Saturday, December 08, 2012

காமெடி எக்ஸ்பிரஸ் - 3- லாஸ் ஏஞ்சல்ஸ் ராம் - கலக்கல் காமெடித்தொடர்



காமெடி எக்ஸ்பிரஸ் - 3

ஆயா கடைக்கும் பங்கு கொடு!

லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்

‘பெப்சி நிறுவனத்தின் தலைவர் இந்திரா நூயி, அமெரிக்க வளர்ச்சி மைய அமைப்பின் தலைவர் நீராடாண்டன், சமூக மாற்ற மையத்தின் தீபக் பார்கவா ஆகியோரை ஆலோசனைகளுக்காக அமெரிக்க அதிபர் ஒபாமா அழைத்துள்ளார்’ - இது எல்லோரும் படித்த செய்தி.
நானும் படித்தேன்.
கடுப்பு தாங்காமல் ஹாட்லைனில் வெள்ளை மாளிகைக்குப் போட்டேன் ஒரு போனை.
திஸ் ஈஸ் பராக் ஒபாமா."
பராக்ஜி, இந்திரா மாமி பேரையெல்லாம் மட்டும் தண்டோரா போட்டு உலகமெங்கும் சொன்னீரே, என்னையும் நீர் கூப்பிட்டிருப்பதை மட்டும் ஏன் இருட்டடிப்பு செய்தீர்?"
அவர்களெல்லாம் இங்கே வருவது முதல் முறை. நீங்கள் என்னுடைய பர்மனென்ட் ரசிகர், ரகசிய கன்சல்டன்ட் என்பது அனைவருக்கும் தெரிந்த உண்மை தானே? நீங்கள் வராவிட்டால்தானே அது செய்தி?"
ஒபாமாவுக்குப் பேசச் சொல்லித் தர வேண்டுமா?
உங்களுக்கே உங்களுக்காக மட்டும் ஸ்பெஷலாக என் பர்சனல் ப்ளேனை அனுப்புகிறேன்" என்று என்னை தாஜா செய்தார்.
ஏர் ஃபோர்ஸ் ஒன் மிலிட்டரி ப்ளேன் லாஸ் ஏஞ்சல்ஸ் இன்டர்நேஷனல் ஏர்போர்ட்டில் தரை இறங்கி வெட்டிங்கில் நின்று கொண்டிருந்தது.
ஏர்போர்ட்டில் என்னைப் படம் பிடிக்க முயன்றவர்களை ஒன்றும் செய்ய வேண்டாம் என்று போலிசிடம் சொல்லி விட்டேன். ஒரு செலிப்ரிட்டி என்றால் பத்து பேர் போட்டோ எடுப்பார்கள், சிலர் செல்போனில் படம் பிடிப்பார்கள். அதற்கெல்லாமா கோபித்துக் கொண்டு அவர்களைப் பிடித்து உள்ளே போடச் சொல்லமுடியும்?
அம்மாம் பெரிய ப்ளேனில் நான் ஒருவன் மட்டுமே பாசஞ்சர் என்பதால் சற்று நேரம் என்னையே ஓடிப்பிடித்து விளையாடி விட்டுத் தூங்கிவிட்டேன்.
வாஷிங்டனில் வழக்கம்போல் பேய்க் குளிர்.
மேற்சொன்ன அமெரிக்க - இந்திய பிரபலங்கள், பொருளாதார நிபுணர்களுடன், வால்மார்ட்டின் தலைமை அதிபர் ஸாம் வால்டன் உட்கார்ந்திருந்ததை ஓரக் கண்ணால் கவனித்தேன். பின்வரிசையில் யார் அது, பில்கேட்ஸா? எழுந்திருக்க முயன்றவரைத் தடுத்து, பரவால்ல உட்காருங்க" என்றேன்.
மீட்டிங் தொடங்குவதற்கு முன்பே எனக்கு அதன் உண்மையான நிகழ்ச்சி நிரல் புரிந்து விட்டது.
எதிர்பார்த்தபடியே, 'FDI in retail' என்று ஆரம்பித்தார் வால்மார்ட் அதிபர் ஸாம். இந்தியாவில் நாங்கள் நுழைந்து விட்டால் அமெரிக்காவின் பொருளாதாரம், ஏன் உலக பொருளாதாரமே நிமிர்ந்து விடும். குறைந்த விலையில் இந்தியாவெங்கும் உப்பு, புளி, மிளகாய், தனியா, உளுத்தம் பருப்பு, நல்லெண்ணெய், தக்காளி..." என்று மளிகை லிஸ்ட் போட ஆரம்பித்த வரை நான் தடுத்து நிறுத்தினேன்.
நீயும் நானுமா?’ டி.வி. நிகழ்ச்சியில பேண்ட் பட்டாபி கர்ஜித்து முழங்கியபோதே இது தலையாய இந்திய அமெரிக்க தலைவலியென்று நான் தெரிந்து வைத்திருந்தேன். அதனால் இந்திய நாடெங்கும் பல கோடி சில்லறை வர்த்தகர்கள் திவாலாகி விடுவார்கள் என்கிற அவர்கள் பயம் நியாயமானதே," என்று ஆரம்பித்தேன்.
ஆனால் கணக்கு வழக்கே இல்லாமல் பல கோடி புது வேலைவாய்ப்புகளையும் நாங்கள் தரப் போகிறோம்."
வாய்ப்புகள் கிடக்கட்டும் ஸாம்ஜி, FDI திருப்பிப்போட்டால் IDF. Individual Development Fund. சம்பந்தப்பட்டவர்களுக்கெல்லாம் வளமான வாழ்க்கை முறைக்காக ஒரு ஃபண்ட்?"
நோ நோ, அதெல்லாம் இங்கே பேச வேண்டாம்." ஒபாமா என்னைத் தடுத்தார்.
ஆக்சுவலி இதுக்கெல்லாம் ரொம்ப சுலபமான வழி ஒண்ணு இருக்கு."
மீட்டிங்கின் மொத்த கவனமும் இப்போது என்பால் திரும்பியது. என் பர்சனல் ப்ளேனை அனுப்பி இந்த ஆளை சும்மாவா கூப்பிட்டேன்? காரணம் இருக்குல்ல" என்கிற பெருமிதத்துடன் ஒபாமா என்னைப் பார்த்தார்.
தொண்டையை செருமிக் கொண்டேன். கொஞ்சம் ஐஸ் போட்ட கோக் கிடைக்குமா?"

பெப்சியின் தலைவி இந்திரா என்னை முறைத்தார்.
சரி, வேண்டாம். இன்னொரு ரவுண்டு மசாலா சாயாவே போதும். FDI ஒரு பிரச்னையே இல்ல, அது ஒரு ஜுஜுபி."
சரி, சீக்கிரமா பாயின்டுக்கு வாயா" என்பது போல் ஒபாமா முறைத்தார். அவர் மட்டும் அவ்வளவு ஈசியாக எதையும் சொல்லி விடுகிறாரா என்ன? ‘ஒபாமா கேர்என்றால் என்ன என்று கேட்டுப் பாருங்கள், மண்டை காய்ந்து விடும்.
தலை போகிற ஒரு பிரச்னையை உடனே தீர்க்கணும்னா அந்தப் பிரச்னை மேலேயே அதைவிட தீவிரமான ஒரு பிரச்னையைத் திணிக்கணும்னு மனுநீதியிலே சாணக்கியர் சொல்லி இருக்கறதை நீங்க மறந்துடக்கூடாது."
இப்போது மொத்தக் கூட்டமும்ஙேஎன்று பேய் முழி முழித்தது.
கொத்தவால் சாவடின்னா என்னன்னு உங்களுக்குத் தெரியுமா?"
கேள்விப்பட்டிருக்கிறேன். சென்னையில் இருந்த ஹைதர் காலத்து வால்மார்ட்" என்றார் ஸாம்.
மூர் மார்க்கெட்?"
ஐயோ, அதைத் தான் மூடிட்டாங்களே" என்றார் கேட்ஸ். நான் கூட அங்கே போயி ஆதிகாலத்து கணினி பஞ்சாங்கம், கம்ப்யூட்டர் புக்ஸ் எல்லாம் வாங்கி இருக்கேன். அதெல்லாம் ஒரு காலம்."
மைலாப்பூர் குளத்தங்கரை மார்க்கெட்?"
ஒரு காலத்தில நான் அங்கே போயி அரைக்கீரை, முளைக்கீரை வாங்கிண்டு, இலவசமாய் பச்சமிளகாய், கொத்தமல்லி கொடுக்கணும்னு சண்டை போட்டிருக்கேன்" என்றார் இந்திரா நூயி பிரகாசமாக.
கோயம்பேடு மார்க்கெட் பற்றி யாருக்காவது தெரியுமா?"
அந்த மார்க்கெட்டை எப்படியாவது கணினிமயமாக்கணும்னு நானும் தலைகீழா நின்னு போராடிக்கிட்டு இருக்கேன். ஆனாகப்புதாங்கலன்னு எங்க ஆளுங்க ஒவ்வொரு தடவையும் திரும்ப ஓடி வந்துடறாங்க" பின் வரிசையிலிருந்து ஆரக்கிளின் லாரி எலிசன்... அட, இவரும் வந்திருக்கிறாரா?
ஸாம் வால்டன் தொண்டையை செருமிக்கொண்டார். கேன் யூ ப்ளீஸ் கம் டு தி பாயின்ட்?"
வால்மார்ட் கடைகள் மிக பிரம்மாண்டமானவை என்பது தெரிந்ததே. கோடிக்கணக்கான சதுர அடிகளில் அவற்றை நாடெங்கும் கட்டிக் கொள்ளுங்கள். வால்மார்ட்டுக்கு உள்ளேயே அண்ணாச்சிகளுக்கும் உங்கள் செலவில் சின்னச்சின்ன கடைகள் கட்டிக் கொடுங்கள். வால்மார்ட்டைச் சுற்றிலும் மைலாப்பூர் குளத்தங்கரை மார்க்கெட் போலவே கூறு கட்டி விற்கும் சின்னஞ்சிறு ஆயா கடைகள்... பழைய சாமான், குடை ரிப்பேர், ப்ளாஸ்டிக் குடம் ரிப்பேர் ஆட்களுக்கும் ஆங்காங்கே மூர் மார்க்கெட் பாணியில் வால்மார்ட்டைச் சுற்றிலும் டெண்ட் கடைகள். அதற்கான எல்லா செலவுகளையும் வால்மார்ட்டே ஏற்கவேண்டும். யாருக்கும் வேலை போகாது, வியாபாரம் கெடாது. வால் மார்ட்டும் சுலபமாக இந்தியாவுக்குள் வரலாம். சிறு வணிகர்களுக்கும் பரம சந்தோஷம். எல்லா ப்ராப்ளமும் சால்வ்ட்."
எப்படி என் ஐடியா?"
ஜம்பமாக ஏர்ஃபோர்ஸ் ஒன் ப்ளேனில் அழைத்துப் போகப்பட்ட எனக்கு திரும்ப வரும்போது பஸ் சார்ஜுக்குக்கூட யாரும் காசு கொடுக்கவில்லை என்பதையும் இங்கே வருத்தத்துடன் பதிகிறேன்.
(எக்ஸ்பிரஸ் வரும்...)


நன்றி - கல்கி 

0 comments: