Thursday, May 23, 2013

வீதிக்கு வந்த வீரபாண்டியார் வீட்டுச் சண்டை - மினி தொடர்: பாகம் 1,2

வீதிக்கு வந்த வீரபாண்டியார் வீட்டுச் சண்டை - மினி தொடர்: பாகம் 1

-வீ.கே.ரமேஷ்

படங்கள்:
க. தனசேகரன்

வீரபாண்டியாரை 'சேலத்து சிங்கம்' என்று சிலாகிப்பார் கருணாநிதி. அவரும் கடைசி நிமிடங்கள் வரை கருணாநிதிக்கே சிம்ம சொப்பனமாகத்தான் இருந்தார். அந்தச் சிங்கத்தின் குகையிலேயே இப்போது சிறு நரி புகுந்தது போல், சலசலப்பு கிளம்பி இருக்கிறது. விளைவு, பலபேருக்கு பஞ்சாயத்து பண்ணிய வீரபாண்டியாரின் குடும்பத்திற்கே இப்போது நாட்டாமை தேடவேண்டிய நிலை. உண்மையில் அந்தக் குடும்பத்தில் என்னதான் நடந்து கொண்டிருக்கிறது?

கோலோச்சிய வீரபாண்டிய ஆறுமுகம் 
 
தொடர்ந்து 38 வருடங்களாக திமுக மாவட்ட செயலாளராகவும், ஐந்து முறை எம்.எல்.ஏவாகவும், வேளாண்மை, உள்ளாட்சி உள்ளிட்ட துறைகள் என மூன்று முறை அமைச்சராகவும் இருந்த மூத்த முன்னோடி வீரபாண்டி ஆறுமுகம்.

கடந்த திமுக ஆட்சியில் வேளாண்மைத் துறை அமைச்சராக இருந்தபோது, சேலம் புதிய பேருந்து நிலையத்திற்கு அருகே உள்ள அங்கம்மாள் காலனி நிலத்திற்கு அண்ணன் ஆசைப்பட்டதால், அங்கிருந்த மக்களை இரவோடு இரவாக அடித்து விரட்டினர் அன்புத் தம்பிகள். திமுக ஆட்சி முடியும் வரை அந்த மக்கள் தங்கள் வீடுகளுக்கு போக முடியாத சூழ்நிலை இருந்தது.


சூளுரைத்த ஜெயலலிதா


விஷயம் தெரிந்து, தேர்தல் பிரச்சாரத்திற்கு சேலம் வந்த ஜெயலலிதா, 'அங்கம்மாள் காலனி நிலத்தை மீட்டு தருவேன். அந்த நிலத்தை அபகரிக்க நினைக்கும் வீரபாண்டி ஆறுமுகத்தை சிறைக்குள் தள்ளுவேன்' என்று சூளுரைத்துச் சென்றார். இதனால், கொதித்தெழுந்த வீரபாண்டி ஆறுமுகமும் அடுத்தடுத்த மேடைகளில் ஜெயலலிதாவை ஒருமையில் திட்ட ஆரம்பித்தார்.


ஆட்சி தன் கைக்கு வந்ததும். வீரபாண்டி ஆறுமுகத்தை மையமாக வைத்தே ஜெயலலிதா நில அபகரிப்பு புகார்களை கவனிக்க ஒரு தனி பிரிவை ஏற்படுத்தியதாக சொல்வார்கள். அம்மா சொன்னது போலவே, அங்கம்மாள் காலனி நில அபகரிப்பு வழக்கில் சிக்க வைக்கப்பட்ட வீரபாண்டி ஆறுமுகத்தை, பின்பு பழைய வழக்குகளுக்காக குண்டர் தடுப்புக் காவலும் சூழ்ந்தது.


சிங்கத்தை சீட்டிங் கேஸில் தள்ளினால் எப்படி இருக்கும்? ஆதரவாளர்கள் கொதித்தார்கள்; எதிர்ப்பாளர்கள் திளைத்தார்கள். சிறைவாசம் வீரபாண்டியாரை ரொம்பவே முடக்கிப் போட்டது. குண்டாஸை உடைத்து வெளியில் வந்தாலும், உடல்நிலை பாதிக்கப்பட்டு கடந்த ஆண்டு மரணத்தை தழுவினார்.


வெடித்துக் கிளம்பிய சொத்து பிரச்னை


குடும்பத் தலைவன் இறந்தால் சராசரி குடும்பங்களில் சொத்துப் பிரச்னை தலை தூக்கும். வீரபாண்டியார் குடும்பத்திலும் அப்படியொரு பிராது வெடிக்கும் என்று யாரும் நினைத்துப் பார்த்திருக்கமாட்டார்கள். குடும்ப உறுப்பினர்களுக்குள் இலைமறை காயாக இருந்த சொத்துப் பிரச்னை, வீரபாண்டியாரின் மூத்த மருமகள் பிருந்தா மூலமாக விஸ்வரூபம் எடுத்து கோர்ட் கதவுகளை தட்டியது.



சேலம் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் பிருந்தாவும், வீரபாண்டியாரின் மூத்த மனைவி ரெங்கநாயகியும் கூட்டாக தாக்கல் செய்திருக்கும் அந்த மனுவில் '(வீரபாண்டி)எஸ்.ஆறுமுகம் 2007 செப் 6 ஆம் தேதி செவ்வாய்ப்பேட்டை ஜனார்த்தனராவிடம் இருந்து 97.5 சென்ட் நிலத்தையும், அவரது சகோதரர் கங்காராமிடம் இருந்து 50.5 சென்ட் நிலத்தையும் வாங்கி எஸ்.ஆறுமுகம், ரெங்கநாயகி மற்றும் பிருந்தா செழியன் என மூன்று பெயரிலும் சூரமங்கலம் சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்தார்
. பிறகு, கடந்த 2011 டிசம்பர் 23 ஆம் தேதி ரெங்கநாயகி, பிருந்தா செழியன் ஆகிய எங்கள் இருவரையும் சூரமங்கலம் சார்பதிவாளர் அலுவலகத்திற்கு இரவில் கடத்திச் சென்ற ஆறுமுகம், அங்கு வைத்து மிரட்டி இந்த இரண்டு சொத்துக்களின் பங்குகள் மேலும் எட்டு சொத்துக்களையும் தன் பெயருக்கு மாற்றிக் கொள்வதாக கையெழுத்து வாங்கிக் கொண்டார்.

ரெங்கநாயகி தன் கணவருக்கு தானமாக கொடுப்பதாகவும், மருமகள் பிருந்தாசெழியன் அந்த நிலத்தை 37.66 லட்சத்திற்கு விற்பனை செய்துள்ளதாகவும், நான்கு காசோலைகளில் தலா 9 லட்சமும், ஐந்தாவது காசோலையில் 1.66 லட்சமும், வழங்குவதாக அவர் தெரிவித்த போதிலும், அந்த தொகை வழங்கவில்லை. எனவே, அந்த சொத்து பதிவை ரத்து செய்ய உத்தரவு பிறப்பிக்க வேண்டும். 
முதல் மனைவி ரெங்கநாயகியின் இளைய மகன் ராஜேந்திரனுக்கு பங்கை கொடுக்காமல், இரண்டாவது மனைவி லீலா, அவரது மகன் பிரபு, முதல் மனைவியின் மகள்கள் மகேஸ்வரி, நிர்மலா, மூத்த மகன் செழியனின் மகள்கள் சூர்யா, சிந்து, ராஜேந்திரனின் மகள்களான கிருத்திகா, மலர்விழி ஆகியோருக்கு அந்தச் சொத்து தானமாக வழங்கப்பட்டுள்ளது. எனவே, இந்த தான சொத்து பரிமாற்ற பதிவு செல்லாது என அறிவிக்க வேண்டும்' என்று குறிப்பிட்டுள்ளார்கள்.
வீபாண்டியார் குடும்பத்திலிருந்தே இப்படி ஒரு வழக்கு புறப்பட்டு வர என்ன காரணம்? அந்தக் குடும்பத்தில் இப்போது என்னதான் நடந்து கொண்டிருக்கிறது?
வீதிக்கு வந்த வீரபாண்டியார் வீட்டுச் சண்டை - மினி தொடர்: பாகம் 2

-வீ.கே.ரமேஷ்
 

படங்கள்: 
க. தனசேகரன்

வீரபாண்டி ஆறுமுகத்திற்கு இரண்டு மனைவிகள். முதல் மனைவி ரெங்கநாயகி, இரண்டாவது மனைவி லீலாவதி. முதல் மனைவி ரெங்கநாயகிக்கு மகேஸ்வரி, நெடுஞ்செழியன் (எ) செழியன், நிர்மலா, ராஜேந்திரன் (எ) ராஜா என நான்கு பேர். மகேஸ்வரியின் கணவர் காசி, செழியனின் மனைவி பிருந்தா (இவர் தான் தற்போது கோர்ட்டுக்கு சென்றிருப்பவர்).

இவர்களுக்கு சூர்யா, சிந்து இரண்டு மகள்கள். நிர்மலா கணவர் மதிவாணன். இவர்களுக்கு கயல்விழி, பாரிவேல் என இரண்டு பிள்ளைகள். ராஜா மனைவி சாந்தி. இவர்களுக்கு மலர்விழி, கிருத்திகா என இரண்டு பிள்ளைகள். வீரபாண்டி ஆறுமுகத்தின் இரண்டாவது மனைவி லீலாவதிக்கு ஒரே மகன் பிரபு. அவரது மனைவி கௌதமி. இவர்களுக்கு சித்தார்த் என்ற ஒரு மகனும் இருக்கிறார்.

வீரபாண்டியாரின் சொத்துகள்

வீரபாண்டி ஆறுமுகத்திற்கு, அவரது அப்பா சோழயப்ப கவுண்டர் பூலாவரி அக்ரஹாரத்தில் பூர்வீக பூமியில் இருந்து பிரித்து கொடுத்த சொத்தின் மதிப்பு 2 ஏக்கர் 10 சென்ட் நிலமும், சில பொருட்களும்தான். ஆனால் வீரபாண்டியார் அரசியலில் இருந்து சம்பாதித்த சொத்துக்கள் கணக்கில் உள்ளவைகளையும், இல்லாதவைகளையும் சேர்த்தால் வரும் கோடிகள் கண்ணைக் கட்டும் என்கிறார்கள். வேளாண்மைத் துறை அமைச்சராக இருந்ததால் பல மாவட்டங்களிலும் புறம்போக்கு நிலம் எவ்வளவு, விவசாயம் நிலம் எவ்வளவு என்பதெல்லாம் வீரபாண்டியாருக்கு அத்துப்படி.

அதனால், மாவட்டம் கடந்தும் சொத்துக்கள் வாங்கி குவித்துள்ளார். சொந்த ஊரான பூலாவரியில் மட்டும் 150 ஏக்கருக்கு மேல் விளை நிலங்களும், 2 ஏக்கரில் பங்களாவும், சேலம் டூ கோவை மெயின் ரோட்டில் வி.எஸ்.ஏ., இன்ஜினியரிங் கல்லூரி, சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே வி.எஸ்.ஏ வணிக வளாகம், சென்னை தி.நகரில் பிரபு அப்பார்ட்மென்ட்ஸ், சென்னை வீடு இவை அனைத்தும் வீரபாண்டியாரின் ஒயிட் கணக்கு.



இதில்லாமல், பினாமி கணக்குகளை தோண்டினால் விழுப்புரம், கடலூரில் முந்திரி தோப்புகள், கேரளாவில் ரப்பர் தோட்டங்களும், ஊட்டி, கொடைக்கானலில் டீ, காஃபி எஸ்டேட்களும், சென்னையில் பெட்ரோல் பங்க் என நீண்டுக் கொண்டே போகும்! தற்போது இந்த சொத்துக்களை பிரித்துக் கொள்வதில் தான் குடும்ப உறவுகளுக்கிடைய முட்டல் ஏற்பட்டுள்ளது.


பிருந்தாவனத்தில் இருந்த பிருந்தா

தற்போது வழக்கு தொடுத்துள்ள பிருந்தா, சீரங்கபாளையத்தில் ஓய்வு பெற்ற அரசு ஊழியரான வீரப்பத்திரனின் மகள். படிப்பும் உயர்ந்த பண்பும் உடையவர். வீட்டிற்கு மூத்த மருமகள் என்பதால் பிருந்தாவுக்கு வீரபாண்டியார் வீட்டில் ராஜமரியாதை. தன் கணவர் செழியன், திமுகவில் உயர்ந்த நிலையில் இருந்ததால் பிருந்தா அதிகார மையத்தின் உச்சத்தில் இருந்தார். 



ஆனாலும்,  கட்டபஞ்சாயத்தோ, அடாவடி தனங்களோ செய்யாமல் குடும்ப தலைவியாக தன் கணவனுக்கும், குழந்தைகளுக்கு ஏற்ற சராசரி பெண்ணாகவே திகழ்ந்தார். ஆனால் கணவரின் திடீர் இறப்புக்கு பின்னால் பிருந்தாவின் நிலை தலைகீழாக மாறியது. சொத்துகளுக்கு பங்குபோட வந்து விடுவார் என்று வீரபாண்டியாரின் குடும்பத்தாரால் கணவன் இறந்து ஒரு மாதம் கூட ஆகாத நிலையில் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார் பிருந்தா. அவரது குழந்தைகளைக் கூட தாத்தாவிடம் அண்ட விடாமல் பார்த்துக் கொண்டார்கள். ஒவ்வொரு வருடமும் தன் கணவனின் நினைவு தினத்திற்கு அஞ்சலி செலுத்த வரும்போது கூட தன் கணவரின் வீட்டுக்கு செல்லாமல், தன் கணவரின் சமாதிக்கு நேராக சென்று சற்று நேரம் மனம் விட்டு அழுதுவிட்டு திரும்பி வந்து விடுவார் பிருந்தா.

இதுபற்றி ராஜாவிடம் யார் கேட்டாலும் 'எங்க அண்ணன் செழியன். திருமணம் ஆனதும் சேலத்தில் வீடு வாங்கி தனியாக போய்விட்டார். நானும், அப்பாவும்தான் கிராமத்தில் இங்கு இருந்தோம். அண்ணனுக்கு சிட்டி லைஃப் தான் பிடிக்கும். பிருந்தாவும் டவுன்லையே வாழ்ந்த பொண்ணு..அதனால் சேலத்தில் அண்ணன் இருந்த வீட்டிற்கே போய் விட்டார். 'குழந்தைகள் படிப்புக்கு வசதியாக சேலத்தில் இருந்தால்தான் நன்றாக இருக்கும் என்று பிருந்தாவும் சொல்லிவிட்டது. அதற்காக பிருந்தா மீது எங்களுக்கும், எங்கள் மீது அவருக்கும் உள்ள பாசமும் அன்பும் சற்றும் குறையவில்லை' என்று நா கூசாமல் சொல்வார்


மறுக்கப்பட்ட சொத்துக்கள்

ஒரு சராசரி தந்தையை போலவே வீரபாண்டியாரும் தனது மூத்த மகள் மகேஸ்வரி மீது அளவு கடந்த பாசம் வைத்திருந்தார். அதற்கு இன்னும் கூடுதலான காரணம் மகேஸ்வரி பிறந்த பிறகு தான் அரசியலில் அவர் பிரகாசிக்க ஆரம்பித்தார். முக்கிய பதவிகளும் தேடி வந்தது. மகேஸ்வரியும் தன் அப்பாவின் மீது அதிக அன்பு வைத்திருந்ததால் திருமணம் ஆகியும் தன் மாமனார் வீட்டிற்கு போகாமல் அப்பா வீட்டிலேயே இருந்து விட்டார். இவரது பேச்சுக்கு அப்பா, அம்மா, தம்பி, தம்பி மனைவி யாரும் மறுத்துப் பேச மாட்டார்கள். இதனால், வீட்டில் அதிகார மையமாக திகழ்ந்தார் மகேஸ்வரி. ஒரு கட்டத்தில் சேலம் மாவட்ட தி.மு.க. அரசியல் புள்ளிகளை தீர்மானிக்கும் சக்தியாகவும் திகழ்ந்தார். சேலம் திமுக வட்டத்தில் தனக்கான ஒரு ஆதரவு கோஷ்டியையும் உருவாக்கிக் கொண்டார். மகேஸ்வரிக்கு 'அக்கா புகழ்' பாடியே பதவிகளை பிடித்தவர்கள் பலர் இருக்கிறார்கள்.

மகேஸ்வரியும், ராஜாவின் மனைவி சாந்தியும் குடும்ப உறவுமுறைகளை தாண்டி அன்பு தோழிகளாக வலம் வந்தார்கள். வீரபாண்டியார் வீட்டை விட்டு கிளம்பிவிட்டால் இவர்கள் பஞ்சாயத்து பேசி பலர் சொத்து பிரச்னைகளை தீர்த்து வைத்தார்கள். தம்பி மீது இருந்த பாசத்தால் பூர்வீக சொத்துக்கள் அனைத்தையும் ராஜாவின் குடும்பத்திற்கே சேரும்படி பார்த்துக் கொண்டார் மகேஸ்வரி. வீரபாண்டியாரும் மகள் மீதிருந்த பாசத்தால் மகேஸ்வரி சொன்ன மாதிரியே பூர்வீக சொத்துக்கள் அனைத்தையும் ராஜாவிடமே ஒப்படைத்தார்.



மூத்த மகன் செழியனின் மனைவி பிருந்தாவுக்கோ, இளைய தாரத்து மகன் பிரபுவுக்கோ சொந்த ஊரில் உள்ள பூர்வீக சொத்துக்கள் எதையும் எழுதி வைக்கவில்லை. அதேநேரம் தனது சுயசம்பாத்தியத்தில் வந்த பெரும்பாலான சொத்துக்களை தன் மனைவி ரங்கநாயகி மீதும் தன்னுடைய மூத்த மருமகள் பிருந்தாவின் மீதும் எழுதி வைத்திருந்த வீரபாண்டியார், அதை மட்டும் அனைவருக்கும் சமமாக எழுதி வைத்திருப்பதாக சொல்கிறார்கள்.


பகடைக்காய் பிருந்தா

''இந்த பாகப்பிரிவினையில் முதல் மனைவி ரங்கநாயகியின் வாரிசுகளுக்கு மன வருத்தம். தங்களுடைய சொத்துக்களுக்கு வாரிசு தாரராக இன்னொருவர் வந்து விட்டாரே என்று  எண்ணியதால்தான் ராஜா தரப்பால், பிருந்தாவின் மூலமாக இந்த பாகப்பிரிவினை செல்லாதது என்று வழக்கு தொடுக்க வைக்கப்பட்டுள்ளது.


ஒருவேளை, 'பாகப்பிரிவினை செல்லாது' என்று கோர்ட் சொல்லிவிட்டால், பிரபுவிற்கு தராமலேயே அனைத்து சொத்துக்களையும் நாமே வளைத்துக் கொள்ளலாம் என்று எண்ணுகிறார்கள். இதில் பிருந்தா பகடைக்காய் தான்'' என்கிறார்கள் பிரபுவின் ஆதரவாளர்கள்.


ராஜாவின் முதல் மகள் மலர்விழியின் திருமணம் நிகழ்வுகள் தடபுடலாக நடைப்பெற்று வருவதால், இப்போது வீரபாண்டியார் குடிம்பத்தினர் அனைவரது கவனமும் அதில்தான் இருக்கிறது. இந்த திருமணத்தின் மூலம் மீண்டும் வீரபாண்டியார் குடும்பத்தை திமுக தலைமை திரும்பி பார்க்க வைக்க வேண்டும் என்று சேலமே வியக்கும் வண்ணம் வீரபாண்டியாரின் கல்லூரியான வி.எஸ்.ஏ., இன்ஜினியரிங் கல்லூரியில் வரவேற்பு நிகழ்ச்சி படு ஜோராக இருக்க வேண்டும் என்பதற்காக தடபுடலான வேலைகள் நடைப்பெற்று வருகிறது.
குடும்பத்திற்குள் நடக்கும் குஸ்திகள் போதாதென்று வீரபாண்டியாரின் எதிர்க் கோஷ்டியும் இப்போது குடைச்சல் கொடுக்க ஆரம்பித்திருக்கிறது.''2007 ஆம் ஆண்டு செப்டம்பர் 6 ஆம் தேதி செவ்வாய்ப்பேட்டை ஜனார்த்தனராவின் சகோதரர் கங்காராமிடம் இருந்து 50.5 சென்ட் நிலத்தை திமுக கட்சி அலுவலகம் கட்டுவதற்காக வாங்கிய வீரபாண்டியார், அந்த நிலத்தை தன் குடும்பத்தாரின் பெயரில் எழுதி, தங்கள் குடும்ப சொத்தாக மாற்றியிருக்கிறார்கள். இதுப்பற்றி தலைமைக்கு தெரியப்படுத்துவோம்" என்று அபாயச் சங்கு ஊதுகிறது அந்தக் கோஷ்டி.



அப்படியானால் வீரபாண்டியர் குடும்பத்திற்கு இனி அரசியல் எதிர்காலம்?  - நாளை பார்க்கலாம்....

நன்றி - விகடன்

0 comments: