Sunday, December 02, 2012

மாற்றான் - சூர்யா நடிக்காமலேயே படமாக்கப்பட்டதா? ஒளிப்பதிவாளர் பேட்டி

அழகியலும் அறிவியலுமாக கலந்துகட்டி அடிக்கிறது சௌந்தர்ராஜனின் கேமரா. மாற்றான் படத்தின் ஒளிப்பதிவுக்காக அதிகமாக பேசப்பட்டவர். காரணம் ஒட்டிப்பிறந்த இரட்டைப் பிறவி கதையை நிஜமாக்கியது இவருடைய ஒளிப்பதிவு. கேமரா கோணத்தின் புதிய அம்சங்களோடு புறப்பட்டிருக்கும் சௌந்தர்ராஜனின் எக்ஸ்பிரஸ் ஒளிப்பதிவு பற்றி இங்கே...








.நீங்கள் ஒளிப்பதிவாளரான கதை..






நான் லயோலா கல்லூரியில் விஷுவல் கம்யூனிகேஷன் படிக்கும் போதுதான் சினிமா ஒளிப்பதிவில் தீவிர ஆர்வம் ஏற்பட்டது. அதற்கு முன்புகூட சினிமா ஆசை இருந்தது. ஆனால் அது சராசரி ரசிகனுக்குரியதுதான். கல்லூரி முடிந்தவுடன் பி.சி.ஸ்ரீராமிடம் உதவியாளராக சேர்ந்தேன். அவர்தான் கே.வி.ஆனந்திடம் சொன்னார். அவரிடம் தொடர்ந்து எட்டு வருடம் இருந்தேன். நான் முதன் முதலில் தனியாக பண்ணிய படம் "சுக்ரன்'. இந்த படம்தான் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனிக்கும் அறிமுகம். கே.வி.ஆனந்திடமே "கனா கண்டேன்' படம் ஒளிப்பதிவு செய்தேன். இதுவரை ஒன்பது படங்களுக்கு ஒளிப்பதிவு செய்திருக்கிறேன். இது தவிர 600 விளம்பரப் படங்களும், சில குறும்படங்களும் செய்திருக்கிறேன்







ஒளிப்பதிவில் இன்றைய தொழில்நுட்பங்கள் பற்றிச் 


சொல்லுங்களேன்?






மிகப் பெரிய மாற்றம் ஏற்பட்டுக்கொண்டிருக்கிறது. முக்கியமானது டிஜிட்டல். இந்தமாற்றத்தோடு போட்டி போடாதவர்கள் பீல்டு அவுட் ஆகவேண்டியதுதான். எல்லா ஒளிப்பதிவாளருமே இதற்கு மாறிக்கொண்டிருக்கிறார்கள். பிலிம் டூ டிஜிட்டல் மாற்றம் என்ன செய்திருக்கிறது என்றால் பல பிலிம் கம்பெனிகளையே மூடவைத்திருக்கிறது. 


இப்போது "கொடாக்' கம்பெனி மட்டும்தான் இருக்கிறது. அதுமட்டுமா... இன்று செல்போனிலேயே படம் எடுக்கக்கூடிய மாற்றம் நிகழ்ந்திருக்கிறது. ஆனால் அதை தியேட்டரில் வெளியிடும் போதுதான் பெரிய ஒர்க் தேவைப்படுகிறது. காட்சிகளுக்கு விஷுவல் எபெக்ட் சேர்க்கத்தான் ஆள் தேவை. இந்த இடத்தில் விஷுவல் எபெக்டரும் ஒளிப்பதிவாளரும் இணைந்து பணியாற்றும் சூழல் உருவாக்கி இருக்கிறது. ஆக இயக்குநரின் எதிர்பார்ப்பைப் புரிந்து கொண்டு டெக்னிக்கல் விஷயங்களில் புதுமை செய்கிற ஒளிப்பதிவாளர்கள்தான் இப்போதைய தேவை. 








வெளிநாடுகளில் எடுக்கப்படும் திரைப்படங்களில் இருக்கும் தத்ரூபம், சண்டைக் காட்சிகளில் இருக்கும் சாகசம், காட்சியில் இருக்கும் ஸ்டைலிஷ் போன்றவை இந்திய, தமிழ்ப்படங்களில் இல்லையே?






கிடையவே கிடையாது. வெளிநாட்டுப் படங்களுக்கு நம்மூர் டெக்னிஷியன்கள் நிறைய பேர் ஒர்க் பண்ணுகிறார்கள். சந்தோஷ் சிவனை அமெரிக்க திரைப்படவுலம் ஒரு முக்கிய மெம்பராகவே சேர்த்திருக்கிறது. உலக சினிமாவில் பயன்படுத்தப்படும் அத்தனை தொழில்நுட்பங்களும் இந்தியாவில் பயன்படுத்தப்படுகின்றன. தமிழில் இருக்கும் மணிகண்டன், ஆர்.டி.ராஜசேகர், ரவி.கே.சந்திரன் போன்றோர் சர்வதேச தரத்தில் இயங்குகிறார்கள். ஆனால் இங்கே இருக்கும் பிரச்னை என்ன என்று பார்த்தால் கதை. அதுதான் மற்ற விஷயங்களைத் தீர்மானிக்கிறது. ஸ்கிரிப்ட் தான் பைபிள், அதற்குத் துணை நிற்பதுதான் டெக்னிக்கல். இங்கிருப்பவர்கள் "ஸ்கைபால்' செய்தால் அதே வேகத்தில் செய்யப்போகிறார்கள். அது ஒரு பெரிய விஷயமாகவே இருக்காது.






 "மாற்றான்' படத்தின் தொழில்நுட்பத்தை வைத்து சூர்யா இல்லாமலே சூர்யா படம் எடுக்க முடியுமாமே... அது பற்றி?






உண்மைதான். ஒருவேளை எம்.ஜி.ஆர் காலத்தில் இந்த டெக்னிக் இருந்திருந்தால் கொஞ்சம்கூட சந்தேகம் வராத அளவுக்கு எம்.ஜி.ஆர் நடித்தது போன்ற படத்தைத் தரமுடியும், அப்படியொரு விஷயம் இது. "மாற்றான்' படத்தில் நான்கு விதமான மெத்தேட் கையாளப்பட்டது. எல்லாம் சோதனை முயற்சிதான் என்றாலும் சிறப்பாக செய்யப்பட்டது.






 முதலில் ரொம்பவும் பக்கத்தில் கேமராவை வைத்து எடுத்தோம். அடுத்து தூரத்தில். மூன்றாவது விஷயம் சூர்யாவின் முகத்தின் எக்ஸ்பிரஷனை மட்டும் எடுத்தோம். இது 3டி முறையில் எடுக்கப்பட்டது. நான்காவதாக முழு உடலையும் ரீப்லேஸ் பண்ணி எடுத்தோம். இந்த நான்கு மெத்தேட்களும் ஐந்து கேமராக்களில் ஷூட் செய்யப்பட்டது. ஒரு சூர்யாவின் காட்சிகள் எடுக்கப்பட்ட பிறகு, மறுபடியும் முடி எல்லாம் வளர்ந்த பிறகு ஐந்து மாதம் கழித்து அதே ஷாட்களில், அதே வெளிச்சத்தில் மரம், செடி, கொடி எதுவும் மாறாமல் எடுக்கவேண்டும். இதில் இருக்கும் இன்னொரு அட்வான்டேஜ், சூர்யாவின் அசைவுகள் கொஞ்சம் அப்படி இப்படி இருந்தாலும் மற்ற கோண கேமராவில் சரி செய்துகொள்ள முடியும்.







உங்கள் பார்வையில் ஒளிப்பதிவுக்கான இலக்கணம் என்ன? 






சினிமாவுக்கு இருக்கும் இலக்கணம்தான் இதற்கும். மனிதனின் கண் எப்படிக் காட்சிகளைக் காண்கிறதோ அதுபோலவே கேமராவின் கண்களும் இருக்கவேண்டும். கண்கள் 180டிகிரி கோணத்தில் ஒரு காட்சியைக் காணுமானால் கேமராவும் அதைத்தான் செய்யவேண்டும். மீறினால் காட்சி கொலாப்ஸ் ஆகிவிடும். கதையை மீறி ஒரு விஷயம் இல்லை. கதையுடன் ஒளிப்பதிவு போட்டி போடலாமே தவிர, கதையை அது மீறக்கூடாது. சினிமா என்பது ஒரு மீடியம். அதற்கென்று ஒரு மொழி இருக்கிறது. அந்த மொழிதான் சினிமா மொழி. அதைப் புரிந்து கொண்டால் ஒளிப்பதில் சுணக்கம் இருக்காது. ஆனால் கதை பயணிக்கும் விதத்தில் சில நேரம் இலக்கணத்தை உடைக்கலாம். அதுவும் கூட கன்னாபின்னாவென்று இருக்கக்கூடாது. இலக்கணத்தைப் புரிந்து கொண்டு உடைப்பதாக இருக்கவேண்டும்.






ஒரு படத்தில் ஒளிப்பதிவாளர் பேசப்படும் இடம் என்று குறிப்பிட்ட இடம் இருக்கிறதா?






அந்தக் காலத்தில் சண்டைக் காட்சிகள் வந்தாலே அதைப் பெரிதாக பேசுவார்கள். என்னைக் கேட்டால் ரசிகர்கள் எம்.ஜி.ஆரை அதிகம் விரும்பியதற்கு சண்டைக் காட்சிகள் ஒரு முக்கிய காரணமாக இருந்திருக்கலாம். கதைக்கு உதவி செய்கிற எந்த ஒளிப்பதிவும் கண்டிப்பாக பேசப்படும். "பீட்சா' ஒரு டார்ச் லைட்டை வைத்துக்கொண்டு சுமார் முப்பது நிமிட காட்சிகளை அபாரமாக எடுத்திருந்தார்கள். 


அதே போலத்தான் "மாற்றான்' படத்திலும் ஒட்டிப்பிறந்தவர்களாக இருக்கவேண்டுமே தவிர, ஒட்ட வைத்துப் பிறந்தவர்களாக இருக்காத அளவுக்கு வடிவமைத்திருந்தோம்.




 அதனால்தான் அது பேசப்பட்டது. இதில் இருந்த ஒர்க் மிகப் பெரியது. இது சக ஒளிப்பதிவாளர்களுக்குத்தான் தெரியும். மக்களுக்குத் தெரியாது. அந்த தெரியாத இடம்தான் ஒளிப்பதிவின் வெற்றி.பொதுவாக, ஒரு படத்துக்கு நார்மலாக உழைக்கும் விதத்தைவிட கூடுதலாக இருபது, முப்பது சதவிகிதம் உழைத்தால் அதுவே நல்ல ஒளிப்பதிவுதான்.






நீங்கள் ரசித்து செய்த படங்கள்?





எல்லாமேதான். நான் முதலில் ரசித்தால்தான் அந்தப்படத்தை மற்றவர்கள் ரசிக்கும்படி நன்றாக செய்யமுடியும். இருந்தாலும் தெலுங்கு "பில்லா', "அறை எண் 305ல் கடவுள்', இப்போது "மாற்றான்' இவை நான் அதிகம் இன்வால்வாகி செய்த படங்கள்





.அழகே இல்லாத நடிகைகளைக்கூட படத்தில் அழகாக காட்டுகிறீர்களே ஒளிப்பதிவில் என்ன மேஜிக் செய்கிறீர்கள்? 






நடிகைகளை அழகு படுத்த சினிமாவில் இன்று அதிக வித்தைக்காரர்கள் வந்துவிட்டார்கள். ஏனென்றால் நம் இந்திய சினிமா அப்படியிருக்கிறது. இங்கு அவர்களை சுற்றித்தான் கதைகள். முகம், நகம், முடி என்று தனித்தனி அழகுகலை நிபுணர்கள் இருக்கிறார்கள். 


இன்னும் கொஞ்சம் கூடுதலாக ஒளிப்பதிவிலும் நாங்கள் அழகை அள்ளித் தெளிக்கிறோம். ஸ்டார் படம் பண்ணும்போது, நடிகைகளை அழகாக காட்டவேண்டிய கட்டாயம் இருக்கிறது. அதற்காக கொஞ்சம் மெனக்கெடுவோம். ஆனாலும் ஒவ்வொரு நடிகைக்கும் ஒரு சில பிளஸ் இருக்கும். அதனை மேலும் பிளஸ் ஆக்கவேண்டும். கூடுமானவரை ரியலாகவும் இருக்கவேண்டும். அதற்கு லைட்டிங் கரெக்ஷன் மிக முக்கியம். அதைத்தான் நாங்கள் செய்கிறோம்






.உங்களைப் பாதித்த சிறந்த ஒளிப்பதிவு படம் எது?





நிறைய இருக்கிறது. வித்ரோ ஸ்டோரா பண்ணிய படங்கள் எல்லாமே என்னைப் பாதித்த படங்கள்தான். பி.ஸ்ரீ.ராம் செய்த "அலைபாயுதே' படம் ரொம்ப பிடிக்கும். "இதயத்தைத் திருடாதே' படத்தின் பனி கூட கேரக்டராக மாறி நடித்திருக்கும். ரசிகர்களுக்கு வெளிப்படையாக இது தெரியாது. ஆனால் அந்தக் காட்சிகள் உள்ளே ஏறியிருக்கும். இயற்கையைச் சேர்த்து கேரக்டராக மாற்றித் தரும் ஒளிப்பதிவு எனக்குப் பிடிக்கும். இதுதான் சிறந்த ஒளிப்பதிவு. திருவல்லிக்கேணி ரோட்டைக் காண்பித்தால், அந்த ஏரியாவே உங்கள் உள்ளுக்குள் பயணம் செய்யவேண்டும். இப்படி நிறைய சொல்லிக்கொண்டே போகலாம். ஒவ்வொரு படத்தைப் பார்க்கும் போது அதில் ஒரு இன்ஸ்பிரேஷன் வரும்.






சக ஒளிப்பதிவாளர்களில் உங்களைக் கவர்ந்தவர்?





கதிர், மதி, வேல்ராஜ், ஆர்.டி.ராஜசேகர், "பீட்சா' கோபி அமர்நாத், "ஆரண்ய காண்டம்' பி.எஸ்.வினோத் இவர்களுடைய ஒர்க் எல்லாம் எக்ஸலண்ட்டாக இருக்கும். இவர்களுடைய படத்தைப் பார்க்கும் போது எனக்கும் உற்சாகம் பிறக்கும். நாமும் இப்படிப் பண்ண வேண்டும் என்று தேன்றும்







.பெரிய இயக்குநரிடம் ஒரு ஒளிப்பதிவாளராக கதை கேட்கும் போது, பிடிக்காமல் இருந்தால் என்ன செய்வார்கள்?






படம் நன்றாக இருக்காது என்று தெரிந்தால் யாருடைய படமாக இருந்தாலும் விட்டுத்தள்ளவேண்டியதுதான். ஆனால் நல்லவேளையாக எனக்குத் தமிழில் அப்படி அமையவில்லை. தெலுங்கில் இரண்டு படத்தை அப்படி ஒதுக்கியிருக்கிறேன்.






 நீங்கள் லொக்கேஷன் தேர்வு செய்யும் விதம் பற்றி? 







எனக்கு மட்டுமில்லை, எந்த ஒளிப்பதிவாளருக்குமே கதை சொல்லும் போதே அதன் விஷுவல் மனதில் ஓடவேண்டும். எடுத்துக்காட்டாக ஒரு மலை உச்சியில் தன்னந்தனியாக ஒரு மரம் இருக்கிறது என்று காட்சியிருந்தால் நாம் அதற்காக நிறைய தேடணும். கிடைக்கலாம், கிடைக்காமல் போகலாம். அல்லது கிடைத்ததே கூட காட்சிக்கு பொருத்தமின்றிப் போகலாம். அப்போது செட் போட்டுத்தான் எடுக்க நேரிடும். ஒரு கதையை காட்சியாகவும், அதே நேரம் உயிரோட்டமாகவும், புதுமையாகவும் கொண்டுவரும் வரை லோக்கேஷனுக்கு முடிவே கிடையாது. நாம் மனதில் உருவாக்கி வைத்திருக்கும் கற்பனை காட்சியாக வரும் வரைக்கும் உழைக்கவேண்டும்.






நீங்கள் கனவு காணும் ஒளிப்பதிவு?







பிரீயட் படம் பண்ணவேண்டும். அது பழமையானதாகவோ, அல்லது 1800களில் இருப்பதாகவோ, சுதந்திர போராட்ட காலத்தியதாகவோ இருந்தால் நன்றாக இருக்கும். ஏனென்றால் அந்தக் காலத்து கறுப்பு - வெள்ளை புகைப்படங்களை சின்ன வயதிலிருந்தே நான் ரசிப்பேன். அதனை விஷுவலில் அழகாக அப்படியே கொண்டுவர வேண்டும் என்பது என் ஆசை.





 நீங்கள் ஒளிப்பதிவு செய்த படங்களில் எந்தப் படத்துக்கு மிகப்பெரிய பாராட்டு கிடைத்தது? 






"கனா கண்டேன்', "பில்லா' (தெலுங்கு), "மாற்றான்'





.இப்போது பணி செய்துகொண்டிருக்கும் படங்கள்?




தமிழில் இயக்குநர் எஸ்.ஜே.சூர்யாவின் "இசை'. தெலுங்கில் இரண்டு படங்கள். 
 நன்றி - தினமணி 

0 comments: