Sunday, January 20, 2013

கோவை பெண்கள் கட்டுப்பெட்டிகளாக இருப்பது ஏன்? ஷோபா டே லொள் பேட்டி @ விக்டன்

ஷோபாடே ஒரு சந்திப்பு

 http://librarykvpattom.files.wordpress.com/2008/07/ldh1.jpg
ஷோபாடே இதுவரை எழுதியுள்ள நாவல்கள் நான்கு மட்டுமே. எழுதத் துவங்கியது 1988-க்குப் பிறகுதான். வரப்போகிற இவரது ஐந்தாவது புத்தகம் இந்தியக் காதல் மற்றும் செக்ஸ் பற்றிய கட்டுரைத் தொகுப்பு. பிரபல மற்றும் பிரச்னைக்குரிய எழுத்தாளர் குஷ்வந்த் சிங்குடன் இணைந்து எழுதுகிறார் ஷோபாடே.


 'செக்ஸுக்கு அதிக முக்கியத்துவம் தருகிறார்’ என்பதுபோன்ற குற்றச்சாட்டுகள் இவர் மீது உண்டு. ஆனால், ஷோபாடேக்கு இதுகுறித்து எந்தக் கவலையும் இல்லை. 
''இந்த ஆண்களுக்கு செக்ஸ் எழுதப்படுவதுபற்றி ஓ.கே-தான். ஆனால், போயும் போயும் ஒரு பெண் செக்ஸ் எழுதுவதா என்பதுதான் அவர்களது கோபம். பாரதமாதாவின் பண் பாட்டுப் போர்வை கிழிந்துவிட்டதே எனும் ஆத்திரம்!'' என்கிறார் ஷோபாடே. பரபரப் பான எழுத்துபோலவே ஷோபாடேவின் வாழ்க்கையும் விறுவிறுப்பானது.


பம்பாய் கொலாபா ஏரியாவில் மேல்தட்டு ஃபிளாட் ஒன்றின் ஐந்தாவது மாடியில் வசிக்கிறார் ஷோபாடே.


''சொல்லுங்க... நீங்க எந்தப் பத்திரிகை?''

''ஆனந்த விகடன்.''

''ஓ... உங்க பத்திரிகைபற்றி நிறையக் கேள்விப்பட்டு இருக்கேன். ஒரு அரசியல் ஜோக் வெளியிட்டதுக்காக ஜெயிலுக்குப் போகும்படியா ஆனது உங்க ஆசிரியருக்குத்தானே?''

''ஆமாம்!''

''அராஜகம். சரி... பேட்டிக்கு நான் தயார். நீங்க கேள்விகளைத் தொடங்கலாம்...'' சட்டென்று விஷயம் தொடுகிறார்.


''வேறு எந்த எழுத்தாளருக்கும் இல்லாத  புகழும் பத்திரிகைகள் ஆதரவும் உங்களுக்குக் கிடைச்சிருக்கு. இந்த பப்ளிசிட்டிக்குக் காரணம், உங்க பொதுஜனத் தொடர்பா அல்லது நீங்கள் கிளர்ச்சியூட்டும்படியாக செக்ஸ் எழுதுவதா?''


''நான் ஒண்ணும் செக்ஸ் எழுதும் முதல் இந்தியப் பெண் இல்லையே. எனக்கு 20 வருஷங்களுக்கு முன்னாடியே கமலாதாஸ் எழுதிட்டாங்க. அந்தக் காலகட்டத்தில், நான் இப்போ எழுதுறதைவிட அதிகமாவே எழுதியிருக்காங்க. அதனால், கதாபாத்திரங்களோட செக்ஸுவல் நினைப்புகளை மறைக்காமல் எழுதுவது மட்டுமே என் பாப்புலாரிட்டிக்குக் காரணம்னு சொல்லிட முடியாது. நீங்க சொல்ற மாதிரி என் பொதுஜனத் தொடர்பும் ஒரு முக்கியக் காரணம்.


 நான் ஏற்கெனவே ஸ்டார் டஸ்ட், சொஸைட்டி, செலிப்ரிட்டி பத்திரிகைகளுக்கு ஆசிரியரா இருந்திருக்கேன். அதுவும் தவிர, இன்னைக்கும் நாலு வெவ்வேறு பத்திரிகைகளுக்குத் தொடர்ச்சியா எழுதுறேன். இதனால் பத்திரிகை உலகம் மொத்தமும் எனக்குப் பரிச்சயம்.


பத்திரிகைக்கு வர்றதுக்கு முன்னாடி விளம்பர ஏஜென்ஸியில் கொஞ்ச காலம் காப்பிரைட்டராப் பணிபுரிஞ்சிருக்கேன். அதுக்கும் முன்னாடி மாடலிங்கில் இருந்தேன். இதனால், மீடியாவில் எல்லாருக்கும் என்னைத் தெரியும். நான் எழுதிய புத்தகங்கள் ஆயிரக்கணக்கில் விற்பதால், 'அட... நமக்குத் தெரிஞ்ச வங்களாச்சே’ங்கிற சந்தோஷத்தோட இவங்க எல்லாம் என்னைச் சந்திச்சுப் பேட்டி எடுக்க வர்றாங்க. இதை நான் எதுக்கு மறுக்கணும்?!''



''நீங்க பத்திரிகையாளராக ஆனது எப்படி?''


''அது ஒரு இனிமையான விபத்து. படிக்கிற காலத்தில் பத்திரிகையாளரா ஆகணும்கிற மாதிரி எந்தக் கனவும் கிடையாது. மெள்ள மெள்ள என் வாழ்க்கை திசைமாறி... பத்திரிகை, எழுத்துனு செட்டில் ஆயிடுச்சு. இது ஒருவகைப் பரிணாம வளர்ச்சி... அவ்வளவுதான்!''


'' 'டைம்’ பத்திரிகையில் பேட்டி வெளிவரும் அளவுக்கு என்ன சாதிச்சுட்டோம்னு நினைக்கிறது உண்டா?''


''சாதிச்சதால்தான் பாராட்டி எழுதினாங்கன்னு திட்டவட்டமா நம்புறேன். எப்படி சத்யஜித்ரே படங்கள் மூலமா இந்தியா என்றாலே வறுமைதான், பட்டினிதான், பிச்சைக்காரர்கள் மட்டுமே இருப்பாங்கங்கிற ஒரு பிரமை வெளிநாட்டவங்க மத்தியில் உருவாச்சோ... அதே மாதிரி இந்தியப் பெண் கள்னாலே அடிமைத்தனம்தான்கிற சிந்த னையை அவங்களுக்கு ஊட்டி, இங்கு உள்ள சில கதாசிரியைகள் புண்ணியம் கட்டிக் கிட்டாங்க.


இதனால் இந்தியப் பெண் எழுத்தாளர்கள்னாலே ஸ்டீரியோ டைப்பா நம் ஊர்ப் பெண்களோட வரதட்சணைப் பிரச்னை, குடிகாரக் கணவன்கிட்ட உதைபடும் கொடுமை, மாமியார் பிடுங்கல்னு சுத்திச் சுத்தி ஒரே மாதிரிதான் எழுதுவாங்கனு ஒரு தியரி அங்கே காலங்காலமா இருக்கு. அதில் இருந்து வித்தியாசப்பட்டு, இந்திய நகரத்துப் பெண்களின் செக்ஸுவல் சிந்தனைகள், சுதந்திரப்போக்குனு நான் எழுதும்போது... வெளிநாட்டவங்களுக்கு அது ஆச்சர்யமா இருக்கு.''


''இந்திய செக்ஸ்பத்தி என்ன நினைக்கிறீங்க?''


''இந்தியாவைப் பொறுத்தவரை செக்ஸ் என்பது பெரும்பாலும் கல்யாணத்துக்குப் பிறகுதான். இதில் பிரச்னை என்னன்னா, கல்யாண வாழ்க்கையில் செக்ஸைப் பிரவாகமாக உணரவோ அல்லது அனுபவிக்கவோ இங்கே பலருக்கும் புரிவது இல்லை.''


''அதனால்தான் செக்ஸ்பற்றி அதிகம் எழுதறீங்களா?''


''என்னைச் சுற்றி நடக்கற விஷயங்கள், நான் பார்க்கிறது... அனுபவித்தது... எல்லாத்துலயும் 'செக்ஸ்’ ஒரு முக்கிய அம்சமா இருக்கே... அதனால எழுதறேன். என் முதல் புத்தகமான சோஷியலைட் ஈவினிங்ஸை மூணே மாசத்தில் எழுதினேன். அதில் மேல்தட்டின் கள்ளக்காதல் விவகாரங்களையும், 'போரடிக்குது... இந்த வாழ்க்கை வேணாம்’னு விலகும் பணக்காரப் பெண்களையும் சுட்டிக் காட்டியிருந்தேன். இத்தனைக்கும் அதில் 'செக்ஸ்’ அவ்வளவா கிடையாது. ஆனாலும், அந்தப் புத்தகமேகூட நம் ஊர்ல பலருக்கும் அதிர்ச்சியா இருந்தது.


ஒண்ணு சொல்லட்டுமா... நான் எழுதுறதைப் படிச்சுட்டு யாரும் ரோட்டிலேயே கட்டிப் பிடிச்சுப் புரளப்போறது இல்லே. பின்னே எதுக் காக நான் செக்ஸ் எழுதுறதுபத்தி இவ்வளவு கேள்விகள் எழணும்?’


''பத்திரிகையாளர்கள், எழுத்தாளர்கள் எல்லாம் இப்போது விஷ§வல் மீடியாவை நோக்கிப் போய்க்கொண்டு இருக்கிறார்கள்... உங்கள் ஐடியா எப்படி?''



''ஸ்டார் டி.வி. வந்துவிட்ட பிறகு, விஷ§வல் மீடியாவின் தாக்கமும் மவுசும் அதிகமாகி இருக்கிறது. ஆனால், என்னை மாதிரி குடும்பப் பைத்தியங்களுக்கு எல்லாம் விஷ§வல் மீடியா செட் ஆகாது. ஸ்டுடியோவுக்குப் போவது... பிரத்யேகமாக மேக்கப் போட்டு கேமரா முன் நிற்பது... பல்வேறு இடங்களுக்கும் யூனிட்டோடு அலைவது..


. போன்றவற்றுக்கு எல்லாம் எனக்கு நேரமும் இல்லை... பொறுமை யும் இல்லை. 'அப்படியானால், ஷூட்டிங்கை உங்கள் வீட்டிலேயே வைத்துக்கொள்ளலாமே. நீங்களே தொகுத்தளியுங்களேன்!’ என்றுகூட எனக்கொரு அழைப்பு வந்தது. 'நாலாபக்கமும் வயர்கள் குறுக்கும் நெடுக்குமாகப் போய்க் கொண்டு இருக்க... என் வீடு ஒன்றும் ஸ்டுடியோ அல்ல... ஸாரி!’ என்று பதில் சொல்லிவிட்டேன்.''


'உன் குழந்தைகளும் என் குழந்தைகளும் நம் குழந்தைகளோடு விளையாடிக்கொண்டு இருக்கிறார்கள்’ என்று ஆங்கிலத்தில் ஒரு தமாஷ் மொழி உண்டு. இது ஷோபாடேயின் வீட்டில் நிதர்சனம். ஷோபாடேக்கு விவாகரத்து ஆன முதல் கணவர் மூலம் இரண்டு குழந்தைகள். திலீப்டேவுக்கும் தனது முதல் மனைவி (அவர் உயிரோடு இல்லை!) மூலம் இரண்டு குழந்தைகள். பிறகு, ஷோபாவுக்கும் திலீப்டேவுக்கும் திருமணமாக... இருவருக் கும் பிறந்தது இரண்டு குழந்தைகள்.


மொத்தத்தில் ஒரே வீட்டில் ஆறு குழந்தைகளோடும் (நால்வர் டீன் ஏஜில்!) இருக்கிறார்கள், இந்தத் தம்பதியினர்.


கணவர், குழந்தைகள்பற்றி ஷோபா சொன்னார்...


''என் கணவர் டே ஒரு வங்காளி. ஷிப்பிங் கம்பெனி நடத்துகிறார். குழந்தைகளோடு வீட்டில் உட்கார்ந்தபடிக்கே எழுதுவது மாதிரி சொர்க்கம் வேறு எதுவும் இல்லை. குழந்தைகளுக்குத் தேவைப்படும் நேரத்தில் எல்லாம் நான் வீட்டில் இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் அந்தஸ்து மிக்க பத்திரிகை ஆசிரியர் வேலைக்கே முழுக்குப் போட்டேன். வீட்டில் முழு நேர இல்லத்தரசியாக இருப்பதால், நம் வசதிக்குத் தக்கபடி எழுதுவதற்கெனத் தனியாக நேரம் ஒதுக்கிச் செயல்பட முடிகிறது. அதை மீறி, கடைக்குட்டிகள் இரண்டும் பக்கத்தில் நின்று தொல்லை கொடுத்தாலும் அதையும் ரசித்துக்கொண்டே எழுதப் பழகிவிட்டது. அதுதான் பிடிச்சும் இருக்கு!'


'
''உங்கள் குழந்தைகள் உங்கள் எழுத்துகளைப் படிப்பது உண்டா? என்ன சொல்கிறார்கள்?''


''என் நாவல்களைப் படித்தால், அதைச் சரியான முறையில் புரிந்துகொள்ளும் அளவுக்கு அவர்களுக்கு இன்னும் வயதோ பக்குவமோ இல்லை. அவர்களாகப் படிக்கவும் இல்லை. மற்றபடி, நான்கு வெவ்வேறு பத்திரிகைகளில் வெளியாகும் என் பகுதிகளைப் (சிஷீறீuனீஸீs) படிப்பார்கள். 'இது போர்’, 'இது சூப்பர்’, 'இது சுமார்’ என்றரீதியில் எந்தப் பயமும் இன்றி கமென்ட் அடிப்பார்கள்.''


''நாற்பத்தைந்து வயதில் இரண்டு சின்னக் குழந்தைகளுக்குத் தாயாக இருப்பது சிரமமாக இல்லையா?''


''ஒரு சிரமமும் இல்லை. அவர்களது தினசரி விஷயங்களைப் பார்த்துக்கொள்ள வேலையாட்கள் இருக்கிறார்கள். மற்றபடி அவர்களுக்குள் என்ன கேள்வி எழுந்தாலும் பதில் சொல்ல வீட்டில்தான் நான்


எப்போதும் இருக்கிறேனே.


இன்னும் சொல்லப்போனால், குழந்தைகளின் பேச்சு எனக்கு ரொம்ப ரசிக்கிறது. என் குட்டிப்பெண், 'நீ ஏன் தாலி அணிவது இல்லை?’ என்று என்னைக் கேட்கிறாள். அதோடு இல்லாமல் 'தாலி அணிந்துதான் நான் கல்யாணம் செய்துகொள்வேன்!’ என்கிறாள். அவளுக்கு எங்கள் ஃபிளாட்டில் வசிக்கும் தமிழ்க்காரப் பெண் ஒருத்தி பயங்கரத் தோழி. அதனால்தான் அப்படி!''
''சமைப்பது உண்டா?''


''இல்லை. என் கணவர் வீட்டில் இருக்கும்போது, நான் கிச்சனில் இருப்பதைவிட, அவர் அருகே நான் இருப்பதுதான் அவருக் குப் பிடிக்கும்.''



விடைபெறும் தருணத்தில், ''தெற்குப் பக்கம் வந்தால், உங்கள் கலாசாரம், ரசனை எல்லாம் ரொம்ப அதிர்ச்சிகரமாய் இருக் கிறது!'' என்றார்.


''எங்களுக்கும் உங்கள் ஊர்ப் பக்கம் வந்தால் அப்படித்தான் தோன்றுகிறது!'' என்றோம்.


''அதற்கில்லை... அங்கெல்லாம் வந்தால் நாம் இந்தியாவில்தான் இருக்கிறோமா என்கிற அளவுக்கு எனக்கு ஆச்சர்யமாக இருக்கிறது. அண்மையில் கோயம்புத்தூருக்குப் போயிருந்தேன்... அங்கே பெண்கள் ரொம்பக் கட்டுப்பெட்டிகளாக இருந்தார்கள். இத்தனைக்கும் நான் பார்த்த பெண்களிடம் பணத்துக்கு ஒன்றும் குறைச்சல் இல்லை!'' என்றார்.



''பெண்களின் சுதந்திரத்தைப் பணமா நிர்ணயிக்கிறது?'' என்று நாம் கேட்க...
''அதுவும் சரிதான். பெண் தன் நிலையில் தெளிவாக இருந்தால் பொருளாதாரம் அவளை எந்தவிதத்திலும் கட்டுப்படுத்த முடியாதுதான். ஆனால், தெளிவான புத்திசாலிப் பெண்கள் சந்தேகத்துக்கிடமானவர்கள் என்பதுதான் இந்திய லாஜிக் ஆயிற்றே!'' என்றார் ஷோபாடே அழுத்தமான புன்னகையோடு.



- சுபா வெங்கட்

நன்றி - விகடன்


 https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgjqO65j9XS7wQjKwRsEfcnd3qkrP93HvZl7eBArC8aDcpcghcMIqXRToO4Ge4ZtHMQ1iaqKAKOWpCdc8OEYwYZE20fvonHLUAjRoyKr9DDfrNABLle3_J4vHThpIOxaiS4XIYoRGe_3hid/s1600/shobha+de.jpg

0 comments: