Saturday, April 06, 2013

என் வழக்கை இந்த நீதிபதி விசாரிக் கக்கூடாது’ என்று ஒருவரால் கேட்க முடியும்?'


விகடன் மேடை சந்துரு பதில்கள்!


வாசகர் கேள்விகள்

படம்: கே.ராஜசேகரன்நேர்மையாக இருக்க வேண்டும் என்று அழுத்தமாகச் சொல்வதைப் போல், உங்களுடைய பணிகள் அமைந்திருக் கின்றன. அப்படியானால், குற்றவாளிகளுக்காக வழக்கறிஞர்கள் வாதாடுவது சரிதானா?''

''குற்றவாளியாக ஒருவரை முடிவுசெய்யும் முன், அவரைக் குற்றம் சாட்டப்பட்டவர் என்றே அழைக்க வேண்டும். '100 குற்றவாளிகள் விடுதலை பெற்றாலும் ஒரு நிரபராதி தண்டிக்கப்படக் கூடாது’ என்பதே சட்ட மரபு. அரசியல் சட்டத்தின் ஷரத்து 22(1)ன் கீழ் காவல் துறையால் கைது செய்யப்பட்ட ஒவ்வொருவரும், தான் விரும்பும் வழக்கறிஞர் ஒருவரைக் கலந்தாலோசிக்கவும், தனக்காக வாதாட ஏற்பாடு செய்துகொள்வதும் அடிப்படை உரிமையாக்கப்பட்டு உள்ளது. குற்றவாளி சார்பில் வழக்கறிஞர் இல்லாமல் நடத்தப்படும் கிரிமினல் வழக்கு செல்லாததாகிவிடும்.


 அப்படி வழக்கறிஞர் வைத்துக்கொள்ள ஒருவருடைய பொருளாதாரம் இடம் தரவில்லை என்றால், நீதிமன்றமே அவருக்கு வாதாட வக்கீல் ஏற்பாடு செய்துதரும். இதை state brief மற்றும் Amicus curiae என்றும் சொல்வார்கள். மேலும், அரசியல் சட்டத்தின் 39A பிரிவில் ஏழைகளுக்கு சட்ட உதவிக்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. ஒரு குற்றவாளி தனக்கு சட்ட உதவி வேண்டும் என்று வக்கீல் ஒருவரிடம் சென்று கேட்கும்போது, அந்தக் கோரிக்கைகளை அவர் தக்க காரணங்கள் இன்றி நிராகரிக்க முடியாது. அப்படி நிராகரித்தால், அது தொழில் தர்மம் ஆகாது.


 இதை இங்கிலாந்தில் cab rank rule என்பார்கள். சென்ட்ரல் ரயில் நிலைய வாசலில் காத்துக்கிடக்கும் டாக்ஸிகள் வரிசைப்படி பயணிகளைப் போகும் இடம்பற்றிக் கேட்காமல் ஏற்றிச் செல்வதுபோல, வக்கீல்களும் வழக்குபற்றித் தெரிந்துகொண்டு அதன் பிறகு ஆஜாராவேன் என்று முயற்சிப்பதைத் தடுக்கும் ஏற்பாடு இது. அதே சமயத்தில் ஒரு குற்றவாளிக்காக நாணயமற்ற முறையில் ஆலோசனைகள், ஏற்பாடுகள் செய்வது பார் கவுன்சில் விதிகளில் தடைசெய்யப்பட்டு உள்ளது. 


டெல்லியில் மூத்த வழக்கறிஞர் ஆனந்த் என்பவர் சாட்சிகளைக் கலைப்பதை தெஹல்கா குழுவினர் ரகசியமாகப் படம்பிடித்தனர். அதன் பிறகு அவருடைய வக்கீல் சனத் பறிக்கப்பட்டது. சமீபத்தில் ஸ்பெக்ட்ரம்(2G) வழக்கில் ஆஜரான ஏ.கே.சிங் (சிறப்பு அரசு வழக்கறிஞர்) எதிரிகளுக்கு ஆலோசனை வழங்கியது அவருடைய தொலைபேசி உரையாடல் ஒட்டுக்கேட்பு மூலம் வெளி உலகுக்கு வந்தது. அவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்!''


ஆ.ராஜன், திருநெல்வேலி.


 ''தூக்குத் தண்டனைகுறித்து உங்கள் நிலைப்பாடு என்ன?''


''உங்கள் கேள்விக்குப் பதிலை என் வார்த்தைகளில் கூறுவதைவிட, சமீபத்தில் 'தென் ஆசியச் செய்தி’ இதழில் பழ.நெடுமாறன் அவர்கள் எழுதியுள்ள கட்டுரையை மேற்கோள் காட்டுவது நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன்.


'ராஜீவ் கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட நால்வருக்கு அன்றைய ஆளுநரிடம் நாங்கள் அளித்த கருணை மனு ஏற்க மறுக்கப்பட்டது. உடனடியாக உயர் நீதிமன்றத்தில் ஆளுநரின் ஆணை செல்லாது என்று வழக்கைத் தொடுத்து, 'அரசியல் சட்டப்படி கருணை மனுக்களின் மீது முடிவு செய்யும் அதிகாரம் ஆளுநர்களுக்கோ, குடியரசுத் தலைவருக்கோ கிடையாது. மாநில அமைச்சரவையும் மத்திய அமைச்சரவையும் கூடி என்ன பரிந்துரையைச் செய்கின்றனவோ, அந்தப் பரிந்துரையை ஏற்றுத்தான் ஆளுநர்களும் குடியரசுத் தலைவரும் செயல்பட வேண்டும்’ என்ற மகத்தான தீர்ப்பினைப் பெற்றுத்தந்து, 


அந்த நால்வ ரின் உயிரைக் காப்பாற்றிய பெருமை அவருக்கு மட்டுமே சாரும். இந்தியா விடுதலை பெற்ற நாளில் இருந்து 1999-ம் ஆண்டு வரை, ஆளுநர்களும் குடியரசுத் தலைவர்களும் மட்டுமே கருணை மனுக்கள் மீது முடிவு செய்யும் அதிகாரம் பெற்றிருந்ததற்குச் சட்டரீதி யான முற்றுப்புள்ளி வைத்து, இன்று இந்தியா முழுவதிலும் அந்தத் தீர்ப்பின் அடிப்படை யிலேயே எண்ணற்றவர்களின் உயிர்கள் தூக்கு மேடைகளில் இருந்து மீட்கப்பட்டு இருக் கின்றன என்று சொன்னால், அதற்கான பெருமை முழு வதும் நீதிநாயகம் சந்துரு அவர் களையே சாரும்!’ ''


அ.பாஸ்கரன், மதுரவாயல்.
 ''ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ நடைப்பயணம் மேற்கொண்டபோது, அவரை நீங்கள் வரவேற்றீர்களாமே? அப்படியானால் நீங்கள் ம.தி.மு.க. அனுதாபியா? நீங்கள் நீதிபதியாக இருந்தபோது வைகோவுக்குச் சாதகமாக நிறைய தீர்ப்புகளை வழங்கி இருப்பீர்கள் அல்லவா?''



 ''அப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை. வைகோவுக்காக அவர் மீது பொடா சட்டத் தில் போடப்பட்ட வழக்குகளில் ஒரு மூத்த வழக்கறிஞ ராக அவருக்காக ஆஜரானேன். அது மனித உரிமைப் பிரச்னை என்பதால், எனது கொள்கைப்படி அதற்கு நான் கட்டணம் ஏதும் பெற்றுக்கொள்ளவில்லை. நான் நீதிபதி யான பிறகு, அவரை இரண்டு முறை சந்தித்தேன்.


 ஒன்று, நான் மதுரைக்கு அலுவல் பணியாகச் செல்லும்போது அதே விமானத்தில் பயணித் தார். எனக்கு வாழ்த்து சொல்லிவிட்டு வேறு இருக்கை யில் சென்று அமர்ந்து கொண்டார். இரண்டாவது, நான் அறுவைசிகிச்சைக்காக மருத்துவமனைக்குச் சென்றபோது தற்செயலாக அங்கு வந்த அவர், எனது உடல்நிலைபற்றி விசாரித்தார். நலம் பெற வாழ்த்தினார். அவர் கட்சி சார்பாக வந்த வழக்கு ஒன்றைத் தள்ளுபடி செய்த தாகத்தான் எனக்கு நினைவு உள்ளது!''



து.மணி, மதுரை.

' 'வரலாற்றுப் பெருமை மிக்க சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாகப் பணி யாற்றிவிட்டு, அதே  நீதிமன்றத்தில் இருந்து எளிய மனிதராக விடைபெற்ற அனுபவம் எப்படி இருந்தது?''

''கட்டாய ஓய்வு கொடுக்கப்பட்ட மாயூரம் முன்சீப் வேதநாயகம் பிள்ளை பின்னாளில் இவ்வாறு எழுதினார்:
'போதும் போதும்

உத்தியோக கனமே
இதில் ஏது சுகம்
நமக்கு மனமே.
அண்டப்புரட்டன் அப்பா
அவன் பிரதிவாதி
சண்டப் பிரசண்டன்
நியாயவாதி-நாளும்  
சாஸ்திரப் புளுகன்
கட்சிக்காரன்
எனும் கியாதி!’


அது அவரது அனுபவம். ஆனால், நான் எனது உத்தியோக பாரத்தை அப்படி எண்ணவில்லை. எனது 6 வருடங்கள் 7 மாதங்கள் 8 நாட்களும் பதவியை முழு நிறைவுடன் செய்தேன். மன நிம்மதியுடன் வீடு திரும்பினேன்!''

சு.அருளாளன், ஆரணி.
'' 'என் வழக்கை  இந்த நீதிபதி விசாரிக் கக்கூடாது’ என்று ஒருவரால்  கேட்க முடியும்  என்றால், என்னென்ன நிபந்தனைகளின்     கீழ்  அவ்வாறு கேட்க முடியும்?''


''ஒரு நீதிபதி வழக்கில் தீர்ப்பளிக்க லஞ்சம் பெற்றிருந்தாலோ அல்லது அவருக்குத் தனிப்பட்ட விருப்பு (bias) அவ்வழக்கின் பால் இருந்தாலோ அல்லது வழக்கில் கட்சிக்காரர்கள் அல்லது வாதாடுபவர்களில் ஒருவர் அவரது நெருங்கிய உறவுக்காரர்களாக இருந்தாலோ அந்த வழக்கை வேறு கோர்ட்டுக்கு மாற்றம் செய்ய அந்த நீதிபதியிடமே கோரி நிவாரணம் (Petition for Recusal) கேட்கலாம். அப்படி அந்த நீதிபதி அந்தக் கோரிக்கையை நிராகரித்துவிட்டால், தலைமை நீதிபதியிடமோ (அ) உச்ச நீதிமன்றத்திலோ மனு போட்டு வழக்கை வேறு கோர்ட்டுக்கு மாற்றிக்கொள்ளலாம்!''

எம்.சங்கர், நல்லாலம்.
''காதல் அனுபவம் உண்டா?''
''எனது திருமணம், காதல் திருமணம்தான். நான் புகுமுக வகுப்பு படிக்கும்போது நெய்வேலியில் இருந்து காதல் ஜோடி ஒன்று ஓடி வந்து என் வீட்டில் சில நாட்கள் தஞ்சமடைந்தது. அப்போது முதல் இன்று வரை பல காதல் திருமணங்களுக்கு உதவியிருக்கிறேன். நானே நடத்தியும் வைத்திருக்கிறேன். நான் வழக்கறிஞராக இருக்கும்போது காதல் திருமணம் செய்ய விழைவோருக்கு வரும் தடைகளை எதிர்த்து வழக்கு நடத்தியுள்ளேன்.

பின்னர், நீதிபதியான பிறகு என் முன்னால் வந்த வழக்குகளில் அப்படிப்பட்ட காதலர்களுக்கு, சட்டரீதியாக என்னவிதமான உத்தரவுகளைப் பிறப்பிக்க முடியுமோ... அத்தனையையும் செய்தேன். பதவியில் இருந்து ஓய்வு பெறவிருந்த இரு வாரங்களுக்கு முன்னர் கூட ஒரு வழக்கு வந்தது. காதல் திருமணங்களுக்கு உதவி செய்த ஒருவர் மீது காவல் துறையினர் இ.பி.கோ. 466 பிரிவில் வழக்கு தொடர்ந்தனர்.

 அதாவது, பெண்ணைக் கடத்தியதற்கு உதவி செய்ததாக. அந்த வழக்கு தள்ளுபடியான பிறகும் அவருக்கு போலீஸ் வேலை கொடுக்க மறுத்துவிட்டனர். 'காதல் திருமணங்களை ஆதரிக்க வேண்டும், கௌரவக் கொலைகளைத் தடுக்க வேண்டும்’ என்று என் தீர்ப்பில் குறிப்பிட்டு, அந்த இளைஞனுக்கு வேலை கொடுக்கும்படி காவல் துறை இயக்குநருக்கு உத்தரவிட்டேன்.''

ச.ஐயப்பன், காஞ்சிபுரம்.

''வழக்கறிஞராகப் பணியாற்ற வேண்டும் என்பதுதான் உங்களின் லட்சியமாக இருந்ததா? அல்லது வேறு கல்லூரிகளில் இடம் கிடைக்காமல் சட்டக் கல்லூரியில் சேர்ந்தீர்களா?''


''மருத்துவராக ஆக வேண்டும் என்பது எனது பள்ளிக்கூடக் கனவு. மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்காமல் மாணவர் இயக்கத்துக்கு வந்தேன். பின்னர், அந்த வேலையையே முழு நேரமாகச் செய்ய சரியான இடம் சட்டக் கல்லூரிதான் என்று அந்தக் கல்லூரியில் சேர்ந்தேன். மாணவர் அரசியலில் தீவிரமாக ஈடுபட்டிருந்தாலும் ஒருநாளும் வகுப்புகளுக்கு மட்டம் போட்டது இல்லை. வகுப்பிலும் முதல் மாணாவனாகவே இருந்தேன்!''

அடுத்த வாரம்...


''ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் அமைக்கப்படும் எந்த கமிஷனும், இதுவரைக்கும் பிரயோஜனமாக இந்தியாவில் எதுவுமே செய்தது இல்லையே... என்ன காரணம்?''

''நீதிபதியாகப் பணியாற்றிய காலகட்டத்தில் அதிகாரவர்க்கத்திடம் இருந்து அழுத்தங்களையும் மிரட்டல்களையும் எதிர்கொண்ட சந்தர்ப்பம் அமைந்திருக்கிறதா? அப்படி இருந்தால் அதை எப்படிச் சமாளித்தீர்கள்?''

''தமிழ் சினிமா பார்ப்பது உண்டா? அப்படியெனில் மனம் கவர்ந்த இயக்குநர், நடிகை, நடிகையர் யார்?''


- இன்னும் பேசுவோம்...

thanx - vikatan

0 comments: