Monday, May 27, 2013

கல்லா கட்டும் தனியார் கல்வி நிறுவனங்கள் - ஒரு மினி தொடர்: பாகம் 3

கல்லா கட்டும் தனியார் கல்வி நிறுவனங்கள் - ஒரு மினி தொடர்: பாகம் 3


-எஸ்.முத்துகிருஷ்ணன்

மிழ்நாட்டில் பொறியியல் கல்லூரிகள் எப்படி புற்றீசல்கள் போல ஆங்காங்கு முளைத்துள்ளனவோ அதற்கு போட்டியாக பிஎட் கல்லூரிகளும் ஆசிரியர் பட்டயப்படிப்பு பள்ளிகளும் ஆங்காங்கு கடை விரித்து வைத்துள்ளன.

 1980களில் பிஎட், ஆசிரியர் பட்டயபடிப்பு கல்விகளுக்கு சீட் கிடைப்பதே மிகப்பெரிய காரியம். படித்து முடித்தவுடன் வேலை என்ற நிலை இருந்தது. இந்த நிலை, முதல் முதலில் ஜெயலலிதா முதல்வராக பொறுப்பேற்றிருந்த 5 ஆண்டு காலத்தில் அதிமுக ஆட்சியில் தலைகீழ் ஆனது.




தனியார் பயிற்சி நிறுவனங்கள் ஆங்காங்கு முளைத்தன.தேவைக்கு அதிகமாக, அதிகமாக ஆண்டுதோறும் பல ஆயிரம் ஆசிரியர்கள் படித்து விட்டு வேலைக்காக காத்திருக்கும் சூழ்நிலை உருவானது. இருப்பினும், இந்த கல்வி நிறுவனங்களுக்கு அதிமுக, திமுக ஆட்சியில் போட்டி போட்டுக் கொண்டு அனுமதி கொடுத்தனர். அந்தந்த கட்சியை சேர்ந்த முக்கிய விஐபிக்கள் இந்த கல்வி நிறுவனங்களை தொடங்கி நடத்தினர். கடந்த சில ஆண்டுகளாக, இந்த கல்வி நிறுவனங்களின் எண்ணிக்கையை பார்த்து மத்திய மனித வள அமைச்சகமே எரிச்சலடைந்தது.

இனிமேல், புதிய பிஎட் மற்றும் ஆசிரியர் பயிற்சி பள்ளிகளுக்கு அனுமதி கொடுக்கும் விதிகளை கடுமையாக்க வேண்டும் என்று எச்சரித்தன. அதன் விளைவாக புதிய கல்வி நிலையங்கள் வருவது ஓரளவுக்கு கட்டுக்குள் வந்தது. அதே நேரத்தில் புதிய வேலைவாய்ப்புகள் அதிகரிக்காததால் இந்த கல்வி நிலையங்களில் மாணவர் சேர்க்கை டல் அடிக்க ஆரம்பித்தது. இந்நிலையில் விரல் விட்டு எண்ணும் அளவுக்கு சில கல்வி நிலையங்கள் மூடப்பட்டன.

இதையடுத்து, பண வசதி உள்ள கல்வித்தந்தைகள் இந்த கல்வி நிறுவனங்களை வாங்கினர். பள்ளி மற்றும் கல்லூரிகளை வெற்றிகரமாக நடத்தி வசூலில் ருசி கண்ட கல்வி முதலைகள், இந்த பிஎட் மற்றும் ஆசிரியர் பயிற்சி கல்வி நிறுவனங்கள் பக்கம் தங்கள் தலையை காட்ட தொடங்கினர். இந்த கல்வி நிறுவனங்களின் உரிமையாளர்களுக்கு ஒரு தொகையை பேசி முன்பணமாக கொடுத்து விட்டு ஆண்டு அடிப்படையில் லீசுக்கு எடுத்து நடத்த ஆரம்பித்துள்ளனர்.

இதுபற்றி மெட்ரிக் பள்ளி, கலை மற்றும் அறிவியல் கல்லூரி, பொறியியல் கல்லூரிகளை, பிசியோதெரபி, நர்சிங் கல்லூரிகளை நடத்திக் கொண்டிருக்கும் தாளாளர் ஒருவர் கூறுகையில், ''நாங்கள் ஆரம்பத்தில் ஒரு சிறிய ஷெட்டில் இங்கிலீஸ் மீடியத்தில் பிரைமரி பள்ளியைத்தான் தொடங்கினோம். அந்த பள்ளியை சிறிது சிறிதாக டெவலப் செய்து மெட்ரிக்குலேஷன் பள்ளியாக மாற்றினோம். 

எங்களது நிர்வாகத்திறமை, கடும் உழைப்பால் வளர்ந்தோம். பின்னர், கல்லூரி... என்று படிப்படியாக எல்லா கல்வி நிலையங்களையும் தொடங்கினோம். ஒரு ஏரியாவில் வசூல் டல் அடித்தால் வேறு ஏரியாவில் இருந்து வரும் பணத்தின் மூலம் நிதிநிலையை சரி செய்து ஆசிரியர்களுக்கு சம்பளம் கொடுத்து எல்லா கல்வி நிறுவனங்களையும் நடத்தும் கலையை கற்றுக் கொண்டு விட்டோம்.

சிலர், பிஎட் கல்லூரியை மட்டுமோ, ஆசிரியர் பயிற்சி பள்ளியை மட்டுமோ நடத்தும் போது ஒரு வருஷம் மாணவர் சேர்க்கையில் டல் அடித்தால் அவர்களால் முறையாக நிர்வாகம் பண்ண முடியாத சூழ்நிலை ஏற்படுகிறது. வருமானம் குறைந்து விடுவதால் அந்த கல்லூரிகளை லீசுக்கு விடும் புது டிரெண்ட் இப்போது உருவாகி உள்ளது. அப்படிப்பட்ட கல்லூரிகளை, ஆசிரியர் பயிற்சி பள்ளிகளை வாங்கி நாங்கள் நடத்தி வருகிறோம்.

உதாரணமாக, பிஎட் கல்லுரியில் 100 சீட் இருக்கும். ஒரு சீட்டுக்கு சராசரியாக 60 ஆயிரம் ரூபாய் வசூலாகும். மொத்த வசூல் ரூ.60 லட்சம் வசூல் ஆகும். ரூ.30 லட்சத்தை கல்வி நிலைய ஓனருக்கு கொடுத்து விடுவோம். மீதி ரூ.30 லட்சத்தில் ஆசிரியர் சம்பளம் போக எங்களுக்கு ஆண்டுக்கு ரூ.20 லட்சம் லாபம் கிடைக்கும்.

 டிமாண்டை பொறுத்து இந்த வருமானம் சிறிது கூடலாம் அல்லது குறையலாம். ஆனால், எங்களுடைய டார்க்கெட்டான ரூ.20 லட்சத்தை எப்படியும் எடுக்கும் வகையில் பீஸ்களை மாற்றி வசூல் செய்து விடுவோம். அதே நேரத்தில் கல்வி தரத்தில் சமரசம் செய்து கொள்ளமாட்டோம்.

அதேப்போல ஆசிரியர் பயிற்சி பள்ளி படிப்பு இரண்டு ஆண்டு காலம். இங்கேயும் ஆண்டுக்கு ஒரு மாணவருக்கு ரூ.30 ஆயிரம் முதல் ரூ.40 ஆயிரம் வரை வாங்குகிறோம். இந்த கல்வி நிலையத்தை இரண்டு ஆண்டுக்கு லீசுக்கு எடுக்கிறோம். ஆண்டுக்கு இங்கேயும் ரூ.20 லட்சத்தை பார்த்து விடுவோம். மாணவர் சேர்க்கையில் சில டெக்னிக்குகளை பயன்படுத்தினால், ஒவ்வொரு ஆண்டும் 100 மாணவர்களை எளிதாக சேர்த்து விடலாம். வசூலிலும் கவலை இல்லை'' என்றார் உறுதியுடன்.

கல்வி கொள்ளையை தடுக்கும் ஆலோசனைகளை நாளை பார்க்கலாம்....

நன்றி - விகடன்

0 comments: