Sunday, July 07, 2013

துள்ளி விளையாடு - சினிமா விமர்சனம்

 
தினமலர் விமர்சனம்


‘பிரியமுடன்’, ‘ஜித்தன்’ உள்ளிட்ட படங்களை இயக்கி இருக்கும் வின்சென்ட் செல்வா இயக்கத்தில் புதுமுகங்கள் நடிக்க வெளிவந்திருக்கும் படம்தான் ‘துள்ளி விளையாடு’.


கதைப்படி, அறிமுகநாயகர் யுவராஜுக்கு பெரிய தொழில் அதிபர் ஆகவேண்டும், அவரது நண்பர்களான ‘பரோட்டா’ சூரிக்கு பிரபல அரசியல்வாதி ஆகவேண்டும். சென்ட்ராயனுக்கு பெரும் நடிகர் ஆக வேண்டும் என்பது தான் லட்சியம், ஆசை, கனவு, குறிக்கோள் இப்படி எல்லாம்! ஆனால் வெட்டி ஆபிஸர்களான மூவராலும் அவர்கள் நினைத்ததை எல்லாம் எப்படி அடையமுடியும்?! முடியவில்லை...


 ஆனால் அதற்கும் குறுக்கு வழியில் ஒரு யோகம், ஒரு நல்ல நேரம் வருகிறது! அதாகப்பட்டது, லோக்கல் அரசியல்பிரபலம் ஜெயப்பிரகாஷ், தேர்தலில் ஜெயிப்பதற்காக தன் வீட்டில் பதுக்கி வைத்திருக்கும் 20 கோடியை தன் வீட்டிற்கு வருமான வரித்துறை அதிகாரிகள் ‌ரெய்டு ‌வரஇருப்பது தெரிந்ததும், ஒரு வாடகை காரை எடுத்து அதில் மொத்த பணத்தையும் பதுக்கி, அதற்கு நம் அறிமுக நாயகர் யுவராஜை டிரைவராக்கி ஊர் ஊராக சுற்ற விடுகிறார். 




அதை மோப்பம் பிடிக்கும் காமெடி வில்லன் பிரகாஷ்ராஜ் கோஷ்டி, ஹீரோ யுவராஜை இரண்டு தட்டு தட்டி விட்டு யாருடைய பணம் எனத் தெரியாமலே ஜெபியின் பணத்தை கொள்ளை அடிக்கிறது. அந்தப் பணத்தை ஜெயப்பிரகாஷுக்கே தேர்தல் நிதியாக கொடுக்க முனையும்போது அது ஜெபியின் பணம் எனத் தெரியவருவதுடன் ஜெபி காரில் கொடுத்துவிட்டது 20 கோடி தன் ஆட்கள் கொள்ளை அடித்தது வெறும் 2 கோடி என்பதும் மீது 18 கோடியை ஆக்டிங் டிரைவர் யுவராஜ் அடித்து போய்விட்டதும் பிரகாஷ்ராஜுக்கு தெரிய வருகிறது! 



இதை ஜெபி எனும் ஜெயப்பிரகாஜ் நம்ப மறுக்கிறார். பிரகாஷ்ராஜ் அன்ட் கோவினர் யுவராஜை தேடிகின்றனர். யுவராஜ் தன் நண்பர்கள் சூரி, சென்ட்ரயனுடன் ராஜஸ்தானுக்கு எஸ்கேப் ஆகிறார். அங்கு கதாநாயகி தீப்தியை சந்திக்கும் யுவராஜ். காதலில் விழுகிறார். யுவராஜ் அண்ட் கோவினரின் லவ்வும் லட்சியமும் நிறைவேறியதா?! பிரகாஷ்ராஜ் - ஜெ.பி.கோஷ்டியிடம் சிக்கி பியூஸ் போனார்களா?!  என்பது ‘துள்ளி விளையாடு’ படத்தின் வித்தியாசமும் விறுவிறுப்புமான மீதிக்கதை!

யுவராஜ் கிராமத்தானாக ஓ.கே., கேடி, கில்லாடியாக இன்னும் நிறைய படிக்கணும் பாஸ்! அறிமுக நாயகி தீப்தி - திருப்தி என்றாலும் படம் முழுக்க இல்லாததும், அவர் பண்ணும் பம்மாத்து லவ்வும் குறை!


‘பரோட்டா’ சூரி, ‘பொல்லாதவன்’ சென்ட்ராயன், ஜெயப்பிரகாஷ் என ஏகப்பட்ட நடிகர்கள் இருந்தும் எல்லோரையும் தூக்கி சாப்பிட்டு விடுகிறார் காமெடி வில்லன் பிரகாஷ்ராஜ். எந்த சூழலிலும் அவர் இந்திப் பாடல்களை ரசிக்கும் விதமும், ப்ளாஷ் பேக் காதலில் லயிக்கும் விதமும் செம காமெடி!

ஸ்ரீகாந்த் தேவாவின் இசை, எஸ்.கே. பூபதியின் ஒளிப்பதிவு உள்ளிட்ட ப்ளஸ் பாயிண்ட்டுகள் வின்சென்ட் செல்வாவின் இயக்கத்திலும் இருந்திருந்ததென்றால் "துள்ளி விளையாடு" துவண்டு விழுந்திருக்காது!

ஆக மொத்தத்தில் ‘துள்ளி விளையாடு’ வித்தியாசமான கதையில் "துள்ளி விளையாடி" விபரீதமான வசனங்கள் மற்றும் காட்சியமைப்புகளில் "துவண்டு விழுந்திருக்கிறது!"


  • நடிகர் : யுவராஜ்
  • நடிகை : தீப்தி
  • இயக்குனர் :வின்சென்ட் செல்வா
 a

thanx - dinamalar

1 comments:

'பரிவை' சே.குமார் said...

துள்ளி விளையாடுக்கு உங்க விமர்சனம் எப்போது?