Tuesday, July 31, 2012

ஃபிலிமோத்ஸவ் - சுஜாதா - சிறுகதை

மந்திரி வந்திருக்க வேண்டும். எல்லோரும் தேர்தல் உற்சவத்தில் கவனமாக இருந்ததால்

டில்லி அதிகாரி ஒருத்தர் மட்டுமே வந்திருந்தார். வெள்ளைக்கார டைரக்டர்கள் சிலர்

வந்திருந்தார்கள். எதற்கெடுத்தாலும் ‘வெரி நைஸ்’, ‘வெரி நைஸ்’ என்றார்கள்.

மற்றொரு ‘கல்யாணராம’னைத் தேடி தமிழ் சினிமா டைரக்டர்கள், கதாசிரியர்கள்,

பத்திரிக்கையாளர் என்று பல பேர் டேரா போட்டிருந்தார்கள்.





சகட்டுமேனிக்கு சினிமா

பார்த்தார்கள், குடித்தார்கள். விலை போகாத ஹிந்தி நடிகர்கள், குறுந்தாடி வைத்த

புதிய தலைமுறை டைரக்டர்கள், புதுக் கவிஞர்கள், அரசாஙக் அதிகாரிகள், கதம்பமான

கும்பல். சிகரெட் பிடிக்கும் பெண்கள், சத்யஜித்ரேயைத் தொடர அவர் பொலான்ஸ்கியைக்

கட்டிகொண்டு போட்டோ எடுத்துக் கொண்டார்.





பட்டுப்புடவை அணிந்த ஒரு சுந்தரி குத்துவிளக்கு ஏற்றினாள்.

எல்லோரும் சினிமா எத்தகைய சாதனம், மனித சமுதாயத்தை எப்படி மாற்றக்கூடிய வல்லமை

படைத்தது என்பது பற்றி இங்கிலீஷில் பேசினார்கள். ‘சினிமாவும் சமூக மாறுதலும்’

என்று புஸ்தகம் அச்சடித்து ஒல்லியான அதை இருபது ரூபாய்க்கு விற்றார்கள். உதட்டு

நுனியில் ஆங்கிலம் பேசினார்கள். சினிமா விழா!





நம் கதை இவர்களைப் பற்றி அல்ல. ஒரு சாதாரண பங்களூர் குடிமகனைப் பற்றியது. பெயர்

நாராயணன். தொழில் யஷ்வந்த்புரத்து பிஸ்கட் ஃபாக்டரியில் பாக்கிங்க் செக்‌ஷனில்.

ஃபிலிம் விழாவுக்காக தேதி அறிவிக்கப்பட்ட அன்று அதிகாலையில் சென்று வரிசையில்

நின்று தலா 11 ரூபாய்க்கு ஏழு டிக்கட் அடங்கிய புத்தகம் ஒன்றை

அடித்துப்பிடித்து வாங்கி வந்துவிட்டான்.





கூட்டத்தைத் தடுக்க போலீஸ் மெலிதான லட்டியடித்ததில் முட்டியில் வலி.

இருந்தாலும் முழுசாக வெளியே வந்துவிட்டான். டிக்கட் கிட்டிவிட்டது. ஏழு படத்தில

ஒரு படமாவது நன்றாக இருக்காதா..?





நாராயணின் அகராதியில் இந்த ’நன்றாக’ என்பதை விளக்க வேண்டும். நன்றாக என்றால்

சென்சார் செய்யப்படாத.. குறைந்த பட்சம் ஒரு கற்பழிப்புக் காட்சியாவது

இருக்கக்கூடிய படம். நாராயணனின் குறிக்கோள் நவீன சினிமாவின் மைல் கல்களை

தரிசித்துவிட்டு விமர்சனம் செய்வதல்ல. அதற்கெல்லாம் பண்டிதர்கள்

இருக்கிறார்கள். அவனைப் பொறுத்தவரை ஒரு பெண்ணாவது ஏதாவது ஒரு சமயம்

உடையில்லாமல் ஓரிரண்டு ஃப்ரேமாவது வரவேண்டும். அப்போதுதான் கொடுத்த காசு

ஜீரணம்.





நாராயணின் ஆசைகள் நாசூக்கானவை.

அவன் தின வாழ்க்கையும் மன வாழ்க்கையும் மிகவும் வேறுபட்டவை. தின வாழ்க்கையில்

அவன் ஒரு பொறுப்புள்ள மகன். பொறுப்புள்ள அண்ணன். பக்தியுள்ள பிரஜை. பனஸ்வாடி

ஆஞ்ச நேயா, ராஜாஜிநகர் ராமன் எல்லாரையும் தினசரி அல்லது அடிக்கடி

தரிசிக்கின்றவன். எவ்வித ஆஸ்திக சங்கத்துக்கும் பணம் தருவான். எந்தக் கோயில்

எந்த மூலைக் குங்குமமும் அவன் நெற்றியில் இடம் பெறும். நாராயணனுக்குத் திருமணம்

ஆவதற்கு சமீபத்தில் சந்தர்ப்பம் இல்லை. ஐந்து தங்கைகள், அனைவரும் வளர்ந்து

கல்யாணத்திற்குக் காத்திருப்பவர்கள். ஒருத்திக்காவது ஆக வேண்டாமா?




பெண்களைப்

பற்றி இயற்கையாகவே நாராயணன் கூச்சப்படுவான். பஸ் நிலையத்திலோ, ஃபாக்டரியிலோ

அவர்களை நிமிர்ந்து பார்க்க மாட்டான். அவனை பலரும் புத்தன், ஞானி என்று

அழைப்பார்கள்.





அவன் மன வாழ்க்கை வேறு தரத்தது. அதில் அபார அழகு கன்னியர்கள் உலவி அவனையே

எப்போதும் விரும்பினர். இன்றைய தமிழ், இந்தி சினிமாவின் அத்தனை கதாநாயகியரும்

நாராயணனுடன் ஒரு தடவையாவது பக்கத்தில் அமர்ந்து தடவிக்கொடுத்திருக்கிறார்கள்.

எத்தனை அழகு என்று வியந்திருக்கிறார்கள்.





நாராயணனுக்கு கிருஷ்ன ன் என்றொரு சிநேகிதன். அவன் அடிக்கடி நாராயணனிடம் கலர்கலராக

சில போட்டோக்கள் காண்பிப்பான். ஐரோப்பா தேசத்து நங்கைகள் வெட்கத்தை அறைக்கு

வெளியில் கழற்றி வைத்துவிட்டு தத்தம் அந்தரங்களைப் பற்றி சந்தேகத்துக்கு எவ்வித

சந்தர்ப்பமும் தராமல் இதோ பார், இதைப் பார் என்று நாராயணனைப் பார்த்துச்

சிரிக்கும் படங்கள். படங்களை விட அந்தப் புத்தகங்களில் வரும் விளம்பரங்கள்,





சாதனங்கள் நாராயணனை ரொம்ப வருத்தின. இதெல்லாம் நம் நாட்டில் கிடைத்தால் என்னவா!

என் போன்ற தனியனுக்கு இந்த சாதனங்கள் சிறப்பானவை. பயமோ கவலையோ இன்றி எவ்வளவு

திருப்தியும் சந்துஷ்டியும் அளிக்கும்.




என்னதான் அழகாக அச்சிடப் பெற்றிருந்தாலும் சலனமற்ற இரு பரிமாணப் படங்களைவிட

சினிமாச் சலனம் சிறந்ததல்லவா? நங்கைமார் நகர்வதைத் தரிசிக்கலாம். கேட்கலாம்.

கிருஷ்ணப்பா சொன்னான், ”அத்தனையும் சென்சார் செய்யாத படம் வாத்தியாரே! நான்

எதிர்த்தாப்பலே தியேட்டருக்கு வாங்கியிருக்கேன். தினம் தினம் படத்தைவிட்டு

வெளியே வந்ததும் எப்படி இருந்தது சொல்லு. நானும் சொல்றேன்.”

நாராயணன் பார்த்த முதல் படம் ரஷ்யப்படம். சைபீரியாவின் பனிப்படலத்தில் எவ்வளவு

கஷ்டப்பட்டு அவர்கள் வேலை செய்து எண்ணெய் கண்டுபிடித்து.. படம் பூரா

ஆண்கள்,கிழவர்கள். பாதிப்படத்துக்கு மேல் பனிப்படலம். வெளியே வந்தால் போதும்

என்று இரண்டு மணி நேரத்தை இரண்டு யுகமாகக் கழித்துவிட்டு வெளியே வந்தான்.

கிருஷ்ணப்பா எதிர் தியேட்டரில் பார்த்த ஃபிலிமோத்சவப் படத்தில் ஐந்து நிமிடம்

விடாப்பிடியாக ஒரு கற்பழிப்பு காட்டப்பட்டதாம். கானடா தேசத்து படம்.






வர்ணித்தான். ”பார்க்கிறவங்களுக்கே சுந்த் ஆயிடுச்சி வாத்தியாரே!” நாராயணன்

இன்னும் ஒரு நாள் இந்த தியேட்டரில் பார்ப்பது.. அப்புறம் எதிர் தியேட்டரில்

மாற்றிக்கொள்வது என்று தீர்மானித்தான்.

நாராயணன் பார்த்த இரண்டாவது படம் டிராகுலா பற்றியது. படம் முழுவதும் நீல

நிறத்தில் இருந்தது.

நீள நகங்களை வைத்துக்கொண்டு ராத்திரி 12 மணிக்கு கல்லறையிலிருந்து புறப்பட்ட

டிராகுலா அந்த அழகான பெண்ணின் ரத்தத்தை உறிஞ்சுவதற்குக் கிளம்பியபோது நாராயணன்

சிலிர்த்துக் கொண்டான். ஆகா, இதோ! ரத்தம் உறிஞ்சுவதற்கு முன்பு, இதோ ஒரு

கற்பழிப்பு, சிறந்த கற்பழிப்பு, அப்படியே அவள் கவுனைக் கீறிக் குதறிக்

கிழித்து, உள்ளுடைகளையும் உதறிப்போட்டு, மெதுவாக அங்கம் அங்கமாக அந்த நகங்களால்

வருடி, அப்புறம்தான் கழுத்திலிருந்து ரத்தம் எடுக்கப் போகிறது என்று

எதிர்பார்த்து ஏறக்குறைய நாற்காலியில் சப்பணமிட்டு உட்கார்ந்துகொண்டான்.

அந்தப் பாழாப்போன பெண், டிராகுலா அருகில் வந்ததும் தன் கழுத்தில் சங்கிலியில்

தொங்கும் சிலுவையைக் காண்பித்துவிட -வந்தவன் வந்த காரியத்தைப் பூர்த்தி

செய்யாமல், ஏன் ஆரம்பிக்கக்கூட இல்லாமல், பயந்து ஓடிப்போய் விடுகிறான். சட்!

என்ன கதை இது! நிச்சயம் இந்த தியேட்டரில் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும்

சினிமாப்படங்கள் அத்தனையும் அடாஸ் என்று தீர்மானித்து வெளியே வர,

கிருஷ்ணப்பாவைச் சந்திக்கப் பயந்து, வேகமாக பஸ்ஸ்டாண்டை நோக்கி ஓட, கிருஷ்ணப்பா

பிடித்துவிட்டான்.






“என்னாப் படம் வாத்தியாரே! டாப்பு! அப்பன் தன் பொண்ன காணாம்னுட்டு தேடிக்கிட்டு

போறான். அவ, எங்க அகப்படறாத் தெரியுமா? செக்ஸ் படங்கள் எடுக்கறவங்ககிட்ட

நடிச்சிட்டு இருக்கா! எல்லாத்தையும் காட்டிடறான்! கொட்டகையிலே சப்தமே இல்லை..

பின் டிராப் சைலன்ஸ்.”





“கிருஷ்ணா, நாளைக்கு டிக்கட் மாத்திக்கிடலாம். நீ என் தியேட்டர்லேயும் நான் உன்

தியேட்டர்லேயும் பாக்கிறேன்!”

“நாளைக்கு மட்டும் கேட்காதே வாத்தியாரே! நாளைக்கு என்ன படம் தெரியுமா? லவ்

மெஷின், பிரஞ்சுப் படம். நான் போயே யாகணும்!”

“பிளாக்கில கிடைக்குமா?”

“பார்க்கிறேன்! துட்டு ஜாஸ்தியாகும். ஏன் உன் படம் என்ன ஆச்சு.”

“சே, பேசாதே! மரம் செடி கொடியைக் காட்டியே எல்லா ரீலையும் ஓட்டறான். நீ

எப்படியாவது எனக்கு பிளாக்கில ஒரு டிக்கட் வாங்கிடு. என்ன விலையா இருந்தாலும்

பரவாயில்லை!”





85 ரூபாய்க்கு ஒரு டிக்கட் மிகுந்த சிரமத்துடன் கிடைத்ததாக வாங்கி வந்தான்.

கிருஷ்ணா, “உன் டிக்கட்டைக் கொடு” என்றான்.

“இதை வித்து பார்க்க முடியுமான்னு சோதிச்சுட்டு அப்புறம் வர்றேன். நீ தியேட்டர்

போயிரு” என்றான்.

“படத்தின் பெயர் லவ் மெஷின் இல்லையாமே.”

“ஏதோ ஒரு மெஷின். கிராக்கிங் மெஷினோ என்னவோ! ஆனா படு ஹாட்! கியாரண்டி மால்.”

நாராயணன் பார்த்த அந்த மெஷின் படம் செக்கஸ்லோவேகியா படம். நிஜமாகவே ஒரு புராதன

சினிமா எந்திரத்தைப் பற்றியது. நடிகர்கள் ‘கப்ராஸ், கப்ராஸ்’ என்று வேற்று

மொழியில் பேசிக்கொண்டிருக்க, படத்தின் அடியில் ஆங்கில எழுத்துக்கள் நடுங்கின.

எஸ்.எஸ்.எல்.சி. வரை படித்திருந்த நாராயணனின் இங்கிலீஷ் அவ்வளவு வேகமாகப்

படிக்க வரவில்லை.





இரண்டு வார்த்தை படிப்பதற்குள் படக் படக் என்று மாறியது. படத்தில் மிக அழகான

இரண்டு பெண்கள் இருந்தார்கள். இரண்டு பேரும் ஏராளமாக கவுன் அணிந்து வந்தார்கள்.

கதாநாயகன் அண்ணனா, அப்பனா, காதலனா, என்று தீர்மானிக்க முடியவில்லை. கவுன்

போட்டிருந்த பெண்கள் சாஸ்திரத்துக்கூட அந்த கவுன்களைக் கழற்றவில்லை. இண்டர்வெல்

வரை ஒரு பட்டன்? ம்ஹூம்! படுக்கையில் அவர்கள் படுத்ததுமே காமிரா நகர்ந்துபோய்

தெரு, மண், மட்டை என்ற புறக்காட்சிகளில் வியாபித்தது. ஒரே ஒரு இடத்தில்

சினிமாவுக்குள் சினிமாவாக பாரிஸ் நகரத்தின் எஃபில் டவர்முன் ஒரு பெண் தன்

பாவாடையைக் கழற்றுவதாக ஒரு காட்சி வந்தது. அதாவது வரப் பார்த்தது. அதற்குள்

காமிரா அவசரமாக அந்தக் காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்தவன் முகபாவங்களைக்

காட்டத் தலைப்பட்டது. வெளியே வந்தான். கிருஷ்ணப்பா நின்றுகொண்டிருந்தான்.

“என்ன? பார்த்தியா? படம் எப்படி?”



“நீ பாக்கலை?”



”நான் என் டிக்கட்டை விற்கலாம்னு போனேன்! யோசிச்சேன். இன்னிக்கு இங்கதான்

பார்க்கலாமேன்னு உன் டிக்கட்ல உள்ளே நுழைஞ்சேன். கிடக்கட்டும் உன் படம்

எப்படி?”




“நாசமாய்ப் போச்சு. ஒரு எழவும் இல்லை. படம் முழுக்க குதிரை வண்டி கட்டிகிட்டு

ஒரு ஆள் பயாஸ்கோப் வைச்சுக்கிட்டு ஊர் ஊராப் போறான்!”

நாராயணன் கிருஷ்ணப்பாவை சற்று தயக்கத்துடன் கேட்டான்.

“உன் படம் எப்படி?”

“செமைப்படம் வாத்தியாரே.”

நாராயணன் மவுனமானான்.




“வேஸ்ட் ஆறதேன்னு உட்கார்ந்தேன். படுகிளாஸ். ஒரு முத்தம் கொடுக்கிறான் பாரு,

அப்படியே அவளைச் சாப்பிடறான். ஆரஞ்சுப்பழம் உரிக்கிற மாதிரி உடுப்புகளை

ஒவ்வொண்ணா ஒவ்வொண்ணா உருவி…”




“கிருஷ்ணா அப்புறம் பேசலாம். எனக்கு அர்ஜண்டா வேலை இருக்குது! வர்றேன்” என்று

விரைந்தான் நாராயணன். அவனுக்கு அழுகை வந்தது. கிருஷ்ணப்பா போன்ற எப்போதும்

அதிர்ஷ்டக்காரர்களிடம் ஆத்திரம் வந்தது. “நாளைக்கு எங்கே படம் பார்க்கிறே

சொல்லு…” என்று தூரத்தில் கிருஷ்ணப்பா கேட்டான். நாராயணன் பதில் சொல்லாமல்

நடந்தான்.




ரப்பர் டயர்வைத்த வண்டியில் பெட்ரமாக்ஸ் அமைத்து எண்ணெய் கொதிக்க

மிளகாய் பஜ்ஜி தத்தளிக்க பலபேர் தெருவில் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள்.

கண்ணாடிப்பெட்டிக்குள் பொம்மை நங்கைகளின் அத்தனை சேலைகளையும் உருவித்

தீர்க்கவேண்டும் போல ஆத்திரம் வந்தது. மெல்ல நடந்தான். இருட்டு ரேடியோக்

கடையைக் கடந்தான். ‘டாக் ஆஃப் தி டவுன்’ என்கிற ரெஸ்டாரண்ட் வாசலில் ஒரு

கூர்க்கா நிற்க, ஒன்றிரண்டு பேர் அங்கே விளம்பரத்துக்காக வைத்திருந்த

போட்டோக்களை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தனர். இன்று இரண்டு காட்சிகள்,

லிஸ்ஸி, லவினா, மோனிக்கா, டிம்பிள்.. நான்கு அபூர்வ பெண்களின் நடனங்கள்.

மேற்படி நங்கைகள் இடுப்பில் மார்பில் சில சென்டி மீட்டர்களை மறைத்துச்

சிரித்துக் கொண்டிருந்தார்கள்.






அந்த வாசல் இருட்டாக இருந்தது. வெற்றிலை பாக்குப் போட்டு ‘பதக்’ என்று

துப்பிவிட்டு ஒருத்தன் உள்ளே செல்ல, கதவு திறக்கப்பட்டபோது பெரிசாக சங்கீதம்

கேட்டு அடங்கியது.




உள்ளே செல்ல எத்தனை ரூபாய் ஆகும் என்று யாரைக் கேட்பது என்று தயங்கினான். அந்த

கூர்க்காவைப் பார்த்த மாதிரி இருந்தது. வீட்டில் வந்து அம்மாவிடம் சொல்லி

விடுவானோ? நடந்தான்.




சற்று தூரம் சென்றதும்தான் தன்னை ஒருவன் பின்தொடர்வதை உணர்ந்தான். முதலில் அவன்

பேசுவது புரியவில்லை. பின்பு தெரிந்தது. “ஆந்திரா, டமில்நாடு, குஜராத், மலையாளி

கேர்ள்ஸ் சார்! பக்கத்திலேதான் லாட்ஜ். நடந்தே போயிறலாம்.”

நாராயணன் நின்று சுற்றுமுற்றும் பார்த்து “எவ்வளவு” என்றான்.

அவன் சொன்ன தொகை நாராயணனிடமிருந்தது.

”பிராமின்ஸ் வேணும்னா பிராமின்ஸ், கிறிஸ்டியன்ஸ், முஸ்லீம்? வாங்க சார்!”

நாராயணன் யோசித்தான்.






“நிஜம் ஸார் நிஜம்; நிஜமான பெண்கள்!”




நாராயணன் “வேண்டாம்ப்பா” என்று விருட்டென்று நடந்து சென்றான்.



நன்றி - அமரர் சுஜாதா, உயிர் மெய், சிறுகதைகள்