Thursday, June 13, 2013

மாசாணி - சினிமா விமர்சனம்(தினமலர்)



இன்னமும் இளமையாகவே தெரியும் ராம்கிக்கு ரீ-என்ட்ரி தந்திருக்கும் படம்! கூடவே அவருக்கு இனியாவை ஜோடியாக்கி இருக்கும் திரைப்படம்! மாஜி நாயகி இன்றைய ஆந்திர அரசியல்வாதி ரோஜாவை, ராம்கிக்கு அண்ணியாக்கியிருக்கும் படம், "கல்லூரி" அகிலுக்கு மறுஅவதாரம் தந்திருக்கும் திரைப்படம், பேய்படம், ஆவி கதை, இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்!


கதைப்படி, அந்த ஊர் கோயிலில் மூலவர் சிலை முழுமை பெறாமல் இருக்கிறது. உற்சவருக்கு அபிஷேகம், ஆராதனை நடக்கிறது! முற்றுபெறாமலும், முழுமையடையாமலும் இருக்கும் மூலவர் சிலையை முழுமை பெற செய்ய வருபவர்கள், சிற்பிகள் எல்லாம் பேய் அடித்த மாதிரி, பிரம்மை பிடித்த மாதிரி தெறித்து ஓடுகின்றனர் காரணம் "மாசாணி". 


சாமி சிலை செய்ய வருபவர்களையும், கோயில் அர்ச்சகர்ளையும் துரத்தி அடிக்கும் மாசாணி நல்ல ஆவியா, கெட்ட ஆவியா...?! ப்ளாஸ் பேக் விரிகிறது. "மாசாணி" இனியா, ராம்கியின் காதல் எபிசோட் விரிகிறது. கூடவே அகில், சிஜா ரோஸின் காதல் எபிசோடும் வருகிறது! அவர்களது மடிந்த காதலுக்கும் இவர்களது மலர்ந்த காதலுக்கும் என்ன சம்பந்தம்?! முற்றுபெறாமலும், முழுமையடையாமலும் இருக்கும் மூலவர் சிலை முழுமை பெற்றதா? என்பது உள்ளிட்ட இன்னும் பல வினாக்களுக்கு விடையளிக்கிறது "மாசாணி" படத்தின் மீதிக்கதை!


அகில், ராம்கி, சிஜா ரோஸ், இனியா, சிட்டி பாபு, பிளாக் பாண்டி, நரேன், சரத்பாபு, ரோஜா என ஏகப்பட்ட நட்சத்திரங்கள். அத்தனை பேரும் நடித்திருக்கின்றனர் என்று அபட்டமாக தெரிவதே பலவீனம்!


ராஜகுருவின் ஒளிப்பதிவு, எம்,பாசிலின் இசை இரண்டும் சேர்ந்து மிரட்டுவது பலம்! பத்மராஜா - எல்.ஜி.ஆரின் இயக்கத்தில் பேய் படமாகவும் இல்லாமல், சாமி படமாகவும் இல்லாமல் புரியாத புதிராக "மாசாணி" இருப்பது சற்றே போரடிக்கிறது.


ஆகமொத்தத்தில், இயக்குனர் பத்மராஜா - எல்.ஜி.ஆர்., இன்னும் கொஞ்சம் கஷ்டப்பட்டு இந்த காலத்திற்கு ஏற்ற மாதிரி "மாசாணி"யை இயக்கி இருந்தார் என்றால் "மாசாணி" "மருதாணி"யாக மனந்திருக்கும்! ரசிகர்கள் நெஞ்சிலும் சிவந்து நின்றிருக்கும்!!

நன்றி - தினமலர்

0 comments: