Thursday, April 04, 2013

கிளிநொச்சி - போர் தின்ற நகரம்


செயற்கைக் கால்களைப் பெறும் பொருட்டு நீண்டிருந்த வரிசையில் நின்றிருந்த இளம் தாய், கால் கருகிய சிறுவனைத் தன் இடுப்பில் காவி வந்திருந்தாள். 'என்ரை பிள்ளைக்கும் ஒரு கால் தாங்கோ...’ என்று கைகளை நீட்டியபடி அவள் கெஞ்சினாள். அந்தச் சிறுவன் வளர வளர, தன் வாழ்க்கையில் எத்தனை பொய்க் கால்களுக்காக அலைய வேண்டும்?’ - 'கிளிநொச்சி - போர் தின்ற நகரம்’ என்னும் நூலில் தீபச்செல்வன் ஈழ மக்களைப் பற்றி எழுதிய வரிகள் இவை. 

யாழ் பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவரான தீபச்செல்வன், இப்போது சென்னைப் பல்கலைக்கழக மாணவர். ''யுத்தம் தின்றது போக எஞ்சியிருப்பவற்றை ராணுவத்திடம் இருந்து காப்பாற்றிக்கொள்வதே போருக்குப் பிந்தைய பெரும் போராக மக்கள் மீது கவிந்திருக்கிறது'' எனும் தீபச்செல்வன், தன் எழுத்துகள் மூலம் ஈழ மக்களின் இப்போதைய வாழ்க்கைப்பாடுகளை உலகின் கவனத்துக்குக் கொண்டுவருகிறார்.  


'' 'கிளிநொச்சி - போர் தின்ற நகரம்’ என்ற நூல் எதைப் பற்றியது?''


''போர் முடிந்த பின்னர் கிளிநொச்சிக்கு மீண்டும் திரும்பும்போது என்னுடைய நண்பர்கள், உறவினர்களைத் தேடிச் சென்ற அனுபவங்களைத் தான் இந்த நூலில் எழுதியிருக்கிறேன். நான் படித்த கிளிநொச்சி மத்தியக் கல்லூரிக்குள் போரில் காலை இழந்த அப்பண்ணா என்ற அண்ணாஒருவரைத் தேடும்போது என்னைப் பாதித்த நிகழ்வுகள்தான், நூலின் முதல் பகுதியை எழுதத் தூண்டின. உண்மையில் கால்களை இழந்த அப்பண்ணாக்களின் நகரமாக கிளிநொச்சி மாறியிருந்தது!''


''ஈழ மக்கள் இப்போது எப்படி இருக்கிறார்கள்?''


''எல்லாவற்றையும் இழந்துவிட்டார்கள். பாரம்பரிய வாழ்விடங்களில் வாழ்ந்த மக்களை, வனாந்தரங்களில் வீசிச் சென்றிருக்கிறது போர். அவர்கள் வாழ்ந்த பகுதிகளை ராணுவம் எடுத்துக்கொண்டது. எங்கள் மக்களின் பூர்வீக நிலங்களில் தென்னிலங்கைச் சிங்களர்களைக் குடியேற்றுகிறார்கள். பயங்கரவாதிகளிடம் இருந்து மக்களை மீட்பதாகச் சொல்லி, 2007-ல் சம்பூரைக் கைக்கொண்டது இலங்கை ராணுவம்.

 ஆனால், இப்போது போர் முடிந்த பிறகும் வளம் கொழிக்கும் சம்பூரை மக்களுக்குக் கிடையாது என அறிவித்துவிட்டது இலங்கை அரசு. இதுபோல யாழ்ப் பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு போன்ற கிராமங்களின் பகுதிகளையும் மக்களிடம் மீண்டும் ஒப்படைக்கவில்லை. எங்கள் நிலப் பகுதி மீது படையெடுக்கும் இலங்கை அரசு, 'பயங்கரவாதிகளிடம் இருந்து மக்களை மீட்கிறோம்’ என்று சொல்லி அந்த நிலங்களைக் கையகப்படுத்தி சிங்களவர்களைக் குடியமர்த்திக் கொள்கிறது. தனது தேவைக்கும் அரசியலுக்கும் ஏற்ப சூழலை மாற்றி மாற்றிப் பேசும் இலங்கை அரசின் பொய்ப் புரட்டுக்களைத்தான் இப்போது உலகமும் கேட்டுக்கொண்டு இருக்கிறது!''

''முகாம்களை மூடிவிட்டதாக இலங்கை அரசு சொல்கிறதே?''


''இல்லை. உலகின் கண்களுக்குக் காட்டிய முகாம்களை மூடிவிட்டு, வன்னிப் பெரு நிலப்பரப்பையே பிரமாண்ட திறந்தவெளி முகாமாக மாற்றிவிட்டார்கள். மெனிக்பாம் முகாம் இப்போது இல்லை. ஆனால், கேப்பாப்புலாவு, புதுக்குடியிருப்பு போன்ற இடங்களில் புதிய முகாம்களை உருவாக்கியிருக்கிறார்கள். தவிர, விசாரணை முகாம்கள், ரகசியத் தடுப்பு முகாம்கள் என விதவிதமான முகாம்கள் அங்கு உள்ளன.

 ஈழம்பற்றிப் பேசக்கூடியவர்களைக் கொன்றுவிட்டு, எஞ்சியவர்களை எங்கே வைத்திருக்கிறார்கள் எனத் தெரியவில்லை. 50 பேர் வாழக்கூடிய இடங்களில் 150 பேரைக் குடிவைத்துவிட்டு மீள் குடியேற்றம் செய்துவிட்டோம் என்கிறது இலங்கை. கண்ணிவெடியைக் காரணம் காட்டியே ராணுவம் மக்கள் நிலங்களை அபகரித்து அங்கு முகாமிட்டுஇருக்கிறது!''


''ஜெனிவா தீர்மானத்தை அந்த மக்கள் எப்படிப் பார்க்கிறார்கள்?''


''ஜெனிவா தீர்மானத்துக்கு எதிராகத் தமிழ் மக்கள் போராடுவது போன்று காட்ட யாழ்ப்பாணத்தில் ராணுவத்தினர் போராட்ட நாடகம் ஒன்றை நடத்தியுள்ளனர். வவுனியாவில் அப்பாவி மக்களைப் பலவந்தமாக அழைத்துச் சென்று போராட்டத்தில் ஈடுபடுத்தி இருக்கிறார்கள். மீள்குடியேற்றம், நிலம், அச்சமற்ற வாழ்வு, சுதந்திரமான நடமாட்டம் இதிலேனும் ஒரு முன்னேற்றத்தை ஐ.நா. கொடுக்குமா என்பதுதான் ஈழ மக்களின் எதிர்பார்ப்பு. இந்தப் போரின் மீதும் இனப்படுகொலையின் மீதும் உலகம் ஒரு சிறிய பார்வையைக்கூட செலுத்தத் தவறியிருக்கிறது. போர்க் குற்றம், இனப் படுகொலை தொடர்பான விவகாரங்களில் உறுதி யான நடவடிக்கையை எதிர்பார்க்கிறார்களே அன்றி, அவர்கள் ஐ.நா. தீர்மானத்தை எதிர்க்கவில்லை!''


''இப்போது வன்னிப் பகுதிக்குச் சுற்றுலா வந்து செல்லும் சிங்களர்கள் போரால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களை எப்படிப் பார்க்கிறார்கள்?''




''தான் வாழும் பகுதியில் பார்க்கஇயலாத ஒன்றை இன்னோர் இடத்துக்குச் சென்று கண்டுகளிப்பதற்குப் பெயர்தான் சுற்றுலா. அந்த வகையில் வடக்குப் பகுதி தமிழ் மக்கள், சிங்களர்கள் வாழும் தென்னிலங்கைக்குச் சென்றால், அங்கே புத்தர் கோயிலையோ, சிங்களக் கலாசாரங்களையோ காண்பார்கள். ஏனென்றால், தங்கள் பகுதியில் அதைப் பார்க்க முடியாது. ஆனால், இப்போது யாழ், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா போன்ற வட பகுதிகளிலும் கூட புத்தரை மட்டுமே காண முடிகிறது. போர், அனைத்துப் பிரதேசங்களிலும் இந்து ஆலயங்களை அழித்துவிட்டு புத்தரைக் கொண்டுவந்து சேர்த்துவிட்டது. இது சிங்கள மக்களுக்கு ஓர் இனிய மன எழுச்சியாக அமைந்துள்ளதால், இந்தப் போரைப் பெருமிதமான வெற்றியாக நினைக்கிறார்கள். அப்படித்தான் சிங்கள அரசு சிங்கள மக்களை வைத்திருக்க விரும்புகிறது. அந்தச் சிந்தனையும் பெருமிதமுமே ராஜபக்ஷே வின் வெற்றி!''


''எந்தச் சட்டதிட்டத்துக்கும் அடங்க மறுக்கிற இலங்கை அரசிடம், ஈழத் தமிழர்கள் இழந்த உரிமைகளை மீளப்பெற முடியுமா?''


''உலகின் மௌனமே இலங்கை அரசின் சண்டித்தனங்களுக்குக் காரணம். தன்னுடைய அரசியலுக்காக இலங்கை மீது இந்தியா கொண்டிருக்கும் பெரும் காதலும் ஒரு காரணம். எல்லா அரசுகளும் அதனதன் அளவில் செய்யும் கொலைகளுக்கு ஈடாக, தான் செய்த கொலைகளைக்கொண்டு நியாயம் கேட்கப்பார்க்கிறார் ராஜபக்ஷே. ஆனால், நடந்த இனப்படுகொலைக்கும் போர்க் குற்றத்துக்கும் இந்த உலகம் நீதியை வழங்க மறுக்கும்போது, எங்கள் அடுத்த தலைமுறையும் போராட வேண்டிய நிர்பந்தத்துக்குள் தள்ளப்படுவார்கள்!''

thanx - vikatan

0 comments: