Sunday, April 28, 2013

கோயம்பத்தூர் -ஊர் ஜாதகம் 2

ஊர் ஜாதகம் - கோயம்பத்தூர்- 2 
கடனை சரியாக திரும்பக் கட்டுகிறார்கள் !
பானுமதி அருணாசலம்,படங்கள்: தி.விஜய்.
அதிக வருமானம் ஈட்டித் தரும் கோயம்புத்தூரில் சுமார் 560 வங்கிக் கிளைகள் உள்ளன. சென்னைக்கு அடுத்தபடியாக இங்குதான் அதிகமான வங்கிக் கிளைகள் இருக்கின்றன. கோவையிலிருந்து 2009-2010-ம் ஆண்டில் மட்டும் சாஃப்ட்வேர் ஏற்றுமதி 710.66 கோடி ரூபாய்க்கு நடந்துள்ளது. சென்னைக்கு அடுத்தபடியாக மிகப் பெரிய சாஃப்ட்வேர் ஹப்பாகத் திகழ்கிறது.


இந்த மாவட்டத்தில் எவ்வளவு தொழிற் கடன் தரப்பட்டிருக்கிறது? சேமிப்பு எவ்வளவு என்பது போன்ற புள்ளிவிவரங்களைத் தெரிந்துகொள்ள இந்த மாவட்டத்தின் முன்னோடி வங்கியான (லிணிகிஞி ஙிகிழிரி) கனரா வங்கியின் மேலாளர் வணங்காமுடியுடன் பேசினோம்.


''தொழில் நிறுவனங்கள் அதிகமாக இருக்கும் இங்கு, ஆண்டுக்கு (முன்னோடி வங்கிகளின் பங்களிப்பாக) சுமார் 6,750 கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டுள்ளது. இதனை இந்த வருடத்தில் 8,400 கோடி ரூபாயாக அதிகப்படுத்தவுள்ளோம். இது கடந்த வருடங்களைவிட 25 சதவிகிதம்வரை அதிகம். அதாவது வேறு எங்கும் இல்லாத அளவுக்கு இங்கு மட்டும்தான் 100 சதவிகிதம் டெபாசிட் வந்தால், 130 சதவிகிதம் வரை கடன் கொடுக்கிறோம். டெபாசிட்டைவிட கடன் அதிகமாகக் கொடுப்பது ஏன் எனில், திரும்பச் செலுத்தும் திறமை இங்குள்ள தொழில்முனைவோரிடம் அதிகமாக இருப்பதுதான். டெபாசிட்டில் 25 சதவிகித வளர்ச்சியும், கடனில் 19 சதவிகித வளர்ச்சியும் அடைந்துள்ளது.


புதிதாக பல கல்வி நிறுவனங்கள் மற்றும் மருத்துவமனைகள் வந்திருப்பதால், அவர்களுக்கும் கடன் வழங்கப்பட்டுள்ளது. இதற்கு அடுத்தபடியாக வீட்டுக் கடன், வாகனக் கடன் என தனிநபர் கடனும் அதிகளவில் இங்கு வாங்கப்படுவது மட்டுமல்லாமல், விரைவாக கடனைத் திரும்பச் செலுத்தியும்விடுகின்றனர். இதனால் வாராக்கடன் என்பது கிடையாது.


இந்த மாவட்டத்தில் விவசாயமும் பிரதான தொழில் என்பதால் அதற்கான கடனையும் தற்போது அதிகப்படுத்தியுள்ளோம். கடந்த வருடத்தில் புதிதாக 80 வங்கிக் கிளைகள் வரை துவங்கினோம். இந்த வருடத்தில் 100 புதிய கிளைகள் துவங்க உள்ளோம். மேலும், மின்வெட்டினால் தொழில்கள் பாதிப்படைந் துள்ளதால் தொழிற் கடன்களை திரும்பச் செலுத்தும் காலத்தை சற்று நீட்டித்துத் தரவும் பரிசீலனை செய்து வருகிறோம்'' என்றார் அவர்.


தமிழகத்தில் வெட் கிரைண்டர் முதன் முதலில் தயாரிக்கப்பட்ட இடம் கோயம்புத்தூர்தான். சுமார் 700 கிரைண்டர் தயாரிப்பு நிறுவனங்களைக் கொண்டுள்ளது. இந்த ஊரில் கிரைண்டர் தயாரிக்க என்ன காரணம் என கோயம்புத்தூர் வெட்கிரைண்டர்ஸ் அண்ட்  உபகரணங்கள் தயாரிப்பாளர்கள் அமைப்பின் தலைவர் கிருஷ்ணமூர்த்தியிடம் கேட்டோம்.


''கோயம்புத்தூரைச் சுற்றியுள்ள பகுதிகளில் கிடைக்கும் செமி கற்கள், கிரைண்டர் தயாரிக்க ஏதுவாக இருந்தது. இதனால் இங்கு 1955-ம் வருடத்தில் சபாபதி என்பவர் கிரைண்டர் தயாரிக்கத் துவங்கினார். அதன்பிறகு சுமார் 200 நிறுவனங்கள் வரை கிரைண்டர் தயாரிப்பிலும், 500 நிறுவனங்கள் வரை கிரைண்டருக்குத் தேவையான உபகரணங்களைத் தயாரித்தும் வருகின்றன. தமிழ்நாடு மற்றும் சில வெளிமாநிலங்களுக்கும் இங்கிருந்து சப்ளையாகி வந்தது. தமிழ்நாடு அரசு இலவச கிரைண்டர் வழங்கும் திட்டத்தை அறிவித்தபிறகு எங்களது தொழில் மிகவும் பாதிப்படைந்துவிட்டது. மாதத்திற்கு சுமார் 1.5 லட்சம் கிரைண்டர் வரை தயாரித்து வந்தோம்.


இப்போது சுமார் 20 சதவிகிதம் வரை மட்டுமே தொழில் நடக்கிறது. இந்த இலவசத் திட்டத்தில் ஏழு பெரிய நிறுவனங்கள் மட்டுமே டெண்டர் மூலம் ஆர்டர்கள் பெற்றதால் மற்ற நிறுவனங்களுக்கு வேலையில்லாமல் போய்விட்டது. இந்த இலவச கிரைண்டருக்குத் தேவையான மோட்டார்களைக்கூட சீனாவிலிருந்து குறைந்த விலைக்கு இறக்குமதி செய்து தயாரிக்கின்றனர். தொழில் இல்லாமல் சின்னச் சின்ன நிறுவனங்கள் மூடப்பட்டு, அவர்கள் வேறு தொழிலுக்குப் போய்விட்டனர். இதில்லாமல் மின்வெட்டு பிரச்னை வேறு எங்களைப் பாடாய்ப்படுத்துகிறது'' என ஆதங்கத்துடன் பேசினார்.


மோட்டார் மற்றும்  பம்புகள் அதிகளவில் தயாரிக்கப்பட்டு இங்கிருந்துதான் நாட்டின்


40 சதவிகிதத் தேவை பூர்த்தி செய்யப்படுகிறது. தமிழ்நாடு பம்ப்ஸ் அண்ட் ஸ்பேர்ஸ் தயாரிப்பாளர்கள் அமைப்பின் தலைவர் கல்யாணசுந்தரத்திடம் இதுபற்றி பேசினோம்.  


''கோயம்புத்தூரில் பெரிய தொழிற்சாலை களைவிட குறுந்தொழில்கள்தான் அதிகளவில் உள்ளன. கடந்த பதினைந்து வருடங்களாக தொழிற்துறை நல்ல வளர்ச்சி கண்டுள்ளது. ஆனால், அதற்கு தகுந்த தொழிற்சாலை உள்கட்டமைப்பு வசதிகள் சொல்லிக்கொள்ளும் வகையில் இல்லை. தற்போது நகரத்திற்குள் தொழிற்சாலை துவங்க முடியவில்லை. இருபத்தைந்து வருடங்களுக்கு முன்பு பொள்ளாச்சி சாலையில் சிட்கோ கொண்டுவந்தார்கள். ஆனால், இன்னொரு சிட்கோ கொண்டுவர முயற்சிகள் எடுக்கவேண்டும். மின்வெட்டானது சாதாரண வளர்ச்சியைக்கூட தடுத்துவிடுகிறது. தொழிலுக்கு வாங்கும் கடன்களை சுலபமான முறையில் பெறுவதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும். மேலும், வேலையாட்கள் கிடைப்பதும் மிகவும் சிரமமாக உள்ளது. பெரிய நிறுவனங்கள் எல்லாம் ஒடிஷா, பீகார் உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து வேலைக்கு ஆட்களை எடுத்துக்கொள்கின்றனர்.'' என்று ஆதங்கப்பட்டார்.  


விவசாயிகள் சங்கத்தின் பொதுச்செயலாளரும், விவசாய வாழ்வாதாரப் பாதுகாப்புக் குழு தலைவருமான கந்தசாமி, விவசாயம் சார்ந்த தகவல்களை நம்முடன் பகிர்ந்துகொண்டார்.


''நவீன விவசாயம் நடக்கும் இடம் இது. முன்பு பருத்தி உற்பத்தி அதிகமாக இருந்தது. ஆனால், ஆள் பற்றாக்குறை உள்ளிட்ட காரணங்களால் தற்போது பருத்தி உற்பத்தி குறைந்துவிட்டது. தென்னை, பாக்கு, மஞ்சள், வாழை, காய்கறிகள் ஆகியவை முக்கியப் பயிர்களாக உள்ளது. இதுபோக சோளம், கொள்ளு, துவரை, உளுந்து போன்ற பயிர்கள் மானாவாரியாகப் பயிரிடப்படுகிறது. பரம்பிக்குளம், ஆழியாறு நீர்ப் பாசனத் திட்டத்தின் மூலம் விவசாயம் நடைபெறுகிறது. எனினும், மழை சரியாகப் பெய்யாத காரணத்தாலும், தடையற்ற மின்சாரம் கிடைக்காததாலும் விவசாயம் ஒழுங்காக நடைபெறவில்லை.


சென்ற வருடம் 700 மி.மீ. பெய்த மழை, இந்த வருடத்தில் 400 மி.மீ. மட்டுமே பெய்துள்ளது. இதனால் 35,000 ஹெக்டேர் பரப்பளவில் பயிரிடவேண்டியது 20,000 ஹெக்டேர் பரப்பளவில் மட்டுமே பயிரிடப்பட்டுள்ளது. இதுவும், தண்ணீர் இல்லாமல் பயிர்கள் காய்ந்துவிட்டன.


 நிலத்தடி நீரும் குறைந்து வருகிறது. தொடர்ந்து ஐந்து மணி நேரம் மின்சாரம் கிடைப்பதே அரிதாக இருப்பதால் விவசாயம் பெரியளவில் பாதிப்படைந்துள்ளது. கால்நடை வளர்ப்பும் குறைந்து வருகிறது. கால்நடைகளுக்குத் தேவையான தீவனங்கள், மருந்துகள் போன்றவற்றுக்கு ஆகும் செலவு அதிகரித்துள்ளதால் பால் உற்பத்தி, விவசாயத்திற்கு தேவையான எருது ஆகியவைக் கிடைப்பதில்லை.


இதுபோதாது என்று இப்போது புது பிரச்னையாக கெயில் நிறுவனம் ஏழு மாவட்டங்களிலுள்ள 136 கிராமங்களின் வயல் வழியாக பைப்லைன் மூலமாக எரிவாயு கொண்டுபோக முயற்சி செய்து வருகிறது. இதனை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளோம். ஏற்கெனவே விவசாயம் பாதிப்படைந்து நிலத்தடி நீரும் குறைந்துள்ள சூழ்நிலையில் விவசாய நிலங்கள் வழியாக பைப்லைன் போகும். அதன் தாக்கம் நிலங்களைப் பாதிக்கும். இதற்கு பதில்


நெடுஞ்சாலையில் சாலைகளுக்கு நடுவே இருக்கும் டிவைடர் வழியாக இந்த பைப்லைனைக் கொண்டு செல்லலாம்'' என்றார்.


பருத்தி விளையும் பகுதி என்பதால் நூற்பாலை கள் அதிகம் இருக்கும் ஊர். சுமார் 200 சிறு மற்றும் நடுத்தர நூற்பாலைகள் இருக்கின்றன. இந்தத் தொழில் குறித்து தென்னிந்திய நூற்பாலைகள் சங்கத் தலைவர் திருநாவுக்கரசிடம் பேசினோம்.


''கோவை, உடுமலைப்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய சிறு நூற்பாலைகளின் உரிமையாளர்களை உறுப்பினர்களாகக்கொண்ட அமைப்பு எங்களுடையது. பெரும்பாலான நூற்பாலைகள் கிராமத்தில் இருக்கின்றன. இதில் பெண்கள் அதிகளவில் பணியாற்றுகின்றனர். 

 மின்வெட்டு மிக முக்கிய பிரச்னையாக உள்ளது. அடுத்து, நூல் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் பருத்தியின் விலை நிலையானதாக  இருப்பதில்லை. முன்பெல்லாம் நவம்பர், டிசம்பர் மாதங்களில் விலை குறைவாகவும், ஜூன், ஜூலை மாதங்களில் விலை அதிகமாகவும் இருக்கும். ஆனால், இப்போது இடைத்தரகர்கள் அதிகம் இருப்பதாலும் விலையில் கடுமையான பாதிப்படைகிறது.


காட்டன் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியாகூட, விலை ஏறினால்தான் பருத்தியை விற்பனை செய்வோம்; இல்லையெனில் நஷ்டம் ஏற்படும் என கூறுகின்றனர். நூற்பாலைகள் நடத்துவதற்கு அதிக முதலீடு மற்றும் அதிகமான வேலையாட்கள் தேவை. சீனாவில் ரிசர்வ் ரேஷியோ என உள்நாட்டு பயன்பாடுபோக மீதியை ஏற்றுமதி செய்கின்றனர். ஆனால் இங்கு அப்படியில்லை. அதனால் அரசு பருத்தி விலை சீராக இருக்க நடவடிக்கை எடுத்தால் மட்டுமே எங்களால் நிம்மதியாகத் தொழில் செய்ய முடியும்'' என்றார்.


பல தொழில்கள் இருக்கும் கோயம்புத்தூரில் நகைகள் மிகவும் பிரபலமானது. ஆபரணங்கள் தயாரிப்பு, மெஷின் கட்டிங் கொண்டு நகைகள் செய்வது மற்றும் தென் இந்தியாவில் வைரம் கட்டிங் செய்வதில் முக்கிய பங்காற்றுகிறது. சுமார் 3,000 நகை செய்யும் நிறுவனங்களும், 40,000 பொற்கொல்லர்களும் இங்கு உள்ளனர்.


நாம் இந்த ஊரைச் சுற்றி வரும்போது சென்னை யில் இருக்கும் அனைத்து ஜவுளிக்கடைகள், நகைக் கடைகள், ஓட்டல்கள் கோவையில் கிளை திறந்திருப்பதைப் பார்க்க முடிந்தது. மக்களும் மிக சுறுசுறுப்புடன் இருக்கிறார்கள். தொழில்வளம், இயற்கைவளம் மிகுந்த இந்த ஊரில் இன்னும் கூடுதல் கவனம் செலுத்தினால் சென்னைக்கு நிகராக மாறும் என்பதில் சந்தேகமில்லை.

thanx - vikatan

1 comments:

கலியபெருமாள் புதுச்சேரி said...

புள்ளிவிவரங்களுடன் தந்துள்ளீர்கள்..அருமை..