Sunday, March 24, 2013

சமந்தா - சித்தார்த்! புது காதல் ஜோடி

க.ராஜீவ் காந்தி

ரகசியம்... சமந்தா லவ் பண்றா!'' - கடந்த மாதம் விகடன் பேட்டியில் சின்ன லீட் கொடுத்திருந்தார் சமந்தா. கடந்த வாரம் காளஹஸ்தி கோயிலில் 'பாய்ஸ்’ சித்தார்த்துடன் இணைந்து சர்ப்ப நிவாரண தோஷ பூஜை செய்து சென்றிருக்கிறார் சமந்தா. தன் காதலன் யார் என்று சொல்லாதவர், இப்போது அது 'பாய்ஸ்’ சித்தார்த் என்று சொல்லாமல் சொல்லியிருக்கிறார். சமந்தா - சித்தார்த் காதல் கதை என்ன?
 சென்னைப் பசங்க!
கடந்த நான்கு வருடங்களாக சினிமாவில் இருந்தாலும் சமீபத்தில் வெளியான தெலுங்குப் படமான 'ஜபர்தஸ்த்’தில்தான், சித்தார்த்துடன் ஜோடியாக நடித்திருந்தார் சமந்தா. ஆனால், சினிமாவுக்கு வருவதற்கு முன்னரே இருவருக்கும் அறிமுகம் உண்டு. காரணம்... சென்னை! இருவரும் சென்னைவாசிகள். சமந்தா, ஹோலி ஏஞ்சல்ஸ் பள்ளியில் படித்தவர். சித்தார்த், தேவ் பாய்ஸ் பள்ளியில் படித்தவர். சமந்தா மாடலாக இருக்கும்போதே, சித்தார்த்துடன்  அறிமுகமாகிவிட்டார். ஆனாலும், நெருக்கமான நட்பு வளர்ந்தது இரண்டு ஆண்டுகளுக்கு முன்தான். அதுவும் சரும பாதிப்பால் சமந்தா பாதிக்கப்பட்டு ஓய்வில் இருந்த சமயம், அவருக்கு ஆறுதலும் தேறுதலுமாக இருந்தது சித்தார்த்.
சூர்யா - ஜோதிகா ஃபார்முலா!
சித்தார்த் - சமந்தா ஜோடியாக நடித்து சமீபத்தில் வெளியான 'ஜபர்தஸ்த்’ படம் மாஸ் ஹிட். படத்தின் இயக்குநர் நந்தினி ரெட்டி, சமந்தாவின் நெருங்கிய தோழி. 'ஜபர்தஸ்த் நல்ல ரொமான்டிக் காமெடி. இந்தப் படத்தில் சித்தார்த் ஹீரோவாக நடித்தால் நன்றாக இருக்கும்!’ என்று புராஜெக்ட்டுக்குள் சித்தார்த்தை இழுத்தது சமந்தாவின் சிபாரிசுதான். 'காக்க காக்க’ படத்தில் சூர்யா நடித்தால் நன்றாக இருக்கும் என்று ஜோதிகா சிபாரிசு செய்தது நினைவுக்கு வருகிறதா? இத்தனைக்கும் மிக மென்மையான காதல் கதை ஒன்றைத்தான் முதலில் நந்தினி படமாக இயக்குவதாக இருந்தது. ஆனால், 'இப்படியான சாஃப்ட் ரொமான்டிக் கேரக்டரில் சித்து ஏகப்பட்ட படங்கள் நடித்துவிட்டார். ஒரு சேஞ்சுக்கு காமெடி ட்ரை பண்ணலாம். சித்துவின் எனர்ஜிக்குக் காமெடி சூப்பரா செட் ஆகும்!’ என்று கதையைத் திசை திருப்பியதும் சமந்தாவேதானாம். படம் ஹிட் அடித்து, 'ராசி ஜோடி’ அந்தஸ்துடன் இருக்கும் சமயம், தங்கள் காதல் தகவல் வெளியாக வேண்டும் என்ற சமந்தாவின் வேண்டுதல் ப்ளஸ் எதிர்பார்ப்பு நிறைவேறிவிட்டது!
பிடிவாத சமந்தா!  
சமந்தாவின் காதலுக்கு அவரது பெற்றோரிடம் ஏகப்பட்ட எதிர்ப்பு. சித்தார்த் ஏற்கெனவே திருமணமாகி விவாகரத்து ஆனவர், சோஹா அலிகான், ப்ரியா ஆனந்த், ஸ்ருதி என ஏராளமாகக் கிசுகிசுக்கப்பட்டவர் என எதிர்ப்புக்கான காரணங்களை அடுக்கியிருக்கின்றனர்.
ஆனால், சமந்தா தன் முடிவில் உறுதியாக இருந்திருக்கிறார். 'சித்துவை எனக்கு நன்றாகத் தெரியும். அவர்தான் என் கணவர் என்பதில் நான் பிடிவாதமாக இருக்கிறேன்!’ என்று விடாப்பிடியாக நின்று தன் பெற்றோரின் சம்மதம் பெற்றிருக்கிறார்.
நாக தோஷ நிவர்த்தி!
ஆந்திராவில் உள்ள காளஹஸ்தி கோயிலின் விசேஷம் நாம் அனைவரும் அறிந்ததுதான். தங்கள் திருமணத்தில் ஜாதகரீதியான தோஷங்களைத் தவிர்க்க தம்பதியாக காளஹஸ்திக்கு வந்து சர்ப்ப நிவாரண தோஷ பூஜை செய்தால், திருமணத் தடை அகலும் என்பது ஐதீகம். கங்குலி-நக்மா, பிரபுதேவா-நயன்தாரா போன்ற சர்ச்சைக் 'காதலர்கள்’கூட காளஹஸ்திக்கு வந்து சென்றதன் அவசியம் இதுதான். இப்போது அதே காரணம்தான் சித்தார்த் - சமந்தாவின் வருகைக்குக் காரணம் என்கிறார்கள் இரு தரப்பையும் சேர்ந்த நண்பர்கள்.  
சித்தார்த் - சமந்தா தங்கள் குடும்பத்தினரோடு வந்து பூஜை செய்த விவரங்களைப் பத்திரிகையாளர்களிடம் பகிர்ந்துகொண்டார் கோயிலின் நிர்வாக அதிகாரி ஒருவர். ''சித்தார்த், சமந்தா இருவரது குடும்பத்தினருமே ஒட்டுமொத்த தரிசன டிக்கெட்டுகளையும் புக் செய்துவிட்டனர். காலை 10 மணிக்குக் கோயிலுக்கு வந்த அவர்கள் கோயிலின் ஓய்வு விடுதியில் ரெஃப்ரெஷ் செய்து கொண்டு, தோஷ பூஜையில் கலந்துகொண்டனர். பூஜைக்காக சித்தார்த்தின் அப்பா சூர்யநாராயணா விரதம் இருந்து வந்திருந்தார். சித்தார்த் தின் ஜாதக அமைப்புக்கு இந்த தோஷ பூஜை அவசியம் என்று சமந்தா குடும்ப ஜோதிடர் சொல்லியிருந்தாராம். அதனாலேயே இந்த வருகை!'' என்றிருக்கிறார்.
பிரபலங்களின் காதல் இலக்கணம் என்ன? அதை மறுப்பதுதானே..! இப்போது இருதரப்பும் மறுப்பு அறிக்கைகளில் பிஸி. அடுத்து என்ன நடக்கும் என்று சொல்லவும் வேண்டுமா என்ன? 

0 comments: