Saturday, December 29, 2012

உயர்ந்த மனிதன் -அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே பாடல் உருவான விதம் - டி எம் எஸ் பேட்டி

மீட்டருக்கு மேட்டர் - 6

பல்லவிக்குச் சன்மானம் பத்து ரூபாய்!

எம்.எஸ்.விஸ்வநாதன்

‘உயர்ந்த மனிதன்படத்தில், ‘அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே நண்பனே... நண்பனேஎன்ற சூப்பர் ஹிட் பாடலை யாரால் மறக்க முடியும்? அந்தப் பாடல் உருவானதற்குப் பின்னால் ஒரு சுவாரசிய கதை இருக்கிறது.
ஏவி.எம். நிறுவனம் அந்தப் படத்தைத் தயாரித்துக் கொண்டு இருந்த போது, சென்னையில் பிரபல ஹாலிவுட் நடிகர் ரெக்ஸ் ஹாரிசன் நடித்த படம் ஒன்று ஓடிக் கொண்டு இருந்தது. அந்தப் படத்தில் ஒரு பாட்டு இடம் பெற்றிருந்தது. கால்ஃப் மைதானத்தில் ரெக்ஸ் ஹாரிசன் கையில் ஒரு வாக்கிங் ஸ்டிக்கை வைத்துக் கொண்டு, அதனை ஸ்டைலாகச் சுழற்றிக் கொண்டே நடந்துவருவார்



 அந்தப் பாடலின் நடுநடுவே சில வசனங்களும் இடம் பெற்றிருக்கும். அதே மாதிரியான ஒரு பாட்டு, உயர்ந்த மனிதன் படத்திலும் இடம்பெற வேண்டும் என்று ஏவி.எம்.மில் விரும்பினார்கள். எனவே, கதையிலும் அதைப் போலவே ஒரு பாடல் காட்சிக்கான சிச்சுவேஷன் உருவாக்கப்பட்டது. அந்தப் பாட்டுக்கான டியூனைப் போடுவதற்கு முன்னால், ‘அந்த ஹாலிவுட் படத்தை ஒரு தடவைப் பார்த்துவிடுங்கள்!’ என்று soன்னார்கள். நானும் பார்த்தேன்.
அப்புறம் சிச்சுவேஷனுக்கு சுலபமாக டியூன் போட்டுக் கொடுத்து விட்டேன். பாடலும் எழுதப்பட்டுவிட்டது. அதைப் பாடும்போது சிவாஜி, மைதானத்தில் ஓடி வந்த களைப்பில் மூச்சு வாங்க, தமது நண்பரைப் பார்த்து அந்தப் பாட்டைப் பாடுவார். டி.எம். சௌந்தரராஜன், அந்தப் பாடல் ரெகார்டிங்குக்காக ஸ்டூடியோவுக்கு வந்தபோது, சிச்சுவேஷனைச் சொல்லி, பாடலையும் கொடுத்தாகி விட்டது. அவர், ஸ்டூடியோ வளாகத்திலேயே சில சுற்றுகள் ஓடிவந்து, மூச்சிரைக்க, அந்தப் பாடலைப் பாடினார். ‘அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே...’ பாடல் மிகவும் புதுமையாக இருப்பதாகப் பலரும் பாராட்டினார்கள்.

இயக்குனர் பீம்சிங்கின்வரிசைப் படங்கள் தமிழ் சினிமா உலகத்தில் மிகப்பெரிய வெற்றி பெற்றவை. அவரது ஒவ்வொரு படத்திலும், ஓர் அற்புதமான தத்துவப் பாடல் இடம்பெறும். அவற்றை டி.எம்.எஸ்.தான் பாடுவார். அந்தப் பாட்டுக்களைத் தாமே பாடுவதுபோல சிவாஜி அற்புதமாக லிப் மூவ்மென்ட் கொடுத்து அசத்துவார். பீம்சிங் இயக்கிய படங்களில் ஒன்று பழனி. அதில் சிவாஜிக்காக ஒரு தத்துவப் பாட்டு.
கவிதா ஓட்டலில் நானும், கவிஞர் கண்ணதாசனும் இன்னும் சில நண்பர்களும் உட்கார்ந்து கொண்டிருந்தோம். தத்துவப் பாடல் என்றால், கவிஞர் பாட்டை எழுதிக் கொடுத்த பிறகுதான் நான் டியூன் போடுவது வழக்கம். எனவே, சிச்சுவேஷனுக்குத் தகுந்தாற்போல கவிஞர் ஒரு நல்ல பல்லவி எழுதித் தருவதற்காகக் காத்துக் கொண்டிருந்தேன். ஏனோ அன்றைக்குப் பார்த்து நல்ல பல்லவி அமையவில்லை. அந்தச் சமயம் பார்த்து ஒருவர் விலை உயர்ந்த விஸ்கி பாட்டில் ஒன்றை அங்கே எடுத்துக் கொண்டு வந்தார். அது கண்ணதாசனின் கண்ணில் பட்டுவிட்டது. அவ்வளவுதான். பல்லவி எழுதுகிற வேலைக்கு தற்காலிக இடைவேளை.
கவிஞர் அந்த ஃபாரின் சரக்கின் விலை என்ன என்று கேட்க, அந்த மனிதர் ஆயிரத்து ஐநூறு ரூபாய் என்றார். அந்த பாட்டில், கைமாறி கவிஞரின் கைக்கு வந்தால் ஒழிய, பல்லவி பிறக்காது என்பது எனக்குப் புரிந்து விட்டது. சரி நடப்பது நடக்கட்டும் என நான் பொறுமையாக அங்கே நடப்பதை வேடிக்கை பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருந்தேன்.

என் பக்கம் திரும்பிய கவிஞர், ‘விசு! எவ்வளவு தேறும் உன்னிடம்?’ என்று கேட்டார். ‘என்னிக்கு கவிஞரே நான் கையில பணம் வெச்சிருந்திருக்கேன்? வாங்குற பணத்தை எல்லாம் அம்மா கையில் கொடுப்பதுதான் பழக்கம் என்பது உங்களுக்குத் தெரியாதா என்ன?’ என்று சொன்னேன். அங்கே இருந்த மற்றவர்களிடம் பணம் புரட்டி, அந்த விஸ்கி பாட்டிலை வாங்கிவிட முடியுமா? என்று கவிஞர் முயற்சித்தார். ஐநூறோ, அறுநூறோ தேறியது. ‘மிச்சத்துக்கு என்ன செய்ய?’ என்று கேட்டுவிட்டு, அடுத்தடுத்து யார் யாருக்கோ போன் போட்டுப் பேசினார். நேரம் ஆகிக் கொண்டிருந்ததே ஒழிய, பணம் புரட்ட முடியவில்லை; ஆகவே பல்லவியையும் எழுதி வாங்க முடியவில்லை.
கவிஞர் தன் கண்ணெதிரே இருக்கிற விஸ்கி, கைக்கு எட்டவில்லையே என்று மிக மனம் நொந்து போனார். கடைசியில் தமது அண்ணன் .எல். சீனிவாசனுக்கு போன் செய்தார். பணம் கேட்டுப் பார்த்தார். அண்ணனோ தம்பியைத் திட்டிவிட்டு, கேட்ட பணத்தைக் கொடுக்காமல், கேட்காத அறிவுரையை மட்டும் நிறைய கொடுத்தார். போனில் கவிஞர் கோபமாக அண்ணனோடு வாக்குவாதம் செய்யவில்லை என்றாலும், அவரது கோபத்தை அவருடைய முகமே வெளிப்படுத்தியது. போனை வைத்துவிட்டு வந்தவர், ‘இந்தா பல்லவி!’ என்றார். அடுத்து அவருடைய வாயிலிருந்து வார்த்தைகள் வந்து விழுந்தன.
அண்ணன் என்னடா...தம்பி என்னடா
அவசரமான உலகத்திலே

இதைச் சொல்லும்போதே, எனக்கு மது அருந்துவது குறித்து கவிஞர் இன்னொரு பாடல் எழுதிய சம்பவமும் நினைவுக்கு வருகிறது. சிவாஜி நடித்தநீதிபடத்துக்குப் பாட்டு கம்போஸ் செய்ய உட்கார்ந்தோம். எனக்குக் கூட அவ்வப்போது சில சமயங்களில் பாடல் வரிகள் தானாகத் தோன்றும், அவற்றில் சில மிக நன்றாக அமைந்துவிடும்.  


அவற்றை தம் ஸ்டைலில் பாட்டில் புகுத்திவிடுவார் கவிஞர். இது அப்படிப்பட்ட ஒரு சம்பவம். நான் ஒரு டியூனைப் போட்டுக் காட்டி, அதற்கு ஒரு பல்லவியையும் சொன்னேன். நான் சொன்ன பல்லவி: ‘இன்று முதல் குடிக்கமாட்டேன் சத்தியமடி தங்கம்; இன்னிக்கு ராத்திரிக்குத் தூங்கவேண்டும் ஊத்திக்கிறேன் கொஞ்சம்...’
நான் சொன்ன பல்லவியைக் கேட்டு, ஆச்சர்யப்பட்ட கவிஞர் உடனே ஒரு பத்து ரூபாய் நோட்டை எடுத்துக் கொடுத்து, ‘உன் பல்லவிக்கு இந்தா சன்மானம்என்றார். ஆனால் நான் கைநீட்டி, அந்த ரூபாய் நோட்டை வாங்கப் போனபோது, சட்டென்று பின்னுக்கு இழுத்துக் கொண்டார்.



 ‘நீ சொன்னது நல்லாத்தான் இருந்தது; ஆனா ஒரு சின்ன திருத்தம். எந்தக் குடிகாரனும் இன்னியில இருந்து குடிக்க மாட்டேன்னு சொல்ல மாட்டான்; நாளையிலிருந்து நான் குடிக்க மாட்டேன் என்றுதான் சத்தியம் பண்ணுவான். நீ சொன்ன பல்லவியில தப்பு இருக்கு; அதனால உனக்கு பணம் கிடையாதுஎன்றார். பாட்டின் பல்லவிநாளை முதல் குடிக்க மாட்டேன்என்று மாறியது.
இசை ஆர்வம் காரணமாக தியேட்டரில் பாட்டுக் கேட்டுக்கொண்டே, வடை, முறுக்கு வியாபாரம் செய்வது விஸ்வநாதனுக்குப் பிடித்திருந்தாலும், அது வெகுநாட்களுக்கு நீடிக்கவில்லை.  



கண்ணனூரில் இசைப்பள்ளி நடத்தி வந்த நீலகண்ட பாகவதர், விஸ்வ நாதனின் தாத்தாவுக்கு நண்பர் என்பதால், தியேட்டரில் வடை விற்றுக் கொண்டிருந்த விஸ்வநாதனைப் பார்த்து




 ‘நீ இங்கே என்ன செய்து கொண்டிருக்கிறாய்?’ என்று ஆரம்பித்து, கேள்வி மேல் கேள்வி கேட்க, விஸ்வநாதன் எதையும் மறைக்காமல், ‘தனக்கு ஸ்கூலுக்குப் போவதைவிட சங்கீதம் கற்றுக் கொள்ளத் தான் ஆசை; ஆனால் உங்களுக்கு மாசம் மூன்று ரூபாய் ஃபீஸ் கொடுக்கும் படியான பொருளாதாரச் சூழ்நிலையில் குடும்பம் இல்லைஎன்பதைச் சொன்னதும், பாகவதர்



அப்படியா? நீ என் ஸ்கூலில் வேலை செய்யும் பையனாகச் சேர்ந்திடுஎன்றார். எட்டு வயசு விஸ்வநாதன் வேறு எதையும் பற்றிச் சிந்திக்காமல், பாகவதர் இசைப் பள்ளியில் வேலை செய்ய சம்மதித்தான்.

நீலகண்ட பாகவதருக்குக் கூடவே இருந்து பணிவிடைகள் செய்வது, அவரது அறையையும், வகுப்பறையையும் சுத்தம் செய்வது, இசைக்கருவிகளைத் துடைத்து வைத்துப் பராமரிப்பது போன்ற வேலைகளை ஆர்வத்துடன் செய்ததோடு, எட்ட நின்று கவனித்து, தமது இசை ஞானத்தையும் வளர்த்துக் கொண்டான்



 அந்த வருடம் விஜயதசமி. அதிகாலையில் எழுந்து இசைக் கருவிகளைத் துடைத்து, பொட்டு வைத்து, பூஜைக்குத் தயார். அக்கம் பக்கத்தில் யாருமில்லை என்ற எண்ணத்தில், ஹார்மோனியத்தை எடுத்து வைத்துக் கொண்டு, பய பக்தியோடு வணங்கி விட்டு, விரல்கள் ஹார்மோனியத்தில் விளையாட, வா பைரவி ராகத்தில் ஒரு பாட்டைப் பாடியது. ஆனால், அந்த நேரத்தில், நீலகண்ட பாகவதர் அங்கே இருந்தார்.



 விஸ்வநாதனின் திறமையில் சொக்கிப் போனார். அப்படியே விஸ்வநாதனைக் கட்டியணைத்து உச்சிமோய்ந்தார். ‘நீ முறையா சங்கீதம் கத்துண்டு, கச்சேரி பண்ணற அளவுக்கு உசரணும்என வாழ்த்தினார். விஸ்வநாதன், நீலகண்ட பாகவதரது மனம் கவர்ந்த சிஷ்யன் ஆனான்.
- ராணி மைந்தன்
(மீட்டர் நீளும்)


நன்றி - கல்கி 

0 comments: