Sunday, July 29, 2012

சரோஜா - வா மு கோமு - சிறுகதை

சரோஜா


சரோஜா தூக்கம் வராமல் படுக்கையில் உருண்டு கொண்டிருந்தாள். கால்களுக்குப் போடப்பட்டிருந்த தலையணையைக் காலாலேயே மேலுக்கு இழுத்துத் தூக்கி தன் நெஞ்சில் புதைத்து இறுக்கிக் கட்டிக் கொண்டாள். தலையணையை சாமிநாதன் என்றெண்ணி உயரத் தூக்கி முத்தம் கொடுத்து சிரித்துக் கொண்டாள். 'உடுங்க என்னெ சின்னக் கவுணுச்சி உடுங்க' என்று இவளின் காதுக்குள் சாமிநாதன் கூறுவது போலவே இருந்தது. 'உன்னை உடவே மாட்டேன்டா... ஒரு விசுக்காத்தான்டா இந்த சரோஜா ஏமாந்து போவா. எப்பத்திக்கிம் ஏமாந்துட்டே இருப்பாளாடா! உன்னையெ உடவே மாட்டேன்டா இந்த வாட்டி' என்று முனகிய சரோஜா தலையணையைக் கட்டிக் கொண்டே படுக்கையில் உருண்டாள்.



சரோஜா மூங்கில்பாளையத்தில் வடக்குத் தோட்டத்து ராமசாமிக் கவுண்டரின் பெண். பத்தாவது வரை விசயமங்கலம் அரசாங்கப் பள்ளியில் படித்தவள். பரீட்சை எழுதிய கையோடு விடுமுறையில் அம்மாயி வீட்டுக்கு திங்களூர் வந்தவளுக்கு உள்ளூருக்குள் சலூன் கடை வைத்திருந்த கோபாலன் மீது காதல் வந்தது. சலூன் கடை கோபாலன் நீளமான முடி வைத்திருந்தான். டிவியெஸ் ஸ்டார் சிட்டி பைக் வைத்திருந்தான். கார்கோஸ் பாண்ட் அணிந்திருந்தான். அஜித் மாதிரி சிவப்பாய் இருந்தான். இவளைக் கண்டதும் கண்ணைச் சிமிட்டினான். இவளுக்குள் அந்த செடி வேர் விட்டது. இவள் அம்மாயியையும், அப்பிச்சியையும் இராக் காலங்களில் அத்தாப் பெரிய வீட்டில் ஏமாற்றுவது எளிதாய் இருந்தது.



கோபாலன் சரோஜா மீது பித்தாய்த்திரிந்தான். அவனைத் தன் மடியில் கிடத்திக் கொண்டு எல்லாப் பெண்களைப் போலவே பேசிக் கொண்டிருந்தாள்.



“இதெதுக்கு கோபாலு தாவாங் கட்டைக்கிக் கீழாறதுக்கிளியூண்டு மசுரு வளத்துறே? அதையெ நீயி நாளைக்கு செரைச்சு எடுத்துடு கோபாலு. அசிங்கமா இருக்கு. இருக்கட்டும் அதான் ஸ்டைலுன்னு சொன்னீன்னா உன்னைக் கடிச்சு வச்சுடுவேன்.”



“நீ கடிச்சு வைப்பேன்னு சொன்னப்புறம் நான் எதுக்கு அதை எடுக்கப் போறேன். நீ கடிச்சா எனக்கு வலிக்கவே வலிக்காது.”
“வலிக்காது... வலிக்காது... சரி, அதை நீ எடுப்பியா எடுக்கமாட்டியா?”



“எடுத்துடறேன் சரோ... உனக்குப் பிடிக்காதது என்கிட்ட எதுக்கு?” என்றவன் அப்படியே சரோஜாவை நிலத்தில் சாய்த்தான்.



“என்னைக் கட்டிக்குவீல்ல? என்னை ஏமாத்தமாட்டீல்ல? காலம் பூராவும் என்னெ உன் கண்ணுக்குள்ள வெச்சுக் காப்பாத்துவியா? உன்னோட சலூன் கடை அம்மாவாசைக்கு லீவுதானே? நாளைக்கு கோபி கூட்டிட்டுப் போறியா? பச்சை மலைக்குப் போகலாம். சாமி கும்பிடலாம். அப் படியே புதுப்படம் ஒன்னு பார்க்கலாம். என்ன பேச்சையே காணோம்? கூட்டிட்டுப் போகமாட்டியா?” என்றாள்.



“நீ எங்கே கூப்பிட்டாலும் வருவேன் சரோ... கொஞ்சம் நேரம் உன் லொட லொட வாயை லொட லொடக்காம இரேன் சரோ...” என்றவன் சரோஜாவின் இதழ்களைக் கவ்வினான். சரோஜா அப்புறம் எதுவும் பேசவில்லை. கண்கள் இருட்டு வானம் பார்த்து செருகிக் கொண்டன. சரோஜா அவன் முதுகைத் தன் கைகளால் தடவிக் கொடுக்கத் துவங்கினாள்.



அடுத்த நாள் இருவரும் பேசி வைத்தது மாதிரி பச்சைமலைக்குச் சென்றார்கள். கோபாலன் மஞ்சள் கயிற்றைக் கட்டினான். சரோஜா மிரண்டாள். இப்ப என்ன அவசரம் என்றாள். என் தங்கம் என் கூடவே எப்பவும் இருக்கோணும் என்றான். இல்லை என்றால் சாவதைத் தவிர வேறு மார்க்கமே இல்லை என்று அழுதான். அழுபவனை எப்படித் தேற்றுவது என்று சரோஜாவிற்குத் தெரியாமல் அவனுக்கே பச்சை மலை உச்சியில் கழுத்தை நீட்டினாள். பச்சைமலையில் வீற்றிருந்த முருகன் தெற்குப் பார்த்தபடி முகத்தைத் திருப்பி ஒரு சிரிப்பு சிரித்துக் கொண்டான். அது மூங்கில்பாளையத்தைப் பார்த்துத்தானாய் இருக்க வேண்டும்.



அப்பிச்சிக்கும், அம்மாயிக்கும் சாகவேண்டிய காலத்தில் பேத்தி பிரச்சினையைக் கொண்டு வந்து விட்டாள். நீயெல்லாம் சாதிக்காரியாடி? என்று அம்மாயி கத்திக் கொண்டே பெரிய வீட்டைச் சுற்றியது. ராமசாமி கவுண்டரை அப்பிச்சி போனில் கூப்பிட்டது! ராமசாமிக் கவுண்டருக்கு சேதியைக் கேட்டதிலிருந்து காலும் கையும் ஓடவில்லை. கெழக்குத் தோட்டத் தான் முத்துச்சாமி கவுண்டருக்குப் பதைபதைத்து போன் அடித்தார். முத்துச்சாமி கவுண்டரும் ராமசாமி கவுண்டரும் சொந்த அண்ணன் தம்பிகள்தான். இருவருமே ஆறேழு வருடங்களுக்கு முன்பாக உள்ளூர் தேர்தலின் போது சண்டை போட்டுக்கொண்டு கட்டுமாரு கட்டிக்கொண்டு மூங்கில்பாளைய வீதியில் உருண்டவர்கள்தான். எதிர்முனையில் யாரு? என்ற தம்பி குரல் கேட்டதும் இவர் முசுக்கென அழ ஆரம்பித்துவிட்டார். அழுகை சப்தம் வைத்தே அண்ணன்தான் என்பதை உணர்ந்த முத்துச்சாமி கவுண்டர் அழட்டும் என சித்த நேரம் விட்டார்.


“என்றா பார்த்துட்டே இருக்கேன்... பொட்டப்புள்ள கணக்கா... கூகூன்னு அழுதுட்டே இருந்தா என்ன அர்த்தமுன்னு வேண்டாம். என்னாச்சுன்னு சொன்னாத்தான தெரியும் எழவு? சரி இல்லீன்னா போனை வெய்யி நீயி... உம்பொட ஊட்டுக்கே வாரேன். ஆளுதான் தடிமாடு கணக்கா இருக்கியேயொழிய ஒரு எழவும் தெரியாதுடா உனக்கு! போனை வெய்யிடா... நானே வர்றேன்” என்று முத்துச்சாமி கவுண்டர் கூறவும் துண்டால் கண்ணீரைத் துடைத்துவிட்டு போனை வைத்தார்.



முத்துச்சாமி கவுண்டரும் அண்ணனுக்கு என்ன பிரச்சினையோ என்று உடனேயே அம்பாஸிடரை எடுத்துக்கொண்டு அண்ணன் வீடு வந்துவிட்டார். அண்ணி வாசல் படியில் தலையில் கைவைத்து அழுது கொண்டு இருந்தது. தென்னை மரத்தில் சங்கிலியில் கட்டப்பட்டிருந்த நாய் இவரையும் இவரது காரையும் அடையாளம் கண்டு கொண்டு எழுந்து வாலை ஆட்டிக் கொண்டே ‘கூ’ என முனகியது. அண்ணன் வீட்டினுள் சோபாவில் அமர்ந்திருந்ததைக் கண்டதும், 'என்னடா ஆச்சு?' என்று கேட்டுக் கொண்டே அருகில் கிடந்த நாற்காலியில் சென்று அமர்ந்தார். ராமசாமிக் கவுண்டர் விஷயத்தை நிதானமாய்க் கூறினார்.



“இப்ப அவிங்க ரெண்டுபேரும் எங்க இருக்காங்களாமா?”


“திங்களூர்ல ஊட்டுலதான்.”


“இங்க உட்கார்ந்துட்டு என்ன வேலை... அங்க போயி பார்த்துக்கலாம். போயி தாலிய அத்து வீசி எறிஞ்சுட்டு நம்ம புள்ளையக் கூட்டிட்டு வந்தரலாம். ஆமா அந்தப்பயல் என்ன நம்ம சாதியா? நம்ம சாதியின்னா ஆரு எவரன்ன விசாரிச்சுத்தான் எதையும் பண்டோனும்.”



“என்ன சாதியோ என்ன கருமமோ.. பரிச்செ லீவுல இங்கயே ஏன் அவளும் ஊட்டச் சுத்தீட்டே கெடக்காட்டீன்னுதான் போறேன் போறேன்னு ஒத்தக் கால்ல நின்னவளைத் தாட்டி உட்டேன். இப்போ ஒரே மாசத்துக்குள்ள தலையில கல்லைப் போடாத கொறையா பண்டி வெச்சுட்டா அவளை அங்கயே கொன்னு பெதச்சுப் போட்டு நாம வந்துடலாம்டா!”



“சரி சுந்தரன் எங்கெ? காலேஜ் போயிட்டானா? இருந்தா அவனையும் கார்ல ஏத்தீட்டுப் போயிடலாம்... கொல்றது புடிக்கிறது எல்லாம் போயி அங்க பார்த்துக்கலாம்.”



“காலேஜுக்கு எங்க போனான்... அதான் காலேஜும் லீவாப் போச்சே... ஊர் சுத்த காத்தால போனவன் இன்னங் காணம். சரி, உம்பட சட்டைல பட்டனைச் செரியாப் போடு. மேல ஒன்னு கீழ ஒன்னு போட்டுட்டு வந்துருக்கே. உம்பட அண்ணிக்காரிய கூட்டிட்டுப் போலாமா. ஒப்பாரி வெச்சாள்னா திங்களூர் முழுசுக்குமே கேட்டுத் தொலைக்குமே!”



“வேண்டாம். அது இங்கயே இருக்கட்டும். காதும் காதும் வெச்சமானிக்கே விசயத்தை அங்கயே முடிச்சுப் போட்டு நாம வந்துரோணும் பாத்துக்க. மூங்கில் பாளையத்துக்குள்ளார பரவீடுச்சுன்னா உலவத்துக்கே தெரிஞ்சு போனமாதிரி ஆவிப் போயிரும். நாளைக்கு ஒன்னு கெடக்க ஒன்னு ஆயிட்டே இருக்கும். பொட்டப்புள்ள சமாச்சாரம். நாளைக்கி ஒரு கல்யாணங்காச்சி பண்ட முடியாமப் போயிரும். நட போலாம்” என்று பட்டனைச் சரியாய்ப் போட்டுக் கொண்ட முத்துச் சாமி கவுண்டர் வெளி வாசலுக்கு வந்து அண்ணி அருகே நின்றார்.



“சும்மா எழவு உழுந்தட்ட மாதிரி வாசப்படியில உக்காந்துட்டு அழுதுட்டே இருக்கப்புடாது ஆமா பாத்துக்க. கூலிக்கார மாதாரிக பார்த்துட்டாங்கன்னா காதும் காதும் வெச்சு திருகிப் பேசிப் போடுவானுக. போய் உள்ளார உட்கார்ந்துட்டு அழு போ. நாங்க போய் கூட்டிட்டு சுருக்கா வந்து சேர்ந்துடறோம்.” முத்துசாமி கவுண்டர் காரைப் பார்த்தபடிதான் அண்ணியிடம் பேசிக் கொண்டிருந்தார். நேருக்கு எப்போதுமே முகம் பார்த்து அண்ணியிடம் பேசமாட்டார். சொன்னதுதாங்கோடு என்று எழுந்தவள், 'புக்கிட்டியூண்டு இருந்துட்டு அந்த சண்டாளி எந்த எடுபட்ட காசியோட தாலிய வாங்கீட்டு நிக்கறாள்னே தெரியிலியே. அவளெ அவத்திக்கே கொன்னு பொதச்சுப் போட்டு ரெண்டு பேரும் ஊடு வந்து சேருங்க. எமசாந்து வாங்குனது பேரு கொண்டாருது பாரு ஊட்டுக்கும் அப்பன் ஆத்தாளுக்கும்' என்று முனகிக் கொண்டே வீட்டுக்குள் நுழைந்தது.




“தங்கம், செல்லம், கன்னுக்குட்டின்னு கொஞ்சிக் கொஞ்சி வளர்த்தினா தங்கக் குட்டி இந்த வேலைதான் செஞ்சுட்டு நிக்கும். கோழி ஒன்னெ புடிச்சு அடிச்சு சாறு காச்சி வெய்யிடி.. எட்றா வண்டியெ” என்று ராமசாமி கவுண்டரும் கார் கதவை நீக்கி உட்கார்ந்து கொள்ள முத்துச்சாமி கவுண்டர் கோபமாகவே ஆக்ஸிலேட்டரை மிதித்து இழுத்தார்.



கார் விசயமங்கலம் மேக்கூரைத் தாண்டியதும் வடக்கே வேகம் பிடித்தது. திங்களூர் பனிரெண்டு கிலோ மீட்டர்தான். முத்துச்சாமிக் கவுண்டர் தன் அண்ணியினுடைய தாய் வீட்டில் காரைக் கொண்டு வந்து நிறுத்தும்வரை அண்ணனிடமும் எதுவும் பேசிக் கொள்ளவில்லை. ராமசாமி கவுண்டருக்குள்ளும் தம்பியுடையான் படைக்கஞ்சான் என்ற எண்ணம்தான் ஓடிக் கொண்டிருந்தது. அண்ணனுக்கு ஒன்று என்கிறபோது முத்துச்சாமி கவுண்டருக்குத் தன் பெண்ணே தப்புக்காரியம் செய்துவிட்ட துடிப்புதான் இருந்தது. இத்தனை வருடப் பகையை இந்தக் குட்டிக் கழுதை தீர்த்து வைத்துவிட்டது.



பெரிய வீடு அமைதியாக இருந்தது! காரை நிறுத்தி இறங்கியவர் திடுதிடுவென வீட்டுக்குள் ஓடினார். நடு ஹாலில் புதுமணத் தம்பதிகள் டி.வி. பார்த்தபடி சோபாவில் அமர்ந்திருந்தார்கள். விரைந்து வீட்டினுள் வருபவரைக் கண்ட சரோஜா, “சித்தப்பா” என்று எழுந்தாள். போன சுடிக்கு அவள் கன்னத்தில் ஒரு அப்பட்டம் போட்டார் முத்துச்சாமி கவுண்டர். “ஐயோ” என்று திருகி சரோஜா விழுந்ததும் பொடணி மயிரோடு சேர்த்துப் பிடித்துக்கொண்டு கோபாலனை நாலு மிதி வைத்து “யார்ரா நாயி நீயி?” என்றார். அதற்குள் ராமசாமிக் கவுண்டர் ஓடி வந்ததும் கீழே கிடந்த மகளைத் தூக்கி நிறுத்தி சாத்துச் சாத்தென சாத்தினார். “அடக் கொன்னு கின்னு போடாதீங்டா” என்று பெருசு ஓடிவந்து இருவரையும் தள்ளிவிட்டது. முத்துச்சாமி கவுண்டர் ஒதுங்கி நின்று கோபாலனின் நெஞ்சில் ஓங்கி ஒரு மிதி வைத்தார். அவன் அருகில் இருந்த தூணில் மோதி சரிந்து சாய்ந்து கையெடுத்துக் கும்பிட்டான். பின்னர் சோபாவில் கைகளை விரித்து சாய்ந்துகொண்டார்.



“இவன் யாராமா? கேட்டீங்ளா?” என்று பெரியவரைப் பார்த்துக் கேட்டார்.



“அவனாருன்னா? மூஞ்சீலயே எழுதி ஒட்டியிருக்குது தெரியிலியா? உள்ளூர் அப்புக்குட்டி நாசுவனோட பேரன். பெரிய புள்ளைய காஞ்சிக் கோயிலுக்குக் கட்டிக் குடுத்தான். அவளோட பையன்தான்.”



“ஏன்டா நீ நாசுவனாடா? எப்பட்றா இப்புடியெல்லாம் தைரியமா பண்றீங்க? எந்திரி மொதல்ல நீ.. போடா... அடிச்சுக் கொன்னே போடுவேன். போயி வாசல்ல நில்லு போ... எந்தர்றா மேல. கொன்னு கொண்டி வாய்க்கால்ல எறிஞ்சுட்டுப் போயிடுவேன்” என்று இவர் சப்தம் போடவும் தடுமாறி எழுந்த கோபாலன் வீட்டை விட்டு வெளியே சென்று வாசல்படி இறங்கி வாசலில் நின்றான்.



“கையைக் கட்டீட்டு நில்றா. அக்கட்ட இக்கட்ட நவுந்தீன்னா வந்து ஒரே ஒதைதான். இடுப்பு எலும்பு கத்திரிச்சுப் போவும் பார்த்துக்க. ஏம் பெருசு, உனக்கு அறிவு இருக்குதா இல்லையா? அப்புக்குட்டி பேரன்னு உனக்குத் தெரிஞ்சிருக்குது. நடு ஊட்டுல கொண்டாந்து உக்காத்தி வெச்சுட்டு இருந்திருக்கே. உனக்கொரு சாவு வரமாட்டீங்குது பாரு” என்று கோபத்தைப் பெருசிடம் திருப்பினார்.



“யாரு என்னன்னு கேட்டதுக்கு இன்னாருங்கன்னு சொன்னான். அதுக்குள்ளார கெழவி முந்தீட்டு வெளியே போடான்னுதான் சொன்னா. அதுக்குக் கெழவிய சரோசாப்புள்ள, 'போடி பெரிய இவ வந்துட்டா. எம்பட ஊட்டுக்காரனை வெளியே போவச் சொல்றா பாரு'ன்னு கத்தங்காட்டி அவ இந்தக் கருமம் எக்கேடோ கெட்டு ஒழியட்டும்னு ஒதுங்கீட்டா. அம்மாயியையே தூக்கி எறிஞ்சு பேசுறவகிட்ட என்னத்த பேசுறதுன்னுதான் அப்பனுக்கு போனைப் போட்டேன்” என்றவர் லொக்கு லொக்கென இருமிக் கொண்டே எதிர்த்த சோபாலில் உட்கார்ந்தார்.



“என்ன ஒரு ஏத்தமிருந்தா அவன் நடு ஊட்டுல உட்கார்ந்து டி.வி. பார்த்துட்டு இருப்பான்? ஏன்டி சரோஜா.. ஏன்டி காரியத்தைச் செஞ்சு போட்டு திருட்டு முழி முழிச்சுட்டு இருக்கே? சொல்லுடி”



“சித்தப்பா...”

“சித்தப்பன்தா நானு சொல்லுடி... என்ன பண்ணப் போறே?”

“நானு அவருகூட அவுங்க ஊட்டுக்கே போறேன் சித்தப்பா.”

“அவுங்க ஊட்டுக்கே போறியா? போயி?”

“போயி பொழைச்சுக்கறேன்.”

“டேய் ராமசாமி... அப்புடியே அவ கழுத்தைப் புடிச்சு நசுக்கி திருகிக் கொல்றா. நாயமயிரு பேசுதுபாரு புள்ளை.”

“சித்தப்பன் சொல்றதைக் கேட்டுத் தொலைடி சனியனே. எனக்குன்னு வந்து வாய்ச்சே பாரு. திடும் திடும்னு ஊட்டுக்குள்ளார நி நடக்குறப்பவே தெரியும்டி. இப்புடி எல்லாம் பண்டுவீன்னு. நான் உன்னியக் கொல்லமாட்டேன். ஆனா சித்தப்பன் சொல் பேச்சு கேக்கலீன்னா கழுத்தை திருவிக் கொன்னு போடுவான்” என்றார் ராமசாமி கவுண்டர். கூகூவென சரோஜா அழ ஆரம்பித்தாள். முத்துச்சாமி கவுண்டர் உள்ளூர் பஞ்சாயத்து தலைவர் ராஜேந்திரனை போனில் கூப்பிட்டார். விஷயத்தைச் சொல்லி வரச்சொன்னார்.

“சரோஜா... இப்போ இங்கெ திங்களூர் போலீஸ் வந்துடுவாங்க. அவனைக் கொண்டி கோயமுத்தூர் ஜெயில்ல போட்டுருவாங்க. உனக்கு வயசு பதினெட்டுகூட ஆவலை. அதனால உன்னைய எந்த ஊர் ஜெயில்ல போடுவாங்கன்னு தெரியல” என்றவரை அழுதபடியே பார்த்தவள் பயத்தில் மிரண்டாள். இப்படி எல்லாம் கூடவா செய்வார்கள்? போலீஸ், ஜெயில் என்கிறார்களே! அம்மா இவர்களோடு ஏன் வரலை? அம்மா வந்திருந்தால் அழுதாவது கோபாலனை மூங்கில் பாளையம் கூட்டிப் போயிருக்கலாம். அப்பனும் கூட ஆனது ஆயிப் போச்சு என்று விட்டுவிடும். இந்த சித்தப்பன் மலை முழுங்கி மகாதேவனாச்சே! சண்டை கட்டிக் கொண்டவர்கள் எப்போது ஒட்டுக்காகச் சேர்ந்தார்கள்!

“ஐயோ சித்தப்பா... போலீசு, ஜெயிலு எல்லாம் வேண்டாம் சித்தப்பா.”

“வேண்டாம்னாலும் உனக்கு வயசு பதினெட்டு ஆகலியே.”

“பதினெட்டு ஆவாட்டிப் போயிச்சாட்டாது. நானு கோபாலு ஊட்டுக்கே போயிடற«ன் சித்தப்பா. எனக்கு அவனைத்தான் புடிச்சிருக்குது.”

“நாயிப் பொச்சுல தேன் ராட்டு தொங்குதுன்னு போய் வழிச்சு எடுத்து நக்கிக்க முடியுமா? போயி ஜெயில்ல உட்கார்ந்துட்டு களி தின்னுட்டு எத்தனை வருசம் உள்ளார போடறானோ கெடந்துட்டு வா.”

“ஏன்டா முத்துச்சாமி, போலீசை வரச்சொல்லிட்டியா?” என்றார் ராமசாமிக் கவுண்டர்.

“நீ மொதல்ல அவ கழுத்துல கெடக்குற கவுத்தை அத்து வீசு.”

“ஐயோ, கவுத்தை அத்து வீசிடா தீங்கப்பா” என்றாள் சரோஜா. அவள் இரண்டு கைகளையும் கழுத்தில் வைத்துக் கொண்டாள், எங்கே சித்தப்பன் பேச்சைக் கேட்டு அப்பன் அத்து வீசிவிடுமோ என்று.

“சரி, உடு அண்ணா. போலீஸ்காரங்க தொட்டதுக்கெல்லாம் ஜெயில்ல போட்டு மிதிப்பாங்கள்ல அப்ப தானா தெரிஞ்சுக்குவா” என்றவர் வெளியே வாசலைப் பார்த்தார். கோபாலன் வாசலில் குத்த வைத்து தலை குனிந்து உட்கார்ந்திருந்தான். அதே நேரம் வாசலுக்கு இரண்டு மூன்று பைக்குகள் வந்து ஓய்ந்தன. வண்டியை நிறுத்திவிட்டு வந்த பஞ்சாயத்துத் தலைவரை வரவேற்க வெளிவாசலுக்குக் கும்பிடு போட்டபடி முத்துச்சாமி கவுண்டர் வந்தார்.

“வாங்க மாப்ளே.” பதிலுக்கு அவரும் கும்பிடு போட்டுவிட்டு வாசலில் குத்த வைத்திருந்தவனைப் பார்த்து 'இவனா?' என்றார்.
பின்னாலேயே வந்த அப்புக்குட்டி கோபத்தில் சென்று கோபாலன் முதுகில் நான்கு குத்துக்கள் வைத்தான்.

“சாமி வந்திருக்காப்ல. எருமெ கணக்கா உட்கார்ந்துட்டு இருக்கியாடா. சோத்தத் திங்கறியா? பிய்யத் திங்கறியாடா? எந்தர்றா மேல” என்று அப்புக்குட்டி கத்தியதும்தான் கோபாலன் எழுந்து தலைவருக்கு வணக்கம் போட்டான். தலைவர் அவனைக் கண்டுகொள்ளாமல் கூடவே வந்திருந்தவர்களை கிட்டே அழைத்தார். அவர்களும் 'என்னுங் தலைவரே!' என்று வந்தார்கள்.

“உள்ளார போயி நாலு சேர்க இருந்தா எடுத்துட்டு வாங்க. இப்புடி தென்னை மரத்துக்கிட்டயே உட்கார்ந்துக்குவோம்” என்றதும் அவர்கள் உள்ளே சென்றார்கள்.

“மாப்ளெ, போலீசோடதான் வருவீங்கன்னு பார்த்தேன்” என்றார் முத்துச்சாமி கவுண்டர்.

“இதுக்கெதுக்கு போலீசு? சொல்லிப் பார்ப்போம். பையன் இனி என்ன சுடியில இருக்கான்னு பார்ப்போம். முடியலீன்னா பார்ப்போம்.” ராமசாமிக் கவுண்டரும் சரோஜாவோடு வெளியே வந்தார். 'வணக்கம் மாப்ளே!' என்றொரு கும்பிடு வைத்தார்.

“புள்ளை எந்த ஊர் பள்ளிக் கோடத்துல படிச்சுட்டு இருந்தது மாமா?”

“விசயமங்கலத்துலதான் மாப்ள, பத்தாவது பரிட்சை எழுதிட்டு லீவுல வந்தா இங்கெ.”

“இந்த வயசிலேயே இதுகளுக்கெல்லாம் என்ன தெரியும்னு தாலியக் கட்டிக்குதுகன்னே தெரியல. போன வாரம் இதே ஊர்ல ஒரு ஜோடி ஓடிப் போயிடுச்சு. இன்னமும் எங்கே இருக்காங்கன்னே தெரியல. காலம் எங்கே போவுதுன்னே தெரியில. வெசாலக்கிழமை சந்தையன்னிக்குப் பார்த்தா துக்கிளியூன்டு துக்கிளியூண்டு புள்ளைக இடுப்புல கொழந்தைய வச்சுக்கிட்டு ஜாமான் வாங்கிட்டுப் போவுதுக. சுத்திலும் பனியன் கம்பெனிக வந்துட்டுது. இந்த ஊர்க்காரங்க யாரு... வெளியூர்ல இருந்து வந்தவுங்க யாருன்னு ஒன்னும் எனக்கே தெரிய மாட்டீங்குது. அட, இப்பிடியே சேர்களைப் போடுங்கப்பா... அதான் வெயிலும் இல்லையே!” என்றவர் சேரில் அமர்ந்து கொள்ள, ராமசாமி கவுண்டரும், முத்துச்சாமி கவுண்டரும் சேர்களில் உட்கார்ந்தனர்.

“சரி மாமா. என்ன பண்ணலாம்ங்கறீங்க? உங்களுக்குத் தெரியாததையா இனி நான் பண்ணப்போறேன். புள்ளை என்ன சொல்லுது? அப்புக்குட்டி டேய்... இவுனுக்கு காது வேற கேக்காது. கத்திக் கத்தி சைகை வேற செய்யோணும். இங்க இழுத்தாந்து நிறுத்துடா உன் பேரனை” என்றதும் “சாமீ” என்றவன் கோபாலனைத் தள்ளிக் கொண்டு வந்து தலைவர் முன் நிப்பாட்டினான்.

“சாமி பொடணீல இவன் முடி வளர்த்தீட்டு புட்டுர்பைக்குல சுத்தீட்டு இருக்கப்பவே இப்புடி எதாச்சிம் பெருசா வில்லங்கத்தைக் கொண்டாந்துடுவான்னு நெனச்சுட்டே இருந்தனுங்க சாமி. இப்படி ஒரு காரியத்தை செஞ்சு போட்டானுங்ளே. நீங்க இவனை என்ன பண்டுனாலும் நானு ஒன்னுஞ் சொல்லலீங்க. இப்புடி ஒரு தப்பை எனக்கு முன்னாடி இருந்து எம்பட காலம் வரைக்கிம் செஞ்சதே இல்லீங்ஸெகா. பேசுறானான்னு பாருங்க சாமி ஒரு வார்த்தை.”

“அவனெல்லாம் பேசமாட்டான் அப்புக்குட்டி. ஜெயிலுக்குள்ளார போயி போலீஸ்காரங்ககிட்ட மிதி தின்னாத்தான் தெரியும்.”

“சாமி என்ன சொல்றீங்க? ஜெயிலுக்கா?”

“பின்ன, பத்தாவது படிக்கிற புள்ளைக்குத் தாலிய கட்டி கெடுத்து வச்சிருக்கான். இது அவுனுக்கே தெரியுமே! ஏண்டா எத்தனாவது வரைக்கும்டா நீ படிச்சிருக்கே? சொல்றா?”

“நானு டுவல்த் வரைக்கும் படிச்சிருக்கேனுங்க.”

“தாலி கட்டச் சொன்னது அவளாடா? இல்ல நீயே அதப்பண்டலாம், இதப் பண்டலாம்னு சொல்லித் தாலி கட்டினியா?”

“நான்தானுங்க கட்டறேன்னேன். சரோஜா சரின்னுடுச்சு.”

“எங்கடா கூட்டிட்டுப் போனே?”

“பச்சைமலைக்குத்தானுங்க.”

“யாரு? என்ன ஜாதின்னு தெரிஞ்சுதான் கட்டுனியா?”

“அதெல்லாம் தெரியாதுங்க. புள்ளைதான் என்கிட்ட லவ்யூன்னு மொதல்ல சொல்லுச்சுங்க. நல்ல புள்ளைன்னு கட்டிக்கிட்டனுங்க.”

“சரி சரி... நல்ல புள்ளைன்னு கட்டிக்கிட்டே. கைவசம் தொழிலும் இருக்குது காப்பாத்திடுவேன்னு வெச்சுக்க. நேரா திங்களூர் வழுவுக்குள்ளார போயி எவளையாச்சிம் லவ்யூன்னு சொல்லித் தாலி கட்டி குடும்பம் பண்டலாம்ல? இந்த ஏரியாவுக்கு வர்ற போதே எந்த ஏரியா இதுன்னு தெரியாமயா வந்திருப்பே? ஒழுங்கு மரியாதையா இந்த ஊரை உட்டு ஓடியே போயிடறேன்னு சொல்லிட்டீன்னா நீ தப்பிச்சே. இல்ல தகராறு பண்றதுன்னா இதபாரு... இப்பவே எஸ்.ஐயைக் கூப்பிடறேன். சொல்லு, உன்கிட்டவெல்லாம் வளவளன்னு பேசிட்டு இருக்கறதுக்கு இப்ப நேரமில்லை எனக்கு.”

“நானே நாளைக்கிக் காத்தால இவனெ இவங்காயா ஊருக்கே காஞ்சிக் கோயிலுக்கே தாட்டி உட்டிடறேனுங் சாமி” என்றான் அப்புக்குட்டி.

“நீ தாட்டி உட்டுருவே, அவன் போகணுமில்லே.”

“சொல்றா டேய் கோவாலா. சாமி கிட்ட சொல்றா. இல்லின்னா உன்னையக் கொன்னே கொண்டு போயி வீசிட்டுப் போயிடுவாங்டா” என்றான் அப்புக்குட்டி.

“சேரிங் நானு காத்தாலைக்கி ஊருக்கே போயிர்றனுங்க.”

“போயிட்டீன்னா ஒரேமுட்டா போயிடு. மறுபடியும் இந்தப் புள்ளைகிட்டே பேசணும், புடிக்கோணும்னு நெனச்சுட்டு சுத்துற வேலை எல்லாம் வச்சுக்கிட்டா உன்னைய என்ன பண்ணலாம்?”

“சாமி அவன் அந்தப் புள்ளை இருக்கிற பக்கம் தலை வச்சுக்கூடப் படுக்க மாட்டானுங்க.”

“நீ குறுக்க குறுக்க விலா ஓட்டாதடா அப்புக்குட்டி. அதை அந்தப் பையனே சொல்லட்டும். என்றா சொல்லு?”

“ஆமாங்க.”

“என்னடா மொட்டையா லோமாங்கொங்றே?”

“எங்கப்பிச்சி சொன்னாப்ல தானுங்க. நானு எங்கீம் போயி அந்தப் புள்ளைக்கித் துன்பங் குடுக்கமாட்டனுங்க.”

“டேய், நீயெல்லாம் ஒரு ஆளாடா? உன்னிய நம்பி எம்பட கழுத்தை நீட்டினேம் பாரு நானு. எம்பட கல்யாணம் நாசுவன் குசுவாவே போவட்டும்” என்ற சரோஜா கழுத்தில் கிடந்த மஞ்சள் கயிற்றை உருவி எடுத்து கோபாலன் முகத்தில் விட்டெறிந்தாள்.

“அப்போ நானு புறப்படறனுங்க மாமா. டேய் அப்புக்குட்டி, சொன்னது சொன்னாப்புல நடந்துக்கோணும். மறுபடி பிரச்சினை எதாச்சிம் வந்துச்சுன்னா என்னைய மனுசனாவே நீ பாக்கமாட்டே ஆமா..” என்று எழுந்த தலைவர் வணக்கம் போட்டுவிட்டுக் கிளம்பிப் போனார். அவர் சென்றதும் இவர்கள் முன் “சாமி” என்று கும்பிடு வைத்தான் அப்புக்குட்டி. சரோஜா கோபாலனிடம் சென்று காறி அவன் முகத்தில் துப்பிவிட்டுப் போய் காரில் உட்கார்ந்தாள். அப்புக்குட்டி கோபாலனை இழுத்துக்கொண்டு போனான். இந்த விஷயம் அப்படியே திங்களூரோடேயே முடிந்து போய்விட்டது. சரோஜாவும் இந்த விஷயத்தை திங்களூரோடே விட்டும்விட்டாள். பத்தாவதில் அதிக மதிப்பெண் பெற்றிருந்தாள். முன்னூற்றி தொன்னூறு மார்க். மேற்கொண்டு பெருந்துறைக்குப் படிக்க அனுப்புவார்கள் என்றுதான் எதிர்பார்த்தாள். அப்படியான பேச்சே வீட்டில் கிளம்பவில்லை. அந்த விஷயத்துக்குப் பிறகு அதிகமாய் அம்மாவோடோ, அப்பாவோடோ இவள் பேசிக் கொள்வதுமில்லை. எந்த நேரமும் டி.வி.தான். சித்தப்பா வீட்டில் பாதி நேரமும் இவள் வீட்டில் பாதி நேரமுமாய்ப் பொழுதை ஓட்டினாள். அண்ணன் கந்தசாமியிடம் மட்டுமே பேசுவாள். மாத நாவல்களை ஈரோட்டிலிருந்து வாங்கி வரச் சொல்வாள். திங்களூர் விஷயம் நடந்து முடிந்துகூட ஏழெட்டு மாதமாகிவிட்டது. அப் போதுதான் இவளுக்குள் இரண்டாம் முறையாக காதல் இவள் வயிற்றினுள் மீண்டும் வேர்விட்டது.

சாமிநாதன்

உள்ளூர்க்காரன்தான். அடிக்கடி இவள் பள்ளிக்குப் போகையில் பார்வையில் தட்டுப்பட்டவன்தான். இவனது அப்பன் சுப்பன் இருபது வருடங்களாக இவர்கள் பண்ணையத்தில் இருப்பவன்தான். வீட்டின் பின்புறம் மாமரத்தின் அடியில்கால் மேல் கால் போட்டுப் படுத்துக் கொண்டிருந்த சாமிநாதனை, தொட்டியில் ஒரு குடம் தண்ணீர் எடுத்து வரப்போனவள் பார்த்து அதிசயித்து நின்றாள். இவ்ளோ சிவப்பாய் அழகாய் அதுவும் நம் தோட்டத்தில்? கேள்வியில் நின்றவள் குடத்தில் தண்ணீரை நிரப்பி விட்டு எடுத்து இடுப்பில் வைத்துக் கொண்டவள் காலை உதறினாள். நிலத்தில் நங்கென ஊன்றினாள். சலசலவென கொலுசு சத்தம் கேட்கவே சாமிநாதன் கிணற்றுப்புறமாய் முகத்தைத் திருப்பினான். சின்னக் கவுணுச்சி! மளாரென எழுந்து நின்றவன்,

“தேனுங் கவுணுச்சி” என்றான்.

“நீ எங்கெ எங்க தோட்டத்துல இருக்கே?” என்றாள்.

“உங்க தோட்டத்துக்கு வரப்புடா துங்றீங்ளா சின்னக்கவுணுச்சி?”

“நான் எதுக்கு வரவேண்டாம்ங்றேன். உங்கொப்பனைப் பார்க்க வந்தியா?”

“உங்க டிரேக்டரை ஒரு மாசத்திக்கி ஓட்டறதுக்கு வந்திருக்கணுங்க. இன்னா வரைக்கிம் குப்பை எடுத்து டிரேக்டர்ல கொட்டிக் கொண்டி வடகோட்டுக் காட்டுல கொட்டிட்டு வந்தனுங்க. சரீன்னு ஊடு போயி ஒரு வாய் கரைச்சுக் குடிச்சுப் போட்டு வந்து சித்தெ படுத்திருந்தனுங்க.”

“நீயி எத்தனாப்பு வரைக்கிம் படிச்சே?”

“பத்தாவது வரைக்கிந்தானுங்க.”

“குப்பை அள்றதுக்கு வந்திருக்கே?”

“தறிக்குத் தானுங்க போயிட்டு இருந்தேன். எங்கப்பன்தான் முந்தா நேத்து பெரிய கவுண்டரு பாக் கோணும் உன்னையென்னு சொல்றார்டான்னு சொன்னாப்ல. சரீ என்னன்னு கேட்டுப் போட்டுப் போவலாம்னு வந்ததீம் டிரேக்டர் சாவிய எடுத்துக் கையில குடுத் துட்டாப்ல. குடோனு ஓனருக்கு போனைப் பண்டி பையன் ஒரு மாசத்திக்கி வரமாட்டான். தோட்டத்துல வேலை இருக்குதுன்னு சொல்லிட்டாப்ல.”

“உனக்கு டிராக்டர் ஓட்டத் தெரியுமா?”

“அதென்ன கம்ப சூத்திரமுங்ளா சின்னக்கவுணுச்சி. அப்புறம் மேல படிக்கப் போவலீங்ளா நீங்கெ?”

“படிச்சு அஞ்சாறு ஆச்சு” என்று சரோஜா சொல்லியபோது சாமிநாதன் போன் அலறியது. 'தோழியா? என் காதலியா? யாரடி என் கண்ணே?'

“அட எடுத்துப் பேசு. நான் நின்னா என்ன?” என்று சரோஜா சொல்லிய பிறகே எடுத்து ஆன் செய்து 'ஹலோ' என்றான்.

“தோண்டா? சொல்றா! சாயந்தரம் ஆறு மணிக்கு விசயமங்கலம் பஸ் ஸ்டாப்கிட்ட வர்றேன். இப்பவா? வேலைக்காட்டுல இருக்கன்டா. செரி வெய்யி” என்றவன் தன் பாக்கெட்டில் போட்டுக் கொண்டான்.

“செல் எல்லாம் வச்சிருக்கியா நீயி.. நெம்பரைச் சொல்லு” என்றாள். இவன் நெம்பர் சொன்னான். அவள் மனதுக்குள் சொல்லிப் பார்த்துக் கொண்டாள். பின்னதான் சாமிநாதனுக்கு ஏன்டா நெம்பரை சின்னக்கவுணுச்சிக்கு சொன்னோம் என்றாகிவிட்டது.

கட்டிக்கொண்டிருந்த தலையணையை அருகே வைத்துவிட்டு செல்போனைக் கையில் எடுத்தாள். மணி பார்த்தாள். பத்து முப்பது ஆகியிருந்தது. எஸ் வரிசையில் சென்று சாமி என்ற பெயரில் நின்று சாமிநாதனுக்கு ரிங் விட்டாள். 'தோழியா? என் காதலியா? யாரடி என் கண்ணே...' பாடல் பாடியது. எதிர்முனையில் சாமிநாதன் எடுத்ததுமே இச் இச் இச்சென முத்தம் வைத்தாள்.

“சாமி சாப்டுட்டியா?”

“சாமி சாப்டுட்டியா?”

'டேய் கொரங்கா! தின்னு தொலச்சுட்டியாடா? ஏன்டா பேச மாட்டீங்றே? என்னடா கோவம் என் மேல?'

"ஏனுங்... சின்னக்கவுணுச்ச இப்புடி?"

"கூப்பிடாதடா இனிமேல் என்னை அப்புடி. எத்தனவாட்டிடா நான் சொல்றது உனக்கு? சின்னக் கவுணுச்சியாம் சின்னக்கவுணுச்சி. எனக்கென்ன கொம்பாடா மொழைச்சிருக்குது! கூப்புடுடா சரோஜா குட்டின்னு!"

"ஐய்யோ சின்னக்கவுணுச்சி ஏனுங்கோ நீங்க இப்புடி? நானு எப்புடீங்கோ போயி உங்க பேரைச் சொல்லிக் கூப்பிடுவேன்?"

"பின்னெ நீ கூப்பிடாமெ ரோட்டுல போறவனா என்னைப் பேர் சொல்லிக் கூப்பிடுவான். இங்க பாரு சாமிநாதா, நான் உன்மேல ஆசைப்பட்டுட்டேன். நீ பண்ண வேண்டிதெல்லாம் என்னெய லவ் பண்றது ஒன்னுதான். உனக்குப் பலதடவை சொல்லிட்டேன்."

"ஐய்யோ கவுணுச்சி. உங்களுக்கு நான் சொல்றது ஏனுங்கொ புரியமாட்டீங்குது? நானும் எங்கப்பனும் உங்க காட்டுல வேலை செய்யுற கூலி ஆளுகங்க சின்னகவுணுச்சி.

“ஏன்டா நானு பொம்பளைப்புள்ளை மனசுல இருக்குறத உன்கிட்ட சொல்றேன். நீ ஏன்டா ஒதுங்கி ஓடப்பாக்குறே?"

"கட்டி வெச்சுத் தோலை உரிச்சுப் போடுவாங்க பெரிய கவுண்டரும் பெரிய கவுணுச்சியும். சீப்புடிச்சு செத்துப் போயிருவேன் நானு."

"அடிச்சு வச்சுருவாங்கன்னுதான் இத்தினி நாளா பயந்துட்டுப் பேசாமல் இருந்தியாடா நீயி. அப்ப உனக்கும் என்மேல ஆசை இருக்குதுல்ல?"

"ஆசை இருக்காமப் போயிருமுங்ளா கவுணுச்சி. ரோட்டுல எத்தனை புள்ளைங்க போறாங்க. அழகா இருக்குற புள்ளைய ஆசையாப்பாக்குறதுதான்."

"நான் அழகா இல்லையா? அதைச் சொல்றா!"

"நீங்க கொள்ளைத்த அழகுதானுங்க."

"சரி, அன்னைக்கி தட்டுப்போர்கிட்ட மாட்டுக்குத் தட்டு எடுத்துட்டுப் போயி போடறதுக்கு நீ வந்தீல்ல. ஒரு முத்தம் குடுடான்னு கேட்டேன்ல. ஏன் மாட்டேனுட்டு போனே? கட்டி வெச்சு தோலை உரிச்சுப் போடுவாங்கன்னு பயந்துட்டுதானே?"

"கவுணுச்சி தூக்கம் வரலீங்ளா உங்களுக்கு? மணி பதினொன்னு ஆயிப்போச்சுங்க. தூங்குங்க நீங்க."

"எங்கடா தூக்கம் வருது எனக்கு? எந்த நேரமும் உன் நினைப்புதான். இப்போக்கூட நீயின்னு நினைச்சுட்டு தலைகாணிக்கு முத்தம் குடுத்துட்டு படுத்துட்டு இருந்தேன். நீ என்னடா பண்ணிட்டு படுத்திட்டு இருந்தே?"

"நானு ஒன்னும் பண்டுலீங்க கவுணுச்சி. தூக்கம் கண்ணை சொழட்டீட்டு வந்துச்சு. கூப்புட்டுப் போட்டீங்க. சுட்சு ஆப் பண்ணிட்டு வெச்சாத்தான் சத்தம் போடறீங்ளே!"

"நாளைக்கு மத்தியானம் என்னைக் கட்டிப்புடிச்சு உதட்டு மேல முத்தம் குடுக்குறியா?"

"நானெல்லாம் மாட்டேனுங்க"

"ஏன்டா மாட்டேங்றே? என் மேல உனக்கு ஆசை இல்லியா? இல்ல பயமா இருக்குதா?"

"ஒன்னுமில்லீங்க. என்னெயெ ஆளை விடுங்க."

"உன்னையெ நான் உடவே மாட்டேன்டா. சரி, மாமா என்ன பண்டுது?"

"மாமாவா? ஆருங்க?"

"ம். உங்கொப்பன் சுப்பன் என்ன பண்றான்?"

"அது ஒடம்பு வலின்னு மாத்திரை போட்டுட்டு எட்டு மணிக்கே படுத்து தூங்கீட்டுது."

"இப்புடி நீ என்மேல பிரியமே இல்லாமப் பேசறீல்ல. இருடா பார்த்துக்கறேன்."

"ஏனுங்க கவுணுச்சி பிரியமில்ல அது இதுன்னு பேசறீங்க. நீங்க நல்லா இருக்கோணுமுன்னுதான நான் நினைக்கிறேன். நாங்க எல்லாம் ஊசைன்னு நானே உங்ககிட்ட எப்புடிச் சொல்வேன்?" என்று சாமிநாதன் பேசிய பிறகுதான் சரோஜாவுக்கு மெதுவாய் புரிபட்டது எல்லாமே. இதற்கும் வழி பண்ணலாம் என்றே யோசித்தவள் மறுபடியும் சாமிநாதனிடம் ஆரம்பித்தாள்.

"சரி, எங்க தோட்டத்துல உன்னையெ வேலைக்கு சேர்த்தி உட்டது யாரு?"

"பெரிய கவுண்டருதானுங்க... கூப்புட்டு சாவி குடுத்தாரு."

"சரி, உன்னைய திடீர்னு அவரு கூப்பிட்டு சாவி எப்படி குடுப்பாரு?"

"அதெல்லாம் தெரியலீங்க. எங்கப்பன் சொல்லுச்சு வந்தேன்."

"நான்தான் எங்கப்பாகிட்ட சாமிநாதனைத் தோட்ட வேலைக்குக் கூப்பிடச் சொன்னேன்."

"ஐயோ!"

"என்ன லொய்யோ? எங்கம்மா கிட்ட நான் நம்ம விசயத்தைச் சொல்லி ஒரு வாரமாச்சு தெரியுமா?"

"ஐயோ! பெரிய கவுணுச்சிக்கும் தெரியுமா? மரத்துல என்னைத் தலைகீழுதா கட்டி வெச்சு கொல்லப்போறங்க."

"அப்புடி எல்லாம் ஒன்னும் நடக்காது. என் கண்ணுக்கு முன்னாடி உன்னைய அப்புடி செஞ்சுடுவாங்ளா? செய்ய உட்டுடுவனா நானு? எங்கம்மாகிட்ட நான் சொல்லிட்டேன். சாமிநாதன்தான் என்னோட ஊட்டுக்காரன்னு. நீ என்னைக் கட்டிக்கறேன்னு எங்கம்மாகிட்ட கேட்டுட்டா போதும் தெரியுமா!Ó என்று சரோஜா சொன்னதும்தான் சாமி நாதனுக்கே குழப்பமாகிவிட்டது.

"என்னடா, இத்தனை சொல்லிட்டேன். இன்னும் உனக்கு என்மேல நம்பிக்கை வரலீல்ல? போடா. உன்னைப் போயி நான் ஆசைப்பட்டு விரும்பினேன் பாரு. போன்லயாச்சும் ஒரே ஒரு முத்தம் குடேன்டா"

"ஐயோ சின்னக்கவுணுச்சி, நீங்க அதைம் இதைம் பேசிப் பேசியே என்னைய கமுத்திப் போடுவீங்ளாட்ட இருக்குதுங்க."

"அதைம் இதைம் என்னத்தைடா நான் பேசிட்டேன். உன்மேல ஆசைப்பட்டுட்டேன்னுதான இத்தனை நாளா படிச்சுப் படிச்சு சொல்லிட்டே இருக்கேன்.
நான் சாவுறேன். நான் செத்த பொறகாவது ஐய்யோ ஐய்யோன்னு அடிச்சுக்குவீல்ல" என்றவள் போனை கட் செய்தாள்.

சாமிநாதனுக்கு திடீரென இதயம் படபடவென துடிக்க ஆரம்பித்து விட்டது. சாவுறேன்னு சின்னக் கவுணுச்சி சொல்லிடுச்சே! ஐயோ, எக்குத்தப்பா எதாச்சிம் பண்ணிக்கிடுச்சுன்னா? ஐய்யய்யோ! நினைக்கவே பயங்கரமா இருக்கே! சாமிநாதன் திருப்பி சரோஜாவைக் கூப்பிட்டான். ரிங் ஆனது. ஹப்பாடா! சரோஜா கவுணுச்சி போனை எடுத்ததும் பேசி தப்பான முடிவுக்கெல்லாம் போகவேண்டாம் என்று சொல்லிவிடலாம் என்று நினைத்தான். ஆனால் சரோஜா போனை எடுக்கவேயில்லை. மறுபடி மறுபடி அடித்தான். ஆனால் சரோஜா சிரித்தபடியே எடுக்காமலேயே இருந்தாள். எத்தனை முறைதான் அடிப்பான் பார்ப்போம் என்றே ஏழு எட்டுமுறை எடுக்காமலேயே விட்டு சுவிட்ச் ஆஃப் செய்துவிட்டு நிம்மதியாய்ப் படுத்தாள்.

ராமசாமி கவுண்டரின் அப்பன் ராமு கவுண்டர் புகைப்படம் வீட்டின் பூஜை அறையில் சுவற்றில் சாய்த்து வைக்கப்பட்டிருந்தது. ராமு கவுண்டர் இறந்து பத்து வருடங்களாகிவிட்டது. ராமசாமிகவுண்டரின் அம்மா டொக் டொக்கெனத் தடியை ஊன்றிக் கொண்டே குனிந்தவாக்கில் பொக்கை வாயைமென்றுகொண்டே 'அதை எடுத்தாடா... அதை எடுத்தாடா' என்றே சொல்லிக்கொண்டு சுற்றிக்கொண்டிருந்தது.

ராமு கவுண்டரின் புகைப்படத்திற்கு மாலையைப் போட்டவர் மூன்று படப்பு இலைகளையும் நோட்டம் விட்டார். வடை, ஆப்பிள், ஆரஞ்சு, முறுக்கு, திராட்சை, சாப்பாடு, குடல் வறுவல், கோழி வறுவல் என்று படப்பு இலை நிரம்பியிருந்தது.

“போன சுடிக்கு வாடான்னு சாமிநாதனை டிவிஎஸ் குடுத்து தாட்டி உட்டேன். போயி கால்மணி நேரம் இருக்கும். இன்னம் காணமே!” என்று தன்னப்போல் பேசிக் கொண்டு வீட்டின் வெளிவாசலுக்கு வந்தார் ராமசாமி கவுண்டர். கிழவி தடியை ஊன்றிக்கொண்டே பின்னால் வந்தது!

“ஆரைடா பாத்துட்டு இருக்கே? தேங்காய ஒடச்சு ஊதுபத்தி காட்டினீன்னா போதும்ல! முத்துச்சாமி ஊட்டுக்கும் நான் போவோணும்டா! அவன் இந்த நேரத்துக்குக் கும்புட்டே முடிச்சிருப்பான். மணி ரெண்டுக்கும் மேல ஆயிப் போச்சாட்ட!” என்று பேசிக்கொண்டே வீட்டினுள் போய்விட்டது.
சாமிநாதன் டிவிஎஸ்ஸில் வீட்டின் முன் வந்து நின்றான்.

“ஏன்டா இவ்ளோ நேரம். எடுத்துக்குடு, நேரமாயிட்டு இருக்குது.”

“காத்து ரெண்டு வீல்லயும் ரொம்ப கம்மியா இருந்துதுங்ளா, சைக்கிள் கடைக்காரர்கிட்ட உட்டு ரெண்டு வீலுக்கும் காத்துப் புடிச் சுட்டு வந்தனுங்க” என்றவன் கவரில் இருந்த முழுப்பாட்டிலை உருவி எடுத்து நீட்டினான்.

“ஊரு வரைக்கும் போன ஒடனே வந்துடறனுங்க.”

“அட ஆச்சு எல்லாம். சாப்புட்டு போட்டே போயிர்லாம் இரு” என்றவர் வீட்டினுள் பாட்டிலோடு சென்றார். பூஜை அறைக்குள் நுழைந்தவர் பாட்டில் மூடியைத் திருகி நடுவில் இருந்த இலையின் சோற்றில் கொஞ்சம் ஊற்றிப் பிசைந்தார். ஆப்பிள், திராட்சை, ஆரஞ்சு என பிய்த்து சோற்றில் பிசைந்து பெரிய தட்டத்தில் வைத்தார். தேங்காயை உடைத்து வைத்து சூடம் காட்டினார். 'எல்லாரும் கும்பிடுங்க' என்றவர் திருநீறு எடுத்து நெற்றியில் பூசிக்கொண்டு தட்டை எடுத்துக்கொண்டு வீட்டின் மாடிப்படி ஏறினார். காகங்கள் தென்னை மரங்களில் இருந்து வீட்டின் மொட்டை மாடிக்குப் பறந்தன. தட்டுப்போர் மீது நின்று மாரன் எடுத்துத் தரும் தட்டுக்களை வரிசையாய் அடுக்கி வைத்துக் கொண்டிருந்த சுப்பன் ஒரு மணி நேரமாகவே பசி பசி என்று சொல்லிக்கொண்டிருந்தான். பறந்துபோகும் காகங்களைப் பார்த்தவன் “சாமி கும்புட்டுப் போட்டாங்ளாட்ட” என்றான்.

“இந்த வருசம் ரொம்ப லேட்டுப் பண்ணிப் போட்டாரு கவுண்டரு” என்றான் மாரன்.

“சிறுகொடலை பெருங்கொடலு தின்னுட்டு இருக்குது மாரா! இனி அவரு நம்பளை சாப்புடக் கூப்பிட வருவாரு. நானு இறங்கிடறேன்” என்ற சுப்பன் சாத்தியிருந்த ஏணியில் கீழே இறங்கினான். இருவரும் கிணற்றுத் தொட்டிக்குச் சென்று முகம், கை, கால் கழுவிக் கொண்டிருந்தபோதே கவுண்டரின் சப்தம் வீட்டின் பின்புறத்தில் இருந்து கேட்டது!

“டேய் சுப்பா! அவனையும் கூட்டிட்டு வாடா! மணி வேற மூனுக்கும் மேல ஆயிப்போச்சாட்ட”
இவர்கள் வீட்டின் பின்புறம் சென்றபோது திண்ணை மீது சுடு சாப்பாட்டுடன் இலை விரித்திருந்தது! இருவரும் படலில் செருகி வைத்திருந்த இவர்களது டம்ளர்களை எடுத்துக்கொண்டு போய் பாட்டிலோடு நின்றிருந்த கவுண்டர் முன் நீட்டினார்கள். சுப்பன் சாப்பிட்டு முடித்துவிட்டு வீடு வந்தபோது சாமிநாதன் திட்டிலில் கிடந்து தூங்கிக் கொண்டிருந்தான்.

“டேய், சாமி... சாமி எந்திரீடா” என்று சாமிநாதனைத் தட்டி எழுப்பினான் சுப்பன். 'என்னப்பா' என்றான் தூக்கக் கலக்கத்தில்.

“கவுண்டரு உன்னைய சாப்பாட்டுக்கு தாட்டி உடச் சொன்னாருடா. போயி ஒரு வாய் தின்னுபோட்டு வந்துரு. சரக்கு ஊத்துவாரு. வேண்டாம்னு சொல்லப்புடாது” என்றான்.

“சரீப்பா, இன்னம் சித்த நேரம் போகட்டும். பசி போட்டு என்னைக் கொன்னு எடுத்துச்சா. கொஞ்சம் ரசம் ஊத்தி இப்பத்தான் தின்னு போட்டு படுத்தேன். அஞ்சு மணிக்காட்டப் போய்க்கறேன்” என்று இவன் சொன்னதும் சுப்பன் ஒன்றும் சொல்லாமல் கட்டிலின் கீழ் இருந்த கத்தியை எடுத்துக்கொண்டு விறவுதறிக்க வெளிவந்தான். அந்த நேரம் சாமிநாதனின் செல்போன் அலறியது. பாக்கெட்டிலிருந்து எடுத்துப் பார்த்தவன் சரோஜா நெம்பர் என்று தெரிந்ததும், தூக் கருமம் என்று எடுக்காமலேயே புரண்டு படுத்தான். ரிங் வந்து கொண்டேயிருந்தது, இவன் ஐந்து மணிக்கு எழுந்து கவுண்டர் வீடு புறப்படும் வரை!

“தேஞ் சாமிநாதா இத்தனெ நேரம்? சாலியா எங்காச்சிம் போயிருந்தியா? ஊட்டுல எல்லாரும் சாப்டாச்சு! கவுண்டர் கூட சாப்புட்டு போட்டு பெருந்துறை வரைக்கும் சோலின்னுட்டு போயிட்டாப்ல” என்று பேசிக்கொண்டே திண்ணையில் இலை விரித்து சாப்பாடு போட்டது பெரிய கவுண்டிச்சி. சரோஜா தாவணி பாவாடையோடு வீட்டின் பின் திண்ணைக்கு வருவதும் போவதுமாக இருந்தாள். அவள்தான் சரக்கு பாட்டிலை எடுத்துக்கொண்டு வந்து,
“குடிப்பீல்ல.. டம்ளரை நீட்டு” என்றாள். இவன் மறுப்பேதும் சொல்லாமல் டம்ளரை நீட்டினான். சரோஜா சரக்கு ஊற்றினாள். டம்ளர் நிரம்பியதும் நிறுத்தி,
"குடி. இன்னம் ஊத்துறேன். இன்னிக்கு எங்கம்மாகிட்ட நீ கேட்டுரு என்ன!" என்றாள். இவன் மடமடவென குடித்துவிட்டு மறுபடியும் நீட்டினான். சரோஜா மறுபடியும் இவன் டம்ளரை நிரப்பி விட்டு வீட்டுக்குள் போய்விட்டாள். சாமிநாதன் இலையின் முன் அமர்ந்து வறுவலை எடுத்து மோந்து பார்த்துவிட்டு டம்ளரைக் காலி செய்துவிட்டு வறுவல் மென்றான்.

“வேணுங்கறதைக் கேட்டு வாங்கித் தின்னு.” -பெரிய கவுண்டிச்சி இவன் அருகிலேயே நின்று கொண்டது.

“வறுவல் நல்லா இருக்குதா? உங் கொப்பனும் நல்லா இருக்குதுன்னு நாலு தடக்கா வாங்கித் தின்னான்” என்றது. சாமிநாதனுக்குக் கொஞ்சமாய் கிறுகிறுப்பு தட்டியது. சாப்பாடு கிடுகிடுவென வயிற்றுக்குள் இறங்கியது. சரோஜா கதவுக்கு அருகிலேயே நின்று இவனைப் பார்த்துக் கொண்டேயிருந்தாள்.

“வேணுங்கறதை கேட்டு வாங்கித்தின்னு. வேணுங்கறதைக் கேளு.” பெரிய கவுண்டிச்சியின் சப்தம் கேட்டுக் கொண்டேயிருந்தது இவனுக்கு.

“ஊட்டுக்குள்ள தலைக்கறி வடைச்சட்டில இருக்கும். போயி எடுத்துட்டு வாடி சரோஜா. சாமிநாதன் திங்கட்டும்” என்றது.

சரோஜா வடைச்சட்டியோடு வந்தாள். இவன் கையை உயர்த்தி போதுங் சின்னக் கவுணுச்சி என்றான். Òபோதுங் பெரிய கவுணுச்சிÓ என்றான்.

“வேணுங்கறதைக் கேளு சாமிநாதா! வேணுங்றதைக் கேளு.”

பெரிய கவுண்டிச்சி குரல் கேட்க, இவன் சாப்பிடுவதை நிறுத்தி பெரிய கவுண்டிச்சி முகம் பார்த்தான்.

“சின்ன கவுணுச்சியெ எனக்குக் கட்டி வெச்சுட்டீங்கன்னா நானு மகராசனா பொழைச்சுக்குவேனுங்க” என்றான்.

“அடச் சக்கிலி நாயே! இவுனுக்கு வந்த ஏத்தத்தைப் பாரு” என்ற பெரிய கவுணுச்சி இலை முன் அமர்ந்திருந்தவனின் நெஞ்சில் எட்டி ஒரு மிதி வைத்தாள். சாமிநாதன் திண்ணையிலிருந்து அப்படியே வாசலில் தொப்பென விழுந்தான். பின் மண்டை ஏதோ வாசல் கல்லில் பொட்டென அடித்தது மாதிரி இருந்தது. சரோஜா கதவு வழியாக வீட்டினுள் ஓடுவது தெரிந்தது! வாசலில் கிடந்தவன் நிதானித்துக் கை ஊன்றி எழுந்து உட்கார்ந்தபோது கழுத்தில் ரத்தம் வடிவதைக் கண்ட பெரிய கவுண்டிச்சியும் போட்டது போட்டபடி எழுந்து வீட்டுக்குள் ஓடிப் போயிற்று. இவன் தடுமாறி எழுந்து அப்படியே வீடு நோக்கி நடந்தான்.

அடுத்த நாள் காலையில் பதினொரு மணிவாக்கில்தான் சாமிநாதன் கட்டிலில் இருந்து எழுந்தான். பின் மண்டை பயங்கரமாய் வலித்தது. செல்போன் அலறியது. சரோஜாதான். நேற்று அதன்பிறகு சரோஜாவிற்கு என்ன ஆச்சோ? செல்லை எடுத்தான்.

“சொல்லுங்கொ சின்ன கவுணுச்சி” என்றான்.

“சின்ன கவுணுச்சி இல்லடா. நான்தான்” என்றார் ராமசாமி கவுண்டர்.

“தேனுங் கவுண்டரே!”

“உங்கொப்பனைக் கேட்டேன். அவன் கட்டல்லயே கெடக்கறான்னு சொன்னான். நேத்து என்னதான் பண்டுனே நீயி? கவுண்டிச்சி சரோசாவைப் போட்டு சாத்தீட்டேகெடக்கறா. எட்டி ஒதச்சு தள்ளிட்டாளாமா கவுண்டிச்சி. இங்க நானு தோட்டத்துக்குப் போற கேட்டுக்கிட்டத்தான் நின்னுட்டு இருக்கேன். ஊட்டுக்குள்ள ஒரே ரச்சை. உன்னைய என்ன ஏதுன்னு கேட்டாத்தான் தெரியுமின்னு முத்துச்சாமி கவுண்டனும் சொன்னான். இங்க தான் நிக்கிறோம். சித்த வந்துட்டுப் போயிரு” என்றார்.

“இதென்னுங்... இப்பவே வாரேன்” என்றவன் எழுந்து செருப்பைத் தொட்டுக்கொண்டு கிளம்பினான். கிழக்கே இறங்கி வடக்கே நடந்தான். தூரத்தே கவுண்டர் தோட்ட கம்பி கேட் அருகே இரண்டு கவுண்டர்களும் நின்று கொண்டிருப்பது இவனுக்குத் தெரிந்தது. லுங்கியைக் கால்வரை இறக்கி விட்டுக்கொண்டு அவர்களிடம் வந்தான்.

“த்தென்றா.. மூஞ்சிகூட கழுவாம வந்துட்டியா?” முத்துச்சாமி கவுண்டர்தான் இவனைப் பார்த்ததும் ஆரம்பித்தார்.

“கூப்பிட்டீங்க. அப்பத்தான் எந்திரிச்சேன். சரின்னு போட்டு வந்துட்டனுங்க.”

“தென்றா அது, கழுத்துப் புறத்துல ரத்தமாட்ட காஞ்சு இருக்கு?”

“என்ன நடந்துச்சுன்னே தெரியலீங்க!”

“மப்பு அத்தனை ஏறிப்போச்சா நேத்து.”

“கவுணுச்சி டம்ளர்ல ஊத்தி உட்டாங்க... ரெண்டு டம்ளர்தான் குடிச்சனுங்க!”

“சின்ன கவுணுச்சிய பொண்ணு கேட்டியாமா நேத்து பெரிய கவுணுச்சிகிட்ட!” என்றார் முத்துச்சாமி கவுண்டர்.

“சின்னகவுணுச்சி தொந்தரவுதானுங்க எனக்கு இந்த இருவது இருவத்தஞ்சி நாளா! என்னெய லவ்வு பண்ணுதுங்ளாமா! சாமத்துல தூங்க உடாம போனுப்பண்டி போனுப்பண்டி.. தேங் கேக்கறீங்க!”

“என்கிட்ட சொல்லீருக்கோணு முல்லடா நீ மொதல்லயே!”

“நீங்கதான் என்னை சின்ன கவுணுச்சி சொல்லித்தான் வேலைக்கே தோட்டத்துக்கு சேத்துக்கிட்டீங்ளாமே!”

“அப்புடி வேற சொன்னாளா!”

“ஆமாங்க கவுண்டரே! பெரிய கவுணுச்சிக்கும் தெரியும். நீ ஏன்டா என்னை லவ்வு பண்ணமாட்டீங்றேன்னு ஒரே தொந்தரவுங்க. நேத்து கூட பெரிய கவுணுச்சிக்கிட்ட கேளு கேளுன்னு சொல்லுச்சுங்க.”

“தண்ணி மப்புல கேட்டே போட்டே! அப்புடித்தான?”

“நானு என்ன கேட்டேன் என்ன பேசுனன்னே தெரியலீங்க கவுண்டரே! சின்ன கவுணுச்சின்னு எத்தனையோ வாட்டி சொல்லீட்டணுங்க. கேக்கவே மாட்டீனுட்டுதுங்க.”

“டேய் ராமசாமி, இவன்மேல தப்பு ஒன்னுமில்ல. எல்லாம் அவகிட்டத்தான் வேலைத்தனம் பூராவும் இருக்குது. சரி சாமிநாதா, நீ வேணா நாளைல இருந்து தறிக்குடோனுக்கே போயிக்கோ. கணக்கு இருந்தா உங்கொப்பன் கையில குடுத்துடறோம். நீ போ” என்று முத்துச்சாமி கவுண்டர் இவனைப் போகச் சொல்ல, இவனும் திரும்பி வீட்டுக்கு நடந்தான்.

அன்று மாலையே ராமசாமி கவுண்டர் வீடு இழவு விழுந்த வீடானது! தகவல் தெரிந்த ஒரம்பறைசனம் காரிலும், பைக்கிலும் வீட்டிற்கு வந்த வண்ணம் இருந்தது! வழுவுச் சின்னான்தான் தன் அப்பனோடு தப்பட்டை காய்ச்சி அடித்துக் கொண்டிருந்தான். வீட்டின் உள்புறம் பெண்களின் அழுகை ஒலி கேட்டுக் கொண்டேயிருந்தது! மாதாரிகள் வேலி ஓரமாக கூட்டமாய் நின்றிருந்தார்கள். சரோஜாவின் பிணத்தை எரிப்பார்களா, புதைப்பார்களா? தெரியவில்லையே! என்று பேசிக் கொண்டிருந்தார்கள். “தீயி எரிய எரிய அப்புடியே ஓட்டம் புடிச்சுட்டு ஓடியாந்துச்சாமா. இது வழியா நேரா ஓடி வழுவுக்குள்ளார முட்டி ஓடி சாமிநாதன் ஊட்டு முன்னாடி போயி உழுந்து உருண்டு செத்துப் போச்சாமா சின்னகவுணுச்சி. பிதுறு கெட்டு என்ன பண்றம்னு தெரியாமத்தான ஓடியிருக்கும். அட ஓடின கவுணுச்சி நேரா தண்ணித் தொட்டிக்குள்ளார ஓடியாந்து உழுந்திருக்கலாமே!” மாதாரிச்சிகள் தங்களுக்குள் பேசிக்கொண்டார்கள்.

ராமசாமி கவுண்டரும், முத்துச்சாமி கவுண்டரும் பங்காளிகளோடு வீட்டு வாயிலில் கைநீட்டிக் கொண்டிருந்தார்கள். சாமிநாதன் மாரனின் பின்னால் நின்று கொண்டே வரும்சனங்களைப் பார்த்துக்கொண்டு நின்றிருந்தான். சின்ன கவுணுச்சி தானே சீமெண்ணெய் ஊற்றிப் பத்தவைத்துக் கொண்டதா. இல்லை கவுண்டரே சின்ன கவுணுச்சி மீது சீமெண்ணெய் ஊற்றிப் பற்றவைத்து சாவுடி என்று விட்டாரா? ஒன்றும் புரியாமல் அதே யோசனையில் நின்று கொண்டிருந்தான்....


நன்றி: உயிர்மை மாத இதழ்

 வா மு கோமு

2 comments:

Kathiravan Rathinavel said...

அப்படியே கண்ணு முனாடி எல்லாம் நடக்கற மாதிரி இருக்கு, ரொம்ப நல்ல கதை.
எங்க ஊர்பக்கமும் இப்படித்தான் ஆனா லாரி டயர் போட்டு எரிப்பாங்க. சும்மா 13 வயசுல ஓடுனா என்னதான் பன்றது?

Kathiravan Rathinavel said...
This comment has been removed by the author.