Saturday, December 08, 2012

கமல் ஐடியா ஒர்க் அவுட் ஆகுமா? காமெடி கற்பனை

காமெடி எக்ஸ்பிரஸ் - 4

விஸ்வரூப குணலிங்கர் ஒர்க் அவுட் ஆகுமா?

லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்

அதிகாலையிலேயே ஸ்டீவன் ஸ்பீல் பர்கிடமிருந்து போன் கால் வருமென்று எதிர்பார்க்கவில்லை.
அமெரிக்கன் ஃபில்ம் மார்க்கெட்டில் பார்த்தபோதே மனுஷன் கொஞ்சம் பேஸ்தடித்த மாதிரி சுவரோரமாகபைப்புடன் திருட்டு தம் அடித்து கவலையுடன் நின்று கொண்டிருந்தார்.
பாவம், அவருக்கு என்ன கஷ்டமோ? ‘பாண்ட்படத்தோடு நம்பலிங்கன்படத்தை மோதவிடப் போகிறோமே, லிங்கனுக்கு கை கால் முறிந்து விடுமோ?’ என்ற கவலையாக இருக்கலாம். எதற்கும் ஒருஹலோசொல்லி வைப்போம், அடுத்த படத்துக்கு நம்மை கூப்பிட்டாலும் கூப்பிடலாம் என்று பிசினஸ் கார்டை அவரிடம் கொடுத்திருந்தேன்.
இப்போது அதிகாலையில் போன் அடிக்கிறது.
துள்ளி எழுந்தேன்.
சொல்லுங்ணா, எப்ப ஷூட்டிங் போறோம்? எனக்கு ஸ்க்ரிப்ட் தெரிய வேணாம், ரோல் தெரியவேணாம், சம்பளமே வேணாம், சாப்பாடு கூட வேணாம்" என்று ஆரம்பித்தவனை ஸ்டீவன் தடுத்து நிறுத்தினார்.
ராம், இந்தியாவுல என்லிங்கன்படத்தை ரிலீஸ் பண்றீங்களா? அந்த ஏரியா மட்டும் இன்னும் போணி ஆகலை."
என்னது, ஸ்பீல்பர்க்குடன் பார்ட்னராக பிசினசா? அவர் படத்தில் நடித்து நாறடிப்பதைவிட இது பெட்டர் இல்லையோ?
ஆஹா, பேஷ், பேஷ்" என்று உடனே ஒப்புக்கொண்டேன்.
லிங்கன்படப்பெட்டியுடன் சென்னையில் இறங்கினேன்.
முதல் போன் கால் இந்து பின்னணியோடு ஏதோ ஒரு கட்சியிடமிருந்து வந்தது,
லிங்கன் என்பது சிவனை அவமதிப்பது போல இருக்கிறது. உடனே தலைப்பை மரியாதையாகலிங்கர்என்று மாற்ற வேண்டும். இல்லாவிட்டால் படத்தை திரையிட அனுமதிக்க மாட்டோம்."
இந்தியாவில் சினிமா பிசினஸ் பண்ண நினைத்த உடனேயே தகராறு வேண்டாம் என்று நினைத்துசரி, லிங்கர் என்று மாற்றி விடுவோம். இதையெல்லாம் ஸ்பீல்பர்கிடம் சொல்லி விளக்கம் கொடுத்து மாளாதுஎன்று நானே சொந்தமாக முடிவெடுத்தேன். ப்ரீவியூவுக்கு ஏகப்பட்ட சிவனடியார் கூட்டம். பிரசாத விநியோகம் செய்து மாளவில்லை.
அநேகமாக இந்தலிங்கர்வைணவத்தை அவமதிக்கும் சைவப் படமாக இருக்கலாம். முழுப் படத்தையும் நாங்கள் பார்த்து அனுமதி அளித்த பிறகுதான் படம் ரிலீசாக முடியும்" என்றுஹரே கிருஷ்ணாஎன்மேல் பாய்ந்தது.
அவர்களுக்காக மட்டுமே தனி ப்ரிவியூ ஷோ ஏற்பாடு செய்தேன். எக்கச்சக்கமான கூட்டம் படத்துக்கு, ஏகப்பட்ட நாமம் எனக்கு.
அதென்னயா பேரு லிங்கர்? எங்களைக் கிண்டல் செய்கிறீரா?" வீர சைவர்களான லிங்காயத்துகள் கர்நாடகாவிலிருந்து சண்டைக்கு வந்தார்கள்.
என்னடா இது, எல்லை தாண்டிய பயங்கரவாதமாக இருக்கிறதேஎன்று படத்தின் பேரைஆபிரஹாம் லிங்கன்என்று மாற்றிவிடுகிறேன் என்று சொன்னாலும்எதற்கும் நாவு ஒம்மே நோடளு ஹொண்டிவேஎன்று பசவண்ண கூட்டம் பஸ் பஸ்ஸாக அம்மியது. என் பாடுதான் திண்டாட்டம்.
புனித குரானில்ஆபிரஹாம்முஸ்லிம் மதத்தவர் மட்டுமல்ல, ஆண்டவனின் அன்பைப் பெற்ற பெரும் குணசீலர் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது. இஸ்லாத்தை இழிவு பண்ணி இருக்கலாம் என்று நாங்கள் நினைக்கும் எந்தப் படத்தையும் ஒருமுறையாவது பார்க்காமல் அனுமதிக்கவே முடியாதுஎன்று அவர்களாலும் பெரும் பேஜாராகி விட்டது.
அவசர பிரஸ்மீட்டில் என் அடுத்த ஹாலிவுட் படத்தில் ஒரிஜினல் யூதரான ஸ்பீல்பர்க் திருப்பதியில் மொட்டையும் போட்டு முஸ்லீமாகவும் நடிப்பார்" என்று நான் அவரைக் கேட்காமலே ஒரு அறிக்கை விட்டேன். வருகிற எல்லோரையும் கவர் செய்தே ஆகவேண்டும் என்று பி.ஆர். என் காதில் ஓத, அது வேறு எக்கச்சக்க செலவு ஆகிவிட்டது.
கிறிஸ்தவர்கள் சும்மா இருப்பார்களா? ஆபிரஹாம் என்பவர் ஏசுவின் தூதர். அவர் பெயரில் படம் என்றால் அதிலே கிறிஸ்துவத்தை என்னென்ன இழிவு பண்ணி இருப்பீர்களோ? கண்டிப்பாக பார்த்தே தீரவேண்டும். ஏற்கனவே மெல் கிப்சன் செய்த அழிச்சாட்டியங்களை நாங்கள் மறக்கவில்லை. எதற்கும் ஒரு முறை..." போட்றா ப்ரிவியூவ!

இடைவேளையில் போண்டா, சமோசா, டீ சகிதம் கூட்டம் அமர்க்களப்பட்டது. என் மணிபர்ஸ் டர்ர்ர்!
எதிர்ப்படும் தடைகளையெல்லாம் நான் மிகவும் புத்திசாலித்தனமாக உடைப்பது பற்றி கேள்விப்பட்ட உலக நாயகன் என்னை ஆழ்வார்பேட்டைக்கு உடனே வரச்சொன்னார்.
விஸ்வரூபம் படத்தை ஆஃப்கானிஸ்தான்ல ஷூட் பண்ணலாம்னுதான் ஆரம்பிச்சேன். ப்ரொட்யூசர் அழுதுட்டாரு. கடைசியில அங்கங்க டென்ட் போட்டு ஷூட்டிங் முடிச்சோம். இஸ்லாமுக்கு எதிரான படம்னு வேற இப்ப கௌப்பி விட்டுட்டாங்க. அதுக்காகவே நம்ம அமீருக்கு ஒரு ரோல் கொடுத்து அவர் அஞ்சு வேளையும் தொழுகை பண்ற சீன் வெச்சேன்."
இதெல்லாம் நானும் கேள்விப்பட்டேன் கமல்ஜி, இப்ப என்னை எதுக்கு இங்க கூப்பிட்டீங்க?"
லிங்கன் படத்துக்கு எதிரான பிரசாரத்தை நீங்க சூப்பரா சமாளிக்கறீங்கன்னு கேள்விப்பட்டேன். இப்ப இந்த விஸ்வரூப துஷ்பிரசாரத்தை எப்படி சமாளிக்கறது?
நம்மளோட ரெண்டு படத்தையும் ஒண்ணா மிக்ஸ் பண்ணி படத்துக்கு பேரையும்விஸ்வ ரூபலிங் கர்னு மாத்தி ஒரு குன்ஸா பண்ணிட்டம்னா ஒரு பயலுக்கும் ஒண்ணும் புரியாது."
இது வொர்க் அவுட் ஆகுமா?" கமல் அவுட் அஃப் போகசில் இருந்தார்...
படத்துக்கு நடுவால அங்கங்கபுகைப்பழக்கம் உடம்புக்குக் கெடுதல், மதுப் பழக்கம் வீட்டுக்குக் கெடுதல்னு போடறா மாதிரி, ‘ஜாதிச்சண்டை மாநிலத்துக்குக் கெடுதல், சமயச்சண்டை தேசத்துக்குக் கெடுதல், சண்டை போடுதல் மண்டைக்குக் கெடுதல்னு அஞ்சு நிமிஷத்துக்கு ஒரு தடவை வேற வேற லாங்குவேஜ்ல சப்டைட்டில் போட்ருவோம்."
இன்னமும் கமல் கன்வின்ஸ் ஆகவில்லை.
எப்படியும்லிங்கன்படம் ஆஸ்கருக்குப் போகும். உங்களுக்கும் ஏற்கெனவே ஆஸ்கர் நாயகன்னு பட்டம் வேற கொடுத்திருக்காங்க. ஆங் லீ சகவாசம்லாம் வேலைக்கு ஆவாது. நீங்களும் ஸ்பீல் பர்க் படத்துல நடிச்சா மாதிரியும் ஆச்சு. 30,000 ப்ரிண்ட்டும் கையாலேயே போட்டோம்னு சுத்திடுவம். எப்படி என் ஐடியா?" இப்போது கமல் கொஞ்சம் ப்ரைட் ஆனார்.
ஆனா, எல்லாத்தையும் மீறி அந்த டேனியல் டே லூ(யி)சுக்குத்தான் ஆஸ்கார்னு முடிவு பண்ணிட்டாங்கன்னா என்ன பண்றது?"
அதுக்குத்தான் நாம ஏற்கெனவே ஒரு பாயின்ட் வெச்சிருக்கமே கமல்? ஆஸ்கார் என்பது அமெரிக்கர்களால் அமெரிக்க படங்களுக்கு வழங்கப்படும் அவார்ட். அதற்கும் ஆஃப்கானிஸ்தானில் எடுக்க நினைத்து ஜோர்டானில் செட் போட்டு எடுத்த, அமீரை நடிக்க வைத்த, நானே எழுதி இயக்கிய, நானே ம்யூசிக்கும் போட்ட இதற்கும் என்ன சம்பந்தம்னு ஒரு கேள்வி கேட்போம். ‘சீச்சீ, இந்த ஆர்குமெண்ட் புளிக்கும்னு அவனவனும் முடியைப் பிச்சிக்கிட்டு ஓடுவான். இல்லாட்டிகுணாவை தூசி தட்டி எடுத்து, ‘விஸ்வரூப குணலிங்கர்னு டோட்டலா மிக்ஸ் பண்ணிடுவமா?"
கமல் மயங்கி விழுந்தார். கமலுக்கு உடம்பு சரியில்லை என்று ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டதாகச் சொல்லப்படுவது வதந்தியே.

0 comments: