Sunday, October 28, 2012

கோவை - மூங்கில் கூடை தொழிலாளர்கள்

வெளிச்சத்துக்கு வரும் வித்தியாச வாழ்வுகள்!

காய்ந்து போன மூங்கில் வாழ்வு!

கோவை ஆர்.பாலா

மூங்கிலுக்கு உரித்தான அடர்ந்த வனத்தை நினைவுபடுத்தும் இயற்கை மணம். நாம் சென்ற கோவை முத்தண்ணன் குளப் பகுதியைச் சூழ்ந்து இம்மணம் நம்மை வரவேற்க, ஒரு பக்கம் மூங்கிலிலிருந்து நாரெடுப்பது, சின்னச் சின்னத் தப்பைகளாகக் கிழித்துக் கூடைகள் முடைதல், தட்டிகள், பாய்கள் செய்தல்... என ஏரியாவே கலகலத்துக் கொண்டிருந்தது. ஆனால், காய்ந்த மூங்கில்களாகக் காட்சித் தருகின்றன கோவை முத்தண்ண குளம், ஆர்.எஸ்.புரம், இரத்தின சபாபதித் தெரு, தாமஸ் வீதி, கிரிக்ரி ரோடு என்ற பகுதிகள். சுமார் 1500க்கும் அதிகமான குடும்பங்களில் கிட்டத்தட்ட ஆறாயிரத்துக்கும் மேற்பட்டோர் வாழ்கிறார்கள்.

எண்பத்தைந்து வயதான காளியப்பனிடம் பேசினோம். நான் இங்கே வாழ்ந் துட்டு இருக்கிற அஞ்சாவது தலைமுறை. இருநூறு வருஷங்களுக்கு முன்னால் மைசூரில் இருந்து இங்கு வந்து குடியேறினாங்க எங்க முன்னோர்கள். தாய்மொழி கன்னடமாக இருந்தாலும் 200 வருடப் பேச்சு, மற்ற பழக்க வழக்கங்கள், சுத்தமான கொங்கு மட்டலத்துக் காரங்களா எங்களை மாத்திடுச்சு. பத்து வார்த்தைகள் பேசினா அதுல நாலு கன்னட வார்த்தைகள் ஆறு தமிழ் வார்த்தைகள் இருக்கும். அதுவும் கொங்குத் தமிழ்" என்று பூரிக்கிறார்.

தலைவர்தான் (எம்.ஜி.ஆர். படத்தைக் காட்டுகிறார்) எங்களை வாழ வெச்ச தெய்வம். இப்போஅம்மா’. அம்மா முதல் முதல்ல ஆட்சியில அமர்ந்தப்ப எங்களுக்கு இலவசமாக இப்ப இருக்கற வீடுகளைக் கட்டிக் கொடுத்து, கூட்டுறவு சங்கம் அமைச்சுக் கொடுத்தாங்க. அதற்கு முன்னாடி வரைக்கும் மண் சுவரும், ஓலைக் குடிசைகளிலும்தான் எங்க வாழ்க்கை! இப்ப எங்களுக்கு ரேஷன் கார்டு, கார்ப்பரேஷன் தண்ணின்னு எல்லாம் இருக்கு. புள்ளைங்க படிக்க பக்கத்திலேயே மாநகராட்சிப் பள்ளிகள் எல்லாம் இருக்கு. ஆனால் தொழில் தான் இல்லை சுபிட்சமா" என்ற வரை இடைமறித்து ஐம்பது வயதான முருகேசன் தொடர்ந்தார்.

ஒரு காலத்தில் கோயமுத்தூரைச் சுற்றிலும் இருக்கிற கிராமத்து விவசாயிகளுக்கெல்லாம் தண்ணி இறைக்க கிணத்து மக்கிரி, நாத்துக்கூடை, மக்கிரி முறங்கள், தானியங்கள் சேமிக்க குதிரு, சாடு, செடிக் கூடை, பஞ்சாரம் தட்டிகள், வீட்டு விசேஷங்களுக்கு பொட்டிக் கூடை, சீர்ப்பேழை, போனை மூடி, தட்டிகள், பாய்கள்... என செஞ்சு மாளாதுங்க. இப்ப எல்லாம் எங்கும் எதிலும் பிளாஸ்டிக் வந்துடுச்சு. கூடவே பஞ்சாலைகள் எல்லாத்தையும் இழுத்து மூடின உடன் ஆயிரக்கணக்கில் வருமானம் தந்த பஞ்சுக் கூடைகள் உற்பத்தியும் நின்னு போச்சு. இதெல்லாம் எங்க வாழ்க்கையைத் தலைகீழா புரட்டிப் போட்டுடுச்சு. ஒரு கூடை வித்தால் இரண்டு ரூபாய் கிடைப்பதே அதிகம். மூங்கில்கள் வெட்டறப்பவும், கிழிக்கறப்பவும் அடிக்கடி ஏற்படற ரணங்களின் வலியைவிட, எங்கள் தலைமுறை தலைமுறையான வாழ்வாதாரம் திசைமாறிப் போனதுதான் அதிகமா வலிக்குது" என்கிறார் பெருமூச்சுடன்.

எங்களைச் சேர்ந்தவங்க கிட்டயே நாங்க தினக்கூலிகளா வேலை செய்றோம். இந்தக் கூட்டுறவு சொஸைட்டி ரொம்ப காலமாய்ப் பூட்டிக் கிடக்குது. எங்க பேப்பர்கள் எல்லாம் இன்னும் இதுலதான் இருக்கு. இதைத் திறந்து எங்கள் தொழிலுக்குக் கடனுதவி செஞ்சு அரசாங்கமே பொருள்களை விற்க ஏற்பாடு செய்தால் பிழைச்சுக்குவோம்" என்றார் மூடப்பட்ட சொஸைட்டி கதவுகளை ஏக்கத்துடன் பார்த்துக்கொண்டே.
தங்கமணி, புஷ்பா, ஜோதிமணி, ராஜேஸ்வரின்னு ஏகப்பட்ட பெண்கள் நம்மைச் சூழ்ந்து கொண்டார்கள்.
எங்க ஆம்பிள்ளைங்க நெலமையே இப்படின்னா எங்களைப் பத்திச் சொல்லவே வேண்டாம். வீட்டு வேலைகளுக்குக்கூட எங்களை உள்ளே விடமாட்டறாங்க. ஏதோஅம்மாமனசு வெச்சா எங்களுக்குக் கைவினைப் பொருள்கள் செய்யத் தொழிற் பயிற்சியும் பேங்க் லோனும் கொடுத்தா முன்னேறிக்குவோம்" என்று நம்பிக்கையுடன் பேசுகின்றனர்!

குடும்பச் சுமைகளுக்குத் தோள் கொடுக்க வழி தேடும் அந்தப் பெண்கள் ஆதங்கம், ‘கடவுள்தான் வழி காட்ட வேண்டும்என்ற முணுமுணுப்பாக மாறுகிறது.
எங்க பசங்களுக்குக் கூடை முடையற தொழிலே என்னன்னு தெரியாது. யாரும் இதைக் கத்துக்க முன்வரல. ஏதோ கொஞ்சம் படிக்கிறாங்க. கொஞ்சம் வளர்ந்த உடனே சாரம் கட்டறது, பெயின்டிங், ஒர்க்ஷாப், கரண்ட் வேலைன்னு போயிறடாங்க. எங்களுக்கு அப்புறம் இந்தத் தொழிலை யாரும் கண்டுக்கப் போறதில்லை. இது எவ்வளவு வேதனை தெரியுமா?
இப்போதைக்கு அதிகமாப் போற பொருள்கள்னு பார்த்தீங்கன்னா, பழம், காய்கறிகள் அடைத்து அனுப்பும் கூடைகள் தான். பிளாஸ்டிக்கில் பார்சல் செய்தால் வெம்பிப் போகும். இந்தக் கூடைகள் என்றால் குளிர்ச்சியாவே பல நாட்களுக்குத் தாங்கும். ஊட்டி, ஈரோடு, சென்னை இங்கெல்லாம் இந்தக் கூடைகளை அதிகமாவே வாங்கிட்டுப் போறாங்க. ஆனா, அடிமாட்டு விலைக்குக் கேட்பாங்க. அப்புறம் கான்கிரீட் தட்டிகள், ஸ்கிரீன் தட்டிகள் என ரெகுலரான ஆர்டர்கள் கிடைக்கும். எங்கள் தயாரிப்பில் வீட்டு உபயோகப் பொருள்களுக்குச் சுத்தமாவே அடிதான்" என்கிறார்கள் அன்புவும், சந்திரனும்.

ஹிந்துஸ்தான் கல்லூரியில் BBM படிக்கும் மாணவன் அசோக்குமாரிடம் பேசினோம். நான் நிறையப் படிச்சு பெரிய வேலைக்கு வரணும். அரசாங்கத்தை அணுகி என் பகுதி இளைஞர்களுக்கும் மற்றவர்களுக்கும் தகுதியான உதவிகளைப் பெற்றுத் தரணும். படிப்பின் அவசியத்தை வற்புறுத்தி நிறையப் பேரை படிக்க வைக்கணும். இதுதான் என் இலட்சியம்" என்றார்.
இந்தப் பகுதியில் ஆட்டோ ஓட்டி சம்பாதிக்கும் செல்வராஜ், என் அப்பா, அம்மாவே இந்தத் தொழில் உனக்கு வேண்டாம்; வேற எதையாவது செஞ்சு பொழச்சுக்கோன்னு சொன்னாங்க. நான் ஆட்டோ ஓட்டறேன். என் தம்பி டாக்ஸி ஓட்டறான். இங்கிருக்கிற இளைய தலைமுறைகள் இப்ப வேலைக்குப் போறதைத்தான் விரும்பறாங்க" என்று பக்கத்தில் நின்று கொண்டிருந்த இளைஞர் கூட்டத்தைக் காட்டினார். அவர்களை அணுகினோம்.

ஏன் நீங்க உங்க தாத்தா, அப்பா செய்யற வேலை செய்தால் என்ன" என்று கேட்டால், அவங்களைவிட நாங்க நல்லாவே சம்பாதிக்கிறோம். இன்னைக்கு யாராவது வருவாங்களா? பொருள்களை வாங்குவாங்களான்னு ஏக்கத்துடன் அவங்க காத்திட்டு இருக்காங்க. ஆனா, எங்க நிலைமை அப்படி இல்லை. வேலைக்கு ஆள் வர மாட்டாங்களான்னு தேடிட்டு இருக்கற கம்பெனிகளில் கடுமையா உழைச்சுச் சம்பாதிக்கிறோம். செய்யற தொழிலை நல்லாக் கத்துக்கறோம். சொல்ல முடியாது நாங்களே எதிர்காலத்தில் சொந்தமாகத் தொழில் செஞ்சு குடும்பத்தைக் காப்பாத்துவோம்," என்கின்றனர்.
அருகே இருக்கிற கோயிலைக் காட்டி இது உங்களுக்குச் சொந்தமான கோயிலா என்று கேட்டதுதான் தாமதம், ஆரம்பத்தில் நம்மிடம் பேசிய காளியப்பன் உற்சாக மானார். எங்க முன்னோர்கள் 200 வருஷங்களுக்கு முன்னாடி மைசூரை விட்டுக் கிளம்பறப்போ இந்த அம்மனும் எங்களுக்குக் காவலாய் புறப்பட்டு வந்துடுச்சு. இங்கேயே இருந்து எங்களைக் காத்து அருள் பாலிக்கறாள். இவள் அனுமதி இல்லாமா இங்க எதுவும் நடக்காது. அம்மன் இங்க வந்து ஐக்கியமானது தை மாதமாம். அதனால் ஒவ்வொரு தை மாதமும் ஒரு வாரம் இந்த அம்மனுக்கு பொங்கலும், கிடா வெட்டும் எங்க ஜனங்க ஒண்ணாச் சேர்ந்து பெரிய திருவிழாவாகக் கொண்டாடுவோம்" என்கிறார்.

மேட்டுப்பாளையம், ஊட்டி, பொள்ளாச்சி, உடுமலைன்னு பரவி இருக்கிற எங்க சொந்தங்கள் எல்லாம் ஜேஜேன்னு வந்துடுவாங்க. பல திருமணங்கள் அப்போ நிச்சயமாகும். சொந்தங்களில் மட்டும்தான் திருமணம் என்பது காலம் காலமாக நாங்கள் செய்து வருகிறோம். மாப்பிள்ளை அழைப்பு ரொம்பவும் விசேசம். மற்றபடி சாதாரண முறையில்தான் திருமணங்கள். வரதட்சணை அது இதுன்னு எந்தப் பிரச்னையும் இல்லை" என்கிறார்.
அழகான கூடைகளை கலைநயத்தோடு முடையும் இவர்களது வாழ்வை காலம்தான் கன்னாபின்னாவென்று முடைந்து விட்டது. அவர்களிடமிருந்து நாம் விடைபெறும் போது ஒரு பெரியவர் சொன்னார், ‘கூட்டுறவு சொஸைட்டியைத் திறக்கறது போல எழுதுங்க. அதுதான் எங்களுக்கு நீங்க செய்யற உதவிஎன்றார்.
படங்கள் : .சுந்தரராஜன்
நன்றி - கல்கி , புலவர் தருமி 



0 comments: