Tuesday, October 16, 2012

எம் ஜி ஆர் என்னிடம் வாங்கிய சத்தியம் - ஜெ பர பரப்பு கடிதம்

http://www.alaikal.com/news/wp-content/mgr101.jpg 

சென்னை: அதிமுக தொண்டர்களைக் காப்பாற்ற தம்முடைய வாழ்வை அர்ப்பணிக்க  வேண்டும் என்று எம்.ஜி.ஆர். தன்னிடம் சத்திய வாக்கினை பெற்றார் என்று அதிமுக  பொதுச் செயலாளர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.  




அ.தி.மு.க. 41-வது ஆண்டு தொடக்க விழாவை கோலாகலமாக கொண்டாட  வேண்டுகோள் விடுத்து,அக்கட்சியின் பொதுச் செயலாளரும், முதலமைச்சருமான  ஜெயலலிதா தொண்டர்களுக்கு எழுதி உள்ள மடலில் கூறியிருப்பதாவது:





இதய தெய்வம் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் ரத்தத்தின் ரத்தமான என் உயிரினும்  மேலான எனதருமைக் கழக உடன்பிறப்புகளே!



நம் பொன்மனச் செம்மல் இதய தெய்வம் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்.  தோற்றுவிக்கப்பட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் 40  ஆண்டுகள் நிறைவடைந்து, 41-ஆவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் மகிழ்ச்சியான  தருணத்தில் இந்த மடல் வழியாக உங்களை சந்திப்பதில் நான் மட்டற்ற மகிழ்ச்சி  அடைகிறேன்.



அறநெறி சார்ந்த வாழ்வினை கைக்கொள்ளவேண்டும்; அடுத்தவர்களுக்கு பயன் தரும்  வாழ்வை மேற்கொள்ளவேண்டும்; இயன்ற பொழுதில் எல்லாம், இயன்ற வகைகளில்  எல்லாம் எளியோர்க்கு உதவ வேண்டும்; ஏழைகளின் வாழ்வில் ஒளியேற்ற வேண்டும்  என்று தன் வாழ்வின் தொடக்க காலத்தில் இருந்தே கொள்கை உறுதி கொண்டு வாழ்ந்த  ஒப்பற்ற மனிதராம் நம் இதய தெய்வம் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் அன்புச்  செல்வம்தான் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்.

http://www.tamilpaper.net/paper/wp-content/uploads/2012/01/1967_MGR.jpg

இந்த இயக்கத்தை புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். ஏன் தோற்றுவித்தார் என்பதை ஒரு  நிமிடம் எண்ணிப் பார்ப்போம். பேரறிஞர் அண்ணாவின் மறைவிற்கு பிறகு, மிகுந்த  எதிர்பார்ப்போடு தமிழக மக்கள் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். வழியாக, அவரை நம்பி  திமுக-விற்கு தந்த தேர்தல் வெற்றியை, ஆட்சிப் பொறுப்பை, ஒரு சுயநலக் கும்பலின்  தலைவனாகிய ஒரு தீய சக்தி தன் மனம் போனபடி ஆயுதமாக்கிக் கொண்டு தமிழகத்தை  தனது வேட்டைக் காடாக மாற்றியது.



அண்ணா அவர்கள் தோற்றுவித்த இயக்கத்தை குடும்பச் சொத்தாக மாற்றிக் கொண்டது.  புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரை கட்சியில் இருந்து தூக்கி எறிந்தது. ஆனால், தமிழக  மக்கள் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரை தங்கள் இதயத்தில் ஏந்திக் கொண்டார்கள்.



புதிய இயக்கம் கண்டு தங்களை வழிநடத்த வேண்டும் என்று வேண்டுகோள்  வைத்தார்கள். அனைத்துத் தரப்பினரும் விடுத்த அன்பு வேண்டுகோளை ஏற்று 1972 -ஆம் ஆண்டு அக்டோபர் திங்கள் 17-ஆம் நாள் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்.  அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைத் தோற்றுவித்தார்.



ஐந்து ஆண்டுகளில் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். கண்ட இயக்கம் தமிழகத்தின் ஆட்சிப்  பொறுப்பை வென்றெடுத்தது. தன்னுடைய இயக்கமும், ஆட்சியும், மக்கள் இட்ட  கட்டளையால் உருவான வரலாற்று நிகழ்வுகள் என்பதையும், இவற்றைக் கொண்டு  தமிழக மக்களுக்கு எந்நாளும் பணியாற்ற வேண்டும் என்பதையும் புரட்சித் தலைவர்  எம்.ஜி.ஆர். தன் வாழ்நாள் முழுவதும் மனதில் கொண்டிருந்தார்.



திராவிட இயக்கக் கொள்கைகளை காக்கவும், அண்ணாவின் அரசியல் பணிகளை  தொடர்ந்திடவும், தமிழக மக்கள் மீது தான் கொண்ட பேரன்பை செயல் வடிவில் காட்டி  அவர்களுக்கான பணிகளை ஆற்றிடவும், தனக்கு பின் இயக்கத்தைக் கட்டிக் காக்கவும்  ஒருவர் வேண்டும் என்பதற்காக என்னிடம், இந்த இயக்கத்திற்கு தலைமையேற்கும்  தியாக உணர்வை புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். வளர்த்தார்.



தன்னுடைய தொண்டர்களைக் காப்பாற்ற நான் என்னுடைய வாழ்வை அர்ப்பணிக்க  வேண்டும் என்பதுதான் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். என்னிடம் வைத்த  கோரிக்கையாக இருந்தது. அதற்கான சத்திய வாக்கினை என்னிடம் அவர் பெற்றார்.



புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். உடல் நலம் குன்றி இருந்த காலத்தை தங்களுக்கு  சாதகமாக பயன்படுத்திக் கொண்டு அவருடைய உதவியாலும், கருணையாலும் வாழ்வும்,  வளமும் பெற்றவர்கள், தீயசக்திக்கு ஆதரவாகவும், இந்த இயக்கத்திற்கு எதிரான  நடவடிக்கைகளிலும் ஈடுபட்டனர். என்னை அழித்திடத் துடித்தனர்.



கழக உடன்பிறப்புகளாகிய உங்களை புரட்சித் தலைவரின் காலத்திற்கு பிறகு கட்டிக்  காக்கவேண்டும் என்பதற்காகவே நான் என்னுடைய வாழ்வை கழகத்திற்காக,  உங்களுக்காக அர்ப்பணித்துள்ளேன். ஒரு பெண்ணாக தமிழ் நாட்டில் அரசியல் வாழ்வு  நடத்துவது என்பது எளிதான பணி அல்ல. இது நெருப்பாறு. இது வஞ்சகமும்,  சூழ்ச்சியும் கொண்டு நன்றி மறந்த பலரும் எழுதும் திரைக்கதை வசனங்கள் நிறைந்தது.  இருப்பினும் இவைகளுக்கு அஞ்சி இந்தக் கடமையை கைவிட்டுவிடக்கூடாது என்பதை  நான் பொது வாழ்வின் தொடக்கத்திலேயே புரிந்து கொண்டேன்.



புரட்சித் தலைவருக்கு நான் அளித்த வாக்குறுதியை என் மனசாட்சிக்கு சரியென்று  தெரிந்தவரை இதுவரை நிறைவேற்றி வந்திருக்கிறேன் என்ற மன நிறைவும், நிம்மதியும்  இந்த நாளில் எனக்கு ஏற்படுகிறது. ஒவ்வொரு முறையும் ஆட்சிக்கு வரும்போது,  தமிழகம் இந்திய அளவில் தலை நிமிர்ந்து முதலிடம் பெறும் நோக்கில் எண்ணற்ற  திட்டங்களை நான் நிறைவேற்றி வருகிறேன்.



தமிழ்நாட்டில் புரட்சித் தலைவரும், உங்கள் அன்புச் சகோதரியாகிய நானும்  அமல்படுத்திய பல திட்டங்கள் இன்றைக்கு இந்தியா முழுவதும் பல மாநிலங்களில்  பின்பற்றப்பட்டு வருகின்றன. ‘மக்கள் பணியே மகேசன் பணி’ என்ற அண்ணாவின்  அறிவுரையின்படி ஒவ்வொரு நாளும் தமிழக மக்களின் முன்னேற்றத்திற்காக பல்வேறு  நலத் திட்டங்களை நான் செயல்படுத்தி வருகிறேன். எனக்கு எந்த சுயநல நோக்கமும்  கிடையாது. எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறொன்றும்  அறியேன்.



எனவேதான் ‘உங்களுக்காக நான், உங்களால் நான்’ என்பதை என் வாழ்வின் தாரக  மந்திரமாகக் கொண்டிருக்கிறேன். இந்த நாட்டையே சூறையாடும் வண்ணம் பல்வேறு  துறைகளில் பல லட்சம் கோடிகளை கொள்ளையடித்தவர்களையும், தேச அரங்கில்  தமிழகம் தலைகுனியும் வகையில் வரலாறு கண்டிராத ஊழல்களில் ஈடுபட்டவர்களையும்,  முன்னேற்றப் பாதையில் தமிழகம் செல்ல முடியாத வகையில் முட்டுக்கட்டை  போட்டவர்களையும் மக்கள் தேர்தல் களத்தில் புறக்கணித்தார்கள்.



மக்கள் தாங்கள் அனுபவித்த கொடுமைகளை எல்லாம் மறந்திருப்பார்கள் என்ற  நினைப்பிலும், பேராசையிலும் தீய சக்திகள் மீண்டும் தலை தூக்க முயற்சிக்கின்றன.  தமிழக மக்கள் இதனை ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்கள் என்பது நாம் அறிந்த  உண்மை.



அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சிக் காலங்களில் உங்கள்  அன்புச் சகோதரியாகிய நான் மேற்கொண்ட முன்னேற்ற நடவடிக்கைகளையும், மக்கள்  நலப் பணிகளையும் மனதில் கொண்டு மூன்றாவது முறையாக ஆட்சிப் பொறுப்பை  தமிழக மக்கள் என்னிடம் வழங்கி இருக்கின்றார்கள். இன்னும் பல வெற்றிப் பரிசுகளை  அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு வழங்க தமிழக மக்கள்  காத்திருக்கிறார்கள் என்பதை நன்றியோடு உணர்கிறேன்.
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiGeuh8lTBuLomyGdHYrCZ1VyK5-7r-LTwfM751YGMvCQwAu-IshGp13XnPQ7k4ykfMXa89J3KicVpPiy51sEBRAL7kmSe3AA2IDWKDdzN_8ytQgTkfgtBdTtUKE5re2imItH2UWtXrQ7g/s1600/jayalalitha_mgr_20110321.jpg


அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் தான் சத்துணவுத்  திட்டம், அனைவருக்கும் கல்வி உதவி, பல லட்சம் முதியோருக்கு ஓய்வூதியம், ஏழை  எளிய பெண்களின் வாழ்க்கைத் தரம் முன்னேற நலத் திட்டங்கள், பசுமை வீடுகள்  திட்டம், கிராமப்புற மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் புரட்சிகர திட்டங்கள்,  வளர்ந்து வரும் நவீன தொழில்நுட்பத்தை எல்லோரும் பெற்றிட உலக அதிசயமாய்  விலையில்லா மடிக்கணினி என்று பல முன்னோடித் திட்டங்கள் தொடர்ந்து  நடைமுறைக்கு வந்த வண்ணம் இருக்கின்றன. இது தொடரும்;



இவற்றின் வழியாக தமிழக மக்களின் வாழ்வு மலரும்; அதற்கு என்னுடைய ஆட்சி  எந்நாளும் துணை நிற்கும் என்ற உறுதிமொழியை இந்த நல்ல நாளில் உங்கள் வாயிலாக  தமிழக மக்களுக்கு அளிக்கிறேன். இந்த நன்னாளில் ஈட்டிய வெற்றிகளின்  எண்ணிக்கையையும், நாம் எதிர் கொண்டு சாய்த்திட்ட எதிரிகளின் கணக்கையும்  கூட்டிப்பார்த்து பெருமிதம் கொள்ளும் அதே வேளையில், இந்த ஒப்பற்ற இயக்கத்தின்  வளர்ச்சிக்காக தங்கள் வியர்வையையும், உதிரத்தையும் சிந்தி உழைத்திட்ட  செயல்வீரர்களையும், வீராங்கனைகளையும், கழகத் தொண்டாற்றிய காலத்திலேயே  தங்கள் விலை மதிப்பற்ற உயிரையும் நீத்திட்ட உத்தமத் தொண்டர்களின் உயரிய  தியாகங்களையும் நன்றிப் பெருக்கோடு நினைவு கூர்கிறேன்.



எத்தகைய உயர்ந்த நோக் கங்களுக்காக அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்  கழகம் தோற்றுவிக்கப்பட்டதோ; எத்தகைய எதிர்பார்ப்புகளோடு அனைத்திந்திய அண்ணா  திராவிட முன்னேற்றக் கழகத்தை தமிழக மக்கள் தொடர்ந்து ஆதரித்து வளர்த்து  வருகின்றார்களோ; அவற்றிற்கு உண்மையாக விளங்கும் வகையில் தொடர்ந்து கழக  உடன் பிறப்புகள் ஒவ்வொருவரும் பணியாற்ற வேண்டும் என்று அன்போடு கேட்டுக்  கொள்கிறேன்.



என் உயிரினும் மேலான எனதருமைக் கழக உடன் பிறப்புகளே!



அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் 41-ஆவது ஆண்டு தொடக்க  விழாவினை சிறப்பாகக் கொண்டாடும் வகையில், மாவட்ட, ஒன்றிய, நகர,  பேரூராட்சி, பகுதி அளவிலும்; இவைகளுக்கு உட்பட்ட கிளை, வார்டு, வட்டங்களிலும்  ஆங்காங்கே நம் வெற்றியைத் தாங்கி நிற்கும் கொடிக் கம்பங்களுக்கு வண்ணங்கள் பூசி  கழகக் கொடியினை ஏற்றி வைத்து, விழாக்கோலம் கண்டு, இனிப்புகள் வழங்கி  சிறப்பிக்க வேண்டுமாய் அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.


இவ்வாறு அக்கடிதத்தில் ஜெயலலிதா கூறியுள்ளார்.
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEierAglw_HdzYojo0c7_fOvXqcepltLpZ89F-ZR5HA1swVxkAJFC4THQrzbz7Mnaq45mpsi5VkPPOUOFChRs32XP9CT5yhdnQTCO1lrW_ukghUFaAUDyqMZDA_VPDq5q0KatvwLzQ96eTPN/s1600/42b.jpg
 மக்கள் கருத்து 

1. சாதனை!சாதனை!! சாதனை!!! மக்களின் வேதனை!வேதனை!! வேதனை!!!


கடந்த ஆட்சிக் காலத்தில் 600 கோடி ரூபாய்க்கு மேல் செலவிட்டு கட்டப்பட்ட தலைமைச் செயலகத்தைப் பயன்படுத்த மாட்டேன் என்று இட நெருக்கடிக்கிடையே பழைய தலைமைச் செயலகத்திலேயே தொடர்ந்து இருக்கின்ற இமாலயச் சாதனை!



பாவேந்தர் செம்மொழித் தமிழ் ஆய்வு நூலகத்தை ஆட்சிக்கு வந்த நாளிலேயே வெளியே தூக்கி எறிந்த வியத்தகு சாதனை!


திமுக ஆட்சியில் கட்டப்பட்டு பாதியில் நின்றிருந்த தலைமைச் செயலகத்தின் இரண்டாம் கட்டமாக நிறைவேற்ற வேண்டிய கட்டிடங்கள், “கலைவாணர் அரங்கப்” பணிகள் ஆகியவற்றைத் தொடராமலும்; அதுபற்றிக் கொஞ்சமும் சிந்திக்காமலும், கிடப்பிலே போட்ட கித்தாப்புச் சாதனை!



ஆசியாவிலேயே மிகப் பெரியதும், அண்ணா நூற்றாண்டு நிறைவை யொட்டி அதன் நினைவாக சென்னை கோட்டூர்புரத்தில் கட்டப்பட்டதுமான நூலகத்தை குழந்தைகள் மருத்துவமனையாக மாற்றுவதாக அறிவித்த மாபெரும் சாதனை!



ஏழை மாணவர்கள் - வசதி படைத்த மாணவர்கள், நகர்ப்புறத்து மாணவர்கள்- கிராமப்புறத்து மாணவர்கள் என்று வழிவழி வந்த வேறுபாடுகளை அகற்றும் சமச்சீர் கல்வி முறைக்கு 23.5.2011 இல் தடை விதித்த தனிப் பெரும் சாதனை.



சமச்சீர் கல்விக்காக 200 கோடி ரூபாய் செலவழித்து அச்சடிக்கப்பட்ட புத்தகங்களையெல்லாம் விநியோகிக்காத விண்ணுயர் சாதனை!


ஆசிரியர்கள் நியமனத்திலும், ஆசிரியர்களுக்கு மாறுதல் வழங்குவதிலும் குளறுபடிகளை ஏற்படுத்தி, அதில் ஆளுங்கட்சியினர் குளிர் காய்ந்த குதூகலச் சாதனை!


சத்துணவுப் பணியாளர்கள், அங்கன் வாடிப் பணியாளர்கள் நியமனங்களில் ஆளுங்கட்சியினர் புகுந்து விளையாடிய அற்புத சாதனை!



இதுவரை எந்த ஆட்சியிலும் இல்லாத அளவிற்கு நாள் ஒன்றுக்கு 20 மணி நேரத்திற்கு மேல் மின்வெட்டு செய்த மின்னல் வேகச் சாதனை.




திமுக ஆட்சிக்காலத்தில் திட்டமிட்டு பணிகள் தொடங்கப்பட்ட மேட்டூர் புதிய அனல் மின்நிலையம், வடசென்னை அனல்மின் நிலையம் - யூனிட் (1), வடசென்னை அனல்மின்நிலையம் யூனிட் (2), வல்லூர் யூனிட் (1), வல்லூர் யூனிட் (2), வல்லூர் யூனிட்(3), தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் புதிய யூனிட் ஆகியவற்றை; திமுக ஆட்சியில் திட்டமிடப்பட்டவை என்ற ஒரே காரணத்திற்காக, உரிய காலத்தில் மினுற்பத்தி செய்வதில் அக்கறை காட்டாத அபார சாதனை!


வரலாறு காணாத மின்வெட்டு காரணமாக பல்லாயிரக்கணக்கான தொழில்முனைவோர், விசைத்தறியாளர், தொழிலாளர்கள் பாதிப்புக்கு ஆளாகி; ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் உற்பத்தி பாதிப்பு ஏற்பட்டு; தெருவுக்கு வந்து போராடும் திகைப்பூட்டும் சாதனை!


பாலுக்கும் காவல்; பூனைக்கும் தோழன்” என்ற வகையில் கூடங்குளம் அணுமின்நிலையப் பிரச்சினையில் இரட்டை வேடம் போட்ட இணையிலாச் சாதனை!



தமிழகத்தில் பொறியியல் உயர்கல்வி பரவலாக்கப்பட்டு, அந்தந்த பகுதிகளில் உள்ளோர் பயனடையும் பொருட்டு; திருச்சி, கோவை, மதுரை, நெல்லை ஆகிய இடங்களில் திட்டமிட்டு உருவாக்கப்பட்ட அண்ணா பல்கலைக் கழகங்களை ரத்துசெய்து உருக்குலைத்த ஒப்பற்ற சாதனை!
ஏழை எளியோருக்குப் பயன் தரும் எந்த இலவசத் திட்டத்தையும் முழுமையாகச் செயல்படுத்தாத முக்கியச் சாதனை!



எடுத்துக்காட்டாக, 2011 பொங்கல் திருநாளையொட்டி வழங்க வேண்டிய இலவச வேட்டி - சேலைகளை எட்டு மாதங்கள் கடந்த பிறகும் இன்னும் வழங்கி முடிக்காத வரலாற்றுப் புகழ் சாதனை


- கல்வியாண்டு தொடங்கி ஐந்து மாதங்கள் கடந்த பிறகும் இலவச மடிக் கணினிவழங்கும் பணியும் - இலவச பஸ் பாஸ் வழங்கும் பணியும் முடிந்த பாடில்லாத முக்கியமான சாதனை!.




இதுவரை எந்த ஆட்சியிலும் இல்லாத அளவிற்கு அமைச்சர்களை அடிக்கடி மாற்றி, அமைச்சர்கள் மத்தியில் நிச்சயமற்ற தன்மையும், நிரந்தர நடுக்கமும் நிலவுவதற்கு வழிவகுத்த நிகரற்ற சாதனை!



எந்த இடத்திலும் காலூன்ற முடியாத அளவுக்கு அதிகாரிகளை அடிக்கடிப்பந்தாடும் அநியாய சாதனை!
குறுவைச் சாகுபடியைக் கனவாக்கி, சம்பாச் சாகுபடியையும் ஏக்கத்திற்கு உள்ளாக்கிய இணையில்லாச் சரித்திரச் சாதனை!



கட்சி மாச்சரியத்தோடு, நில அபகரிப்பு என்ற பெயரால் முன்னாள் அமைச்சர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள், திமுக முன்னணியினர் மீது சட்ட விதிமுறைகளுக்குப் புறம்பாகப் பொய்யான வழக்குகளைத் திரும்பத் திரும்பத் தொடுத்து கைது செய்து சிறையிலே அடைத்த சிறப்பான சாதனை!
மதுபான உற்பத்தியாளர்கள் மேலும் லாபம் சம்பாதிக்க ஏதுவாக, மது பானங்களின் விலையை உயர்த்திய மாபெரும் சாதனை!



கொலை இல்லாத நாட்களே இல்லை; கொள்ளை நடக்காத ஊர்களே இல்லை; வழிப்பறி நடக்காத சாலைகளே இல்லை; பெண்கள் வெளியே புறப்பட்டால் கழுத்திலே உள்ள தாலிச் சங்கிலிகள் நிலைத்திருக்குமா என்பதே கேள்விக்குறி; போலீஸ் தடியடி, கண்ணீர்ப் புகை, துப்பாக்கிச் சூடு என்று சட்டம் - ஒழுங்கு நிலையைப் படாதபாடு பட வைத்த பரவச சாதனை!



பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்வு காணவேண்டிய பிரச்சினைகளுக்குக் கூட போலீஸ் படையை அனுப்பி அடக்குமுறை மூலம் தீர்வு காண முயற்சிக்கும் அரிய சாதனை!


பால்விலை உயர்வு, பஸ் கட்டண உயர்வு, மின் கட்டண உயர்வு, அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களின் விலை உயர்வு என்று ஏழை எளிய நடுத்தரமக்களை வாட்டி வதைத்திடும் வளமான(?) சாதனை!



இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படை உரிமைகளில் ஒன்றான கருத்துச் சுதந்திரத்தின் கழுத்தை நெரித்திடும் வகையில்; ஆட்சியினரையும் அவர்தம் செயல்பாடுகளையும் ஆரோக்கியமான முறையில் விமர்சனம் செய்திடும் எதிர்க்கட்சித் தலைவர்கள் மீதும், பத்திரிகைகள் மீதும் வழக்குத் தொடுத்து அச்சுறுத்த நினைக்கும் அபார சாதனை!



தமது இயலாமையை மறைத்து மக்களைத் திசை திருப்புவதற்காக; எதற்கெடுத்தாலும் மத்திய அரசின் மீதும், இந்தியப் பிரதமர் மீதும், முன்னாள் ஆளுங்கட்சியான தி.மு.க மீதும் பழி சொல்லிப் புழுதி வாரித் தூற்றும் புரட்சிகர சாதனை!



ஜனநாயக நடைமுறைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து, மனசாட்சிக்குப்பயந்து, வாக்களித்த மக்களுக்குப் பயந்து, எதிர்க்கட்சியினருக்குப் பயந்து, பத்திரிகைகளுக்குப் பயந்து நடைபெற்ற தி.மு.க ஆட்சிக்கு மாறாக; அனைத்துத் தரப்பினரையும் பயமுறுத்தியே ஆட்சி நடத்தும் பண்பட்ட(?) சாதனை!





2. முருகேஷன் - இதயதெய்வம் வேறு என்னெதற்கெல்லாம் சத்தியம் வான்கினார் என்று இப்பவே மொத்தமாக சொல்லி விடுங்கள். சஸ்பென்ஸ் தாங்க முடியவில்லை
ஒரு பெண்ணாக தனித்து நின்று தமிழக அரசியலில் சாதித்திருப்பது முன் உதாரணங்கள் இல்லாததுதான்.நிறைகள் பல இருந்தாலும் குறைகளும் உங்கள்
காதுகளில் விழும்படி சுற்றியிருக்கும் அரண்கள் வழி செய்திடல் வேண்டும்.


இடிந்தகரையிலும் மணப்பாட்டிலும் அனியாய சாவுகளை தடுத்திருக்கலாம்.
உங்களுக்கு கூழை குப்பிடு போடுபவரை விட உங்களது குறைகளை சுட்டிக்காட்டுபவரை நம்பலாம்.
ஆதாயத்திற்காக சொல்லப்படுபவை அல்ல அது.

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgCdOVV4go41YIeZ7qC4ypUAsSAiNnYVj0aK_63SNvKUiF2nDR9E-n4MHbbw8DczqIkJmSTvflG5dp4_QsYwRxbzQ38JfYWc7RDAcspjQq4bLgaJniItRQwlBK-1wjn6ZHUI6OxFkoRpnw/s1600/mgr-mk.jpg




3. Dr.Mrs.MeenakshiPrabhakar




அ.தி.மு.க தொண்டர்களை காப்பாற்ற தம் வாழ்வை அர்ப்பணிக்க வேண்டுமென்று எம்.ஜி.ஆருக்கு சத்தியம் செய்து கொடுத்திருக்கும் நிலையில், ஜெயலலிதா கட்சித் தலைவர் பொறுப்பை மட்டுமே வகிக்க வேண்டும்.முதல்வர் பதவி முழுதும் நாட்டும் மக்கள் பிரதினிதித்துவம்.



அரசு கொள்கைகளான நல்லிணக்கம், சார்பின்மை , தனி நபர் வாழும் உரிமை நிறுவ வேண்டிய தளம்.எம்.ஜி.ஆர் என்றும் அ.தி.மு.க மக்களுக்காக தன் வாழ்வை அர்ப்பணித்துக் கொண்டிருக்கிறேன் என்று சொன்னதில்லை.உலக அளவிலான விரிந்த சமூக சிந்தனை அவர் பாடல்களில், திட்டங்களில் உண்டு.அவர் நிலைத்த புகழ் பெறவும் அதுவே காரணம்.




கட்சி வித்தியாசமின்றி அரசுத் தளத்தில் மக்கள் நலனை முன்னிறுத்தி அரசியல் தலைவர்கள் செயல்படும் நிலை உண்மையான ஜனனாயகம்.கட்சி தலைவர் பொறுப்பு, மக்கள் நல செயல்களில், மக்களை உயர்த்த திறன் தருவதிலான பகிரும் பொறுப்பே தவிர போட்டியில்லை
 https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgA8Nh8Nnx8hAg3kdTxxbpfFNBFf0lNVrVh3x6UUhI1Mlqmf9gmar3AC7Ulzk_S-myh_fJKW1jUd0OtWV9QuGVa-UXBLCdVbndJYcKh6QyXZK4mNQD9sImQTMmtr3UFwgsX9lJRnprMoN0/s1600/mgramachandran17.jpg
 a

நன்றி - விகடன்

1 comments:

indrayavanam.blogspot.com said...

நல்லபதிவு,புதிய தகவல்