Saturday, November 17, 2012

விடுதலைப் புலி தளபதி பரிதி சுட்டுக் கொலை

: தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த தளபதி பரிதி என்ற ரீகன் பிரான்ஸ் நாட்டில் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டதற்கு உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன், திராவிடர் விடுதலை இயக்கத் தலைவர் கொளத்தூர் தா.செ. மணி, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனர் தி. வேல்முருகன் ஆகியோர் கண்டனமும் வீரவணக்கமும் தெரிவித்துள்ளனர்.
பழ. நெடுமாறன் இரங்கல்


பழ. நெடுமாறன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
விடுதலைப் புலிகளின் பிரான்சு நாட்டுப் பொறுப்பாளர் பரிதி என்ற ரீகன் படுகொலை செய்யப்பட்டார் என்ற செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்தேன். சிங்கள அரசின் கொடுங்கரங்கள் பிரான்சு வரை நீண்டிருப்பதை இதன்மூலம் அறிய முடிகிறது.



நல்ல செயல் வீரராகவும் கடமையில் சிறிதும் தவறாதவரும் தனது தொண்டின் சிறப்பினால் மக்கள் உள்ளங்களில் இடம் பெற்றவருமான பரிதியின் மறைவின் மூலம் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை யாராலும் இட்டு நிரப்ப முடியாது. பரிதிக்கு எனது வீர வணக்கத்தையும் அவருடைய குடும்பத்தினருக்கும் மற்றும் தோழர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக்கொள்கிறேன் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



30 ஆண்டுகால நண்பர்- கொளத்தூர் மணி



விடுதலைப்புலிகள் இயக்கத்தின் முன்னாள் தளபதியும், ஈழவிடுதலை இயக்கத்தின் அனைத்துலகச் செயலகத்தின் பொறுப்பாளருமான பரிதி என்ற ரீகன் அவர்கள் பிரான்சில் சுட்டுக்கொல்லப்பட்ட செய்தியறிந்து அதிர்ச்சியும் அளவிலா வேதனையும் அடைந்தேன். பரிதி அவர்கள் எண்பதுகளின் தொடக்கத்தில் புலிகளின் இரண்டாவது பயிற்சி முகாமில் பயிற்சி பெற்றவர். அதன் பின்னர் கொளத்தூரில் எங்கள் தோட்டத்தில் நடந்த புலிகளின் மூன்றாம் பயிற்சி முகாம் காலத்தில் எனக்கு அறிமுகமானவர். முப்பதாண்டு கால நண்பரை இழந்த வேதனை ஒரு புறம் இருக்க அவர் கொல்லப்பட்டிருக்கும் விதம் மேலும் அதிர்ச்சியை அளிக்கிறது.



முள்ளிவாய்க்காலில் ஒரு பெரும் இனப்படுகொலையை நடத்தி முடித்த சிங்களப்பேரினவாதம் - இன்னமும் பல்வேறு வடிவங்களில் தனது இனப்படுகொலையை ஈழத்தில் வாழும் தமிழ் மக்கள் மீது தொடரும் சிங்கள பேரினவாதம் - தனது கோரக்கரங்களை இலங்கைக்கு வெளியே நீட்டி வெளிநாடுகளில் வாழ்பவர்களையும் கொன்று வருகிறது.



பரிதி அவர்கள் பல ஆண்டுகாலமாக ஈழவிடுதலை இயக்க அனைத்துலகச் செயலகத்தின் பொறுப்பாளராக இருந்தவர். தடை செய்யப்பட்ட இயக்கத்திற்கு நிதி சேகரித்த குற்றச்சாட்டின் பேரில் 3 ஆண்டுகளுக்கு மேலாக பிரான்சு சிறையில் இருந்தவர். பின்னர் மீண்டும் பொறுப்பேற்று அமைதியாகச் செயல்பட்டு வந்தவர்.



நீண்ட நாட்களாகவே அவர் மீது குறிவைத்திருந்து கடந்த ஆண்டு இதே நவம்பர் மாதத்தில் அவர் மீது ஒரு கொலை முயற்சி நடந்தது. அதில் பிழைத்த அவர் இந்த ஆண்டு அதே நவம்பர் மாதத்தில் மாவீரர் நாள் நிகழ்வுக்கு முன்பாகக் கொலை செய்யப்பட்டுள்ளார்.



மாவீரர் நாள் நிகழ்வு என்பது தமிழ் மக்களை எழுச்சி கொள்ள வைக்கும் நிகழ்வு என்பதால் அந்நிகழ்வைச் சீர்குலைக்க வேண்டும் என்பதில் எப்போதும் முனைப்புடன் இருக்கும் சிங்கள அரசு, ஆண்டுதோறும் ஏதேனும் ஒரு சீர்குலைவு முயற்சியில் ஈடுபட்டே வந்துள்ளது. இந்த ஆண்டு தங்களின் நீண்டநாள் குறியான தோழர் பரிதியைக் கொன்று, மாவீரர்நாள் நிகழ்வைச் சீர்குலைக்கும் தனது எண்ணத்தைச் செயல்படுத்தியுள்ளது.



ஒவ்வொரு இழப்பும் மேலும் உறுதியையே அளிக்கும் என்பதையும் பரிதியின் இழப்பு இந்த மாவீரர் நாள் நிகழ்வை மேலும் எழுச்சி உள்ளதாக மாற்றும் என்பதும் சிங்களர்கள் அறியாதது.



வாழ்நாளெல்லாம் தனது மக்களுக்காகவும் நாட்டுக்காகவும் உழைத்த நண்பர் பரிதிக்கு எனது வீர வணக்கங்கள் என்று கூறியுள்ளார்.



வைகோ வீரவணக்கம்


விடுதலைப் புலிகளின் தளபதி பரிதிக்கு வீரவணக்கம் செலுத்தி மதிமுக பொதுச்செயலர் வைகோ வெளியிட்ட அறிக்கையில், நவம்பர் 8 ஆம் தேதி இரவு தமிழ் ஈழ மக்களுக்கு மேலும் ஒர் துன்ப இரவாக ஆகிவிட்டது. ஆம்; தமிழ் ஈழ விடுதலைப்புலிகளின் மூத்த தளபதிகளுள் ஒருவரும், ஃபிரான்ஸ நாட்டின் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுப் பொறுப்பாளருமான கேணல் பரிதி என்ற நடராஜா மதீந்தரன், பாரீஸ் நகரத்தில் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு அலுவலகத்தை விட்டு வெளியே வந்தபோது, மர்ம நபர்களால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டார் என்ற செய்தி என் இதயத்தில் ஈட்டியாகப் பாய்ந்தது.



நான் உயிராக நேசித்த விடுதலைப்புலிகளின் தளபதிகளுள் பரிதியும் ஒருவர். 1989 ஆம் ஆண்டு தொடக்கத்தில், வன்னிக்காடுகளில் இடைவிடாத இந்திய-சிங்கள இராணுவத் தாக்குதல்களுக்கு நடுவே, வான்வெளிக் குண்டு வீச்சுக்கும் பீரங்கி தாக்குதளுக்கும் ஊடே பிரபாகரனோடு நான் இருந்த நாட்களில் நடைபெற்ற நிகழ்வுகளை எல்லாம், கடந்த ஆண்டு மே 30 ஆம் தேதி பாரீஸ் நகரத்தில் நூற்றுக்கணக்கான ஈழத் தமிழர்களை, நான் சந்திக்க ஏற்பாடு செய்து தந்த நிகழ்ச்சியின் போது உணர்ச்சி பூர்வமாக நினைவு கூர்ந்ததை எண்ணும்போதே மனம் பாறையாய்க் கனக்கிறது.



பெல்ஜியம் தலைநகர் பிரஸ்ஸெல்சில், கடந்த ஆண்டு ஜூன் 1 ஆம் தேதி நடைபெற்ற ஈழத்தமிழர் கருத்து அரங்கத்தில் பங்கு ஏற்கச் சென்றபோது, மே 30 ஆம் தேதி பாரீஸ் நகரத்துக்குச் சென்றேன். அங்குதான் ஈழத் தமிழர்களை நான் சந்திக்க சகோதரர் பரிதி ஏற்பாடு செய்து இருந்தார். 1990 ஆம் ஆண்டு யுத்தத்தில் காயமுற்று கால் நடக்கமுடியாத நிலையில், சென்னைக்கு வந்து சிகிச்சை பெற்றார். பின்னர் பிரான்சு நாட்டின் புலிகளின் பொறுப்பாளர் ஆக்கப்பட்டார்.



பிரான்சு நாட்டில் விடுதலைப்புலிகள் இயக்கம் தடைசெய்யப்பட்டபின், பரிதி கைது செய்யப்பட்டு, நீண்ட நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். இயக்கத்தின் பல முயற்சிகளால் அவர் விடுதலை ஆனார். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இலங்கை இனவாத அரசின் உளவுத்துறையின் பின்னணியில், கொடியோரால், ஆயுதங்களால் தாக்கப்பட்டு, படுகாயமுற்று உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று மீண்டார்.



இவ்வாண்டு மாவீரர் நாள் நிகழ்ச்சிகளை முனைப்பாக ஏற்பாடு செய்துவந்த நிலையில், கேணல் பரிதி நிராயுதபாணியாக அலுவலகத்தை விட்டு வெளியே வந்தபோது சுட்டுக்கொல்லப்பட்டார். இலங்கை அரசின் புலனாய்வுத் துறையினரின் நயவஞ்சகமான கொடுஞ்செயலால் ஒரு வீரச் சகோதரனை தமிழ் ஈழம் இழந்து விட்டது. பரிதியின் துணைவியாரையும், அவரது பிள்ளைகளையும் எண்ணுகையில், தாங்க முடியாத துக்கம் மேலிடுகிறது. அந்த வீரத் திருமகனுக்கு, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் எனது கண்ணீர் அஞ்சலியையும், வீர வணக்கத்தையும் சமர்ப்பிக்கிறேன்.



தலைமைக்கும், இயக்கத்துக்கும், தமிழ் ஈழ விடுதலை இலட்சியத்திற்கும் தன்னை அர்ப்பணித்துக்கொண்ட மாவீரன் பரிதி, எந்தக் குறிக்கோளுக்காக இறுதி மூச்சு அடங்கும்வரை போராடினாரோ, அந்த சுதந்திரத் தமிழ் ஈழ இலட்சியத்தை வென்றெடுக்க துயர் சூழ்ந்த இந்த நேரத்தில் சபதமேற்போம் என்று கூறியுள்ளார்.



வேல்முருகன் கண்டனம்



இதேபோல் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனர் தி. வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்த் தேசிய செயற்பாட்டாளரும் பிரான்சு நாட்டு தமிழர் ஒருக்கிணைப்புக் குழுத் தலைவருமான ரீகன் என்ற பரிதியை சிங்களப் புலனாய்வுப் பிரிவினர் பாரீஸ் நகரில் சுட்டுக் கொன்ற செய்தி பேரதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இதேபோல் தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னணி தளபதிகளை வெளிநாட்டில் ஏற்கெனவே சிங்களப் புலனாய்வு பிரிவினர் சுட்டுக் கொலை செய்திருக்கின்றனர்.



தன் வாழ்நாள் முழுவதும் தாயக விடுதலைக்காகப் பாடுபட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மூத்த தளபதியான பரிதிக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி தமது வீரவணக்கத்தை செலுத்துகிறது. தளபதி பரிதியின் குடும்பத்தினருக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

 நன்றி - தட்ஸ் தமிழ்

0 comments: