Thursday, August 09, 2012

உயிர்வதை! - வில்லவன் கோதை -சிறுகதை

சிறுகதை

உயிர்வதை!

வில்லவன் கோதை

ஜோதி, இன்னிக்கு நைட்டே நாகப்பட்டினம் கிளம்பறோம். பத்து மணிக்கு கம்பன் எக்ஸ்பிரஸ். நாளைக்கு நாகப்பட்டினத்துல ஹால்ட். மறுநாள் ஞாயிறு மார்னிங் திருக்கண்ணபுரம். வேண்டுதல முடிச்சிட்டு அன்னிக்கு நைட்டே சென்னை ரிட்டர்ன். தேவையானதை எடுத்து வெச்சுக்க. ஒங்க அம்மாகிட்டயும் பேசிடு. வாசுவுக்கு சொல்லிட்டேன்" அலுவலகத்திலிருந்து படபடவென்று பேசினான் சுரேஷ்.
வர்றப்ப சாமி பாவாடையை மறக்காம வாங்கிட்டு வந்துடுங்க..."
இடுக்கோடு இடுக்காக சுரேஷுக்கு நினைவூட்டினாள் ஜோதி.
சரி... அனுவுக்கு..."
பட்டுப் பாவாடைச் சட்டை... அம்மா எடுத்துட்டு வந்துடுவாங்க."
ம்...சரி!"
- துண்டித்தான் சுரேஷ். இரண்டு வருடம் நின்றிருந்தது குலதெய்வ வழிபாடு. நெடு நாளாக நெஞ்சை அழுத்திக்கொண்டிருந்த ஒரு சுமை இப்போது மெல்ல தளர்வதை உணர்ந்தாள் ஜோதி.
சுரேஷைக் கைப்பிடித்து, சென்னைக்கு வந்து பத்து வருடங்கள் ஓடிவிட்டன. சமீப காலங்களில் எத்தனையெத்தனை கஷ்டங்கள். அத்தனைக்கும் இதுவேகூட ஒரு காரணமென்று உறுதியாக நம்பினாள் ஜோதி.
இந்த வருடம் கூடுதலாக தங்கள் குழந்தை அனுவுக்கு மொட்டை போட்டு, காது குத்தவும் போகிறார்கள். இரண்டு வருடத்துக்கு முன்பே செய்யவேண்டியது. அனுஷா இப்போது ஆறு வயது முடிந்து யூகேஜி வந்துவிட்டாள்.
இந்த சந்தோஷ சமாச்சாரத்தை அம்மாவோட பகிர்ந்துகொள்ள தொலைபேசி எண்களை அழுத்தினாள் ஜோதி.
அடுத்தகணம் தொலைபேசி மணி நன்னிலத்தில் ஒலித்தது.
அம்மாதான் எடுத்தாள்.
அம்மா... அவருக்கு லீவு கெடச்சிட்டாம். வர்ற ஞாயித்துக்கிழமை அனுவுக்கு காது குத்தல். நீங்கெல்லாம் அண்ணாவோட நேரா கோயிலுக்கே வந்துடுங்க. தோடும் ஜிமிக்கியும் துக்னோண்டு எடுத்துக்கிட்டு வந்து நிக்காதே! செத்த பெரிசாவே எடுக்க வாசுகிட்டே சொல்லு. அனுவுக்கு பட்டுப் பாவாடைச் சட்டை அரக்கு கலர்தான் நல்லா இருக்கும். திருபுவனம் சொஸைட்டியிலேயே எடுத்துடு. ஜிமிக்கி மாயவரம் ஏஆர்சிலேயே வாங்கச்சொல்லு" - தகவலைப் பகிர்ந்த திருப்தியில் தொலைபேசியை வைத்தாள் ஜோதி.
மூவருக்கும் இரண்டுநாள் பயணத்துக்குத் தேவையான துணிகளைத் தேடித்தேடி சேகரித்தாள்.
மூலைக்கு மூலை இறைந்து கிடந்த அனுவின் விளையாட்டுச் சாமான்களைப் பொறுக்கி எடுக்கும்போதுதான், சின்னஞ்சிறு குட்டி நாய் ஜானி ஞாபகம் வந்தது.
அது இந்த நடுத்தரக் குடும்பத்தோடு கலந்து ஏறத்தாழ ஆறுமாதமிருக்கலாம். அனு இப்போதெல்லாம் பள்ளியில் கழிக்கும் நேரத்தைத் தவிர பெரும்பாலும் ஜானியோடுதான்.
இந்த இரண்டு நாள் பயணத்துக்கு ஜானிக்கு ஒரு ஏற்பாடு செய்ய வேண்டும்.
வீட்டின் சுற்றுச்சுவரின் கதவுகளுக்கிடையே இரண்டு கால்களை உயர்த்தி, கம்பிகளுக்கிடையே தலையை நுழைத்து வாலை விசிறியவாறே அனுவின் வருகையைப் பார்த்திருந்தது ஜானி.
சுரேஷ், அனுவோடு பைக்கிலிருந்து இறங்கினான்.
ஒன்னவர் பிஃபோராவே கௌம்பிட்டேன். சாமி பாவாடை வாங்கிக்கிட்டு அப்படியே இவளையும் பிக்கப் பண்ணிட்டு வந்துட்டேன்."- உள்ளே நுழைந்தான் சுரேஷ்.
முதுகை இறுக்கிய புத்தகச் சுமையைத் தளர்த்தி வராண்டாவில் வீசிவிட்டு ஜானியை அள்ளிக் கொண்டாள் அனு.
நாமெல்லாம் ஊருக்குப் போறோம்.. செல்லம்!"
ஜானியின் முகத்தோடு முகம் வைத்தாள் அனு.
ஜானி இல்லை.. நாம மட்டுந்தான்டா தங்கம்."
ஏம்மா..." குழந்தையின் முகம் மாற்றம் பெற்றது.
அனு ! ஊர்ல ஒன்னோட விளையாட புதுசா ஒரு ஃப்ரெண்ட் வெயிட் பண்றான்." அனுவை சமாதானப்படுத்திக்கொண்டே வியர்வை வாசம் நிறைந்த ஆடைகளைக் களைந்தான் சுரேஷ்.
ஜோதி! கிருஷ்ணா ஒரு குட்டி ஆட்ட வாங்கிட்டானாம். கிடா வெட்டித்தான் காது குத்தணுமாம். அவன் ஃப்ரெண்ட்ஸெல்லாம் வர்றாங்களாம்."
இது என்ன புதுப்பழக்கம்..." -முகம் சுளித்தாள் ஜோதி.

மனுஷா ரசனைக்குத் தகுந்தாற்போல பழக்கங்களும் மாறிக்கிட்டுத்தான் வருது..." -நிகழப்போகும் ஓர் உயிர் வதையை அங்கீகரித்தான் சுரேஷ்.
கடாவெட்டா ... என்னப்பா அது..."- அனு, அப்பாவை வியப்போடு பார்த்தாள்.
ஆட்டுக்குட்டியை சாமிக்கே குடுத்துடுறது..."
சுருக்கமாகப் பதிலளித்த சுரேஷ் குளியலறைக்குள் நுழைந்தான்.
காப்பிக்குப் பாலைக் காய்ச்சி வைத்து விட்டு அனுவைக் குளிப்பாட்ட ஜோதி தேடியபோது, அனு சோபாவில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள். ஜானியும் அவள் பிஞ்சு கைகளில் சுகமாகச் சிறைப்பட்டுக் கிடந்தது.
விர்ரென்று ஆட்டோ வட்டமடித்து கிருஷ்ணா வீட்டு வாசலில் நின்றது. முன்னால் பைக்கில் வந்த கிருஷ்ணாதான் குழந்தை அனுவை வாங்கிக்கொண்டான்.
சுரேஷும் ஜோதியும் உடைமைகளை எடுத்துக்கொண்டு வீட்டுக்குள் நுழைந்தனர்.அடுத்த அரைமணியில் கிருஷ்ணாவின் மனைவி கங்கா ஃபில்டர் காபியுடன் உபசரித்தாள். அனு வீட்டின் பின்புறம் தனக்காக காத்திருக்கும் புதிய நண்பனைக் காண ஆவலோடு ஓடினாள்.
வாயிலின் ஓரத்தில் வளர்ந்திருந்த கிளுவ மரத்தின் அடியில் அந்த வெள்ளாட்டுக்குட்டி கயிற்றால் கட்டப்பட்டு கொஞ்சம் கிளுவ இலைகள் உணவுக்காக போடப்பட்டிருந்தது. தன் நுனிப்பற்களால் இலைகளைக் கடிப்பதை நிறுத்தி, தலையைத் தூக்கி தன்னைக் கூர்ந்து நோக்கும் சிறுமியை நோட்டமிட்டது அந்தக் குட்டி ஆடு. அனுவுக்கு அந்தப் புதிய நண்பனை மிகவும் பிடித்து விட்டது. அனுவும் நட்பாகப் பேசி அந்தக் குட்டி ஆட்டின் நெஞ்சுக்குள் நுழைந்துவிட்டாள்.
தமிழகத்தின் பிற மாவட்டங்களைப் போல ஒன்றுபட்ட தஞ்சை மாவட்டத்தில் குலதெய்வ வழிபாட்டு இடங்கள் ஊருக்கு வெளியே எல்லையோரங்களில் அமைந்திருக்கவில்லை. பிரமிப்பூட்டும் உயரங்களில் வண்ணம் பூசப்பட்ட சுடுமண் சிற்பங்கள் கொடூரமான ஆயுதங்களுடன் நின்றதில்லை.
அந்நாட்களில் மூதாதையர்களின் நினைவாக நடப்படும் நினைவுக் கற்களை பெரும்பாலும் தங்கள் தங்கள் வீடுகளுக்குப் பின்புறமே நடப்பட்டு, காலம் காலமாக குல தெய்வங்களாக வழிபட்டு வந்திருக்கின்றனர். அவர்களுக்கு மிகவும் பிரியமான மீனையும் மாமிசத்தையும் படைத்துக் கொண்டாடினர். மதுவையும் சுருட்டையும் கூட வழிபாட்டின் போது படையலிட்டு மகிழ்ந்தனர். அதன் வளர்ச்சிதான் இந்த உயிர்வதை.
சரியாக காலை பதினொரு மணியளவில் பத்து, பதினைந்து பேரை சுமந்து கொண்டு அந்த மகேந்திரா வேன் திருக்கண்ணபுரத்தை அடைந்தது.
சிறப்புமிக்க வைணவ தலங்களில் ஒன்றான சௌரிராஜ பெருமாள் திருக்கோயிலும் எதிரே விரிந்து கிடந்த திருக்குளமும் ரம்மியம். கோயிலைச் சுற்றிப் படர்ந்து கிடந்த வீடுகளைக் கடந்து கிழக்கு மூலையில் ஒதுங்கிக் காணப்பட்ட அங்காள பரமேஸ்வரி ஆலயத்தை அடைந்தபோது முன்னதாகவே மேலும் ஒரு மகேந்திரா வேன் இளைப்பாறுவதை சுரேஷ் பார்த்தான். அந்த வேனில் சம்பந்திக் குடும்பத்தைச் சார்ந்தவர்கள்தான் நன்னிலத்திலிருந்து வந்திருந்தார்கள். மாமியும் மைத்துனனும் வந்தவர்களை இன்முகத்துடன் வரவேற்றார்கள். ஜோதியும் வாசுவும் நெகிழ்வோடு பார்க்க அனு ஓடிப்போய் பாட்டியோடு ஒட்டிக்கொண்டாள்.
இரண்டு வேன்களிலிருந்தும் வந்தவர்கள் ஏறத்தாழ முப்பது பேர்களுக்குள் இருக்கக்கூடும். வேன்களிலிருந்த வேண்டுதலுக்குத் தேவையான அத்தனை பொருள்களும் இறக்கப்பட்டன. அனுவுக்கு பிரியமான குட்டி ஆடும் இறக்கப்பட்டது.
திருப்புகலூரிலிருக்கும் சுரேஷின் சித்தப்பா செல்வம் வழிபாட்டுக்குத் தேவையான ஏற்பாடுகளை முன்னதாகவே செய்திருந்தார். பத்தாண்டுகளுக்கு முன்னால் குறுகிய கொட்டகையில் வாசம் செய்த அங்காளம்மை இப்போது சற்று விரிவான வளாகத்தை ஏற்படுத்திக்கொண்டிருந்தாள். அவளைக் கடந்து சுற்றுச்சுவரையொட்டி வீரன் பெரியாச்சி முனி என்ற காவல் தெய்வங்களும் தனித்தனியே நின்றிருந்தன. கருவறைக் கோபுரம் வண்ணப்பூச்சு செய்து புதுப்பிக்கப்பட்டிருந்தது.
இரண்டு நாட்களுக்கு முன்னதாகவே சுரேஷின் சித்தப்பா செல்வம் பூசாரியைத் தேடி வழிபாட்டுக்குச் சொல்லியிருந்தார். கிடா வெட்டுவதற்கும் தனியாக ஒரு ஆளை பேசியிருந்தார்.
கோயில் பூசாரி பாலகுரு குடம்குடமாக தண்ணீர் விட்டு தெய்வங்களை நீராட்ட தொடங்கியிருந்தான். வாசம் மிக்க சாம்பிராணி புகை சூழ தீபாராதனையை அத்தனை பேரும் பரவசத்துடன் கண்டுகளித்தனர்.
மொட்டையடிக்க பேசப்பட்ட முருகேசன் சைக்கிளில் வந்து இறங்க ஆட்டுக் குட்டியுடன் விளையாடிக் கொண்டிருந்த அனுவைத் தூக்கி வந்தான் மாமன் வாசு. தனித்தனியே வட்டமிட்டுக் கதை பேசிய இரண்டு குடும்பத்தினரும் பரபரப்பாயினர்.
வாசுவின் மடியில் அனு அமர்ந்திருக்க கத்தியில் ப்ளேடை மாற்றிய முருகேசன் லாகவமாக முடியை வழித்தெடுத்தான்.

செருமிச்செருமி அழுத அனுவை நீராட்டி, பட்டுப் பாவாடைச் சட்டையை அணிவித்தாள் ஜோதி. வழவழப்பான சிவந்த தலை முழுதும் குளிர்ச்சிக்கு மணம் கமழும் சந்தனம் பூசப்பட்டது. இன்னும் அனுவின் அழுகை நின்றபாடில்லை. அழுகையை நிறுத்த அவளுக்குப் பிரியமான குட்டி ஆட்டிடம் கொண்டு போனான் வாசு. அடுத்த கணம் அனுவின் அழுகை தடம் மாறி இயல்பு நிலைக்கு வந்தது. ஆட்டின் கழுத்தை இழுத்து இறுக்கி முத்த மிட்டாள். மொட்டையடிக்கப்பட்ட அனுவை அறியாது ஆடு மிரண்டது.
அனுதாண்டா தங்கம்...!"
ஆட்டுக்கு தன்னைப் புரிய வைக்க மெல்ல மெல்ல முயற்சித்தாள் அனு.
சூரியன் மேல் திசையில் சரியத் தொடங்கினான். மணி ஒன்றைத் தாண்டிற்று. காதுகுத்தும் நிகழ்ச்சிக்கு வரவழைக்கப்பட்ட பொற்கொல்லன் சண்முகம் கைப்பையுடன் காத்திருந்தான்.
ஆடு அறுப்பதற்குச் சொல்லப்பட்ட உள்ளூர்க்காரன் வந்து சேரவில்லை.அவனை எதிர்பார்த்துப் பயனில்லை என்பதை உணர்ந்த சித்தப்பா செல்வம் பக்கத்திலிருக்கும் திருமருகலிலிருந்து யாரோ ஒருவனை டி.வி.எஸ்.50யில் அழைத்து வந்தார்.
வந்து இறங்கியதுமே கத்திகளை எடுத்து கருங்கல் தரையில் தீட்டத் தொடங்கி விட்டான். அனு அவனை அச்சத்தோடு பார்த்தாள்.
என்ன செய்யப் போறீங்க..." -நடக்கப் போவது அனுவுக்கு மெல்ல புரிந்தது. அனு உயர்ந்த குரலெழுப்பி அழத் தொடங்கி விட்டாள்.
வெட்டாதீங்க... ப்ளீஸ்..."
மாமா வெட்டப் போறாங்க மாமா... சொல்லுங்க மாமா..."
அனுவின் அழுகுரலைக்கேட்டு ஜோதியும் சுரேஷும் ஓடிவந்தார்கள்.
அப்பா! ஆட்டுக்குட்டிய வெட்டச் சொல்லாதீங்கப்பா... பாவம்பா... அம்மா சொல்லுங்கம்மா... பாட்டி!... பாட்டி...நீங்க சொல்லுங்க."
குட்டியின் கழுத்தை இறுகப் பற்றியவாறு ஒவ்வொருவரையும் உதவிக்கு அழைத்தாள் அந்தச் சிறுமி.
அவள் காட்டிய பிடிவாதம் சுரேஷை நிலை குலையச் செய்தது.
சரி. வேண்டாம்மா..."
ஒரு முடிவுக்கு வந்தான் சுரேஷ்.
கொழந்தைக்கு என்னங்க தெரியும்."
கூட்டத்திலிருந்து ஒரு குரல் எழுப்பிற்று.
வாசு... குட்டியக் கோயில் நிர்வாகத்துக்கிட்ட விட்டுடு....காது குத்தற வேலையைப் பாருங்க.. சாப்பாட்ட சித்தப்பா பாத்துக்குவார்."
குழுமியவர்களிடையே ஏற்பட்ட சிறு சலசலப்பைத் தவிர்த்து அடுத்த வேலையைக் கவனிக்கத் தொடங்கினான் சுரேஷ்.
சடங்குகள் சம்பிரதாயங்கள் என்று சொல்லப்பட்டதை மீறி, குழந்தையின் குரலுக்கு முதன் முதலாகக் கட்டுப்பட்டான் சுரேஷ்.



நன்றி - கல்கி , புலவர் தருமி

4 comments:

MaduraiGovindaraj said...

மதுரை வலைப் பதிவர்கள் குழுமம் ஆரம்பம்!

இராஜராஜேஸ்வரி said...

கருணையும் ஈரமும் நிரம்பிய அருமையான கதை...

Unknown said...

குழந்தை வடிவம் கொண்ட தெய்வம். நல்லதோர் அறிவுரை , இதை நாம மட்டும் ஏன் எடுத்துக்கமாட்டேங்கிறோம்.

வில்லவன் கோதை said...

கல்கியில் இடம் பெற்ற எனது சிறுகதைக்கு ஊக்கமூட்டும் மறுமொழிகள் பெற்றுத்தந்த சிபிக்கு நன்றியும் மகிழ்வும்
வில்லவன்கோதை வேர்கள் வலைப்பூ