Sunday, May 26, 2013

ஆல் இன் ஆல் அழகுராஜா -சந்தானத்தின் மாஸ்டர் பீஸ்? - எம் ராஜேஷ் பேட்டி

எனக்கு இருக்கிற அறிவுக்கும் திறமைக்கும் இந்த 'ஆல் இன் ஆல் அழகுராஜா’ அமெரிக்காவுல இருக்க வேண்டியவன்டா. ஏதோ என் கஷ்டகாலம், இந்தப் பட்டிக்காட்டுல உக்காந்து பழனியப்பன் சைக்கிளுக்கு பெண்ட் எடுத்துட்டு இருக்கேன்’னு கவுண்டமணி அடிச்ச பஞ்ச், நம்ம எல்லார் வாழ்க்கைலயும் ஏதோ ஒரு சமயம் பொருந்திப்போகும். 



அதுவும் போக நான், கார்த்தி, சந்தானம் மூணு பேரும் கவுண்டமணி சாருக்குத் தீவிர ரசிகர்கள். இந்தப் பட டைட்டிலுக்கு இதுக்கு மேல காரண காரியம் வேணுமா என்ன?''-கலகலவெனச் சிரிக்கிறார் ராஜேஷ்.எம். 'எஸ்.எம்.எஸ்’, 'பாஸ்’, 'ஓ.கே ஓ.கே’ என்று சிரிப்பு சிக்ஸர் மட்டுமே சாத்துபவர், கார்த்தியுடன் கை கோத்திருக்கிறார். 


 
''உங்க படத்துல கதை என்னன்னு கேட்க முடியாது. அதனால, இந்தப் படத்துல என்னவெல்லாம் காமெடி பிளான் பண்ணியிருக்கீங்கனு சொல்லுங்களேன்?''



''ஹலோ... என்ன பாஸ் இப்படிச் சொல்லிட்டீங்க! என் படங்களோட ஒன் லைன் எப்பவும் சிம்பிளா இருக்கும். ஈகோ காதலன், திமிர் காதலி சேர்ந்தாங்களா இல்லையாங்கிறது... 'சிவா மனசுல சக்தி’.



 பொறுப்பே இல்லாதவன் அண்ணி வந்த பிறகு என்ன ஆகிறான் என்பது... 'பாஸ் என்கிற பாஸ்கரன்’.



 பாண்டிச்சேரியில் நடக்கப்போற காதலியின் கல்யாணத்தைக் காதலனும் நண்பனும் நிறுத்துறாங்களா, இல்லையா... 'ஒரு கல் ஒரு கண்ணாடி’. இந்த ஒன் லைன்ல காமெடி லேயர்கள் மட்டும் அதிகமா வைக்கிறேன்... அவ்வளவுதான். இப்போ 'ஆல் இன் ஆல் அழகுராஜா’ ஒன் லைன் கேட்டீங்கன்னா, டவுன்ல வளர்ற இளைஞனுக்கும் அவன் அப்பா, அம்மாவுக்கும் இடையிலான பாசம்தான் கதை.



 காமெடி, காதல், சென்டிமென்ட்னு படம் பார்க்கிறவங்களுக்குத் திருவிழா போயிட்டு வந்த ஃபீல் கொடுக்கும். சிம்பிளா இருந்தாலும் சிரிக்கவைக்கிற படங்களைத்தான் இப்போ ரசிகர்கள் ரசிக்கிறாங்க... கொண்டாடுறாங்க. அவங்க கொண்டாட்டத்துக்கு நான் என் ஸ்டைல்ல படம் பண்றேன்!''
''சந்தானம், சரக்கு, சலம்பல்... இதுதானே உங்க ஸ்க்ரிப்ட் ஸ்டைல்..?''



''காமெடி மட்டும்தாங்க என் ஸ்க்ரிப்ட் ஸ்டைல். இந்தப் படத்துலயும் அப்படித்தான். ஆனா, மத்த படங்கள்ல இல்லாத பாசம், சென்டிமென்ட்னு சில விஷயங்களைக் கொஞ்சம் புதுசா சேர்த்திருக்கேன். இதுக்கு முன்னாடி மூணு படங்கள்லயும் சந்தானம் பண்ணதை அப்படியே பண்ணா, போரடிக்கும்னு எனக்கும் தெரியும். அதனால இந்தப் படத்துல சந்தானத்துக்கு பஞ்ச் எல்லாம் கிடையாது. பாடி லாங்குவேஜ்லயே காமெடி பண்ணச் சொல்லிட்டேன். 



அவரும் முதல் படத்தில் நடிக்க வந்த மாதிரி, ஏகப்பட்ட ஹோம்வொர்க் பண்ணிட்டு வந்து, 'சிங்கிள் ஷாட்ல எடுத்துடலாம். அப்போதான் டைமிங் மிஸ் ஆகாது’னு பரபரனு நடிச்சுட்டுருக்கார். ஹிட் ரேட் ஏற ஏற... சந்தானத்தின் எனர்ஜி லெவல் அதிகமாயிட்டே இருக்கு. படத்தின் கதையை நாம எல்லாரும் நிச்சயம் க்ராஸ் பண்ணி வந்திருப்போம். அதனால, 'ராஜேஷ் இன்னொரு காமெடிப் படம் பண்றாருப்பா!’னு ஜஸ்ட் லைக் தட் சொல்லிட முடியாது. படத்தில் இன்னொரு சுவாரஸ்ய ட்விஸ்ட் இருக்கு. நாங்க எதிர்பார்த்ததைவிட, அது ரொம்ப நல்லாவே வொர்க்அவுட் ஆகியிருக்கு. அது என்னங்கிறது... சஸ்பென்ஸ்!''



''கார்த்திக்கு இப்போ ஒரு ஹிட் அதிஅவசியம் ஆச்சே?''



''தியேட்டர் ஹிட்டை விடுங்க... தென்காசிப் பக்கத்துல ஷூட்டிங். அங்கே வேடிக்கை பார்க்க வர்ற குழந்தைங்க கார்த்திகூட ஒரு போட்டோ எடுத்துக்கிட்டாதான் இடத்தைவிட்டு நகர்வோம்னு அடம்பிடிக்குதுங்க. பல பெற்றோர்கள், ஷூட்டிங் ஸ்பாட்ல, 'கோச்சுக்காதீங்க சார்... குழந்தைக்காகத்தான்... அவ்வளவு அடம் பண்ணுதுங்க... ஒரு போட்டோ மட்டும்’னு தயங்கித் தயங்கிக் கேட்கிறாங்க. ஒருத்தரைக் குழந்தைகளுக்குப் பிடிச்சாலே, பெரியவங்களுக்கும் அவரை ஈஸியாப் பிடிச்சுப்போகும். இந்த விஷயங்களை எல்லாம் மைண்ட்ல வெச்சுக்கிட்டு கார்த்தி கேரக்டரை ரொம்பக் கவனமா டிசைன் பண்ணியிருக்கோம். 


'கலகலனு இப்படி ஒரு படம் பண்றதே மனசுக்குச் சந்தோஷமா இருக்கு. அப்பா-அம்மா, வொய்ஃப், ஃப்ரெண்ட்ஸ்லாம் படம் பார்த்துட்டு என்ன சொல்லுவாங்கனு இப்பவே மனசு எதிர்பார்க்க ஆரம்பிச்சுருச்சு’ன்னார் கார்த்தி. படம் பார்க்கிறவங்களுக்கு கார்த்தியை ரொம்பப் பிடிச்சுப்போகும். கார்த்தியைப் பிடிக்கிறவங்களுக்குப் படம் ரொம்பப் பிடிச்சுப்போகும்!''


''தமிழ்ல பெரிய பெரிய ஹீரோக்களையே டபாய்ச்சுடுற நயன்தாரா, ஹன்சிகா, காஜல்னு 'தெலுங்கு ஹிட்’ ஹீரோயின்கள் உங்க படத்தில் மட்டும் நடிச்சுடுறாங்களே... அது என்ன மேஜிக்?''



''ஒருவேளை அவங்க எல்லாருக்கும் சந்தானத்தைப் பிடிக்குமோ என்னவோ..?! பின்ன என்னங்க... இப்படி எல்லாம் சிக்கவைக்கிற மாதிரி கேள்வி கேட்டா, நான் என்ன சொல்றது!''  



''ஒன் அண்ட் ஒன்லி காதல்’னு இருந்த டிரெண்டை, 'ஒன் அண்ட் ஒன்லி காமெடி’னு மாத்துச்சு உங்க படங்கள். இப்போ கிட்டத்தட்ட எல்லாப் படங்களும் ஃபுல் லெங்த் காமெடியாத்தான் வருது... கவனிக்கிறீங்களா?''



''அப்படி நிறைய நல்ல படங்கள் வர்றது சந்தோஷமா இருக்கு. 'சூது கவ்வும்’ல ஸ்டைல், ட்ரீட்மென்ட், காமெடி வசனங்கள்னு எல்லாமே பிடிச்சது. 'எதிர்நீச்சல்’, 'கேடி பில்லா கில்லாடி ரங்கா’ படங்களை சீனுக்கு சீன் ரசிச்சுப் பார்த்தேன். அனுபவ இயக்குநர்களோ, குறும்பட இயக்குநர் களோ... 10 மணி நேர கரன்ட் கட் கவலை மறந்து ரசிகர்கள் சிரிக்கிற மாதிரி படம் கொடுக்கிறது சாதாரண விஷயம் இல்லை. அதைச் சரியா பண்ற எல்லாருக்கும்... வாழ்த்துகள் பாஸ்!''



''சரி... இப்போ ஒரு கேள்வி... உங்க படங்கள்ல காமெடிக்குச் சிரிக்கிறோம், ரசிக்குறோம், கை தட்டுறோம். ஆனா, தியேட்டரைவிட்டு வந்ததும் மறந்துபோயிடுறோமே. 'கிளாஸிக் வரிசை’யில் இடம் பிடிக்கிற மாதிரி படம் பண்ணணும்னு ஆசை இல்லையா?''



''நான் ரொம்ப ரொம்ப ரசிச்சுப் பார்த்த 'காதலிக்க நேரமில்லை’, 'அன்பே வா’, 'தென்றலே என்னைத் தொடு’, 'திருடா திருடி’, 'குஷி’... அப்புறம் பாக்யராஜ் சார், பாண்டியராஜன் சார் படங்கள். அப்படி எல்லாம் படம் பண்ண எனக்கும் ஆசைதான். ஆனா, ராஜேஷ் படங்களுக்குனு ஒரு ஸ்டாம்ப் விழுந்திருச்சு. இப்போதைக்கு அதுலதான் டிராவல் பண்ண வேண்டியிருக்கு. ஆனா, அதுக்காக என் படங்களை நானே குறைச்சு மதிப்பிடக்கூடாது. என் மூணு படங்களையும் எப்பப் பார்த்தாலும் விழுந்து விழுந்து சிரிக்கலாம். ஃபேஸ்புக், ட்விட்டர்லலாம் என் பட பஞ்ச்கள் பயங்கர ஷேரிங்ல போயிட்டு இருக்கு. இருந்தாலும் நாகேஷ், சந்திரபாபு படங்கள் மாதிரியான கிளாஸிக் காமெடிப் படங்கள் பண்ண ஆசைதான். அதுவும் சீக்கிரமே நடக்கும்!''

 நன்றி - விகடன்

0 comments: