Wednesday, May 08, 2013

வனச் சுதந்திரம் மேலாண்மை. பொன்னுச்சாமி

, ஓவியங்கள்: மனோகர்


கட்டை முக்கித்தக்கி தூக்கித் தோளில் போட்டவுடன் பாரம் தாளாமல் முதுகு வளைந்தது கடற்கரைக்கு. எல்லோரும் சிட்டாகப் பறக்கிறார்கள். அவர்களுடைய சின்னச் சிறகுகளில் மனத் துள்ளல். வெள்ளிக்கிழமை சாயங்காலம். சாயந்தர வெயில் கண்ணில் ஊசி பாய்ச்சுகிறது. கன்ன மிருதுகளில் தீச்சூடுவைத்த மாதிரி ஒரு காந்தல்.
இனி, ரெண்டு நாளைக்கு லீவு. 'அய்ய்க்... அய்ய்ய்க்...’ ஆடலாம், பாடலாம், டி.வி. பாக்கலாம், தெருவில் கிரிக்கெட் விளையாடலாம். கிணற்றுக் காட்டில் விழுந்து, குதித்து முங்கு நீச்சல் போடலாம். சின்னச் சிட்டுகளின் சிறகு விரிப்பில் எழும்புகிற காற்றென, மனசுக்குள் கனவுகள் ததும்பிப் பரவுகிற பரவசப் பெருக்கு. கால் முளைத்த கனவுகளாகத் தெருக்களில் ஓடிச் சிரிக்கிற பூச்செண்டுகள்.
கடற்கரைக்கு மட்டும் பாரம் தாளாமல் முதுகு குனிகிறது. கவலைப் பாரம் தாங்காமல் மூச்சுத் திணறுகிற மனசு. ஒவ்வொரு பீரியடிலும் ஒவ்வொரு வாத்தியார். மாதாந்திர டெஸ்ட்டின் ரிசல்ட் அறிவித்தனர். நீளவாக்கில் மடித்த பேப்பர் கட்டு. போட்டிருந்த வட்டத்துக்குள் மார்க். பக்கத்தில் பெயர். ஒவ்வொரு வாத்தியார் வருகிறபோதும், அவர் கையில் வைத்திருக்கிற பேப்பர் கட்டைப் பார்த்து எல்லாருக்கும் 'திக்திக்’ என்றிருக்கும். மூச்சு முட்டும். 'என்ன மார்க்கோ...’ என்ற பயமும் திகிலும் நெஞ்சுக்குள் மோதித்தள்ளும். கடற்கரைக்கும் அப்படித்தான். ஆனால், ரிசல்ட் அறிவித்த பிறகு, அவனுக்கு மகிழ்ச்சியாக இருக்கும். றெக்கை முளைத்த மாதிரி மனசு கிடந்து 'சிவ்வ்’வென்று பறக்கும். சமூக அறிவியலில் நூத்துக்கு எண்பத்துநாலு. அறிவியலில் எழுபத்தாறு. தமிழில் தொண்ணூற்றிரண்டு. கணக்கில் அறுபத்தெட்டு. இங்கிலீஷ்தான் தகராறு.
எல்லா ஆசிரியர்களும் கடற்கரையைக் குறிப்பிட்டுப் பாராட்டுவார்கள். ''ஓம் பேரென்னடா?''
''சி.கடற்கரை.''
''உங்க அய்யா பேரென்ன?''
''கே.சின்னான்.''
''அவர் என்ன செய்றாரு?''
''பன்னி மேய்க்குறாரு.''
''உங்க அய்யாவுக்குக் கையெழுத்துப் போடத் தெரியுமா?''
''இல்ல சார்... கட்டை விரலு மைதான்.''
''படிப்பு வாசனையே தெரியாத பரம்பரையில வந்த முதல் பையன் கடற்கரை. இவ்வளவு மார்க் ஸ்கோர் பண்ணியிருக்கான். அவனைப் பாராட்ட ணும். எல்லாரும் அவனை முன்மாதிரியா எடுத் துக்கணும்.''
வகுப்பறை முழுக்கக் கை தட்டலின் சேர்ந்திசை ஒரே லயத்தில் ஒலிக்கும். பெருமிதத் ததும்பலுடன் ஆசிரியரை மலங்க மலங்கப் பார்ப்பான். அவனுக்கு அழுகை வரப்போகிற மாதிரி நெஞ்சுக் கூட்டுக்குள் ஒரு திணறல். சிரிப்பும் கண்ணீரும் சேர்ந்து பொங்கும். இடது பக்கம் உட்கார்ந்திருக்கிற அருஞ்சுனை முழங்கையால் விலாவில் இடிப்பான். கண்ணடித்துச் சிரிப்பான். பாராட்டுத் தொனியி லான இடிப்பு.
''ஒன்னைப் பாராட்டுற சாக்குல எங்களை எல்லாம் குட்டுறாரு'' என்று கிசுகிசுத்து, வலது கண்ணால் ஒரு வெட்டு வெட்டுவான்.
கணக்கு வாத்தியார் மெஷின் மாதிரி. வந்து நின்று ரிசல்ட் வாசித்துவிட்டு யந்திரமாகப் பாடம் நடத்த ஆரம்பித்துவிடுவார். இங்கிலீஷ் வாத்தியார் சாதி வெறிபிடித்தவர். கீழத் தெரு சேரிப் பிள்ளைகளைக் கீழக்கண்ணால் பார்ப்பார். சகிப்பின்மையும் சிடுசிடுப்பும் கண்ணில் அனலாகத் தெறிக்கும். கடற்கரை விளக்குமாற்றடி வாங்கத் தயார் நிலையில் இருப்பான். எல்லாருக்கும் மார்க் அறிவித்துவருவார். பாராட்டுவார். பாராமல் நகர்வார். சேரிப் பிள்ளைகள் நாலு பேரையும் இவனையும் அறிவிக்காமல்... ஒதுக்கிவைப்பார். கட்டக் கடைசி யில் ஏளனத் தொனியிலான குரலுடன் அறிவிப்பார்.
''மாடசாமி... இருபத்தெட்டு.''
''சோலைராஜ்... முப்பத்தாறு.''
''பவுண்ராஜ்... முப்பத்திமூணு.''
''முனியசாமி... முப்பத்தியண்ணு.''
''கடற்கரை... இருபத்தேழு.''
இந்த ஐந்து பேரையும் தனிமைப்படுத்தி வாசித்ததுடன், அவர்களைச் சேர்த்து மொத்தமாகப் பார்ப்பார்.
''ஏண்டா... நீங்கள்லாம் படிக்க வரணும்னு யாரு அழுதாக? இங்கிலீஷ் பாடத்தை முக்கி முக்கி நா நடத்துறேன். மூச்சு முட்ட வெளக்குறேன். கிராமர் சொல்லித் தாரேன். நீங்க அதையெல்லாம் கேட்டுட்டு... டெஸ்ட்ல இவ்வளவுதான் மார்க் எடுப்பீங்களா? பூராவும் ஃபெயிலு... நீங்கள்லாம் என்னத்துக்குடா ஸ்கூலுக்கு வர்றீங்க? நீங்கள்லாம் பன்னி மேய்க்கத்தாண்டா லாயக்கு.''
கோபமும் குமுறலுமாகக் கொட்டித் தீர்க்கிற வாத்தியார். கேவலப்படுத்திக் காறித் துப்புவதில் ஒரு மகிழ்ச்சி. சாதி யைச் சுட்டிக்காட்டுவதில் அவருக்கு ஒரு திருப்தி.
''உயரத்துல பறக்க ஆசைப்பட்டாலும் ஊர்க் குருவி பருந்தாகிர முடியாது. பன்னிச் சாணி பொறுக்க ஓடைக்காட்டுக்குப் போனாலும், நாலு கூடைச் சாணி தேறும். படிக்குறதுக்கு இங்க வந்து எங்க உசுரை ஏண்டா வாங்குறீங்க?''
கடற்கரைக்கு றெக்கைகளைப் பிய்த்துப் போட்ட மாதிரி இருக்கும். அடி மனசில் தீக்கோலைச் செருகின காந்தல். ஒரு செருப்பைக் கவ்வக் கொடுத்து, மறு செருப்பால் அடித்த மாதிரியான வலி. அவமான அவஸ்தை. நனையப்போட்ட வார்த்தை விளக்குமாறுகொண்டு விளாசித் தள்ளுகிற இங்கிலீஷ் வாத்தியார். மற்ற வாத்தியார் கள் பாராட்டுகளை டஸ்டர் கொண்டழித்ததுபோல மறந்துவிடும். இந்த வாத்தியாரின் விஷமத்தனம் நெஞ்சுக்குள் குத்தின முள்ளாக வலிக்கும். முதுகில் ஏறிய பாரச் சுமையாகக் குனியவைக்கும். கடற்கரையால் அதை மறந்துவிட்டு இயல்பு நிலைக்கு வர முடியவில்லை. கடைசிப் பீரியடில் வந்து, ''பன்னி மேய்க்கத்தான் நீங்க லாயக்குடா'' என்று காறித் துப்புகிறார். காறித் துப்பிய எச்சில் மனசுக்குள் வழிகிறது.
இங்கிலீஷ் பாடம் நடக்கிறபோது எல்லாம் வகுப்பறை,  தகிப்பறையாகிவிடும். அதே மாதிரி ட்ரில் வாத்தியார். அவருக்குப் பிரம்பு என்றுதான் பட்டப் பெயர். ஒல்லியாக, கட்டையாக இருப்பார், பிரம்புக்குச்சி மாதிரி. கையில் பிரம்பு இல்லாமல் அவரை எப்போதும் பார்க்க முடியாது. விளையாட்டுப் பீரியடில் மட்டுமில்லை; வகுப்பிலும் அவருடைய அழிச்சாட்டியம் தொடரும். ஒழுங்குகளையும் விதிகளையும் அதிகாரத் தொனியில் உச்சரித்து அச்சுறுத்திக்கொண்டே இருப்பார்.
கடற்கரை பைக் கட்டுச் சுமையோடு தெருவுக்குள் நுழைந்தான். மற்ற பையன்கள் ஏதாச்சும் கடையில் வாங்கித் தின்பார்கள். காசு இல்லாதவர்கள் ஏங்கிப் பார்ப்பதுடன் சரி. அருஞ்சுனை அச்சுமுறுக்கு ரெண்டு வாங்கினான்.
''இந்தாடா கடக்கரை...''
''வேணாண்டா.''
''ஒண்ணு வெச்சுக்க...''
சுற்றும் முற்றும் பயத்துடன் ஒரு பார்வை பார்த்துவிட்டு, அருஞ்சுனையிடமிருந்து முறுக்கை வாங்கிக்கொண்டான்.
''சேரிப் பயலோட ஒனக்கு என்னடா சகவாசம்?'' என்று அவனையும் வைவார்கள்.
''ஏண்டா... அவன்தான் கேணப்பய... குடுத் தான்னா, நீ வாங்கிர்றதா?'' என்று இவனுக்கும் வசவு விழும்.
தெரு நெருங்கிவிட்டதை உணர்த்துகிற பன்றிக் குட்டிகளின் விளையாட்டு உறுமல்கள். கேலிக் கடிகளும், கிண்டலான ஓட்டங்களுமாக, நுனி சுருண்ட வாலுடன் அதுகள் நடத்துகிற விளையாட்டுகள். தாழ்வாரத் திண்ணைக்குப் பக்கத்தில் கட்டப்பட்டிருக்கிற சினைப் பன்றி. பின்னங்காலில் கட்டி, தூணில் கட்டப்பட்டிருக்கிறது. கயிறு விறைப்பாகிற அளவுக்கு இழுத்துத் திமிறுகிற சினைப் பன்றியின் வலி நிறைந்த உறுமல்கள்.
கடற்கரைக்குள் இருளன் வந்துபோகிறான். அவனது சுதந்திரமே தனி. காடெல்லாம் அவன் ராஜ்யம். ஆடுகள் அதுபாட்டுக்கு மேய்ந்து திரியும். இவன் கம்பை ஊன்றிக்கொண்டு நிற்பான். வெயில் அவனுக்கு நிலா வெளிச்சம் மாதிரி. ஆளில்லாத வனாந்தரச் சுதந்திரத்தில் கெட்ட வார்த்தைகளைக் கோத்துச் சத்தமாக ஓங்கிப் பாட்டுப் பாடுவான்.
ஆசிரியர்கள் இல்லை. வகுப்பறைகள் என்ற ஒழுக்கம் இல்லை. வட்ட வரம்புக்குள் பிரம்புக்குப் பயந்து விளையாடுகிற கட்டுப்பாடு இல்லை. 'பன்னி மேய்க்கத்தாண்டா நீங்க லாயக்கு’ என்று கரித்துக்கொட்டும் ராட்சஸம் இல்லை. வீட்டுப் பாடம் இல்லை. இம்போசிஷன் இல்லை. இங்கிலீஷ் பாடம் ஒன்றையே ஐந்து தடவை எழுதிக் காட்டுகிற தண்டனை இல்லை. ஏகப்பட்ட இல்லைகளே... அதன் சுதந்திரம். வனச் சுதந்திரம். சுதந்திரக் காடு!
சாணிப் பால் தெளித்துத் தெளித்து இறுகிப் போயிருக்கிற வீட்டு முற்றத்தில் பைக் கட்டைப் போட்டுப் பக்கத்தில் உட்காருகிறான். இங்கிலீஷ் வாத்தியார்தான் இம்போசிஷன் போட்டிருக்கிறார். மூன்று பக்க ஸ்டோரியை மூன்று தடவை நோட்டில் எழுதி வர வேண்டும்.
''திங்கக்கெழமை எழுதாம வந்தீகன்னா... பிரம்பு இருக்குடா. முதுகுத் தோலை உரிச்சிருவேன். உள்ளங்கை பழுத்து வீங்கிரும்டா.''
மழுங்கச் சிரைத்த மொட்டை முகத்தில் நாலு கோரப் பல் நீட்டிக்கொண்டிருக்கிற மாதிரி இருந்தது. உட்கார்ந்து வீட்டுப் பாடம் எழுத ஆரம்பித்தான். வெயில் மறைந்த அந்தி வெளிச்சம். படலை ஓட்டினாற் போல நடை போடுகிற பன்றிக் குட்டிகள். சொட்டடித்துத் தெறிக்கிற சாக்கடைத் துளிகள். சினைப் பன்றி முன்னால் தரையில் பதித்திருக்கிற மரக் குளுதாடி, கஞ்சி இல்லாமல் காய்ந்துகிடக்கிறது. வீட்டு முற்றத்தின் உப்பு மூலையில் படல் வளையத்துக்குள் குவிக்கப் பட்டுள்ள பன்னிச் சாணி, மண்ணையும் குப்பை யையும் சேர்த்து கூட்டிப் பெருக்கித் தள்ளிய குச்சிமார், குப்பை பக்கத்திலேயே கிடக்கிறது.
மொட்டை மூஞ்சி வாத்தியாரின் அச்சுறுத்தல், தண்ணி குடிக்க முடியாமல் பூட்டிக்கிடக்கிற வீட்டுக் கதவு, உலர்ந்த நாவில் முறுக்கின் நொறுங்கல். காலை மடக்கிக் குனிந்து எழுதுகிற திரேகச் சிரமம். இங்கிலீஷ் புத்தக வரிகளில் இடது கைச் சுட்டு விரல் நகர... வலது கை நோட்டுக் கோடுகளில் எழுதிச் செல்கிற மனச்சலிப்பு. அழுத்துகிற கட்டாயத்தின் வலி தருகிற உணர்வலுப்பு.
இருளனை நோக்கி ஓடுகிற மனசு. அவன் பக்கத்தில் உட்கார வேண்டும். அவன் சொல்லுகிற கதைகளைக் கேட்க வேண்டும். போன மாசம் அய்யாவைத் தேடி ஆத்துப் பாலம் பக்கம் போனான் கடற்கரை. ஆத்துப் பாலத்துக்கு வடக்கில் பரந்து விரிந்த சமுத்திரத் தரிசு நிலங்கள், ஆடுகள் மேய்கின்றன. மேய்கிற ஆடு களின் முதுகில் கரிச்சான் பறவை. பனியன் டவுசர் எல்லாம் கழற்றிப் போட்டுவிட்டு, இடுப்புக் கைலியைத் தலையில் தலைப்பாகையாகச் சுற்றிக் கொண்டு வெட்டவெயிலில் 'தங்கு தங்கெ’ன்று குதித்துக் கும்மாளம் போடுகிற இருளன். பழுத்த இள வட்டம். வெட்டவெளியில் பட்டப் பகலில்... கட்டுக்கள் இல்லாத வனாந்தரச் சுதந்திரத்தில்... ஆச்சர்யமும் அதிசயமுமாக வியந்து பார்த்த கடற்கரை. மூச்சுமுட்டுகிற வியப்பை அருஞ்சுனையிடம்தான் பகிர்ந்து கொண்டான்.
போன வாரம் ஞாயிற்றுக்கிழமை பொழுதடைந்து இருட்டிவிட்டது. சாக்கடை வாய்க்காலுக்குக் கட்டிய பாலத்தின் கைப் பிடிச் சுவரில் இருளன் உட்கார்ந்திருக்கிறான். அவனைச் சுற்றிலும் நாலைந்து பயல்கள் முண்டியடித்து நெருக்கிஅடித்துக்கொண்டு... அதில் கடற்கரையும் ஒருத்தன். மடி நிறைய காராச்சேவு வாங்கிப் போட்டிருப்பான். வந்த பயல்களுக்கெல்லாம் ஒரு கைப்பிடிச் சேவு கிடைக்கும். கடற்கரைக்கும் கிடைத்தது.
''ஆடு மேய்ச்சுக்கிட்டே ஐயப்ப நாயக்கரு புஞ்சையில பெறக்குன பருத்திதான் மடியில காராச்சேவாகிக் கிடக்கு. ஐயப்ப நாயக்கரு புண்ணியத்துல ஆளுக்குக் கொஞ்சம் ருசி பாருங்க!''- அவனது கைத் தாராளத்துக்கு அவன் சொன்ன நியாயம் சுவாரஸ்யமாக இருக்கிறது.
''களவாண்டா... வைய மாட்டாகளா?''
''ஆப்புட்டா... அடி பின்னியெடுத்து சாணியைப் பிதுக்கிருவாக. ஆப்புடாத வரைக்கும் நம்ம ராஜ்யந்தான்.''
களவை ஒரு குற்றமாகக் கருதாமல் கொண்டா டிக் குதுகலிக்கிற அவனுடைய சாகசப் பெருமிதம்.
''களவு சில்லறை இல்லாம காடு கரைகள்ல அலைய முடியுமா? சொந்த நெலம் இல்லாமலேயே நாப்பதாடுகளை மேய்ச்சு, இருபது குட்டிகளுக்கு இரை பாத்து, கொழைகட்ட முடியுதுன்னா... சும்மாவா? களவுதான். சம்சாரிக வெள்ளாமையில ஓரம்சாரம் கைவைக்காம... ஆட்டுக் குட்டி, மாடுகனு வளக்க முடியுமா?''
அதை சகஜப்படுத்திச் சொல்லுகிற சாகசத் தொனியில் கடற்கரைக்குக் கிறுகிறுப்பு வரும். சொக்கிப்போய் நிற்பான். அது மட்டுமல்ல... அவன் சத்தம் குறைத்து, கிசுகிசுப்பு ரகசியமாகச் சொல்லுகிற கிளுகிளுப்புக் கதைகள் வண்டி வண்டியாக வரும்.
மாடு மேய்க்க வருகிற பெண்களைத் தொட்டுப் பார்த்த சாகசம். சீமைக் கருவேலம் புதர்களுக்குள் மறைகிற கள்ள ஜோடிகளைக் கல்லெறிந்து கலைத்தது, கையும் மெய்யுமாகப் பிடிபட்ட கள்ள ஜோடி தொடர்ந்து இவனுக்குக் கப்பம் கட்டிவருவது... தீபாவளி, பொங்கல் என்றால் சில வீடுகளில் கறிச்சோறு விருந்து கிடைப்பதன் சூட்சுமம் என்று கதைகள் நீளும். ஆடு, கோழி, மாடு போன்ற வார்த்தைகளை உச்சரிக்கிற அதே சகஜபாவத் தொனியில், மனிதர்களின் உறுப்புகள் பெயரையும் சர்வ சாதாரணமாக உச்சரிக்கிற பாங்கு. இருளன், இவனுக்கு ஆச்சர்யமான வீரன்!
நன்றாக இருட்டிவிட்டது. தெரு விளக்கின் வெளிச்சம் வீட்டு முற்றத்தில் தாராளமாக விழும். அந்த வெளிச்சத்தில் எழுதிக்கொண்டிருந்தான். இன்னும் மூணு பக்கம்தான். விரலெல்லாம் வலிக்கின்றன. மடங்கிக் குனிந்து எழுதுவதால், இடதுபக்க இடுப்பெலும்பில் கடுகடுக்கிற வலி. அம்மா கொடுத்த டீத் தண்ணீரும் குடி தண்ணீரும் வயிற்றையும் வாயையும் மனசையும் நிரப்பியிருந்தது. அய்யா சின்னான் வந்தவுடன், 'எழுத்து வேலையா? எழுது எழுது...’ என்ற விசாரிப்புடன் கூடிய உற்சாகப்படுத்தலுடன் இவன் தலையை வருடினான் பாசப் பரிவுடன்.
சட்டியிலிருந்து கழிவுத் தண்ணீரையும் சோற்றுக் கஞ்சியையும் வீட்டுக்குள் இருந்து கொண்டுவந்து, பணம் பெற்ற தங்கப் பெட்டியான சினைப் பன்றிக்கு மரக் குளுதாடியில் ஊற்றினான். குடிப்பதற்காக ஓட்டமாக ஓடி வந்த பன்றிக் குட்டிகளைக் குச்சியால் துரத்தி அடித்தான். சினைப் பன்றி மட்டுமே தாகத் தவிப்புடன் உறிஞ்சிக் குடித்தது.
'படிடா... கடக்கரை. படி... ஏர்போர்ட் ராமலிங்கம் மாதிரி, நீயும் வரணும்டா? அதுக்கும் மேல வரணும்டா...’ என்றதன் கனவையும் பின் இணைப்பாகச் சேர்த்துச் சொன்னான்.
சக்கிலியக்குடியில் முதன்முதலில் பத்து வகுப்பு படித்துவிட்டு, ஏர்போர்ட்டில் வேலை பார்த்து சூட், சட்டை, பூட்டுடன் தெருவுக்குள் வந்த ராமலிங்கம், இப்போது பென்ஷனும், விமானப் படை வீரர்களுக்கான சலுகை விலைச் சாமான்களும் வாங்கிக்கொண்டிருக்கிறான். அவர் ரேஷனில் வாங்கி வருகிற மதுப் பாட்டில்கள் ஊரில் பிரபல்யம். சின்னானின் லட்சிய புருஷன் ராமலிங்கம். 'நம்ம புள்ளையும் படிச்சு, பெரிய படிப்பு போய்... பெரிய உத்தியோகத்துக்கும் போய்... ரொம்ப மேல் நெலைக்கு வரணும்’ என்று அடிக்கடி நினைத்துக்கொள்வான் சின்னான்.
இங்கிலீஷ் பாடம் எழுதி முடிக்கிறபோது, இருட்டிவிட்டது. விளக்கு வெளிச்சத்தில் பைக் கட்டைக் கட்டிவைத்தான். இப்பவும் இருளனைப் பார்க்க ஆசையாக இருக்கிறது. அந்தப் பாலத்துச் சுவர் நோக்கி நடையை எட்டிப் போட்டான். அங்கு, இருளன் சபை கூடியிருந்தது. கதைகள் கால் முளைத்து வார்த்தைகளாகி வெளிவந்தன. இவன் போகிறபோது காராச்சேவு ஒரு கைப்பிடிதான் எஞ்சி இருந்தது. அதை இவனிடம் நீட்டினான். இவன் சேவை வாங்கித் தின்றுகொண்டான். கதைகளின் ஜோதியில் ஐக்கியமானான் கடற்கரை.
இங்கிலீஷ் பாடம் நடத்துற மொட்ட மூஞ்சி, கெட்ட கனவைப் போல வந்து வந்து நிற்கிறார் மனசுக்குள். ரிசல்ட் பேப்பர் கொடுக்கிற ஒருநாளில் மட்டுமல்ல; அனைத்து நாட்களிலும் இதே பாடுகள். வசவுகள். ஏளனப் பார்வைகள். ஆணி குத்தின ரத்தக் காயமாக மனசுகிடந்து ரணமெடுக்கும். தினசரி அவரது அடிகள். வார்த்தைகள். 'பன்னி மேய்க்கத்தான் லாயக்கு...’ என்கிற இங்கிலீஷ் வாத்தியாரின் அன்றாட அவமதிப்புகள், செருப்படிகள் இருளனின் மடியைச் சுகமானதாக்கும், மையல் கூடும்.
திங்கட்கிழமை. இங்கிலீஷ் பாடம் நடத்த மொட்டை மூஞ்சி வந்துவிட்டது. இம்போசிஷன் எழுதிய நோட்டுகள் மேஜையில் அடுக்கப்பட்டுஇருந்தன. எல்லாவற்றையும் சரி பார்த்தார். மேம்போக்கான பார்வை. பார்த்தும் பார்க்காத பறவைப் பாய்ச்சல். கடற்கரை நோட்டை வரிவரியாகப் பார்த்தார். சரியாக எழுதியிருந்தான். ஒரே கதையை மூன்று முறை எழுதி இருந்தான். இதை எதிர்பார்க்காத அவர் முகத்தில் ஏமாற்ற இருள். வார்த்தைகளின் ஸ்பெல்லிங்கை உற்றுக் கவனித்தார். சில இடங்களில் சிவப்பு மை பேனாவால் வட்டம் போட்டார்.
''ஏண்டா... பாத்து எழுதுறப்பவும் இத்தனை ஸ்பெல்லிங் மிஸ்டேக்கா?''
''இல்ல... சார்?''
''என்ன நொள்ள சார்? கையை நீட்டுடா...''
அருஞ்சுனை உட்பட அத்தனை பேருக்கும் இது அநியாயமாகப்பட்டது. வேண்டுமென்றே கேவலப்படுத்துகிற கெடுமதியான மூர்க்கம். மொட்டை மூஞ்சியை வெறுப்புடன் பார்த்தனர். அவர் பிரம்பை எடுத்தார். உள்ளங்கையை நீட்டச் சொன்னார். குச்சியை ஓங்கிய கை மாறாமல், சுழற்றியடிக்கிறார். சுரீர் என தீச்சூடு பட்ட மாதிரி காந்துகிறது. அடி... அடி... அடிகள் என்று அடி பின்னியெடுத்துவிட்டார். தொடையிலும் அடிகள்... உள்ளங்கைகளிலும் அடிகள். ரத்தம் கன்றிப் போன அடித்தடங்கள். துள்ளத் துடிக்கக் கதறி வெடிக்கிற கடற்கரை அழுகையும் அலறலுமாகப் பதறிப் பதைக்கிற அவனுடைய கண்ணீர். பைக் கட்டோடு சின்னான் முன்னால் போய் நின்று அழுது கொட்டுகிற கடற்கரை,
''நாஞ் செத்தாலும் சரி... ஸ்கூலுக்குப் போக மாட்டேன்.''
''ஏண்டா..?''
''போ... போன்னு என்னை அனுப்புனீகன்னா. அரளி வெதையைத் தின்னுச் செத்துருவேன்!''
று வாரம்.
இருளனுடன் ஆடுகளைப் பத்திக்கொண்டு காட்டுத்தரிசு நோக்கிக் கம்புடன் நடக்கிற கடற்கரை, மொட்டை மூஞ்சி வாத்தியாரை மனசுக்குள் வைதுகுவித்தான்!

thanx - vikatan

3 comments:

sornamithran said...

மேலாண்மை பொன்னுச்சாமியின் கதைகளை முன்பு ஆனந்தவிகடனில் படித்து ரசித்ததுண்டு. துள்ளி துள்ளி போகும் அவரது நடை சுருக்கென்று தைத்துக்கொண்டு செல்லும். பொதுவுடமைவாதியானாலும் அவரது எழுத்தில் வெளிப்படையான பிரச்சார நெடி இருக்காது. இந்தக்கதையை எங்கிருந்து பெற்றீர்களோ கதை அருமை.இங்கே வந்துகருத்து சொல்லுங்கள்

ADMIN said...

அருமையான கதை.. மேலாண்மை பொன்னுசாமி அவர்களின் தனித்துவமே இத்தகைய சிறுகதைகள்தான்.. பகிர்வுக்கு மிக்க நன்றி.

ADMIN said...

அரைகுறையாப் படிக்கும் மாணவர்களையும் இதுபோன்று தண்டித்து, ஆடு மேய்க்க, பன்றி மேய்க்க அனுப்பும் ஒரு சில ஆசிரியர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். நல்லதொரு அனுபவச் சிந்தனையை, மேலாண்மை பொண்ணுச்சாமி அவருடைய வார்த்தைகளில் கோர்த்து எழுதியிருப்பது மீண்டுமொரு முறை படிக்கத் தூண்டுகிறது. உணர்வுகளையும், உணர்ச்சிகளையும் ஒருங்கே சேர்த்து யதாரத்தமான நடையில் எழுதுவதுதான் அவருடைய தனித்துவம். படித்தேன்.. ரசித்தேன்..

சில வருடங்களுக்குப் பிறகு ஒரு கதையை முழுமையாக படிக்க வைத்துவிட்டீர்கள். நன்றி.