Monday, April 22, 2013

அம்மா கைப்பற்றிய அண்ணாமலை பல்கலைக்கழகம்


அம்மா கைப்பற்றிய அண்ணாமலை பல்கலைக்கழகம்- ஒரு மினி தொடர் - பாகம் 1

-கரு.முத்து
                       
பாரம்பரியமும் வரலாற்றுப் பெருமையும் கொண்ட சிதம்பரம் அண்ணாமலை பல்கலைகழகம் தற்போது அரசுடைமையாக்கப்பட்டிருக்கிறது.முதுபெரும் அறிஞர்களையும், தமிழ்ப் புலவர்களையும் உருவாக்கிய இந்த பல்கலைகழகத்தில்தான் திராவிட இயக்கத்தலைவர்களில் பெரும்பாலோனோர் உருவானார்கள்.

இந்தி எதிர்ப்பு போராட்டம் தமிழகத்தில் பெரும் தீயாய் கிளம்பியபோது இங்கு படித்த மாணவர்கள் காட்டிய கடுமையான இந்தி எதிர்ப்பு ராஜேந்திரன் என்ற மாணவரை துப்பாக்கிச் சூட்டுக்கு பலியாக்கியது. வரலாறு, இசை, பொறியியல், சமூகம், பொருளாதாரம்,வேளாண்மை,மருத்துவம்,கலை,விளையாட்டு என்று எல்லா துறைகளும் இயங்குகின்றன.

தற்போதைய நிலையில் 12,600 ஆசிரியர்கள் மற்றும்  பணியாளர்கள் பணிபுரிகிறார்கள்.முப்பத்தைந்தாயிரம் மாணவர்கள் கல்வி பயிலுகிறார்கள். இங்கு இயங்கும் தொலைதூர கல்வி நிலையத்தின் மூலம் ஆண்டுக்கு ஒன்றரை லட்சம் பேர் பட்டம் பெறுகிறார்கள்.இவ்வளவு பெருமைக்குரிய எம்.ஏ.எம் ராமசாமிக்கு சொந்தமான இந்த பல்கலைகழகம் தற்போது அவரிடமிருந்து பறிக்கப்பட்டு அரசுடைமையாக்கப்பட்டுள்ளது. அது ஏன்? அரசுடைமையாக்கப்பட்டதன் காரணம் என்ன?
முதலில் அண்ணாமலை பல்கலைகழகத்தின் வரலாறு...

செட்டிநாடு பகுதியில் அரசோட்சிக் கொண்டிருந்த அண்ணாமலை செட்டியார் வட மாவட்டங்களில் கல்வியின்மை மற்றும் மேல்படிப்புக்கு வசதி இன்மை ஆகியவற்றை அறிந்து, அதனை போக்க சிதம்பரம் வந்து தன்னுடைய சொத்திலிருந்து சில லட்சங்களை செலவழித்து  மீனாட்சி கல்லூரி என்ற பெயரில் ஒரு கல்லூரியை தொடங்கினார்.அந்த நேரத்தில் சுவாமி சகஜானந்தர் சிதம்பரத்தில் நந்தனார் கல்விக் கழகத்தை தொடங்கி கல்விக் கூடம் ஆரம்பித்தார். இரண்டுக்கும் போட்டி வந்துவிடக் கூடாது என்பதற்காக இருவரும் சந்தித்து பேசி நந்தனார் கல்வி கழகம் பள்ளிப்படிபையும், மீனாட்சிக் கல்லூரி மேல் படிப்பையும் வழங்குவது என்று முடிவெடுத்து செயல்படுத்தினார்கள்.

ஒரு சில மேல் படிப்புகளோடு துவங்கிய மீனாட்சி கல்லூரியின் சேவை அதிகரித்து இன்னும் அதிக மக்களை சென்றடைய ஆரம்பித்தது.அதனால் இன்னும் பெரிதாக்க விரும்பினார்.அதன் விளைவாக இருபது லட்சம் ரூபாயையும் ஊராட்சி பிரதிகளிடம் ஒப்படைத்து கல்லூரியை பல்கலைகழகமாக ஆக்கினார்.1928 ஆம் ஆண்டு மீனாட்சி கல்லூரி அண்ணாமலை பல்கலைகழகமாக உருவெடுத்தது. இதில் அண்ணாமலை செட்டியார் அவரது காலத்துக்குப் பின் அவரது வாரிசுகள் ஆகியோருக்குத்தான் எல்லா அதிகாரங்களும் இருக்கும் வகையில் பல்கலைகழக சட்டம் உருவாக்கப்பட்டது.அந்த சட்டத்தில்தான் தமிழகத்தை சேராத வெளி மாநிலங்களை சேர்ந்தவர்கள் இங்கு கல்வி பயில அனுமதி இல்லை என்ற விதியும் இருக்கிறது.

அன்றிலிருந்து இன்றுவரை அண்ணாமலை செட்டியார், முத்தையா செட்டியார், ராமசாமி செட்டியார் என்று செட்டியார் குடும்பத்தினர் பல்கலைகழகத்தின் இணைவேந்தராக சர்வ அதிகாரம் படைத்தவர்களாக விளங்கினார்கள்.முந்தைய இருவர் இணைவேந்தராக இருந்த காலகட்டத்தில் பல்கலைகழகம் சிறப்பான முறையில் கல்விச்சேவையை அளித்து வந்தது மறுப்பதற்கில்லை.

முத்தையா செட்டியாரின் காலத்தில் பல்கலையை அரசுடைமையாக்க முயற்சித்தார் அப்போதைய முதல்வரான எம்.ஜிஆர். இதை தெரிந்துகொண்ட முத்தையா செட்டியார், எம்.ஜி.ஆரை நேரில் சந்தித்து பல்கலைகழகம் உருவாக்கப்பட்டதன் காரணத்தை விளக்கி, கல்வி பயிலும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் நிலையை எடுத்துச் சொல்ல,அப்போது அரசுடைமையாக்கும் முயற்சி கைவிடப்பட்டது. அபபடி காப்பாறிய பல்கலையையைத்தான் இப்போது இழந்திருக்கிறார் ராமசாமி செட்டியார்.

இணைவேந்தராக ராமசாமி செட்டியார் வந்தும் வெகு காலம் வரை ஏழை மாணவர்களின் கல்விக்குத்தான் முக்கியம் கொடுத்தார். ஆனால் கடந்த பத்தாண்டுகளுக்கு முன்பிருந்து தான் கல்விச்சேவை வணிகமாக மாறத்தொடங்கியது.  அண்ணாமலை பல்கலையில் பணிபுரிந்த சில கல்வியாளர்கள்,நிர்வாகிகள் சிலரால்தான் அப்படிப்பட்ட நிலைமை உருவானது.

தாங்கள் காசு பார்க்க செட்டியாரின் சேவை மனதை மாற்றினார்கள்.அதுவரை பலகலைகழகத்தை கல்வி நிலையமாக நிணைத்திருந்த எம்.ஏ.எம் ராமசாமி செட்டியார், கல்வியாளர்களின் கலகத்திற்கு பிறகு ஒரு வணிக நிறுவனமாக ஆக்கிக் கொண்டார்.

ஒவ்வொரு படிப்பிற்கும், ஒவ்வொரு பணியிடத்துக்கும் இவ்வளவு தொகை என்று நிர்ணயிக்கபட்டது அப்போதுதான்.மிகக் குறைந்த தொகையே அப்போது நிர்ணயிக்கப்பட்டது. காசு கொடுத்தால் கல்விக்கு சீட், காசு கொடுத்தால் நிச்சயம் வேலை என்று உறுதியாக தெரிந்ததால் அதனை வாங்கி விற்க புரோக்கர்கள் நடமாட்டம் ஆரம்பித்தது.புரோக்கர்கள் அதிகமாக ஆக விலையும் உயர்ந்து கொண்டே போனது.இவையெல்லாம் 2006 க்கு பிறகு உச்சகட்டத்தை அடைந்தது.அதன் விளைவுதான் இப்போது செட்டியார் குடும்பத்தின் சொத்து கையை விட்டு பறிபோகிறது.

புரோக்கர்கள் ராஜ்ஜியமாகிப்போன அண்ணாமலை பல்கலைகழகத்தின் 2006 நிலவரங்கள் அதன் விளைவுகள்
அம்மா கைப்பற்றிய அண்ணாமலை பல்கலைக்கழகம்- ஒரு மினி தொடர் - பாகம் 2

 - கரு.முத்து
                           
2000 மாவது ஆண்டிலேயே ஆரம்பித்துவிட்டது காசுக்கு கல்வி கலாச்சாரம். அதுவரை பட்டும் படாமலும் முக்கிய சில படிப்புக்களுக்கு மட்டும் சில ஆயிரங்களை கொடுத்து சீட் வாங்கவேண்டியிருந்தது. ஆனால் 2006 ஆம் ஆண்டிலிருந்துதான் எல்லா படிப்புகளுக்குமே காசு வாங்குவது எழுதப்படாத சட்டமாக ஆனது. அதற்கு முந்தைய கால அண்ணாமலை பல்கலைக்கழகம் மாணவர்களுக்கு பொற்காலமாக விளங்கியது. 
ஒரு மாணவன் அங்கு படிக்க வேண்டும் என்றால் முறைப்படி விண்ணப்பம் பூர்த்தி செய்து கொடுத்தால் மட்டுமே போதும். அழைப்புக் கடிதம் வீடு தேடி வந்துவிடும். விண்ணப்பத்தின் விலை ஐம்பது ரூபாயோ, நூறு ரூபாயோ படிப்புக்கு ஏற்றமாதிரி இருந்தது. அழைப்பு கடிதம் கிடைத்தவர்கள் பல்கலைகழகத்துக்கு வந்து நேரடியாக சேர்ந்து கொள்ளலாம். எம்.ஏ, போன்ற படிப்புகளை ஒரு மாணவன் விடுதிகட்டணத்தோடு சேர்த்து ஆண்டுக்கு பத்தாயிரத்துக்குள் முடித்துவிடலாம்.
பொறியியல் படிக்க இன்னும் சில ஆயிரங்கள் கூடுதலாக ஆகும். பெரிய படிப்பான மருத்துவப் படிப்புக்கும் நிலைமை அப்படித்தான் இருந்தது. பல்கலைக்கழக நுழைவுத்தேர்வு எழுதி அதில் வெற்றி பெற்றவர்கள் கட்டணம் மட்டும் கட்டிவிட்டு மருத்துவம் படிக்கலாம். வேளாண்மை படிப்புகளுக்கும் அப்படித்தான் மிகக் குறைந்த கட்டணம் இருந்தது.

2000த்துக்கு பிறகு வேளாண்மை, பொறியியல், மருத்துவம் ஆகிய படிப்புக்கள் பணம் காய்ச்சி மரமாகியது. இந்த மூன்று படிப்புக்களுக்கும் சேருவதற்கு பல்கலைக் கழகத்தில் நேரடியாக அனுமதி கிடைக்காது.  இணைவேந்தரை பார்த்துத்தான் சீட் வாங்க வேண்டும். அவரும் ஆரம்பத்தில் பணமெல்லாம் வாங்கவில்லை.
சிதம்பரத்தில் உள்ள அரசியல் கட்சிகளின் தலைவர்கள், மாநில அளவிலான முக்கிய பிரமுகர்கள்,  வருவாய்த்துறை காவல்துறை ஆகிய துறைகளின் அதிகாரிகள் ஆகியோர் அவரை சந்தித்து பையனுக்கோ, பெண்ணுக்கோ சீட் வேண்டும் என்று கேட்டால் போதும். உடனடியாக வழங்கப்படும். இதனால் சிதம்பரம் பகுதியில் உள்ள அரசியல் கட்சிகளில் கட்சிப் பதவிக்கு பலத்த போட்டி ஏற்பட்டது. ஒரு லெட்டர்பேடு இருந்தால் போதும். அதை வைத்து செட்டியாரிடம் சீட் வாங்கிவிடுவார்கள். அவரின் இந்த இரக்கக் குணத்தை பல்கலைகழகத்தின் பண ஆசை பிடித்த சில நிர்வாகிகளும் கல்வியாளர்களும் கெட்டியாக பிடித்துக் கொண்டு அதை தங்களுக்கு சாதகமாக ஆக்கிக் கொண்டார்கள்.

அதற்காக அவர்கள் கடைபிடித்த உத்தி ரொம்பவும் பழைய பாணிதான். எம்.ஏ.எம் ராமசாமியை எப்படியாவது அப்பாயின்ட்மென்ட் வாங்கி அவரைப் பார்த்ததும் காலில் விழுந்து வணங்குவார்கள். "என்ன விஷயம்?" என்று அவர் கேட்டதும்  ‘‘ஐயா எங்க சொந்தகார பையன் ஒருத்தன், ரொம்ப ஏழைங்க, இஞ்சினியரிங் படிக்க ஆசைப்படறான்யா’’ என்று சொல்லி திரும்பவும் காலில் விழுவார்கள். உடனடியாக அவர்கள் கேட்ட சீட் வழங்கப்படும். அதை  வாங்கிக் கொண்டு வந்து தங்கள் இஷ்டத்துக்கு அதற்கு விலை வைத்து விற்று காசு கொடுத்த மாணவர்களை சேர்த்தார்கள். இப்படி மருத்துவத்துக்கு ஒரு லட்சத்திலிருந்து ஐந்து லட்சம் வரை விலை நிர்ணயித்தார்கள். வேளாண்மைக்கு ஒரு லட்சம் என்று ஆக்கினார்கள். பொறியியலுக்கு இருபத்தைந்தாயிரம் ரேட்.

ஒரு துறையில் உள்ள ஒரு பேராசியரோ அல்லது ஊழியரோ இப்படி எம்.ஏ.ம்மை பார்த்து சீட் வாங்குவதை பார்த்ததும், அதே துறையில் உள்ள மற்றவர்களுக்கும் ஆசை துளிர்விட தொடங்கியது. அவர்களும் தனித்தனியாக சென்னைக்கு படையெடுக்க தொடங்கினார்கள். சிதம்பரத்தில் உள்ள அரசியல்வாதிகளும் செட்டியாரை பார்க்க அணி வகுத்தார்கள். நாளொன்றுக்கு இப்படி சில நூறுபேர் வரையிலும் தன்னை பார்க்க வருவதை கண்டதும் அவர்களை சந்திக்க மறுத்த செட்டியார், தன்னுடைய உதவியாளரான எஸ்.ஆர் என்று பல்கலைக்கழக வளாகத்தில் அழைக்கப்படுகிற ராஜேந்திரனை பார்க்க உத்தரவிட்டார். சீட் வேண்டுமா ராஜேந்திரனை பார்த்தால் போதும் என்ற நிலைமை உருவானது. அப்போதுதான் செட்டியாருக்கு பணம் கொடுக்கும் வழக்கமும் ஆரம்பித்தது.

பத்து மெடிக்கல் சீட் கொடுங்க என்று கேட்டு ஒரு சீட்டுக்கு பத்துலட்சம் வீதம் ஒரு கோடி ரூபாயை மொத்தமாக ராஜேந்திரனிடம் கொடுத்துவிட்டு சீட் வாங்கி பதினைந்து லட்சம், இருபது லட்சம் என்று வெளியில் விற்றார்கள் புரோக்கர்கள். பொறியியல் படிப்புக்கும் இப்படித்தான் மொத்தமாக ஒரு தொகையை கொடுத்துவிட்டு ஐம்பது, நூறு என்று அட்மிசன் வாங்கிவிடுவார்கள். அதனை மாணவர்களுக்கு பல ஆயிரங்களை மேலே வாங்கிக் கொண்டு விற்று கோடீஸ்வரர்கள் ஆனார்கள்.

இவர்களிடம் சீட்டை வாங்கி அதை தாங்கள் இன்னும் அதிக விலைக்கு விற்று பிழைப்பவர்களும் பெருத்தார்கள். இப்படி ஒட்டுமொத்த ஊழியர்களுமே ஒரு கட்டத்தில் புரோக்கர்களாகிவிட்டார்கள். தொழில் போட்டி ஏற்பட்டது. அடிதடிகள் நடந்தது. ஒரு கொலையும் நடந்துமுடிந்தது.  பல்கலை ஊழியர்களை பார்த்து  சென்னையில் செட்டியார் அரண்மனையில் வேலை பார்க்கும் அத்தனை தொழிலாளிகளுமே புரோக்கர்களாக மாறினார்கள்.
அங்கிருக்கும் துப்புரவு தொழிலாளி கூட இன்று பல கோடிகளுக்கு அதிபதியாகிவிட்டார்கள். அவர்களுக்காக செட்டியார் இலவசமாக தரும் சீட்டை பெற்று அதை லட்சங்களுக்கு விற்று சம்பாதித்தார்கள்.
இவ்வளவும் நடக்கிறதே பல்கலையில் துணைவேந்தர், பதிவாளர் என்று எல்லோரும் இருக்கிறார்களே அவர்கள் என்ன செய்துகொன்டிருந்தார்கள்? அவர்களுக்கு இதில் தொடர்பு உண்டா?
ஒரு உதாரணமாக 2011 ஆம் ஆண்டில் அங்கீகாரம் பெறப்பட்டிருக்கும் மாணவர்கள் எண்ணிக்கை வேளாண்மை கல்லூரியில் 120 பேர்தான்.ஆனால் அங்கு அனுமதிக்கப்பட்டிருந்த மாணவர்கள் 800 பேர்.பொறியியல் புலத்தில் அங்கீகாரம் பெற்ற மாணவர்கள் எண்ணிக்கை 810 பேர்தான். ஆனால் அங்கு அந்த வருடம்  சேர்க்கப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கை 5319.

இப்படி எந்தவித கட்டுப்பாடுகளும் இல்லாமல் மாணவர்களை சேர்த்தார்கள். தமிழகத்தை இருப்பிடமாக கொள்ளாத மாணவர்கள் இந்த பல்கலை கழகத்தில் படிக்க முடியாது என்ற விதிகளெல்லாம் காற்றில் பறக்க விடப்பட்டன.வட மாநிலங்களில் கூவிகூவி  ஆள் பிடித்தார்கள் புரோக்கர்கள்.ஒரு பொறியியல் சீட்டுக்கு நிர்வாகத்துக்கு அவர்கள் தந்தது 25,000 ரூபாய்.அவர்கள் வாங்கியது குறைந்தது ஒரு லட்சம் ரூபாய்.

இப்படி ஆளாளுக்கு சீட் வாங்கித் தருவதோடு மட்டும் நிறுத்திக் கொண்டிருந்தால்  பல்கலைக்கழகம் இந்த கதிக்கு வந்திருக்காது.அடுத்தக்கட்டமாக எதில் சம்பாதிக்கலாம் என்று பார்த்தவர்கள் ஊழியர்கள் ஆசிரியர்கள் நியமனம் செய்தால் இன்னும் அதிகமான அமவுண்டை அடிக்கலாம் என்று கணக்குப்போட்டு அதை செயல்படுத்த துவங்கினார்கள். ஒரு கட்டத்தில் அதாவது 2007 ன் ஆரம்பத்தில் பல்கலைகழகத்திற்கு பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், பணியாளர்கள் நியமனம் செய்ய ஆரம்பித்தனர்.

இந்த பணிகளை பல்கலைக்கழக பதிவாளர் ரத்தினசபாபதி கவனித்தார்.புகழ் பெற்ற அண்ணாமலை பல்கலையில் வேலை என்றதும் அதற்கு போட்டி ஏற்பட்டது.அதனால் தகுதி உடையவர்களோடு தகுதி இல்லாதவர்களும் களத்தில் இறங்கினார்கள். இருக்கும் வேலை கொஞ்சம் போட்டியோ அதிகம்.அதனால் பணம் கொடுத்தால் வேலை என்ற நிலைமை பல்கலை கழகத்தால் உருவாக்கப்பட்டது.

இன்று ஏற்பட்டிருக்கும் நிதிச் சிக்கலுக்கான அச்சாரம் அப்போதுதான் அதில் ஊழலும் லஞ்சமும் பெருத்த 2006 காலக்கட்டத்தில் பல்கலைகழகத்தில் துணைவேந்தராக இருந்தவர் வெங்கட்ரங்கன்.கல்வி விஷயத்தில் கவனம் செலுத்திய அவர்,மாணவர் சேர்க்கையில் அவ்வளவாக தலையிடவில்லை.அவருக்கு உதவியாக பல்வேறு ஆட்கள் இருந்தார்கள்.அவர்கள் செய்யும் சேவைக்கு பிரதிபலனாக அவ்ர்களுக்கெல்லாம் நல்ல பதவிகளை தருவார் வெங்கட்ரங்கன்.அவர்களும் அதை வைத்துக்கொண்டு சம்பாதிக்க ஆரம்பித்தனர்.

இவர் சேர்க்கையில் தலையிடாததால் பல்கலையை ஆட்டுவித்தவர் அப்போதைய பதிவாளரான ரத்தினசபாபதிதான் என்கிறார்கள்.ஒட்டுமொத்த பல்கலைகழகமும் இவரின் விரலசைவில்தான் இயங்கியதாம்.துணைவேந்தரை பார்ப்பதற்கு ஒரு சிலர் மட்டுமே வருவார்கள்.ஆனால் ரத்தினசபாபதியை பார்க்க கூட்டம் அலைமோதும்.வி.ஐ.பி.க்கள் கொடி கட்டிய கார்,ஒருநாளைக்கு பத்தாவது அவர் அலுவலக வாசலில் நிற்காமல் இருக்காது.

சீட் தருவதற்கான அதிகாரம் அவர் கையில் இருந்தது.இவரை வந்து சந்தித்து தொகை கொடுத்தால் சீட் உறுதியாக கிடைக்குமாம்.இதனால் இவரிடம் சீட்டுக்கு அலை மோதினார்கள்.ஒரு கட்டத்தில் இவரது மனைவியை சந்தித்தும் தொகை கொடுத்து சீட் வாங்கிக்கொண்டு போவார்களாம்.

இவர்களோடு இந்த நிலையில் புதிதாக இரண்டு அதிகாரமையங்களும் உருவானது.  அவர்கள் தேர்வுத்துறை கட்டுப்பாட்டாளாரான மீனாட்சி சுந்தரமும், துணைவேந்தரின் உதவியாளரான பாலசண்முகமும். மற்றவர்களை பார்ப்பது கொஞ்சம் சிரமம் என்பதால் காட்சிக்கு எளியவரானவர்களும், பழகுவதற்கு இனிமையானவர்களுமான இவர்களிடம் ஆட்கள் போக ஆரம்பித்தார்கள் வேலை வேண்டுகிறவர்கள்.

துணைவேந்தரின் உதவியாளர் என்பதால் கூடுதல் முக்கியத்துவம் பெற்று, ஒரு கட்டத்தில் துணைவேந்தரைவிட முக்கியமான ஆளாகிப்போனார் பாலசண்முகம்.
ஆக இணைவேந்தர் எம்.ஏ.எம்.முக்கு நேரடியான புரோக்கர்கள், எஸ்.ஆர் என்று அழைக்கப்படும் ராஜேந்திரனுக்கு நேரடி புரோக்கர்கள், பதிவாளர் ரத்தினசபாபதிக்கு நேரடி புரோக்கர்கள் என்று மூன்று அதிகார மையங்களூக்கும் புரோக்கர்கள் உருவானார்கள். சிவசாமி என்பவர் எம்.ஏ.எ.முக்கு புரோக்கர்.எம்.ஏ. எம். போன் செய்துவிட்டால் போதும் அவர் கேட்கும் கோடிகளை உடனடியாக கொண்டு சென்று கொடுக்கும் அளவுக்கு அதிகாரமாக வளர்ந்தார்.அதை விரும்பாத சிலரால்தான் அவர் கொலையும் செய்யப்பட்டதாக கூறுகிறார்கள். 2009க்கு பிறகு உடல்நலம் சரியில்லாத வெங்கட்ரங்கன்,இது எதையும் கண்டுகொள்ளாமல் அவருக்கு கிடைக்கும் சில சலுகைகளை மட்டும் பெற்றுக் கொண்டு எம்.ஏ.எம்மும், ரத்தினசபாபதியும் போடச் சொன்ன இடங்களில் கையெழுத்து போடுவதோடு தன் கடமையை நிறைவேற்றிக் கொண்டார்.உரியவர் சரியில்லாததால் அங்கு தவறுகள் தங்கு தடையின்றி பெருகின.போடப்பட்டது.
சீட் வாங்கித் தரும் புரோக்கர்கள் அத்தனை பேரும் வேலை வாங்கித்தரும் புரோக்கர்களாக மாறினார்கள்.நேரடியாக எம்.ஏ.எம்மை சந்திப்பவர்கள், ராஜேந்திரனை பார்ப்பவர்கள்,ரத்தினசபாபதியை பார்ப்பவர்கள் என்று அத்தனை பேருமே வேலை வாங்கித்தருவதிலும் மும்முரமானார்கள்.இவர்கள் எல்லோருமே தங்களிடம் வருகிறவர்களுக்கு குறிப்பிட்ட ஒரு தொகையை வாங்கிக் கொண்டு அவர்களுக்கான பணிக்கான உத்தரவை வாங்கித் தந்தார்கள்.

வேலை கிடைக்கிறது என்பதால் எங்கிருந்தெல்லாமோ ஆட்கள் பல்கலைகழகத்தின் பக்கம் திரும்பினார்கள்.பணம்...பணம் என்று எல்லா பக்கமும் வேலைக்கு பணம் தலை விரித்தாடியது.இத்தனை பேர் இருக்க வேண்டிய இடத்தில் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்ற கணக்கு வழக்கே இல்லாமல் ஆட்கள் பெருகிக் கொண்டே போனார்கள்.அதன் விளைவுதான் சம்பளமே கொடுக்க முடியாத இன்றைய நிலைமைக்கு பல்கலை கழகம் தள்ளப்பட்டது.

எத்தனை பேர்தான் இங்கு வேலை பார்க்க வேண்டும்? ஆனால் எத்தனை பேர் இங்கு வேலை பார்த்தார்கள்? எந்த வேலைக்கு எவ்வளவு தொகை லஞ்சமாக தர வேண்டும்? இந்த பணமெல்லாம் யார் யாரிடம் போனது? அம்மா கைப்பற்றிய அண்ணாமலை பல்கலைக்கழகம்- ஒரு மினி தொடர் - பாகம் 4 
 ல்கலைக்கழக மானியக்குழு அனுமதித்திருக்கும் ஊழியர்களின்  எண்ணிக்கையை முதலில் தெரிந்து கொள்வோம்.பலகலைக்கழக மானியக்குழு  விதிகளின் படி அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் இருக்க வேண்டிய ஆசிரியர்கள்  எண்ணிக்கை 657. ஆனால் தற்போது அங்கிருக்கும் ஆசிரியர்களின் எண்ணிக்கை  3000 பேர்.மானியக்குழு அனுமதிக்கப்பட்ட ஊழியர்களின் எண்ணிக்கை 1110  பேர்.ஆனால் இங்கு இருக்கும் ஊழியர்களின் மொத்த எண்ணிக்கை 9600 பேர்.    ஆக பல்கலைகழகம் நடத்த நிதி மானியம் அளிக்கும் பல்கலைகழக மானியக்குழு  அனுமதித்திருக்கும் எண்ணிக்கை 1767 பேர்தான். ஆனால் இருப்பதோ 12,600  பேர்.அதாவது கிட்டத்தட்ட 9 மடங்கு ஊழியர்கள் அதிகம் இருக்கிறார்கள்.

இவர்களுக்கு சம்பளம் எங்கிருந்து கொடுப்பது? என்பதில் இருந்துதான் சிக்கல் ஆரம்பித்தது. ஏன் அவர்களிடம் பணம் வாங்கிக் கொண்டுதானே அவர்களுக்கு வேலை கொடுத்தார்கள்? அந்த பணத்தை வைத்து அவர்களுக்கு சம்பளம் கொடுத்துவிடலாமே என்று நீங்கள் கேட்பது புரிகிறது.அந்த பணம் யாரிடம் போனது? எப்படி முடங்கியது என்பதில்தானே சிக்கலின் ஆரம்பம் இருக்கிறது.

 ஆட்களை நியமனம் செய்வதில் எம்.ஏ.எம்.மிடம் விதவிதமாக  ஏமாற்றினார்கள் பல்கலைகழகத்தை அதிகாரம் செய்தவர்கள்.இரண்டு பேராசியர்  பணியிடங்களுக்கு அவரிடம் பணத்தை கொடுத்து அனுமதி பெறுவார்களாம்.  அவர்களுக்கு இரண்டு என்று சென்னையிலிருந்து இங்கு பேக்ஸ் வரும்.அதனை  எடுத்து முன்னால் ஒரு ஒன்றை சேர்த்து பணிரெண்டாக மாற்றி பைலை  உருவாக்கிவிடுவார்களாம்.பத்து புதிய நபர்களை  இவர்களே சேர்த்து அந்த  பணத்தை வாங்கிக் கொண்டார்கள்.எந்த நேரத்தில் எம்.ஏ.எம் முக்கு பணம்  தேவைப்பட்டாலும் அவருக்கு கொடுப்பதற்கு இவர்கள் தயாராக இருந்தார்கள்.  அவரிடம் காசை கொண்டுபோய் கொடுத்துவிட்டு புதிதாக பத்துபேரை பணி  நியமனம் செய்தார்கள்.அந்தத்துறை, இந்தத்துறை என்றில்லாமல் எல்லாத்  துறைகளிலும் இப்படி ஆட்களை புதிதாக சேர்த்துக் கொன்டே இருந்தார்கள்.

இதனால் தேவையேப்படாத இடங்களில் எல்லாம் ஆட்கள் அதிக அளவில் இருந்தார்கள். ஒரு துறையின் அலுவலகத்தில் புகுந்தால் அங்கு  உட்கார நாற்காலி கூட இல்லாமல் ஆட்கள் நின்று கொண்டிருப்பார்கள்.யாராவது எழுந்தால் அங்கு போய் உட்கார்ந்து கொள்வார்கள்.

யார் யாருக்கு என்ன ரேட்? ஆரம்பத்தில் துப்புரவு தொழிலாளி பணிக்கு இரண்டு  லட்சம், செக்யூரிட்டிக்கு மூன்று லட்சம் என்று வாங்கி, தாங்கள் பாதி எடுத்துக்  கொண்டு மீதி பாதியை எம்.ஏ.எம்முக்கு கொண்டு போய் கொடுத்தார்களாம்.அது  கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து கடந்த வருட முடிவில் ஏழு முதல் எட்டு  லட்சங்களாக ஆனது.

 அலுவலக உதவியாளர் மற்றும் இளநிலை உதவியாளர்கள் பணியிடங்கள்  முதலில் ஐந்து லட்சமாக இருந்தது.தற்போது அலுவலக உதவியாளருக்கு பத்து  லட்சமும்,இளநிலை உதவியாளருக்கு 17 லட்சமும் வாங்கப்பட்டது.  விரிவுரையாளர்களுக்கு முதலில் எட்டு லட்சம் ரூபாயாக இருந்தது.கடைசியாக  அது இருபத்தைந்திலிருந்து முப்பது லட்சமாக உயர்த்தப்பட்டது.ஒரு கட்டத்தில்  புதிதாக இனி விரிவுரையாளர்களை நியமிக்கக் கூடாது என்று ஊழியர்கள் நீதிமன்றம்  சென்று தடையானை வாங்கினார்கள்.

என்னடா இது வருமானத்துக்கு வந்த சோதனையாக இருக்கிறதே என்று யோசித்த ஊழல் பேர்வழிகள், விரிவுரையாளர்தானே போடக்கூடாது என்று முடிவெடுத்து அதே சம்பளம் கிடைக்கும்படியாக ஸ்பெசல் இண்ஸ்டெக்டர் என்ற புதிய பதவியை உருவாக்கினார்கள். அவர்களிடம் முப்பது லட்சத்தை வாங்கிக் கொண்டு பணியமர்த்தினார்கள். அப்படி ஒரு பணியிடத்தை அரசாங்கம் தடை செய்து பத்து வருடங்கள் ஆகிறதாம். அதைபற்றி கவலைப்படாமல் இவர்கள் அந்த பணியிடத்தில் கிட்டத்தட்ட 100 பேரை நியமனம் செய்திருக்கிறார்கள்.

 

முப்பது லட்சத்தை இன்னும் அதிகமாக உயர்த்த என்ன செய்யலாம் என்று ரூம்  போட்டு யோசித்தவர்கள் மேலும்  இரண்டு புதிய பணியிடங்களை  உருவாக்கினார்கள்.எல்.ஒ மற்றும் எஸ்.ஓ. இந்த இரண்டும் இதுவரை எந்த  பல்கலையிலும் இல்லாத பதவிகள்.எல்.ஓ என்றால் லைசன் ஆபீசர். எஸ்.ஓ  என்றால் ஸ்பெசல் ஆபீசர்.இதில் இந்த எஸ்.ஓ பணி என்பது கூட்டுறவு   சங்கங்களில் தான் இதுவரை இருக்கிறது.ஆனால் இவர்கள் பணத்துக்கு  ஆசைப்பட்டு இப்படி ஒரு பதவியை உருவாக்கினார்கள்.

900 பேர் வரை இப்படி சேர்த்திருக்கிறார்கள். அவர்களின் ஒரு மாத சம்பளம் தலா 40 ஆயிரம் ரூபாய். முப்பதாயித்துக்கும் மேல் சம்பளம் வாங்கும் பார்மசிஸ்ட்டுகள் இங்கு 180 பேர் இருக்கிறார்கள்.தமிழ்நாடு முழுவதும் இருக்கிற மருத்துவ கல்லூரிகளில் இருக்கும் எல்லா பார்மசிஸ்ட்டுகளையும் சேர்த்தால் கூட அது 160 பேரை தாண்டாது.

 25லட்சம் முதல் முப்பது லட்சம் வரை பனத்தை வாங்கிக் கொண்டு இத்தனை  பேருக்கு பணிஆனை வழங்கியிருக்கிறார்கள். இத்தனைக்கும் மருத்துவமனையில்  மருந்தகம் கிடையாது. இருந்த ஒரு மருந்தகத்தையும் தனியாருக்கு பலகோடி  ரூபாய் வாங்கிக் கொண்டு தாரை வார்த்துவிட்டார்கள்.

கோடிகோடியாக பணத்தை வாங்கித்தருவதால் பதிவாளர் ரத்தினசபாபதியை எழுபது  வயது வரை ஓய்வு கொடுக்காமல் பல்கலை கழகத்தின் பதிவாளராக கடந்த  ஆண்டுவரை பணி நீட்டிப்பு கொடுத்துக் கொண்டே இருந்தாராம் எம்.ஏ.எம்.  இப்பிரச்னையை சட்டசபை வரை சிதம்பரம் எம்.எல்.ஏ பாலகிருஷணன்  கொண்டுசெல்லவே, கடந்த ஆண்டுதான் ஒருவழியாக அவரை விடுவித்துவிட்டு  தேர்வுத்துறை கட்டுப்பாட்டாளாரான மீனாட்சிசுந்தரத்தை பதிவாளராக்கினார்.

ரத்தினசபாபதி அமெரிக்காவில் இருக்கும் மகள் வீட்டுக்கு போய் செட்டிலாகி  விட்டார்.அவருக்கு முன் வெங்கட்ரங்கன் ஓய்வு  பெற்றுவிட, அவருக்கு பதிலாக  துணைவேந்தரானார் ராமநாதன்.அதிர்ந்துகூட பேசத்தெரியாத அவர், எம்.ஏ.எம்  காலால் இட்ட வேலையை தலையால் செய்வதை மட்டுமே கடைபிடித்து அதன்  விளைவாக, இப்போது ஆளுனரால் சஸ்பெண்ட் ஆகி வீட்டில் உட்கார்ந்திருக்கிறார்.
 மீனாட்சிசுந்தரத்துக்கு ஓய்வுபெறும் வயது வந்தவுடன், அவரை கூப்பிட்ட நிர்வாக  அதிகாரி சிவதாஸ்மீனா, "நீங்கள் ராஜினாமா செய்துவிடுங்கள்!" என்று சொல்ல அவர் ராஜினாமா செய்துவிட்டு பழையபடி துறைத் தலைவராக மட்டும் தொடர்கிறார்.

பணியமர்த்தவும்,மாணவர் சேர்க்கைக்காகவும் வாங்கிய பணம் மட்டும்  ஏழாயிரம்கோடி ரூபாயை தாண்டியிருக்கிறது என்கிறார்கள் ஊழியர்கள் சங்கத்தின்  பிரதிநிதிகள். அது முழுவதும் அப்படியே எம்.ஏ.எம்மிடம் சென்று சேரவில்லை.  அதில் இடைத்தரகர்களுக்கு பாதித்தொகை போய் விட்டது.சரி கிடைத்த  மீதிப்பணத்தையாவது பல்கலைகழக நிதியில் கொண்டு சேர்த்தார்களா? இல்லை  என்ன செய்தார்கள்?இவ்வளவு பணம் புழங்கிய இடத்தில் ஏன் நிதிப்பற்றாக்குறை  வந்தது?அம்மா கைப்பற்றிய அண்ணாமலை பல்கலைக்கழகம்- ஒரு மினி தொடர் - பாகம் 5

- கரு.முத்து
ஏழாயிரம் கோடியில் எம்.ஏ.எம்.முக்கு வந்தது எவ்வளவு என்பதை அவர்தான் சொல்ல வேண்டும். ஆனால் அவரோ ‘‘என்னிடம் யாரும் எந்த பணமும் தரவில்லை’’ என்று முன்பு ஒருமுறை நம்மிடம் ஒரே போடாக போட்டு எல்லாவற்றையும் மறுத்து விட்டார். ஆனால் புரோக்கர்கள் அவரிடம் கொண்டுபோய் பணம் கொட்டிய தகவல்கள் லாரி லாரியாய் ஏற்றலாம் போல அவ்வளவு கதை சொல்வார்கள்.
 
வேலைக்கு பணம் வாங்கிய அவர், அவர்களுக்கு சம்பளம் கொடுக்க வேண்டுமே என்ற கவலையெல்லாம் படவில்லை. சம்பளம் கொடுப்பது பல்கலையின் கடமை நமக்கென்ன வந்தது என்று கல்லாவை இருக மூடிக்கொண்டார். அதோடு விட்டிருந்தால் கூட பரவாயில்லை. பல்கலைக்கழகத்தில் மாணவர் சேர்க்கை மூலமும் மற்ற வகைகள் மூலமும்  எவ்வளவு  வருமானம் வருகிறதோ அதற்கும் செலவு வைக்க ஆரம்பித்தார்.

தேவையே இல்லாமல் புதிய புதிய கட்டிடங்களை கட்ட உத்தரவிட்டார். கட்டிடம் கட்டுவதற்கு என்ன அவசியம்? கட்டுமான நிறுவனம் அவருடையை செட்டிநாடு பில்டர்ஸ்  நிறுவனம். ஆவுடையார்கோவில் திருப்பணி போல எந்த நாளிலும் அவரது நிறுவனம் அங்கே கட்டிடம் கட்டி பல்கலைக்கழகத்தின் நிதியை அபேஸ் செய்து கொண்டது. பல்கலைக்கழகத்தின் நிதியை இன்னும் எப்படி லாவகமாக தங்கள் நிறுவனத்துக்கு திருப்பலாம் என்று யோசித்துப் பார்த்தார் எம்.ஏ.எம். அவராக யோசிப்பாரா இல்லை அவரது அடிவருடிகள் யோசனை சொல்வார்களா என்று தெரியவில்லை.

ராஜாமுத்தையா மருத்துவக் கல்லூரியை வைத்து ஒரு திட்டம் போட்டார்கள். அது சுயநிதி மருத்துவக் கல்லூரி. மாணவர்களிடம் கட்டணம் வசூலித்து அதிலிருந்துதான் கல்லூரியை நடத்த வேண்டும். அப்படி கட்டணமும் வசூலிக்கப்பட்டது. அதுதவிர ஒரு சீட்டுக்கு நாற்பது லட்ச ரூபாய் அளவுக்கு நன்கொடையும் வாங்கப்பட்டது. ஆனால் அதையெல்லாம் வைத்து மருத்துவக் கல்லூரியை நடத்தாமல் அதை அப்படியே கல்லாவுக்குள் கொண்டு போய் பூட்டியவர் தனது மதுராகோட்ஸ் ஆலைக்கும், செட்டிநாடு சிமெண்ட்ஸ் ஆலைக்கும் அதனை முதலீடு செய்தார். நஷ்டத்தில் இயங்கிய அந்த ஆலைகள் இந்த முதலீட்டால் மெல்ல மெல்ல லாபத்திற்கு திரும்பியது. மருத்துவக்கல்லூரியின் ஒட்டுமொத்த செலவுகளையும் பல்கலைக்கழகத்தின் தலையில் கட்டினார்.
மருத்துவக் கல்லூரியின் மருத்துவர், செவிலியர் ஊதியங்கள், மாணவர்களின் படிப்பிற்காக அங்கு இயங்கும் மருத்துவமனையின் அத்தனை செலவினங்களும் அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் நிதியிலிருந்து எடுத்து செலவிடப்பட்டது. அதனால் தேவையே இல்லாமல் பல கோடி ரூபாய்கள் பல்கலைக்கழகத்துக்கு கூடுதல் செலவு பிடித்தது . இப்படி செலவுகளை செய்ததோடு மட்டும் விட்டு விடவில்லை. பல்கலைக்கழகத்தின் நிதியிலிருந்து இரண்டாயிரம் கோடி ரூபாயை மருத்துவக் கல்லூரிக்காக ஒதுக்கி எடுத்துக் கொண்டார்களாம். அதுவரை கொஞ்சம் கொஞ்சமாக நிதி தேய்ந்து வந்த பல்கலைக்கழகம் அதற்குபிறகு ஒட்டுமொத்தமாக திண்டாட ஆரம்பித்தது.

ஏற்கனவே அதிகப்படியான ஊழியர்களால் மாதம் 40 கோடி ரூபாய் அளவுக்கு ஊதியம் வழங்க வேண்டியிருந்தது. அதனால் கையிருப்பு எல்லாம் மெல்ல கரைந்து கொண்டே வந்தது. அந்த நேரத்தில் கை கொடுத்தது தொலைதூர கல்வி மையம். அங்கு வந்த வருமானம் முழுவதையும் சம்பளம் போடுவதற்காக எடுத்துக் கொண்டார்கள். அதனால் அங்கு 15000 ரூபாயாக இருந்த பி.எட் படிப்புக்கான கட்டணம்  சென்ற ஆண்டு ஐம்பதாயிரம் ரூபாயாக அதிகரிக்கப்பட்டது. அந்த படிப்பிற்கு ஐநூறு பேருக்குத்தான் அனுமதி என்று சொல்லப்பட்ட நிலையில் பல ஆயிரம் பேர்வரை சேர்க்கப்பட்டார்கள். ஆனாலும் நிதி போதவில்லை. ஊழியர்களின் சேமநலநிதி, ஓய்வு ஊதிய நிதி என்று எல்லா நிதியிலிருந்தும் எடுத்து சம்பளம் போட்டார்கள். அப்படியும் போதவில்லை. இந்த நிலைமை எம்.ஏ.எம்.மின் வளர்ப்பு மகன் ஐயப்பனுக்கு தெரிய வந்தது. அவர் உடனடியாக பல்கலைக்கழகத்துக்கு வந்து ஒருவாரம் தங்கி ஆய்வு நடத்தினார்.

மேற்கண்ட எல்லா விஷயங்களும் அவருக்கு முழுமையாக தெரிய வந்தது. இனிமேல் பல்கலைக்கழகம் ஒழுங்காக நடக்க வேண்டும் என்றால் தாங்கள் எடுத்துச் சென்ற பல்லாயிரம் கோடி ரூபாயை திரும்ப பல்கலைபஙகழக நிதியில் சேர்த்தாலே போதும் என்று அவருக்கு தெளிவாக தெரிந்தது. ஆனால் முன்புபோல் அவர்கள் இப்போது கல்விச்சேவையா செய்கிறார்கள். கல்வி வணிகம்தானே செய்கிறார்கள். அதனால் ஊழியர்கள் தலையில் கை வைக்க முடிவெடுத்தார். இருப்பதில் பாதிப்பேரை வெளியில் அனுப்பினாலோ அல்லது எல்லோருக்கும் இப்போது வாங்குவதில் பாதிச் சம்பளமாக குறைத்தாலோதான் அடுத்தடுத்த மாதத்தில் சம்பளம் போடமுடியும், தொடர்ந்து பல்கலைக்கழகத்தை நடத்தவும் முடியும் என்று சொல்லி துணைவேந்தரை அதை செயல்படுத்தவும் உத்தரவிட்டார்.

துணைவேந்தர் ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களை அழைத்து இதைப் பேசப்போய்த்தான் பிரச்னை விஸ்வரூபம் எடுத்தது. போராட்டங்களில் இறங்கினார்கள். அரசு இதில் தலையிட வேண்டும் என்று ஊழியர்கள் விரும்பினார்கள். அதனால் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் கொண்ட ஒரு தணிக்கைக்குழுவை அனுப்பி விசாரிக்க சொன்னது மாநில அரசு. அவர்கள் கொடுத்த விசாரணை அறிக்கையில் எம்.ஏ.எம்.முக்கு அளிக்கப்பட்ட சிறப்பு அதிகாரங்கள் தான் நிதி மோசடிக்களுக்கு காரணம் என்பதை  விளக்கப்பட்டது. அதன் விளைவாக முதலில் சிறப்பு நிர்வாக அதிகாரியாக சிவதாஸ்மீனா நியமிக்கப்பட்டார். துணைவேந்தர் பணிநீக்கம் செய்யப்பட்டார். சிவதாஸ்மீனாவின் வேகமான நடவடிக்கைகளின் விளைவாக பல்கலையை அரசு ஏற்கும் மசோதா சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.  இனி அரசு எடுக்கும் தொடர் நடவடிக்கைகளின் விளைவாக அண்ணாமலை பல்கலைக்கழகம் நிமிரும் என்று அதன் மாணவர்களான லட்சக்கணக்கானோர் நம்புகிறார்கள்.

குறிப்பு; கடந்த ஐந்தாண்டுகளாக அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் தள்ளாட்டங்களையும், அங்கு நடந்துவரும் குழப்பங்களையும் கோல்மால்களையும் நமது ஜூனியர்விகடன் மட்டுமே தொடர்ந்து கட்டுரைகள் வெளியிட்டு வந்தது. இப்போது அரசு ஏற்கும் முடிவுக்கு வந்ததற்கு ஜூனியர் விகடனும் ஒரு முக்கிய காரணம் என்று கூட்டு நடவடிக்கை குழுவான ஜாக் தனிப்பட்ட முறையில் விகடனுக்கு நன்றி சொல்லியிருக்கிறார்கள்.
thanx - vikatan

1 comments:

R. Jagannathan said...

As an alumni, I feel very sad that my alma-matter has reached such a stage. That the entire downfall started just a decade ago is appalling. Despite JV bringing this up for 5 years, action is taken only now - proves that the previous and current governments had also benefitted from this scandal. The figures of number of employees, number of students and the payments are mind boggling and beyond a normal person's comprehension. The society at largr is spoilt. A miracle is required for change of mindset and for any improvement to take place. - R. J.