Friday, April 19, 2013

மருதகாசி எனக்கு எதிரி , டி எம் எஸ் எனக்கு ஆதரவு - எல் ஆர் ஈஸ்வரி ஓப்பன் டாக்

வாழ்க்கைத் தொடர் - 3

காதோடு நான் பேசுவேன்...

எல் ஆர் ஈஸ்வரி

சொந்தமாக ஒரு நாடகக் குழுவை நடத்திக் கொண்டிருந்த பாடகர் திருச்சி லோகநாதன், தம்முடையஅனார்கலிநாடகத்தில் பாடுவதற்கு என் அம்மாவுக்கு வாய்ப்புக் கொடுத்தார். அம்மா, என்னை அவருக்கு அறிமுகப்படுத்தி வைத்து, ‘இவளுக்கு சினிமாவில் பாடுவதற்கு வாய்ப்புக் கிடைக்க உதவுங்கள்என்று கேட்டுக் கொண்டார்


 நான் பாடிக் காட்டியதும், ‘குரல் ரொம்ப நல்லா இருக்கு! நான் ஏதாவது ஏற்பாடு பண்ணுகிறேன்என்று சொன்னதோடு அவர் விடவில்லை. என்னை டி.ஆர். மகாலிங்கத்திடம் அழைத்துச் சென்று, ‘இந்தப் பொண்ணு ரொம்ப நல்லா பாடுறா! உங்க படத்துல ஒரு சான்ஸ் குடுக்கணும்என்று கேட்டார். அந்தச் சமயத்தில் மகாலிங்கம்தெருப் பாடகன்னு ஒரு படம் எடுத்துக் கொண்டிருந்தார். ஒருநாள் தேனாம்பேட்டையில் இருந்த ரேவதி ரெகார்டிங் ஸ்டூடியோவுக்கு என்னை வரச் சொன்னார். அம்மாவுடன் போனேன்.

அந்தப் படத்தில் படத்தில் ஹீரோ, ஹீரோயின், வில்லி ஆகிய மூன்று கேரக்டர்களும் ஒன்றாகப் பாடுவது போல ஒரு காட்சி இடம் பெற்றது. ஹீரோயினுக்கான பாட்டு வரிகளை சூலமங்கலம் ராஜலட்சுமியும், ஹீரோவுக்கான பாடல் வரிகளை மகாலிங்கமும் பாடுவதாக ஏற்கெனவே முடிவு செய்திருந்தார்கள். வில்லிக்குரிய பாடல் வரிகளை என்னிடம் கொடுத்துப் பாடச் சொன்னார்கள். ரெக்கார்டிங் ஸ்டூடியோவின் ரிகர்சல் ஹாலில், நாங்கள் ஒத்திகை பார்த்துக் கொண்டிருந்தோம். அப்போது ஸ்டூடியோவில் இருந்த ஒருவர், சத்தம் போட்டு, யாரிடமோ எதுவோ சொல்வது காதில் விழுந்தது.


யாரு இந்த புதுப் பொண்ணு? குரலே நல்லா இல்லையே? பாட்டா பாடுது இது? கிணத்துக்குள்ளே இருந்து பாடுறா மாதிரி இருக்கு. முதல்ல வெளியில போகச் சொல்லுங்க!’ என்று உரக்கச் சொல்லிக் கொண்டிருந்தார். அதைக் கேட்டு நான் அதிர்ச்சி அடைந்தேன். அம்மாவும் ரொம்ப மனசு ஒடஞ்சுட்டாங்க. அதற்கு மேல் நாங்கள் அங்கே என்ன செய்ய முடியும்? துக்கம் தொண்டையை அடைக்க, அங்கிருந்து வெளியேறினோம்


 எனக்கு அழுகையாக வந்தது என்றாலும், அதை அடக்கிக் கொண்டு, ‘அம்மா! கவலைப்படாதீங்க! கர்த்தர் நம்மைக் கைவிடமாட்டார். நிச்சயமா நமக்கு ஒரு நல்ல வழியைக் காட்டுவார். எனக்கு நிறைய வாய்ப்புகள் கிடைக்கும். அந்தப் பாட்டுகளை, இப்பபாட்டா பாடுது இந்தப் பொண்ணு?’ என்று கேவலப்படுத்திய இவரே ரெக்கார்டிங் பண்ணுவாரு. நீ வேணும்னா பாரு!’ என்று ஆறுதல் சொல்லி, அழைத்து வந்தேன். அன்று முழுக்க அம்மாவுக்குத் தெரியாமல் அழுது கொண்டே இருந்தேன். எங்கள் அம்மா, ஆண்டவரே! எங்களுக்கு ஒரு நல்ல காலம் பிறக்காதா?" என்று மன்றாடி வேண்டிக் கொண்டார். அன்றைக்கு, எனக்குக் கிடைக்க இருந்த வாய்ப்பைத் தடுத்த அந்த சவுண்ட் இன்ஜினியர் பெயர் டி.எஸ். ரங்கசாமி.

டைரக்டர் சோமு இயக்கத்தில் .பி. நாகராஜன் தயாரித்த படம்நல்ல இடத்து சம்மந்தம்’. மியூசிக் டைரக்டர் கே.வி. மகாதேவன். முதல் முறையாக அந்தப் படத்தில் பாடுவதற்கு வாய்ப்புக் கிடைத்தபோது எனக்கு இந்தக் கசப்பான அனுபவம் நினைவுக்கு வந்தது. அதைப் போல இன்னொரு தடவை அவமானப்பட நான் தயாராக இல்லை. எனவே, தயங்கித் தயங்கி, .பி.என்.னிடம் சார்! நான் பாடப்போகிற பாட்டை ரெகார்டிங் பண்ணப் போகிற இன்ஜினியர் டி.எஸ். ரங்கசாமி இல்லையே?" என்று கேட்டேன். அவருக்கு ஒன்றும் புரியவில்லை. ஏம்மா கேட்கற?" என்றார். நான் ரேவதி ஸ்டூடியோவில் பட்ட அவமானத்தை அழுகையை அடக்கிக் கொண்டே சொன்னேன்.

அதைக் கேட்டதும், .பி.என். என்ன சொன்னார் தெரியுமா? கவலைப்படாதேம்மா. உனக்கு நல்ல குரல் இருக்கு. என் படத்துல நீதான் பாடுற! உனக்கு இப்ப ஒரு விஷயம் சொல்லட்டுமா? உன் குரலை வேண்டாம்னு சொன்ன அதே ரங்கசாமியை வெச்சு, நான் உன்னுடைய பாட்டை ரெக்கார்டு பண்ணப் போறேன். நீ தைரியமா பாடு" என்று சொன்னபோது, என் காதுகளையே என்னால் நம்ப முடியவில்லை



 அன்றைக்கு அவர் கொடுத்த தைரியம்தான் என்னை இன்றும் லட்சோப லட்சம் ரசிகர்களோட அன்பையும், ஆதரவையும் பெறும் அளவுக்கு வாழ்க்கையில வெற்றிபெற வச்சுருக்கு. முதலில் ஒரு பாட்டு. அடுத்தடுத்து பம்பர் பிரைஸ் மாதிரி முதல் படத்துலயே நான்கு பாடல்களைப் பாட வைத்தார். ஒரு பாட்டு பாடின போது, பாடலாசிரியர் மருதகாசி, ‘இந்தப் பொண்ணோட தமிழ் உச்சரிப்பு சரியா இல்லையே!’ என்று கமென்ட் அடித்த போதும், .பி.என்.னும், கே.வி.எம்.மும் எனக்கு வாய்ப்பளித்தார்கள். இன்றைக்கும் .பி. என். நான் என் தந்தை ஸ்தானத்தில் வைத்து மதிக்கிறேன்.


ஒருநாள் ரெக்கார்டிங்கை முடித்துவிட்டு, அம்மாவுடன் வீட்டுக்குப் புறப்பட்டபோது .பி. நாகராஜன் இந்தப் பொண்ணுக்கு குரல் ரொம்ப நல்லா இருக்கு; ரொம்பப் பிரகாசமான எதிர்காலமும் இருக்கு; ஆனா இந்தப் பொண்ணோட பெயரை மாத்தணும்" என்றார். அவர்கள் அப்படிச் சொன்னதற்கு இன்னொரு காரணமும் இருந்தது. அந்தக் காலக்கட்டத்தில் (எம்.எஸ்.) ராஜேஸ்வரி என்ற பாடகி ரொம்பப் பிரபலமாக இருந்தார். பெயர்க் குழப்பம் வந்து விடக் கூடாதில்லையா?


எனக்கு என் பெற்றோர் வைத்த பெயரை மாற்றுவதற்கு சம்மதிப்பதா வேண்டாமா என்ற குழப்பம் ஏற்பட்டது. என் அம்மாவிடம் கேட்டார்கள். ‘உங்க இஷ்டப்படி செய்யுங்கஎன்று அவர் சொல்லிவிட்டார். என்ன பெயர் வைப்பது என்ற கேள்வி எழுந்தது. .பி.என்., கே.வி.எம். இருவரும் என்னென்னவோ பெயர்களை எல்லாம் சொல்லி, விவாதித்தார்கள். சட்டென்று கே.வி.எம். ‘மாப்ளே! எதுக்கு புதுசா பெயர் வைக்கணும்? இவள் பேரு டி. லூர்து மேரி ராஜேஸ்வரி. அதுல இனிஷியல்டியை நீக்கிட்டு, லூர்து மேரில இருந்துஎல்’, ராஜேஸ்வரியில இருந்துஆர்இரண்டையும் எடுத்துக்கிட்டு, ராஜேஸ்வரியைஈஸ்வரின்னு சுருக்கி, ‘எல்.ஆர்.ஈஸ்வரின்னு பேர் வெச்சிடலாமே!’ என்று சொன்னார்.


நல்ல இடத்து சம்மந்தம்படம் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை என்றாலும், பாடல்களுக்கு மக்கள் மத்தியில் பிரமாதமான வரவேற்பு கிடைத்தது. என்னுடைய பாட்டுகளைக் கேட்ட டைரக்டர்களும் இசையமைப்பாளர்களும் பாராட்டினார்கள். சரஸ்வதி ஸ்டோர்ஸ், ஹெச்.எம்.வி. போன்ற தங்களுடைய பிரபல இசைத்தட்டு நிறுவனங்கள் தங்களுடைய இசைத் தட்டுக்களுக்காகப் பாடுவதற்கு அக்ரிமென்ட் போட வந்துவிட்டார்கள். கோரஸ் பாடிக் கொண்டிருந்த ராஜேஸ்வரி தான், ‘நல்ல இடத்து சம்மந்தம்படத்தில் சூப்பர் ஹிட் பாடல்களைப் பாடின எல்.ஆர். ஈஸ்வரி என்று அறிந்த போது அவர்களுக்கு இனிய அதிர்ச்சி ஏற்பட்டது.


படங்களில் சோலோவாகப் பாடுவதற்கான வாய்ப்புகள் என்னைத் தேடி வரத் தொடங்கினாலும், தொடர்ந்து கோரஸ் பாடல்களையும் பாடிக் கொண்டுதான் இருந்தேன். ஒருநாள் .பி.என். உனக்கு நிறைய சான்ஸ் வந்து கொண்டிருக்கு. அதனால, இனிமேல் நீ கோரஸ் பாட வேண்டாம்" என்று அட்வைஸ் செய்தார். ஆனால் நான் அந்த ஆலோசனையை முழுமையாக ஏற்றுக் கொள்ளவில்லை. நான் முறைப்படி சங்கீதம் படிக்காதவள். ஆண்டவர் அருளால் எனக்கு நல்ல குரல் அமைஞ்சுருக்கு. ஆனாலும், நான் ஒரு நல்ல பாடகியாக சினிமா உலகத்துல நிலைச்சு, நீடிச்சு நிற்கணும்னா எனக்கு பலமான மியூசிக் அஸ்திவாரம் இருக்கணும்


 அது எம்.எஸ்.விஸ்வநாதன் - ராமமூர்த்தி மியூசிக்ல கோரஸ் பாடினா எனக்குக் கிடைக்கும். அதனால, எம்.எஸ்.வி. மியூசிக்ல மட்டும் நான் தொடர்ந்து கோரஸ் பாடிக்கிட்டுத்தான் இருப்பேன். அவரே என்றைக்குஈஸ்வரி! நீ இனிமேல் கோரஸ் பாட வேண்டாம்னு சொல்றாரோ அன்னிக்கு நிறுத்திடறேன்என்று சொல்லிவிட்டேன். அவரும் ஏற்றுக் கொண்டார்.


1961 என் வாழ்க்கையில் மறக்கமுடியாத ஒரு வருடம். ஒரு பாட்டை என்னிடம் கொடுத்த எம்.எஸ்.வி. ‘உனக்கு மங்களகரமான ஒரு பாட்டைக் கொடுத்திருக்கேன். உன்னோட முழுத் திறமையையும் காட்டி, அந்தப் பாட்டை நீ அற்புதமாய் பாடிட்டேன்னா, நீ எங்கேயோ போயிடுவே!’ என்று சொன்னார். நான் என் இரண்டு கைகளையும் குவித்து அவரை வணங்கி, உங்களோட ஆசீர்வாதம் இருந்தா நீங்க எதிர்பார்க்கிறபடியே பாடி, நல்ல பெயர் வாங்குவேன்என்று உணர்ச்சி பொங்கச் சொன்னேன்.


அந்த சூப்பர் டூப்பர் ஹிட் பாட்டு எது என்றும், அதைப் பாடிய சமயத்தில் நான் சந்தித்த சவாலைப் பற்றியும் அடுத்த இதழில் சொல்கிறேன்.
(கலகலப்போம்...)

1 comments: