நாள்கள் நடைபெறும் இக் கண்காட்சியில் மொத்தம் 225 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.




நன்றி-தினமலர் , தினமணி , மக்கள் சிந்தனைப்பேரவை

0 comments: