Thursday, October 25, 2012

இந்தியாவின் டாப் 11 திரைக்கதை ஆசிரியர்கள் - கே பாக்யராஜ் பேட்டி @ விகடன்

விகடன் மேடை - கே.பாக்யராஜ்

அ.ராஜப்பன், கருமத்தம்பட்டி.


 ''தாங்கள் தி.மு.க-வில் சேர்ந்து தேர்தல் காலங்களில் முழு ஈடுபாட்டோடு பிரசாரம் செய்தீர்கள். ஆனால், கட்சியில் தங்களுக்கு எந்தப் பதவியும் தரப்படவில்லை. அதனால்தான், கே.பாக்யராஜுக்கு அரசியல் தேவை இல்லை என்று ஒதுங்கிவிட்டீர்களா?''  



''தப்பு செஞ்சாங்களோ இல்லையோ... ஆனா, பதவியில் இருக்கிறதாலேயே நாட்டுல நிறையப் பேர் குற்றம்சாட்டப்பட்டு மாட்டிக்கிட்டு முழிக்கிறாங்க. நல்லவேளை... நான் அந்த வகையில் பேர் கெட்டுப் போக வைக்கிற பதவிக்கு ஆசைப்பட்டு எந்த விஷயத்தையும் செய்யலைனு என்னை நானே சமாதானப்படுத்திக்கிட்டேன். திருப்தியா இருக்கேன்!''



எம்.ராஜன், சென்னை-4.


 ''தமிழிலும் பிற மொழிகளிலும் நீங்கள் வியந்து ரசிக்கும் திரைக்கதை ஆசிரியர்கள் யார் யார்?'' 



''பி.ஆர்.பந்துலு சார், பீம்சிங் சார், ஸ்ரீதர் சார், கே.பாலசந்தர் சார், ஜி.பாலசுப்ரமணியம் சார், ஜாவர் சீதாராமன் சார்... இவங்கள்லாம் தமிழ்ல. இந்தியில் சலீம் ஜாவத், பாசு சட்டர்ஜி, ரிஷிகேஷ் முகர்ஜி, 'ஷோலே’ இயக்குநர் ரமேஷ் சிப்பி. இப்படி நிறையப் பேர் இருக்காங்க. சிவாஜி சாரை வெச்சு 'முரடன் முத்து’ சக்சஸ் கொடுத்தாரு பி.ஆர்.பந்துலு சார். அவரே எம்.ஜி.ஆர். அவர்களை வெச்சு 'ஆயிரத்தில் ஒருவன்’ படமும் ஹிட் கொடுத்தாரு. இப்படி ஒவ்வொருத்தருக்கும் நான் சொல்ல ஆரம்பிச்சா, தனிப் புத்தகமாத் தான் போடணும்!''




ஆ.கோவிந்தன், செங்கல்பட்டு.


 ''அதென்ன, உங்களுக்கு ஜோடியா நடித்திருக்கும் பெரும்பாலான ஹீரோயின் கள் மூக்குக் கண்ணாடி அணிகிறார் கள்... என்ன சென்டிமென்ட்?''



''சென்டிமென்ட்லாம் எதுவும் கிடையாது. நான் கண்ணாடி போடுறதால ஜோடியும் கண்ணாடி போட்டாலாவது ஏதாவது கெமிஸ்ட்ரி வொர்க்-அவுட் ஆகுமேனு ஒரு நப்பாசைதான்!''



என்.நாராயணன், செங்கம்.



 ''உண்மையைச் சொல்லுங்க... உங்க டான்ஸைப் பார்த்தா உங்களுக்கே சிரிப்பு வருமா... வராதா?''



''சில விஷயங்களை எப்போ, எத்தனை தடவை பார்த்தாலும் திரும்பத் திரும்பப் பார்க்கத் தூண்டும். உதாரணத்துக்கு...



1. அழகான குழந்தை முகம்
2. ஆகாய விமானம்
3. யானை
4. என் டான்ஸ்.
இப்போ உங்களுக்கும் சிரிப்பு வருதுல்ல!''




இரா.தோணி, தூத்துக்குடி.



''என்னதான் இருந்தாலும் சில்க் ஸ்மிதாவிடம் இருந்த கிளுகிளுப்பு, கிறக்கம் இப்போதைய ஹீரோயின்களிடம் இல்லைதானே. தலைவா... உண்மை சொல்லுங்க?''



''அது வேற ஒண்ணும் இல்ல... சில்க் ஸ்மிதா கண்ணுல ஒரு மாதிரி மயக்கமும் கிறக்கமும் உண்டாக்குற வசீகரம் ஒளிஞ்சிருக்கும். அந்தப் பொண்ணு கோபமா பார்த்தாக்கூட சுண்டி இழுக்குற மாதிரி இருக்கும். சில்க்கோட ரெண்டு கண்களை மட்டும் க்ளோஸப்ல பார்த்தாலே, ஜிலீர்னு இருக்கும். அது அவங்களுக்குக் கிடைச்ச வரம். என்ன... சினிமாலயும் ரொம்ப நாள் இல்லாம, சொந்த வாழ்க்கை யிலயும் நிம்மதியா இல்லாம இறந்துட்டாங்க. அவங்க ஆத்மா சாந்தி அடையப் பிரார்த்திப்போம்!''



கி.ராஜேஷ், தஞ்சாவூர்.



 ''அடிக்கடி 'சமாசாரம் சமாசாரம்’னு சொல்லிட்டே இருக்கீங்களே... என்னங்க அது சமாசாரம்?''



''அப்போ நான் ஸ்கூல் பையன். பள்ளி ஆண்டு விழா வுக்கு ரவீந்திரநாத் தாகூரின் 'தி ஹோம் கம்மிங்’ சிறுகதையை நாடகமாப் போடலாம்னு முடிவுபண்ணி, ரிகர்சல் போய்ட்டு இருக்கு. நான் நடிக்கிறதோட அப்பப்ப மத்தவங்க நடிக்கிறதையும் கவனிச்சு, தோணுற விஷயங்களைச் சொல்லிட்டு இருந்தேன். வாத்தியார் பாராட்டி தட்டிக் கொடுத்துட்டு இருந்தாரு. அப்போ ஒரு நாள், லேடி டீச்சர்ஸும் ரிகர்சல் பார்க்க வந்திருந்தாங்க. அப்ப ஒரு சீன் முடிஞ்சு அடுத்த சீனுக்குப் போகலாம்னு வாத்தியார் சொல்ல... நான், 'இல்ல... இதே சீனை இன்னொரு தடவை நடிக்கவைங்க’னு சொன்னேன்.


அந்த சீனை மறுபடி நடிக்கவெச்சுப் பார்த்துட்டு, 'எல்லா ரும் சரியாத்தான் டயலாக் பேசுறாங்க’னு வாத்தியார் சொல்ல, நான் ஒரு பெரிய கிளாஸ் பையனைக் காட்டி, 'அவர் நடிக்கும்போது கவனிங்க’னு சொன்னேன். இன்னொரு தடவையும் ரிகர்சல் பார்த்துட்டு, 'அவர் டயலாக் எல்லாம் சரியாத்தானே பேசினார்’னு வாத்தியார் சொல்ல, 'இல்லை... அந்தப் பையன் சரியாப் பண்ணலை’னு ஒருமாதிரி மென்னு முழுங்கி சொல்றேன். 'என்ன சரிஇல்லே?’னு வாத்தியார் கேட்க, நான் தயங்கி நிக்க, 'டேய்... என்ன தப்புனு சொன்னாத்தானே தெரியும்’னு வாத்தியார் என் வாயைப் புடுங்க... லேடீஸ் டீச்சர்ஸைப் பார்த்துட்டே நான் முழுங்கி முழுங்கிப் பேசுறேன். 'சார்... அந்தப் பையன் இடது பக்கம் சட்டை பாக்கெட் மேல ஸ்கூல் பேட்ஜ் குத்தியிருக்கார். நடிக்கும்போது அவரை யும் அறியாம இடது கை அந்த பேட்ஜைத் திருகிட்டே இருக்கு’னு சொன்னேன்.



 புரியாமப் பார்த்த வாத்தியார், 'ஏண்டா... இது ஒரு தப்பா டா?’னு கோபப்பட்டார். 'இல்ல சார்... மூணு தடவை நடிக்கிறப்பவும் அவர் விடாம பேட்ஜை அப்படித் திருகிட்டே இருந்தார். இப்ப ரிகர்சல்ல யூனிஃபார்ம்ல இருக்கார். ஆனா, மேடையில நடிக்கும்போது, எல்லாருக்கும் அந்தந்த கேரக்டர் மேக்கப்தான் போட்டிருப்பாங்க. அப்போ இவர் பேட்ஜைத் திருகிற மாதிரி கை போனா ரொம்பத் தப்பா இருக்கும் சார். ஏன்னா, இவர் நாடகத்துல லேடீஸ் வேஷம் போடுறார். இதே பழக்கதோஷத்துல அப்போ கை வெச்சா தப்...’னு நான் முடிக்கிறதுக்குள்ள லேடீஸ் டீச்சர்ஸ், 'ஐயோ’னு சவுண்டு கொடுத்துட்டே வெட்கப்பட்டு எந்திரிச்சு வெளியே போயிட்டாங்க. வாத்தியாரும் சிரிச்சுட்டு, 'உனக்கு மட்டும் எப்படிறா அந்த சமாசாரத்துல கண்ணுபோச்சு’னு கேட்டாரு. 'பொம்பள வேஷம்கிறதால உத்துக் கவனிச்சேன்’னு சொன்னேன். ஆக, எட்டாவது படிக்கும்போதே அந்த சமாசாரத்துல கவனம் போனது, இன்னும் அந்த சமாசாரமாவே தொடருது!''



சா.தருமன், காஞ்சிபுரம்.



 ''நீங்கள் நடித்த கதாபாத்திரங்களில் உங்களுக்கு மிகவும் பிடித்தது எது? ஏன்?''



'' 'ஒரு கை ஓசை’ படத்துல வாய் பேச முடியாத மாற்றுத் திறனாளியா நடிச்சது ரொம்பப் பிடிக்கும். ஏன்னா, அப்போ சில முன்னணி நடிகர்கள் இது மாதிரி கேரக்டர்ல நடிக்க முயற்சி பண்ணி, அது பெரிசா வெற்றியடையல. அதனால் நான் அப்படி நடிச்சப்போ, 'எதுக்கு இந்த வேண்டாத வேலை?’னுதான் பலரும் சொன்னாங்க. ஆனா, எனக்குக் கதை மேல நம்பிக்கை இருந்துச்சு. அது மட்டும் இல்லாம அந்தப் படத்துல ஹீரோ பேச முயற்சி செஞ்சு நிறைய விநோதமான சத்தங்களை வெளிப்படுத்துவான்.



அதை எல்லாம் மக்கள் ரசிப்பாங்கனு எதிர்பார்த்தேன். ஏன்னா, எங்க ஊர்ல தேவராஜ்னு ஒருத்தர் அப்படித்தான் தான் சொல்ல வேண்டிய சங்கதி யைச் சொல்லுவாரு. அது புரியுதோ இல்லையோ, கேட்க நல்லா இருக்கும். நான் எதிர்பார்த்த மாதிரியே 'ஒரு கை ஓசை’ வெற்றி அடைஞ்சது. அடுத்ததா, பாலக்காட்டு மாதவன் கேரக்டர் பிடிக்கும். ஏன்னா, நிஜமாவே அப்படி சூதுவாது இல்லாம ஒருத்தன் இருந்தா, எல்லாருக்கும் அவனைப் பிடிச்சுப்போகும்ல. அந்த கேரக்டர் தான் என்னை எல்லார்கிட்டயும் போய்ச் சேர்த்தது!''



சொல்வேந்தன், திருச்சி-4.



 ''சுயநலம் யாருக்கு அதிகம்... ஆணுக்கா... பெண்ணுக்கா?'' 



''இதுல என்ன சந்தேகம்... பெண்களுக்குத்தான்! 'தன்’ புருஷன், 'தன்’ புள்ளைங்க நல்லா இருக்கணும்னு பார்த்துப் பார்த்துச் செய்யிற பாசமான சுயநலத்துல, பெண்கள் கிட்டகூட ஆண்களால நெருங்க முடியாது!''



மா.சின்னய்யா, ராமேஸ்வரம்.



'' 'அந்த 7 நாட்கள்’ படத்தின் க்ளைமாக்ஸில், அம்பிகா உங்களோட சேர்ந்து வாழ ராஜேஷ் அனுமதிக்கிற மாதிரி சீன் வெச்சிருந்தா, அதே வெற்றி சாத்தியமா?''




''இல்லைங்க... அந்தப் படத்துல ஸ்பெஷலே அந்த க்ளைமாக்ஸ்தான். 'சங்கராபரணம்’ இயக்குநர் கே.விஸ்வநாத் சார் 'சப்தபதி’னு ஒரு படம் பண்ணியிருந்தாரு. அதுவும் கிட்டத்தட்ட 'அந்த 7 நாட்கள்’ கதைதான். ஒரு ப்ரிவியூ ஷோல என்னை அவர் பார்த்தப்ப, 'நானும் நீங்களும் ஒரே மாதிரி ஒரு படம் பண்ணோம். ஆனா, க்ளைமாக்ஸ் மட்டும் வித்தியாசம். அந்த க்ளைமாக்ஸ்னால மட்டும்தான் என் படம் ஃபெயிலியர் ஆச்சு. யுவர் க்ளைமாக்ஸ் இஸ் வெரி பவர்ஃபுல்’னு சொன்னாரு. நம்ம ஊர் எவ்வளவு மாடர்ன் ஆனாலும் நாகரிகம் வளர்ந்தாலும் சில சென்ட்டிமென்ட்கள் எப்பவும் எடுபடும்!''




ச.வேலு, சென்னை-17.



 ''இப்போதைய ஹீரோயின்களில் யாருடன் நடிக்க விரும்புவீர்கள்?''




''ஒருத்தர் ரெண்டு பேர் பேரை மட்டும் சொன்னா ஏதாவது கசமுசா ஆயிடும். அதனால எல்லார்கூடவும் நடிக்க ஆசைனு சொல்லி எஸ்கேப் ஆயிடுறேன்!''



நா.பழனி, வந்தவாசி.



''உங்கள் படங்களில் முதலில் ஹீரோவைக் கோமாளியாகக் காட்டி சிரிக்க வைத்துவிட்டு, பிறகு அவரைப் புத்திசாலியாகச் சித்திரிப்பது ஏன்?'



'
'' 'முந்தானை முடிச்சு’ வாத்தியார், 'இது நம்ம ஆளு’ கோபால் எல்லாம் பார்த்தா உங்களுக்குக் கோமாளியாவா தெரியுது! வாழ்க்கையில ஒவ்வொருத்தரும் ஏதாவது சில விஷயங்கள்ல ஏமாந்து போறவங்கதான். ஒரு சில விஷயங்கள்ல சபாஷ் வாங்குறவங்கதான்!''




- நிறைய பேசலாங்க...



அடுத்த வாரம்



 ''தமிழக எதிர்க் கட்சித் தலைவர் விஜயகாந்த் பற்றி உங்கள் கருத்து?''



 ''டி.வி. ஷோல ஆரம்பிச்சு கிராமத்து மேடைகள் வரை மிமிக்ரி பண்றவங்க உங்க குரல் இல்லாமப் பண்றதே இல்லை. அதை எப்படி எடுத்துக்குறீங்க?''



''முருங்கைக்காய் போன்ற சமாசாரங்களை அப்பவே லேடீஸை ரசிக்கவெச்சீங்களே... எப்படி?''

 பாகம் 1 படிக்க கே பாக்யராஜ் பேட்டி @ ஆனந்த விகடன் 

http://www.adrasaka.com/2012/10/blog-post_7561.html

நன்றி - விகடன்

 பாகம் 2- தமிழ் சினிமாவின் டாப் 10 படங்கள் - கே பாக்யராஜ் பேட்டி 

http://www.adrasaka.com/2012/10/10.html

பாகம் 4 -சிவப்பு ரோஜாக்கள்,சுவர் இல்லாத சித்திரங்கள் ஷூட்டிங்க் ஸ்பாட் சுவராஸ்யங்கள் - கே பாக்யராஜ் பேட்டி

http://www.adrasaka.com/2012/11/blog-post_159.html

0 comments: