Monday, November 19, 2012

கண்ணதாசனுடன் எனக்கு ஏற்பட்ட தகறாரு -எம்.எஸ்.விஸ்வநாதன்

மீட்டருக்கு மேட்டர்!

எம்.எஸ்.விஸ்வநாதன்

திரையுலகில் எனக்கு எத்தனையோ நண்பர்கள் உண்டு என்றாலும், கவிஞர் கண்ணதாசனுக்கு என் மனத்தில் ஒரு தனி இடமுண்டு. காரணம், நாங்கள் இரண்டுபேரும் ஒருவரை ஒருவர் மிகவும் ஆழமாகப் புரிந்து கொண்டிருந்தோம் என்பதுதான். கண்ணதாசன்நான் பேச நினைப்பதெல்லாம், நீ பேச வேண்டும்என்று எழுதினாரே, அந்த வரிகள் திரையில் சினிமா நட்சத்திரங்கள் பாடியவையாக இருக்கலாம்


ஆனால் நிஜ வாழ்க்கையில் எங்கள் இரண்டு பேருக்கும் மிகவும் பொருத்தமானவை அவை. எங்கள் இரண்டு பேருடைய அலைவரிசையும் ஒத்துப் போனதுதான் எங்கள் ஆழமான நட்புக்கு அஸ்திவாரம். இவ்வளவு நெருக்கமான நண்பர்களாக இருந்த நாங்கள் முதல் முறை சந்தித்துக் கொண்டபோது, எங்களுக்கிடையில் சண்டைதான் வந்தது என்றால் நீங்கள் நம்பமாட்டீர்கள்.


அந்த முதல் சந்திப்பு நிகழ்ந்தது 1946ஆம் வருஷம். கோயம்புத்தூரில் ஜூபிடர் பிக்சர்ஸ் பட நிறுவனம்கன்னியின் காதலிஎன்ற படத்தை எடுத்துக் கொண்டிருந்தார்கள். அப்போது நான் ஜூபிடர் பிக்சர்சில் எடுபிடி வேலைகள் செய்து கொண்டிருந்த ஆபீஸ் பாய். எனக்கு சின்ன வயசில் இருந்தே இசையில் ஆர்வம் உண்டு.


 ஜூபிடரில் ஒரு மியூசிக் ஹால் இருக்கும். அங்கே தான் ஜூபிடர் நிறுவனம் தயாரிக்கும் படங்களின் இசையமைப்பு, பாடல் கம்போசிங் வேலைகள் நடக்கும். நானாகவே ஜூபிடரின் மியூசிக் ஹாலில் பணியாற்றும் எல்லா இசையமைப்பாளர் களுக்கும் சின்னச் சின்ன வேலைகள் செய்து, அவர்களுக்கெல்லாம் செல்லப் பிள்ளை ஆனேன். அப்போது எனக்கு பதினெட்டு வயசு."


இசை ஆர்வம் மிகுந்த விஸ்வநாதனுக்கு ஒரு சுவாரசியமான வேலை கொடுக்கப்பட்டது. ஜூபிடரில் தயாராகும் படங்களின் இசையமைப்பாளர்கள் மெட்டுப் போட்டவுடன், அதை விஸ்வநாதனிடம் கொடுத்து விடுவார்கள். கூடவே, அந்த மெட்டுக்கு எந்தக் கவிஞர் பாட்டு எழுதித் தரப்போகிறார் என்றும் சொல்லிவிடுவார்கள். சம்பந்தப்பட்ட கவிஞரிடம், மெட்டைக் கொடுத்து, அதற்கேற்ற பாடலை எழுதி வாங்கிக் கொண்டு வர வேண்டிய வேலைதான் அது. ‘கன்னியின் காதலிபட வேலை நடந்துகொண்டிருந்தது. படத்தின் டைரக்டர் ராம்நாத்.


அப்போதுதான் ஒரு நாள் தும்பைப் பூ வெள்ளையில் வேட்டி சட்டை அணிந்து, நெற்றியில் பளிச்சென்று விபூதி பூசி, நடுவில் குங்குமப் பொட்டோடு ஒருவர்என் பெயர் முத்தையா. எனக்கு செட்டிநாடுஎன்று அறிமுகப்படுத்திக் கொண்டார். அவர்தான் பின்னாளில் என் அன்பு நண்பராக விளங்கிய கண்ணதாசன். அந்த அறிமுகத்துக்குப் பிறகு, நானும் கண்ணதாசனும் சந்தித்துப் பேச உடனே வாய்ப்பு அமையவில்லை. காரணம் என்னிடம் மெட்டைக் கொடுத்து, கண்ணதாசனிடம் பாட்டு எழுதி வாங்கிக்கொண்டு வரும்படி எனக்கு ஜூபிடரில் சொல்லவில்லை.


ஆனால் உண்மையில் நடந்தது என்னவென்றால், கன்னியின் காதலி படத்துக்கு கண்ணதாசன்கலங்காதிரு மனமே" என்று ஒரு பாடலை எழுதிக் கொடுத்திருந்தார். அந்தப் பாட்டுக்கு இசையமைப்பாளர் சுப்பராமன் இசையமைத்தும் முடித்து விட்டார். சில நாட்கள் கழித்து, சுப்பராமன் போட்ட மெட்டுக்கு ஏற்ப கண்ணதாசன் ஒரு பாட்டு எழுத வேண்டி இருந்தது. மெட்டை என்னிடம் கொடுத்தார்கள்


அதை எடுத்துக்கொண்டு கண்ணதாசனிடம் போனேன். மெட்டை பல தடவை வாசித்துக் காட்டியும், கண்ணதாசனுக்கு மெட்டுக்கு ஏற்ப பாடலை எழுத முடியவில்லை. இப்படியே மூன்று நாட்கள் கடந்து போயின. நான்காவது நாள் ஒரு பல்லவியை எழுதிக் கொடுத்தார் கண்ணதாசன். அதில்காரணம் தெரியாமல் உள்ளம் களி கொண்டு கூத்தாடுதேஎன்று ஒரு வரி வந்தது. மெட்டுக்கு, கண்ணதாசனின் வரிகள் பொருத்தமாக இருந்தாலும், களி, கூத்து போன்ற வார்த்தைகளை நான் ரசிக்கவில்லை.


 பட்டென்று கவிஞரிடம், ‘கவிஞரே! மெட்டுக்கு, வார்த்தை சரியாக இருந்தாலும், களி கொண்டு கூத்தாடுதே என்ற வார்த்தைகள் சரியாக இல்லை; மாற்றி விடுங்கள்; அது என்ன களி, கூத்து?’ என்று சொல்லி விட்டேன். கண்ணதாசன், என்னிடமிருந்து இதுபோன்ற ஒரு விமர்சனத்தை எதிர்பார்க்கவில்லை. என்னை முறைத்துப் பார்த்தார். அந்தப் பார்வையே சொல்லிவிட்டது, ‘நான் எழுதினது சரிதான்! அதை மாற்றி எழுதித் தரமாட்டேன்!’ இப்படி முறைப்பில் முடிந்தது கவிஞரோடு என்னுடைய முதல் சந்திப்பு.

கொஞ்ச நேரம் ஆகி இருக்கும், அங்கே வந்தார் ஜூபிடரின் ஆஸ்தான பாடலாசிரியரான உடுமலை நாராயண கவி. என்னைப் பார்த்து, ‘என்னடா! பல்லவி எழுதிக் கொடுத்திட்டானா? சொந்தத்துக்கா? சந்தத்துக்கா?’ என்று கேட்டார் உடுமலை.
சந்தத்துக்குத்தான்என்றேன் நான்.
எங்கே பல்லவியைப் படி பார்க்கலாம்!’ என்று அவர் கேட்கவும், நான் கண்ணதாசன் எழுதின பல்லவியைப் படித்துக் காட்டினேன். ‘காரணம் தெரியாமல் உள்ளம் களி கொண்டு கூத்தாடுதேஎன்ற வரியை நான் படித்ததும், சட்டென்று முகம் சுளித்தார். ‘என்னடா களி, கூத்துன்னு? இந்த வார்த்தைகளெல்லாம் இவனுக்கு ஒத்துவராதே? சரி! வேற மாத்தி எழுதிக் கொடுத்திடு!’ என்று கண்ணதாசனிடம் சொல்லிவிட்டு, அந்த இடத்திலிருந்து போய் விட்டார்.

கண்ணதாசன் மனசுக்குள்ளே, ‘இந்தப் பையன் சொன்ன வார்த்தைகளையே, மூத்த கவிஞரும் சொல்கிறாரே! இவனிடமும் ஏதோ விஷயம் இருக்குஎன்று நினைத்துக் கொண்டிருப்பார். ஆனால் வெளியில் சொல்லவில்லை.


நேரம் ஆகிக்கொண்டிருந்ததே தவிர கவிஞர் வார்த்தை மாற்றி எழுதித்தந்த பாடில்லை. ரொம்ப நேரம் கழித்து உடுமலை நாராயண கவி மறுபடியும் அங்கே வந்தார்.

என்னடா! மாத்தி எழுதிக் கொடுத்துட்டானா?’

இன்னும் சரியா ஏதும் அமையலை.’

ஒரு கணம் யோசித்துவிட்டு, ‘சரி! இப்படி மாத்திக்கோ! ‘காரணம் தெரியாமல் உள்ளம் சந்தோஷம் கொண்டாடுதேன்னு மாத்திப் போட்டுப்பார். என்ன சரியா?’ என்று அவரே வார்த்தைகளை மாற்றிக் கொடுத்தார்.

ரொம்ப நல்லா இருக்குஎன்றேன்.

என்னைப் பார்த்துடே மடையா! ‘காரணம் தெரியாமல் உள்ளம் களி கொண்டு கூத்தாடுதேங்கறதுதான் நல்ல கவிதை; அருமையான தமிழ்!’ என்று சொல்லிவிட்டு, கண்ணதாசனின் பக்கம் திரும்பி,‘இந்த மடையனுக்கு இதெல்லாம் தெரியாது. இவனைப் போல இருக்கிற எத்தனையோ மடையன்களுக்குப் புரியற மாதிரி வரணும்னு கேட்கறான்என்று சொன்னார் உடுமலை நாராயண கவி. ஒரு வழியாக மெட்டுக்குள் சரியான வார்த்தைகள் ஏறி அமர்ந்துகொண்டன.


இப்படித்தான் சண்டையில் தொடங்கியது எங்கள் நட்பு.

நாளடைவில் எங்கள் நட்பு நெருக்கமானது. நாங்கள் இருவருமே உரிமை எடுத்துக் கொண்டு பழகினோம். நான் அவரை, ‘கவிஞரே!’ என்று அன்போடு அழைப்பேன். அவர், ‘என்னடா விசு!’ என்று உரிமையோடு குறிப்பிடுவார்.

நான் என் இசையை மீட்டர் என்றும், கவிஞரது பாடலை மேட்டர் என்றும் சொல்லுவேன். ஆக, நான் போட்ட மெட்டுக்கு கண்ணதாசன் பாட்டு எழுதினால் அதை நான் மீட்டருக்கு மேட்டர் என்றும், அவர் எழுதிய பாட்டுக்கு நான் இசை அமைத்தால் அதை மேட்டருக்கு, மீட்டர் என்றும் தமாஷாகச் சொல்வதுண்டு. அப்படி, நாங்கள் இருவருமாகச் சேர்ந்து போட்ட மீட்டரும், மேட்டரும் இன்றும் சினிமா ரசிகர்கள் உள்ளத்தில் நீங்காத இடத்தை நிரந்தரமாகப் பிடித்துள்ளன. அப்படிப்பட்ட சில மறக்கமுடியாத அனுபவங்களைத்தான் இந்தத் தொடரில் நான் உங்களோடு பகிர்ந்து கொள்ளப் போகிறேன்."

எம்.எஸ்.வி....
கேரள மாநிலத்தில் பாலக்காடு மாவட்டத்தில் ஒரு சாதாரணமான கிராமம்தான் இலப் புள்ளி. கேரள வழக்கப்படி, ஒவ்வொரு வீட்டுக்கும், அவர்களுடைய பரம்பரை அடையாளமாக ஒரு பெயர் இருக்கும். அதன்படி இலப்புள்ளியில் வசித்த ஒரு குடும்பத்துக்குரிய பரம்பரை பெயர் மனையங்கத் வீடு. அந்தப் பரம்பரையில் வந்த சுப்ரமணியனுக்கும், அவரது மனைவி நாணிக்குட்டி என்று அழைக்கப்பட்ட நாராயணி குட்டி அம்மாளுக்கும் 1928ஆம் வருடம் ஜூன் 24ஆம் தேதி பிறந்த ஆண் குழந்தைக்குப் பெயர் விஸ்வநாதன். ஆக, குடும்பப் பெயர், அப்பா பெயர் இரண்டையும் இணைந்த மனையங்கத் சுப்ரமணியன் விஸ்வநாதன்தான் நம் மெல்லிசை மன்னரான எம்.எஸ்.விஸ்வநாதன். ஒரு விசேஷம் என்னவென்றால், இவரது தாய் வழியிலும் சரி, தந்தை வழியிலும் சரி இசைத்துறையோடு தொடர்பு கொண்டிருந்தவர்கள் யாருமே இல்லை.

தொடரும் 

 நன்றி - கல்கி