Thursday, October 18, 2012

அருந்ததியர் வாழ்வு @ சென்னை

http://img.kalvimalar.dinamalar.com/tamil/NewsThImages/4074.jpg 

வித்தியாச வாழ்வுகள்!

சென்னை லோப்ல ஒக்க ஆந்திரா!

அமிர்தம் சூர்யா

பவன் கல்யாண்காரு கொத்த சினிமா ஏன்ட்டி?

ஏன்ட்டி பாவா அபிகர் செட்டைந்தா?" - என்ற இளசுகளின் குரல்கள். எங்கு திரும்பினாலும் தெலுங்கின் வாசம். தெருவெல்லாம் லெதர் துண்டுகள் இறைந்து கிடக்க, ஆங்காங்கே செருப்புக் கடைகள். அழுக்கான அந்தத் தெருக்களை காற்று அவ்வப்போது கழுவிச் செல்லகுப்பென்ற தோலின் நெடி மூக்கைத் தாக்கி விட்டுப் போகிறது. போதாக்குறைக்குரிங்கி ரிங்கி ரிங்கி ரிங்கா ரே’... ரிங்டோன்கள். இது சென்னை பெரம்பூர்தானே! திசைமாறி ஆந்திராவுக்கு வந்து விட்டோமோ என நினைக்கும்படியிருந்தது அந்த அருந்ததியர் நகர். கல்கியிலிருந்து வந்திருக்கோம்னு சொன்னதும் கூட்டம் கூடி என்ன என்ன - என்ற விசாரிப்புகள். விவரம் சொன்னதும் சிலர் ஒரு வெள்ளை வேட்டிக்காரரை நோக்கி கை நீட்ட... நாம் அவர் முன்னால் நின்றதும்

நேனு ரூலிங் பார்ட்டி; வாரிகி
ஏமி செப்ப நவது ஸார்" என்றார்.

ஆளுங்கட்சி எப்பவும் அலார்ட்டாதான் இருக்காங்க டோய்னு வியாபாரி சங்கத் தலைவர் லோகநாதனின் வீட்டு வாசலில் முகாமிட்டோம்.

அருந்ததியர் நகர் - வட சென்னையில் வியாசர்பாடியையும், பெரம்பூரையும் இணைக்கும் பகுதி. வெளியே இந்நகரை மக்கள் சக்கிலிபாளையம் என்ற புனை பெயரிலேயே அழைக்கின்றனர். 14 தெருக்கள், 3 குறுக்குச் சந்துகள், புறாக்கூண்டு மாதிரி 1800 குடும்பங்கள்; செருப்பு தைப்பது மெஜாரிட்டி குலத்தொழில். இங்கு இருக்கும் 8000 பேரும் தெலுங்கர்களே - டீக்கடை வைத்திருக்கும் நாயர்களைத் தவிர. ஃபோட்டோ கிராபருடன் ஒருநாள் இங்கு வாழ்ந்து பார்க்கத் தொடங்கினோம்.

20 வருஷத்துக்கு முந்தி ஷூ தைக்க ஜனங்க இங்கதான் வருவாங்க. இப்ப யாரும் வர்றது இல்ல. சைனா பொருள் உள்ள வந்து எங்கலைப்ப காவு வாங்கிடுச்சு. எங்க குலத்தொழிலை இப்ப கம்பெனிங்க செய்ய ஆரம்பிச்சதால இந்தத் தொழில் கொஞ்ச நாள்ல காணாம போயிடும். நாங்க படிச்சது கொஞ்சம்தான். அதுவும் எம்.ஜி.ஆர். சோறு போட்டதால படிச்சோம். இப்ப நாங்க பாதிப்பேர் ஹவுஸ் கீப்பீங் வேலைக்குதான் போறோம்," என்று பேச ஆரம்பித்தார் லோகநாதன்.


உங்கள் சாதிக்கென்று தலைவர்னு யாரு இருக்கா?" என்றதும்தான் தாமதம். மாக்கோசமனி நாயக்குடு ராலேது" என்றார். பாஷை பிடிபடாமல் விழித்ததும் உள்ளூர் தலைவர் விக்டர்... பள்ளருக்கு கிருஷ்ணசாமி, பறையர்க்கு திருமாவளவன் மாதிரி அருந்ததியர்க்குன்னு தலைவன் யாருமில்லை ஸார். ஏன்னா எங்களுக்கு சாதி உணர்வும் குறைச்சல்தான். இந்த எடத்துக்கு 162 வருஷத்துக்கு முந்தி ஆந்திராவிலே இருந்து வந்தோம். அப்போ இதுக்கு கோசிங்கு பாளையம்னு பேரு. காலங்காலமாய் செருப்பு, ஷூ தைக்கிறதுதான் வேலை. மூலப் பொருளெல்லாம் சென்னை பெரிய மேட்டுலதான் வாங்குவோம்" என்றார்.


அடுத்த தெருவை கொஞ்சம் ஆராய்ந்துட்டு வரலாம்னு போனோம். குடிதண்ணீர் லாரி வந்ததும் நம்மைச் சுத்தி இருந்த கூட்டம் ஜூட். அந்தத் தெருவில் தோல் விற்றுக் கொண்டிருந்த பிரகாஷ் கொஞ்சம் விவரமாய் பேச ஆரம்பித்தார். NSI -ல் 6 மாத கோர்ஸ் கவர்மெண்டுல கொடுத்தாங்க. அதாவது எங்களுக்குத் தெரிஞ்ச தொழிலையே திரும்பவும் கத்துக் கொடுத்து தொழில் தெரியும்னு சர்டிஃபிகேட்; நல்ல கூத்து இல்லே. லோன் கேட்டா முன் பணம் கட்டு, நெகட்டிவ் ஏரியாவுல இருக்கக்கூடாதுன்னு நெறைய ரூல்ஸ். எங்க ஊர் நெகடிவ் ஏரியாவாம் ஸார்" சொல்லிச் சிரிக்கிறார்.



போகிற வழியில் கும்பலா ரோட்டில் குந்திக் கதை பேசிக் கொண்டிருந்த பெண்கள் பெரும்பாலும் பகலில் நைட்டியிலேயே இருந்தனர். அந்தக் குழுவில் சில திருநங்கைகளும். எந்த பேதமும் உறுத்தலுமற்று ஒருசமூக திருப்திஅங்கு நிலவிக் கொண்டிருந்தது.


அருகே தேங்கியிருந்த கழிவு நீர் நெடி அவர்களை ஒரு பொருட்டாகக் கருதாமல் அங்கேயே சுழன்றது. தம்பி எங்களை ஃபோட்டோ எடுத்தா கேமிரா தீட்டாயிடுமா" என்று ஒரு திருநங்கை வார்த்தையால் சாட்டை வீசினாள். ஒருக்ளிக்குக்குப் பின் அரசாங்கம் எதுவும் செய்யலையா என்றதும், எம்.ஜி.ஆர். இருந்தப்போ இலவச செருப்பு திட்டத்தில மூலபொருளும் கொடுத்து செருப்பு தைக்க ஆர்டரும் கொடுத்தாரு. ஆனா இப்போ அந்த ஆர்டர் பெரிய கம்பெனிக்குப் போயிடுச்சு" என்றார். ‘அடக் கடவுளேஎன்று நம் வாய் முணுமுணுத்ததும்... சிவகுமார் குறுக்கிட்டு, எங்க குல தெய்வம் மாத்தம்மா. வாங்க காட்டுறோம்" என்றார்.


சிறுமிகளுக்குத் தாலி கட்டி கோயிலுக்கு நேர்ந்துவிட்டு கடவுளின் மனைவியாக, கோயில் சொத்தாக கோயிலில் நாட்டியம் ஆடவும் வசதி படைத்த ஆண்களின் போகப் பொருளாகவும் மாறிச் சிதைந்துபோன ஒரு குலத்தின் வம்சாவழிதான் மாத்தம்மா என்ற வரலாற்று தகவல் மூளையில் வந்து போனது. முன்னோரான மாத்தம்மா பெண் தெய்வமாகி சமூகத்தில் போற்றப்படுவது இங்கு தான். செருப்பைக் கழற்றி தெய்வத்தை வணங்கி ஃபோட்டோ எடுத்தபோது அந்தத் தெருவின் பெயர் உப்பண்டி பாபு தெரு என்றிருந்தது. கூட இருந்த முனுசாமி, என்ன பாக்கிறீங்க... பங்காரி தெரு, தாசரி தெரு, போலேரி அம்மன் தெரு, செங்கண் தெருன்னு நிறைய தெருக்களில் இருக்கும் பேரெல்லாம் ஒவ்வொரு குடும்பத்தின் பேர்தான்" என்றார்.


படித்த ஒரு பெண்ணாவது பேசினா நல்லாயிருக்கும் முனுசாமி" என்று அவரிடம் சொன்னதும், ஒரு வீட்டுக்கு அழைத்துப் போனார். அந்த வீட்டு வாசலில் உட்கார்ந்தேன். அம்மாவிடம் பர்மிஷன் வாங்கிக்கொண்டு பக்கத்தில் உட்கார்ந்த கல்லூரி பெண் ஷகிலா... என்ன பத்திரிகை என்று பத்திரிகை ஒரு புரட்டுப் புரட்டி என்னுடைய .டி. கார்டு மற்றும் ஃபோன் நெம்பரை வாங்கி ஊர்ஜிதம் செய்துகொண்டு, பின்னரே சகஜமாய்ப் பேச ஆரம்பித்தார்.
நான் பட்டதாரிதான். இங்க இருக்கிற ஜனங்க படிக்காதவங்க. நாகரிகம் கொஞ்சம் கம்மி. வேலை வாய்ப்பு இல்ல. விழிப்புணர்வும் இல்ல. வேதனையாத்தான் இருக்கு. என்ன பண்ண? என் ஃபிரண்ட்ஸுங்க யாரையும் எங்க ஏரியாவுக்கு நான் கூப்பிட்டது இல்ல. அவங்க யாரும் சாதி பார்க்கிறவங்க இல்ல. ஆனா அவங்க சுத்தம் பார்க்கிறது தப்பில்லையே? சரிதானே!" என்றார்.

இட்லி சுட்டுக் கொண்டிருந்த ஒரு பெண் இந்தாங்க என்று தட்டில் இட்லியும் கொஞ்சம் சட்னியும் திடீரென தந்தார். வெங்காயத்தையும் பச்சை மிளகாயையும் இடித்துச் செய்த கோங்குரா சட்னியாம். எரிமலை காரம். தொடர்ந்து இவ்வளவு காரம் சாப்பிட்டால் சீதபேதி நிச்சயம் என்று நினைத்துக் கொண்டேன். பக்கத்தில் இருந்த ஒருவரிடம், ‘என்ன பண்டிகை கொண்டாடுவீங்கஎன்றேன். நாங்க தெலுங்கு பேசுற தமிழர்கள். தெலுங்கு பண்டிகையெல்லாம் கிடையாது. பொங்கல்தான் எங்களுக்கு" என்றார்


. ஒரு வயதான பெண்மணி, இவங்க எதுக்கு வந்திருக்காங்க?" என்றார். அதற்கு பக்கத்திலிருந்த சிவக்குமார் எட்ட உன்ன நேனு, இட்ட அய்ப் போயானு, அனி வீல்லு ராயட்டானிகி ஒச்சாரு" என்றார். நம் ஃபோட்டோகிராபர் மாமு எப்படி இருந்த நான் இப்படியாயிட்டேன்னு நம்மள பத்தி எழுத வந்திருக்காங்கன்னு சொல்றாருடா" என்று மொழி பெயர்த்தார். ‘இதுக்கு முன்னே எப்படி இருந்தீங்க" என்றதும் ஒரு பெரியவர் ஒரு ஷூ தெச்சா அப்போ லாபமாய் 1000 கிடைக்கும். பொண்ணு கேக்க போனா ஷூ தெச்சிக் காட்டினாதான் கல்யாணம் நடக்கும். கம்பெனி வேலையக்கூட துச்சமாய் தூக்கிப் போட்டோம். இப்போ செருப்பு தைக்கக்கூட யாரும் வர்றது இல்ல" என்றார்.

கொசுவர்த்திக்கே ஒரு நாளைக்கு 10 ரூபாய் செலவு செய்றோம். குப்பை அள்ளக் கூட ஆளு வர்றது இல்ல. செருப்பு தைக்கிற வங்கதானேன்னு எங்களை கவர்மெண்டு கூட அனாதை மாதிரி நடத்துறாங்க" என்று லாவண்யா சொன்னதும், ‘இவ்வளவு பேரு இருக்கீங்க ஒண்ணு சேர்ந்து போராடக் கூடாதா?" என்றேன். அதற்கு அந்தப் பெண்மணி அப்புடு அன்னம் உன்னா பைட் சேஸ்நாமு. இப்புடு அன்னம் கோசமே பைட் செஸ்த்துன்னாமு" என்றார் சுர்ரென்று. கோபத்தின் போதும் காதலின்போதும் சொந்த மொழி வேஷமின்றி உக்கிரமாயும் உண்மையாயும் வரும் போலும். இந்தமுறை தெலுங்கு புரிந்ததுசோத்துக்கே போராடும்போது...’ என்ற வரி வலிக்கச் செய்தது.


நன்றி - கல்கி , புலவர் தருமி

0 comments: