Sunday, April 07, 2013

பெண்களைக் கட்டுப்பாடு செய்கிறோம் - பாரதி பாஸ்கர் @ கல்கி

 

உத்வேகத் தொடர் - 1



சில பாதைகள்... சில பயணங்கள்...



பாரதி பாஸ்கர்



டெல்லி பேருந்தில் பாலியல் வன்முறைக்கு ஆளாகி உயிரிழந்தநிர்ப்பயாவின் (பெயர் மாற்றப்பட்டது) அஸ்தி கங்கையில் கரைக்கப்பட்டு, அவளது இறுதிப் பயணம் தொடங்கிய நாள்அன்று இந்தத் தொடரை எழுதத் தொடங்குகிறேன்.

2012, டிசம்பர் 16 ஆம் தேதி. அன்றுதான் அந்த விபரீத பஸ் பயணம் நடந்தது. அன்றைய காலை அவளுக்கு எப்படி விடிந்திருக்கும்? டெல்லியின் நடுக்கும் குளிரில்இன்னும் கொஞ்ச நேரம்என்று சிணுங்கியபடி தன் ரஜாயை இழுத்துப் போர்த்திக் கொண்டு, அந்தப் போர்வை தரும் கதகதப்பில் சுகமாய் அவள் கிடந்திருக்கக் கூடும். அம்மா செய்யும் பராத்தா, அடுப்பில்சொய் சொய்என்று திருப்பிப் போடப்பட்டு கல்லின் சூட்டில் கன்னம் சிவக்கும். டீ.வி.ரிமோட்டுக்காக தம்பிகளோடு அவள் செல்லச் சண்டை போட்டிருக்கக் கூடும். ‘அம்மா, நான் சினிமா போயிட்டு வருவேன். லேட் ஆகும். கவலைப்படாதேஎன்று சொல்லி விட்டு வெளியே போகும்போது, அந்த வீட்டின் வாசலில் அவள் வளர்க்கும் ரோஜாச் செடிக்கு ஒரு குவளை நீரை அவள் ஊற்றியிருக்கலாம். அன்று பூத்த ஒரு ரோஜா தன் இதழில் இருந்து ஒரு துளி மௌனக் கண்ணீரை அவளுக்காகச் சிந்தியிருக்கலாம். அதன்பின்நிர்ப்பயாவீட்டுக்குத் திரும்பிவில்லை.

இப்படி நடப்பது முதல் முறையா என்ன? இந்த விபரீதங்களுக்குக் காரணம்பெண்கள் பத்து மணிக்கு மேல் வெளியே போறதுதான்என்கின்றன சில குரல்கள். ‘ஒரு கட்டுப்பாடுன்னு வைச்சது இப்படியெல்லாம் நடக்காம இருக்கத் தான்என்கின்றன மேலும் சில குரல்கள். ‘காரணமே இவங்க போடற டிரஸ்தான் ஸார்என்று பலர் கவலைப்படுகின்றனர் கண்ணீர் வடித்தபடியே... பெண்களின் உடைகளும் அவர்கள் நடந்து கொள்ளும் முறைகளும் ஆண்களைத் தூண்டுகின்றனவா? இவற்றால் தான் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் பெருகுகின்றனவா?



பாட்டா செருப்புக்கடை. ‘காலுக்கு மெத்து மெத்துன்னு எந்த செருப்பு சேரும்...?’ கண்ணால் அளவெடுக்கும் நான். மாம், எனக்கு ஹை ஹீல்ஸ் ஸ்லிப்பர்..." என்று அலறும் ஒரு இளம் குரல் பக்கத்தில் கேட்க, தலை நிமிர்த்திப் பார்க்கிறேன். ஒரு பதினெட்டு, பத்தொன்பது வயசு இளம் பெண்ணும் அவள் அம்மாவும். கடையின் சோபாவில் அமர்ந்திருக்கிற பெண் காலைத் தூக்கி, செருப்பின் அளவு குறிக்கப்பட்டிருக்கும் அளவுகோலின் மீது வைக்கிறாள். பார்க்கிற எனக்குபக்என்கிறது. அவள் அணிந்திருப்பது மேற்கால்களை மட்டும் கவ்வியிருக்கும் ஒரு சூப்பர் மினி ஷார்ட்ஸ். ‘பெண் இப்படி உடை அணிந்திருக்கிறதேஎன்று அம்மாவைப் பார்த்தால், அம்மாவின் டீ-ஷர்ட்டின் அபாயகரமான சரிவு, அதைவிட பயமாக இருக்கிறது. எதிரே அந்த இளம் பெண்ணின் கால் செருப்பின் அளவை கணிக்கும் கடைச்சிப்பந்திப் பையனின் முகத்தைப் பார்க்க முடியாமல் என் கண்தான் தரை நோக்கித் தாழ்ந்தது. தன்னை வெளிப்படுத்தும் அதீத இச்சை ஒரு பெண், ஆணின் மீது நடத்தும் வன்முறை இல்லையா?

பெண்கள் போடும் உடைகள் அவர்கள் மீதான வன்முறையைத் தூண்டுகின்றன என்ற புத்திசாலித்தனமான ஆனால் ஈரமற்ற வாதம் எங்கே உடைகிறது தெரியுமா - இந்த வன்முறை இன்று நேற்றல்ல எத்தனை யுகங்களாகத் தொடர்கிறது என்று யோசிக்கும்போது. திரௌபதியும் அகல்யாவும் எந்த ஆடை அணிந்திருந்தார்கள் அவர்கள் மீது ஏவப்பட்ட வன்முறையின் போது?

 


இந்திய தேசப் பிரிவினையின் போது கூட்டம் கூட்டமாக பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டபோது சூப்பர் மினி ஷார்ட்ஸும் நூடுல்ஸ் ஸ்ட்ராப் டாப்புமா அணிந்திருந்தார்கள்? அப்படி அணியும் பெண்கள் சதா கார்களின் பாதுகாப்பில் பயணிக்க, சீருடையில் பள்ளிக்குப் போன பாண்டிச்சேரி சிறுமிதானே சீரழிக்கப்படுகிறாள்? ஆண்கள் என்னவும் தவற செய்யலாம்; அறிவுரைகள் மட்டும் பெண்களுக்கு!

நிர்ப்பயாதன் நண்பனுடன் அன்று பார்க்கப்போன ஆங்கிலப் படத்தின் பேர்லைஃப் ஆஃப் பை’. ‘பைஎன்கிற விசித்திரப் பெயருள்ள இந்தியச் சிறுவன் ஒருவன் 227 நாட்கள் சீறும் கடலில், சிறு படகில் பசியுள்ள புலி ஒன்றுடன் தனியே வாழ்ந்து மீண்ட கதைதான் அந்த சினிமா. அதைப் பார்த்துவிட்டு வெளியே வந்து, பயணிகள் பஸ் என்று நம்பி அவள் நண்பனுடன் ஏறிய போதுதான் அந்த பயங்கரம் நடந்தது. 227 நாட்கள் பசித்த புலியுடன் ஓர் ஆண் வாழ்ந்துவிட முடிகிறது. சில மணி நேரங்கள் ஆறு ஆண்களுடன் நிர்ப்பயா செய்த பயணம், இதோ இன்று அவளது அஸ்தியை கங்கையில் கரைத்திருக்கிறது.

ஆறு பேரில் ஒருவன் பதினெட்டு வயது நிரம்பாத சிறுவன். பாலியல் வன்முறை, இரும்புக் கம்பியால் ரத்தம் சொட்டச் சொட்ட அவள் மீது விழுந்த அடிகள், அதே இரும்புக்கம்பி அவள் உடலுள் செலுத்தப்பட்டு அவளின் வயிற்றுப் பகுதியில் ஏற்படுத்திய சேதம், உடைகள் ஏதுமின்றி பஸ்ஸிலிருந்து வீசப்பட்ட குரூரம்... சம்பவத்தின் பின்னே இருப்பது ஒரு பெண் மீதான இச்சையே அல்ல; பெண்களின் மீதான அதீத வெறுப்பு மட்டுமே



 எது அந்த ஆறு பேருக்கும் இத்தனை வெறுப்பை ஊட்டியது? ‘உள்ளே போயிருந்த மதுவா?’, ‘அது என்ன இரவு பத்து மணிக்கு மேல் ஒரு பொண்ணு ஒரு ஆணோட வெளியே வர்றது?’ என்ற எரிச்சலா? ‘தவறு செய்யும் பெண்களை எல்லாம் நான் தண்டிப்பேன்என்ற ஆதிக்க மனப்பான்மையா? ‘நிர்ப்பயா அவர்களை எதிர்த்து கடித்துப் போராடியதால் கிளம்பிய வெறியா?’, ‘இல்லை யாரும் கேட்க மாட்டார்கள் என்ற தைரியமா?’ இத்தனை கேவலமாக ஓர் உயிர், இன்னொரு உயிரைத் தாக்க முடியுமா? எந்த மிருகமும் செய்யாத கற்பழிப்பு என்னும் வன்முறையை மனிதனால் எப்படிச் செய்ய முடிகிறது?



இது புதிதல்ல. ‘பெண்களைக் கட்டுப்பாடு செய்கிறோம்என்ற பெயரில் அவர்களுக்கு இழைக்கப்பட்ட வன்முறைகளும் வெடித்துக் கிளம்பிய பெண்களின் எதிர்ப்புக் குரல்களும் தான் நம் வரலாற்றின் மறைக்கப்பட்ட இருண்ட பக்கங்கள்.

கேரளத்தில் நம்பூதிரிகள் சமூகத்தில் சென்ற நூற்றாண்டின் தொடக்கத்தில் மிகக் கொடூரமான ஒரு வழக்கம் இருந்தது. ‘ஸ்மார்த்த சபைஎன்ற ஓர் அமைப்பே நிறுவப்பட்டிருந்தது. எதற்கு? விதவைப் பெண்கள் குற்றம் செய்தால் விசாரித்து தண்டிக்க! யாராவது விதவைப் பெண் தவறு செய்துவிட்டாள் என்று குற்றச்சாட்டு வந்தால் போதும் - அந்தப் பெண்ணை அடித்து, உதைத்து, பட்டினிப் போட்டு, சூடு போட்டு, அவள் இருக்கும் அறையில் மிளகாய்ப் புகை போட்டு - குற்றத்தை அவள் ஒப்புக் கொள்ளும் வரை சித்ரவதை தொடரும். அவள் ஒரு தவறும் செய்யாமல் இருந்தாலும் அவளுக்கு வேறு வழியில்லை. ஒப்புக் கொண்டபின் அவள் குடும்பம் அவளைக் கைவிடும். அவளுக்கு இறுதிச் சடங்குகள் ஆற்றப்படும். வேறு ஜாதிகளிலிருந்து யாரும் அவளை விலைக்கு வாங்கிச் செல்லலாம். இன்னும் ஒரு நிபந்தனை. தன்னோடு சேர்த்து தவறிழைத்த ஆண் யார் என்றும் அவள் சொல்ல வேண்டும். அந்த ஆண் ஜாதியிலிருந்து விலக்கப் படுவான்.

தாத்திரிக்குட்டி என்ற விதவைப் பெண்ணுக்கு இதுவே நேர்ந்தது. அவள் எவ்வளவு மறுத்தும் அவள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை விலக்க முடியவில்லை. இறுதியில் ஒப்புக் கொண்டாள். அவளோடு சேர்ந்து தவறு செய்த ஆண் யார் என்ற கேள்விக்கு அந்த ஊரில் உயர் பதவியில் இருந்த 63 ஆண்களின் பெயர்களை தாத்திரிக் குட்டி சொன்னாள்! என்ன உக்கிரமான பழி வாங்குதல்! கேரள சமூகமே ஸ்தம்பித்தது. பட்டியலில் இருந்த பலர் தற்கொலை செய்து கொண்டார்கள். இந்த சம்பவத்தின் தீவிரத்துக்குப் பிறகு தான், கொஞ்சம் கொஞ்சமாக இந்த வழக்கம் கேரள நம்பூதிரி சமூகத்தை விட்டு நீங்கியது. வரலாற்றின் பக்கங்கள் தோறும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளும் அவர்களின் மௌனப் போராட்டமும் பரவியிருக்கின்றன.

டெல்லி சஃப்தர்ஜங் மருத்துவமனையில் குற்றுயிராய்க் கண்விழித்த நிர்ப்பயா தன் அம்மாவிடம் சொன்னாளாம், ‘நான் வாழ ஆசைப்படுகிறேன்என்று. கருகிவிட்ட ஓர் இளம் தளிரின் கனவு. தான் படித்து தன் குடும்பத்தை உயர்த்திவிட நினைத்த சிறு நம்பிக்கை இழைகளால் நெய்யப்பட்டு, இப்போது பொசுங்கிப் போன கனவு. ஆனால் அவளது மரணம் தான் சவசவத்துப்போன இந்திய சமூகத்தின் மனச்சாட்சியைத் தட்டி எழுப்பியது.



நிர்ப்பயா, போய் வா. உன் மரணத்தால் இன்று இணைந்து நிற்கும் இந்தியாவின் பிரியமகளே... போய் வா! இனியும் இப்படி நடக்குமென்றால் நாங்கள் சேர்ந்து போராடும் வலிமையைத் தா. நாங்கள் நடக்கும் பாதைகளில் உன் உடல் கிழிக்கப்பட்ட போது கொப்பளித்த குருதிப் பூக்கள் சிதறியிருக்கின்றன. அந்தப் பாதைகளில் பயமின்றி நாங்கள் நடக்கும் வல்லமையைத் தா. பெண்ணின் உடல், ஆணின் உபயோகத்துக்கு ஏற்பட்ட பொருள் அல்ல. அவள் ஓர் உயிர், ஓர் ஆன்மாஎன்ற அறிவை எங்கள் சகோதரர்களுக்குத் தா. குற்றம் செய்தவர்களுக்கு விடுதலையும் பாதிக்கப்பட்டவர்களுக்கு அறிவுரையும் வழங்கும் இந்தத் தொண்டு நிலைமையைதூவென்று தள்ளும் கோபத்தை எங்களுக்குக் கொடு.

விடை கொடுக்கிறோம் நிர்ப்பயா, போய் வா.

இது புதிதல்ல. ‘பெண்களைக் கட்டுப்பாடு செய்கிறோம்என்ற பெயரில் அவர்களுக்கு இழைக்கப்பட்ட வன்முறைகளும் வெடித்துக் கிளம்பிய பெண்களின் எதிர்ப்புக் குரல்களும்தான் நம் வரலாற்றின் மறைக்கப்பட்ட இருண்ட பக்கங்கள்.

(பயணிப்போம்)


thanx - kalki  


 

1 comments:

Unknown said...

மனதை நெருடும் வரிகள் ,மிருக மனித செயல்கள்