Thursday, December 27, 2012

டெல்லி கூட்டத்தில் ஜெ அவமதிக்கப்பட்டாரா? மக்கள் கருத்து




தமிழ்நாட்டை மத்திய அரசு வஞ்சிக்கிறது: டெல்லி கூட்டத்தில் ஜெ. குற்றச்சாட்டு 

புதுடெல்லி: தமிழகத்தின் சிறிய கோரிக்கையை கூட மத்திய அரசு ஏற்கவில்லை என்றும், தமிழ்நாட்டை மத்திய அரசு வஞ்சிப்பதாகவும் தேசிய வளர்ச்சி கவுன்சில் கூட்டத்தில் முதலமைச்சர் ஜெயலலிதா குற்றம் சாட்டினார்.

டெல்லியில் இன்று பிரதமர் மன்மோகன் சிங் தலைமயில் நடைபெற்ற தேசிய வளர்ச்சி கவுன்சில் கூட்டத்தில், அனைத்து முதலமைச்சர்களுக்கும் 10 நிமிடங்கள் மட்டுமே பேச அனுமதி வழங்கப்பட்டது.

இதனால் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு 10 நிமிடம் மட்டுமே வழங்கபட்டது. இதனால் அவர் கூட்டத்திலிருந்து வெளி நடப்பு செய்தார்.

இக்கூட்டத்தில் ஜெயலலிதா பேசுவதற்கு தயாரிக்கப்பட்ட உரை செய்தியாளர்களுக்கு வழங்கப்பட்டது. அதன் சுருக்கம் வருமாறு: 


கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு நடந்த கூட்டத்தில் ஏராளமான முதலமைச்சர்கள் கலந்து கொண்டனர். அப்போது 12 ஆவது ஐந்தாண்டு திட்டம் குறித்த மதிப்புமிக்க நல்ல பயனுள்ள திட்டங்களை நான் எடுத்துரைத்தேன். அதன் அடிப்டையில் இத்திட்டம் 14 மாதங்களுக்கு பிறகு இறுதி வடிவம் பெற்றுள்ளது.

கடந்த தேசிய வளர்ச்சி கவுன்சில் கூட்டத்தில் தெரிவித்த குறைந்த பட்ச கருத்துக்களாவது இதில் இடம் பெற்றிருக்கும் என நான் நம்புகிறேன். திருத்தப்படாத திட்ட நகலை படித்த போது, அதில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளின் மீது ஜனநாயக விரோத அணுகுமுறைகள் இருப்பது தெரிய வருகிறது.

வறுமையை குறைக்க வேண்டும் என்ற கருத்தில் மத்திய அரசு மாறுபட்டு இருப்பதாக கருதுகிறோம். ஒவ்வொரு ஐந்தாண்டு திட்டத்தின் போதும் வறுமை மற்றும் சமத்துவமற்ற நிலை அதிகரித்து கொண்டே வருகிறது. அதனால் ஏற்படும் விலைவாசி உயர்வினால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.

கடந்த ஆண்டு நான் முதலமைச்சராக பொறுப்பேற்றதில் இருந்து இதுவரை பல தடவை மாநில தேவைகள் குறித்து நினைவூட்டினாலும் அதன் மீது எந்த நடவடிக்கையும் இல்லை. தமிழ்நாட்டை மட்டும் குறிப்பாக மத்திய அரசு கடுமையாக வஞ்சிக்கிறது. எந்த ஒரு சட்ட பூர்வமான கோரிக்கையும் தொடக்கத்திலேயே மறுக்கப்பட்டு ஒதுக்கப்படுகிறது. அது குறித்து மறு படியும் கோரிக்கை விடுத்தாலும் மத்திய அரசு கண்டு கொள்வதில்லை.

முதலீடுகளை ஊக்கு விக்க தமிழ்நாட்டில் கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகிறது. விமான நிலையங்கள், மெட்ரோ-ரயில் மற்றும் சாலை திட்டங்களுக்கு மத்திய அரசு துறை நிலங்கள் வழங்குவதில் தாமதப்படுத்துகிறது.அதனால் திட்ட மதிப்பீடும் அதிகரிக்கிறது. காவிரி நதி நீர் பிரச்னையில் இறுதி தீர்ப்பை அரசிதழில் வெளியிட்டு தமிழ்நாட்டுக்குரிய உரிமையை பெற்று தருவதில் முழு திறமையற்று மத்திய அரசு விளங்குகிறது.

கடல் எல்லையில் தமிழக மீனவர்கள் தாக்கப்படுகிறார்கள். இதன் மூலம் நாட்டு மக்களை பாதுகாக்க மத்திய அரசு தவறிவிட்டது. தமிழகத்தின் மிக சிறிய கோரிக்கையான சென்னை நகருக்கு கேபிள் டிஜிட்டல் மயமாகும் திட்டத்துக்கு கூட உரிமம் வழங்குவதற்கு மறுக்கிறது. அது தொடர்ந்து பரிசீலனையில் உள்ளது. டிசம்பர் மாத இறுதிக்குள் சென்னை உள்ளிட்ட மெட்ரோ நகரங்களில் டி.வி. ஒளிபரப்பை டிஜிட்டல் மயமாக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இது குறித்து தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. பிரதமருக்கும், சம்பந்தப்பட்ட துறை மத்திய மந்திரிக்கும் இது குறித்து பல முறை தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்களுக்கு குறைந்த கட்டணத்தில் சேவை செய்து வருகிறது. இதற்கு டிஜிட்டல் உரிமை வழங்குவதில் தாமதம் செய்வதன் மூலம் மத்தியில் ஆளும் கூட்டணியில் ஈடுபட்டுள்ள ஒரு கட்சியின் குடும்ப டி.வி. நெட்வொர்க்கில் வாடிக்கையாளர்கள் அதிக அளவில் சேர வழிவகுக்கும். கடந்த முறை நடந்த தேசிய கவுன்சில் கூட்டத்தில் 12-வது ஐந்தாண்டு திட்டத்தில் வளர்ச்சி விகிதம் 2 இலக்கமாக இருக்க வேண்டும் என்ற எனது கருத்தை வலியுறுத் தியிருந்தேன்.

ஆனால் வரைவு திட்டத்தை படித்த போது நான் ஏமாற்றம் அடைந்தேன். அதில் 9 சதவீதமாக வளர்ச்சி விகிதம் குறைக்கப்பட்டுள்ளது. எனது தலைமையிலான தமிழ்நாட்டில் வளர்ச்சி விகிதம் 12-வது ஐந்தாண்டு திட்டத்தில் 2 இலக்கு வளர்ச்சி விகிதமாக இருக்கும்.

நான் ஆட்சி பொறுப்பேற்ற பிறகு 11-வது ஐந்தாண்டு திட்டத்தில் தமிழ் நாட்டின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 7.4 சதவீதமாக அதிகரித்துள்ளது. இதற்கு முந்தைய அரசின் செயல்பாடு இன்மையால் வளர்ச்சி விகிதம் குறைந்து இருந்தது.தற்போது தமிழ்நாட்டின் வளர்ச்சி விகிதம் தேசிய வளர்ச்சி விகிதத்தை விட அதிகமாகும்.

பயிருக்கு நீர் இன்றியமையாதது. மாநிலங்களுக்கு இடையேயான காவிரி நீர், முல்லைப் பெரியாறு, பெண்ணையாறு, அட்டப்பாடி அணை உள்ளிட்ட நீர் பகீர்மானம் பற்றி நாங்கள் மீண்டும் மீண்டும் மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்.

ஆனால் இதுவரை எந்த நீதியும் கிடைக்கவில்லை. மத்திய அரசின் ஆதரவும், தமிழ்நாட்டுக்கு கிடைக்க வில்லை. 12 ஆவது ஐந்தாண்டு திட்டத்திலும், இந்த நதிநீர் பங்கீடு தொடர்பாக எந்த முக்கியத்துவமும் தரப்பட வில்லை என்பதுதான் ஆச்சரியமூட்டும் விஷயம். தண்ணீர் விலை மதிப்பற்றது என்றாலும் அதை எப்போதும் வணிக ரீதியாக பார்க்கக்கூடாது.

தமிழக மீனவர்கள் இலங்கை கப்பல் படையினரால்  தாக்கப்பட்டு பலியாகும் நிலை நீடித்து வருகிறது. இதுதொடர்பாக மத்திய அரசிடம் பலமுறை வலியுறுத்தி உள்ளோம். இந்த விஷயத்தில் மத்திய அரசின் ஆதரவை எதிர்பார்க்கிறோம்" என்றார்.

பேச நேரம் ஒதுக்காததால் தேசிய வளர்ச்சிக்குழு கூட்டத்திலிருந்து ஜெ. வெளிநடப்பு ! 

Posted Date : 11:39 (27/12/2012)Last updated : 12:38 (27/12/2012)
புதுடெல்லி: பிரதமர் தலைமையில் டெல்லியில் இன்று நடைபெற்று வரும் தேசிய வளர்ச்சிக் கவுன்சில்  கூட்டத்தில் பேச தமக்கு போதிய நேரம் ஒதுக்காததை கண்டித்து முதலமைச்சர் ஜெயலலிதா கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்தார்.
கூட்டத்தில் முதல்வர்கள் தங்கள் மாநில பிரச்னைகள் குறித்து பேச வெறும் 10 நிமிடங்கள் மட்டுமே ஒதுக்கப்பட்டதால், கூட்டத்தில் இருந்து தமிழக முதல்வர் ஜெயலலிதா வெளிநடப்பு செய்தார்.

பின்னர் வெளியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 10 நிமிடங்கள் மட்டுமே தம்மை பேச அனுமதித்ததாகவும், அதன் பின்னர் மணி அடித்து  பேச்சை நிறுத்துமாறு கூறி தம்மை அவமதித்துவிட்டதாகவும்  குற்றம் சாட்டினார் . 


இது தமக்கு மட்டுமல்ல;தமிழ்நாட்டிற்கும்,தமிழக மக்களுக்கும் ஏற்பட்ட அவமதிப்பு என்றும் அவர் கூறினார்.

தமக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் தமிழ்நாட்டின் தேவைகள் குறித்து தம்மால் முழுமையாக பேச முடியவில்லை என்றும், தாம் பேச நினைத்ததில் மூன்றில் ஒருபங்கு மட்டுமே பேசியதாகவும் ஜெயலலிதா தெரிவித்தார். 

மாநிலத்தின் பிரச்னையை எடுத்துரைக்க போதிய கால அவகாசம் வழங்க முடியாது என்றால்,   மாநில முதல்வர்களை ஏன் அழைக்க வேண்டும்  என்றும் அவர் மத்திய அரசுக்கு அவர் காட்டமாக கேள்வி எழுப்பினார்




 மக்கள் கருத்து




ஒரு கூட்டம் இங்கே வந்து ஜெயா ஒரு அகம்பாவம் பிடித்தவர், கோவத்தின் வெளிப்பாடு தான் இது என்று கூவ ஆரம்பிக்கும். அவர்களுக்கும் நமது தானைய தலைவர் கருணாவுக்கும் ஒரு கேள்வி
கடந்த 13 ஆண்டுகளாக மத்திய அரசில் திமுக அங்கம், மத்திய அரசை தாங்கிப் பிடிப்பதே திமுகதான். இதனை தவிர மத்திய அரசில் முக்கிய அமைச்சர்கள் தமிழக காங்கிரஸ் கட்சியினர். இவர்களால் தமிழகத்துக்கு கிடைத்த பயன் என்ன?
1. முல்லை பெரியாறு சாதகமாக தீர்ப்பு வந்தும் இன்னும் அதன் பலன் கேரளாவுக்குத் தான்
2. கேரளாவில் மீனவன் சுடப் பட்டால் உடனே தண்டனை, இங்கே பல முறை நடந்தும் கடிதத்துக்கு பதில் கூட எழுதாத மத்திய அரசு.
3. காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு வந்து 5 வருடங்கள் ஆகின்றன. இன்னும் அது அரசு இதழில் வரவில்லை. கருணா இதற்காக செய்த நடவடிக்கை என்ன? திமுக ஆதரவு இல்லை என்றால் மத்திய அரசே இல்லை என்கிற நிலையில் இருந்து இன்று குடியரசு தலைவரே வீட்டுக்கு வந்து சந்திக்கும் அளவுக்கு மத்திய அரசை தாங்கி பிடித்ததன் பலன் தான் என்ன?
4. காவிரி நீருக்காக மத்திய அரசு கைவிட்ட பின்னர், நீதிமன்றத்தை நாடி வெற்றித் தீர்ப்பும் வாங்கி அதனை செயல் படுத்த கர்நாடக மறுத்த நிலையில் நாடு நிலையாக செயல் படவேண்டிய மத்திய அரசு வேடிக்கை ஒரு துரும்பு கூட அசைக்காதது ஏன்? மத்திய அரசை திமுக இதற்காக கண்டிக்காதது ஏன்?
5. மத்திய தொகுப்பில் இருந்து மின்சாரம் வழங்க கட்டமைப்பு இல்லை (இனிமேலும் கட்டமைப்பு அமைக்கப் படாது) என்று சொல்லும் மத்திய அரசு தமிழகத்தில் உற்பத்தி ஆகும் மின்சாரத்தை முழுவதுமாக தமிழகத்துக்கே தர மறுப்பது என்? மின்சாரம் வெளியே செல்ல மட்டும் கட்டமைப்பு உள்ளதா? உள்ளே வர மட்டும் மின்சாரம் மறுக்குமா?
6. எத்தனை முறை தமிழக பிரச்சனைகளுக்காக திமுக தலைவர் சோனியாவை சந்தித்திருக்கிறார்? தினம் ஒரு அறிக்கை விட்டு அதிமுக அரசை குறை சொல்வதை தவிர வேறு என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறார் மக்கள் பிரட்சைகளுக்காக?

மக்களின் அத்தியாவசிய பிரச்சனைகளுக்கு கூட செவி மடுக்காத மத்திய அரசு தமிழகத்துக்கு செய்யும் துரோகம் தான் மிக அதிகம். இதில் உச்ச கட்டம் காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை அரசிதழில் வெளியிட உச்ச நீதிமன்றமே சொல்லியும், உச்ச நீதிமன்றத்தில் இந்த மாதத்தில் வெளியிடப் படும் என்று மத்திய அரசே வாக்குறுதி கொடுத்தும் இன்னும் நிறைவேற்ற தயங்குவது. இப்போது கர்நாடக இதனை வெளியிட மறுப்பு தெருவிப்பதும், மத்திய அரசே நடுவர் மன்ற தீர்ப்பை மாற்ற செய்யும் சதி.

காங்கிரஸ் கட்சியின் எதிரியான பாஜக ஆளும் கர்நாடக மத்திய அரசால் பெற்ற நம்னைகளை விட திமுக அங்கம் வகிக்கும் மத்திய அரசு தமிழகத்துக்கு செய்யும் துரோகம் தான் அதிகம். இதில் முக்கிய பங்கு கருணாவுக்கு தான். மறந்தும் மத்திய அரசு தமிழகத்துக்கு எதுவும் செய்துவிடக் கூடாது என்பது இட்ட கட்டளை. நாளொன்றும் அதிமுக அரசை குறை சொல்லியே அறிக்கை விடும் கருணா மத்திய அரசின் துரோகம் மட்டும் கண்ணுக்கு தெரியாது. சோனியாவின் பிறந்த நாளுக்கு முதல் ஆளாக பிறந்த நாள் வாழ்த்து சொல்ல மட்டுமே தெரியும். இதன் மூலம் தமிழகத்துக்கு நல்ல நன்மை கிடைக்கும்.

வழக்கம் போல உள்ளூர் பிரச்சனைக்கு நாடாளுமன்ற தேர்தலில் பதில் சொல்லும் தமிழக மக்கள் பிரச்சனைகளின் மூலத்தை அறியாமல் மீண்டும் இந்த கூட்டத்தை தான் தேர்ந்தெடுக்கப் போகிறார்கள்!!



2. இதுல அவமதிப்பு என்ன இருக்கு. ஒருவருக்கு எவ்வளவு நேரம் பேச அனுமதி என்பது ஏற்கன்வே முடிவு செய்த ஒன்றாகத்தானே இருக்கும்.
மற்ற முதல்வர்களுக்கு எவ்வளவு நேரம் ஒதுக்கினார்கள். அதே 10 நிமிடம் தானே. பின்ன இதில் அவமதிப்பு எங்கிருந்து வந்ததோ?

ஏற்கனவே நான்கு தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்து அது தள்ளுபடி செய்யப்பட்டவுடன், அதற்கு மத்திய அரசும், மு,க.வும் தான் காரணம் என்று பொய் பிரச்சாரம் செய்தவராயிற்றே, இவர் சொல்வதை நம்பலாமா?



3. அது ஒண்ணும் தமிழக சட்டசபையல்ல. நீங்கள் வந்ததும் அனைவரும் எழுந்து நின்று கை கூப்பி 45 சாய் கோணத்தில் நிற்க. மாநிலத்தின் தேவையறிந்து பேசி இருக்க வேண்டும் 10 நிமிடத்தில். மற்ற மாநில முதல்வர்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரம்தானே உங்களுக்கும். அல்லது அனைவரையும் 1 மணி நேரம் பேசவிட்டு உங்களுக்கு மட்டும் 10 நிமிடம் கொடுத்து மணியடித்தார்களா?. நமது அரசியல் சட்டத்தின்படி மத்திய அரசை அண்டித்தான் பிழைக்க வேண்டும்.கிராமத்தில் ஒரு பழமொழி உண்டு "ஆடி கறக்க வேண்டிய மாட்டை ஆடி கறக்க வேண்டும். பாடி கறக்க வேண்டிய மாட்டை பாடி கறக்க வேண்டும்". நமக்கு தேவை பால். அதை பெற எதை செய்தால் என்ன? முறுக்கிட்டு திரிந்தால் 16 மணிநேர மின்வெட்டு 24 மணிநேரமாகிவிடும்.




4.
அழுதால் தான் பால்! உதாசீனம் செய்தால் பாழ் தான்!

தேசிய வளர்சிக்குழு கூட்டட்தில் நம் முதல்வர் அம்மா அவர்கள் கோவிச்சுகிட்டு வெளியேறினார். அங்க கிட்ட தட்ட யூனியன் பிரதேசங்கள் உள்ளிட்ட 30க்கும் மேற்ப்பட்ட முதல்வர்கள் இருக்கும் நிலையில் பத்து நிமிடம் மட்டுமே பேச அனுமதி அளிக்கப்படும். இது நடைமுறை. பொதுவாக இது போன்ற கூட்டங்களுக்கு கலைஞர் போகும் போது தமிழக தேவைகளை ஒரு மணி நேர பேச்சாக தலைமைசெயலரை விட்டு ஒரு ட்ராப்ட் தயார் செய்து கொண்டு போவதும், பத்து நிமிடத்தில் அழகாய் தலைப்பு செய்திகளாக சொல்லி "இதன் மீதி விபரங்கள் இந்த பெட்டிஷனில் இருக்கு" என கூட்டத்தில் சமர்ப்பிப்பதும், அப்படி சமர்பிக்கும் போது அது "ரெக்கார்டட் டாகுமெண்டாக" ஆவதும் இயல்பு. இது ஒரு அப்பட்டமான புத்திசாலித்தனம்.

இந்த விபரங்கள் கூட தெரியாத அம்மையார் அவர்கள் முதல்வர் பதவியில் இருந்து கொண்டு தமிழக தேவைகளை சொல்லாமல் அல்லது ரெக்கார்ட் செய்யாமல் வந்தமை குறித்து நாம் வெட்கப்பட வேண்டும்! "அம்மா கோவக்காரங்க" என சொன்னா நமக்கு பெருமை இல்லை. அங்க வந்த பல முதல்வர்களும் "ஹய்யே, சரியான லூசா இருக்கே இந்தம்மா"ன்னு சக முதல்வர்களிடம் முனுமுனுத்து இருப்பர். இது ஒட்டுமொத்த தமிழர்களின் அவமானம்! இதைக்கூட "அம்மாவின் அதிரடி" என தினமலத்தில் நாளை போடுவானுங்க! "ஆமாம் ஆமாம்"னு இணைய போராளிகள் குதிப்பாங்க! பேசாம 21.12.2012ல உலகம் அழிஞ்சு தொலைச்சி இருக்கலாம்!



5. இது என்ன கூட்டம் என்று கூட தெரியாமல் பலர் கருத்து சொல்கிறார்கள். 10 நிமிட நேரம் என்கிற நடைமுறை இன்றைய கூட்டத்தில் மட்டுமே அறிமுகப் படுத்தப் பட்டது. இதற்க்கு முன்னர் இதே கூட்டத்துக்கு முதல்வர்களுக்கு ஒதுக்கப் பட்ட நேரம் 30 நிமிடங்கள். 5 ஆண்டுகளுக்காக நிதி ஒதுக்கீடு மற்றும் திட்ட கூட்டத்துக்கு 30 நிமிடம் கூட பேசாம என்ன திட்டம் போடப் போறாங்க? ஓர் ஆண்டுக்கு போடப் படும் பட்ஜெட் கூட்டத் தொடர் நாள் கணக்கில் நடைபெறும் பொது 5 ஆண்டு திட்டடக் கூட்டம் 10 நிமிடம் போதும்? 5 வருட செயல் திட்டம் பற்றி ஒரு மாநில முதல்வர் சொல்ல 10 நிமிடம் போதும் என்றால் இந்தக் கூட்டமே தேவை இல்லை. வழக்கம் போல இவர்கள் திட்டத்தை அறிக்கையாகவே வெளியிடலாம். தமிழகத்துக்கும் ஒன்னும் கிடைக்கப் போவது இல்லை.

வழக்கம் போல கருணாவின் துரோகத்துக்கு பதில் சொல்லாமல் ஜெயாவையே திட்டுவோம். அப்புறம் என்ன காங்கிரஸ் அரசு மீண்டும் அமைந்து தமிழன் நீருக்கு கர்நாடகாவையும் உயிருக்கும் சிங்களனையும் எதிர்பாத்து இருக்கட்டும். உள்ளூரில் அறிக்கை மட்டுமே விட்டுக் கொண்டு இணக்கமான மத்திய அரசில் வளம் கொழிக்கும் துறையை மிரட்டி வாங்குவோம்.
 
ஜெயலலிதா புகாருக்கு மத்திய அரசு பதில்! 
 
 இந்நிலையில் ஜெயலலிதாவின் இந்த குற்றச்சாட்டை மத்திய அரசு மறுத்துள்ளது.இது  தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர்  ராஜீவ்சுக்லா,"தேசிய வளர்ச்சி கூட்டத்தில் பேசுவதற்கு ஒவ்வொரு மாநில  முதலமைச்சருக்கும் தலா 10 நிமிடம் அவகாசம் வழங்கப்பட்டது. கூட்டத்தில் பேச  வேண்டியவர்கள் எண்ணிக்கை அதிக அளவில் இருந்ததால் இப்படி நேர அளவு நிர்ணயம்  செய்து ஏற்பாடு செய்யப்பட்டது.

காங்கிரஸ் ஆளும் மாநில முதல்வர்களுக்கும்,
 
காங்கிரஸ் அல்லாத மாநில  முதல்வர்களுக்கும் ஒரே மாதிரிதான் நேர அவகாசம் கொடுக்கப்பட்டது. காங்கிரஸ் மாநில  முதல்வர்கள் 10 நிமிடம் கடந்து பேசிய போதும் மணி ஒலிக்கப்பட்டது.எனவே இதில்  எப்படி அவமானம் செய்து விட்டதாக சொல்ல முடியும்?

தேசிய வளர்ச்சி கவுன்சில் கூட்டத்தை பயன்படுத்தி மாநில முதல்வர்கள், தங்கள்  மாநிலத்துக்கு வேண்டியதை பெற்று கொள்ளும் வாய்ப்பை பெறுகிறார்கள்.இத்தகைய  கூட்டத்தில் முதலமைச்சர் ஜெயலலிதா வெளிநடப்பு செய்தது சரியானது அல்ல.  இதுவரை எந்த முதல்வரும் இப்படி குற்றம் சாட்டியதில்லை" என்று கூறினார்.

டெல்லியிலே ஜனநாயகம் இல்லை என்கிறார்கள்...தமிழகத்தில் இருக்கிறதா?: கருணாநிதி

சென்னை: தூத்துக்குடியில் ஸ்டாலின் பங்கேற்கும் கூட்டத்திற்கு அனுமதி  மறுக்கப்பட்டு,மேடை மற்றும் பந்தல் அகற்றப்பட்டுள்ளது குறித்து கருத்து தெரிவித்துள்ள   கருணாநிதி,தமிழகத்தில் ஜனநாயகம் இருக்கிறதா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

இன்று சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த திமுக தலைவர் கருணாநிதி  கூறியதாவது:

திமுகப் பொருளாளர் மு.க. ஸ்டாலின் கலந்து கொள்ளும் - நாளை நடைபெறவுள்ள  தூத்துக்குடி செயல் வீரர்கள் கூட்டத்திற்கு ஏற்கனவே அனுமதி கொடுத்து விட்டு தற்போது  அனுமதியை மறுத்து அமைக்கப்பட்ட மேடை, பந்தல்களைப் பிரிப்பதைப் பற்றி தங்கள்  கருத்து என்ன?
 
 
 
 
 
ஜெயலலிதா கட்சியினர் டெல்லியிலே ஜனநாயகம் இல்லை என்கிறார்கள்.  ஆனால் தமிழ்நாட்டில் தூத்துக்குடியில் கூட்டத்திற்கு அனுமதி கொடுத்து விட்டு,  அதற்காக அதை நம்பி போடப்பட்ட பந்தலை எல்லாம் அரசுக் காவலர்கள் பிரிக்கிறார்கள்.  இந்த ஜனநாயகவாதிகள் தான் மத்திய அரசைப் பற்றி குறை கூறுகிறார்கள்,  கண்டிக்கிறார்கள், வேடிக்கையாக இருக்கிறது.

தமிழக அரசின் பல தேவைகளை மத்திய அரசு நிறைவேற்றவில்லை என்று  தேசிய வளர்ச்சிக் குழு கூட்டத்தில் ஜெயலலிதா பேசியிருக்கிறாரே? குறிப்பாக கேபிள்   டி.வி.க்கு உரிமம் தரவில்லை என்றெல்லாம் சொல்லியிருக்கிறாரே?
 
  அதிலே ஏதாவது விவகாரங்கள் இருக்கலாம். உண்மை என்ன என்பது  பற்றி முழு விவரம் தெரியாமல் பதில் சொல்ல முடியாது.
இவ்வாறு அவர் கூறினார்.



ஜெ. அவமதிக்கப்பட்டிருந்தால் கண்டிக்கத்தக்கது: கருணாநிதி
Posted Date : 14:19 (27/12/2012)Last updated : 14:19 (27/12/2012)
சென்னை: தேசிய வளர்ச்சி கவுன்சில் கூட்டத்தில் முதல்வர் ஜெயலலிதா  அவமதிக்கப்பட்டிருந்தால் கண்டிக்கத்தக்கது என்று திமுக தலைவர் கருணாநிதி  கூறியுள்ளார். 

டெல்லியில் 57 ஆவது தேசிய வளர்ச்சி கவுன்சில் கூட்டம் இன்று காலை பிரதமர்  மன்மோகன் சிங் தலைமையில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இக்கூட்டத்தில் பேச போதிய கால அவகாசம் வழங்கப்படாததை கண்டித்து தமிழக  முதல்வர் ஜெயலலிதா வெளிநடப்பு செய்தார்.10 நிமிடங்களுக்கு மட்டுமே தம்மை பேச  அனுமதித்து,அதன் பின்னர் பேச்சை நிறுத்துவதற்கான மணியை ஒலிக்கச் செய்து தம்மை  மத்திய அரசு அவமதித்து விட்டதாக அவர் குற்றம் சாட்டியிருந்தார். 



இந்நிலையில் சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய திமுக தலைவர்  கருணாநிதியிடம் இது குறித்து கேட்டபோது,தேசிய வளர்ச்சி கவுன்சில் கூட்டத்தில்  ஜெயலலிதா கூறுவதுபோன்று அவமதிக்கப்பட்டிருந்தால், அது கண்டிக்கத்தக்கது என்றார்.

பொதுவாக தேசிய வளர்ச்சிக் கவுன்சில் கூட்டத்தில் மாநில முதல்வர்களுக்கு 10  நிமிடங்கள் அல்லது அதற்கு மேல் பேச நேரம் ஒதுக்கப்படும் என்று கருணாநிதி மேலும்  கூறினார்.


நன்றி - விகடன்
+

0 comments: