Monday, January 09, 2012

சென்னை புத்தகக்கண் காட்சி - அப்துல்கலாம் உரை - விவசாயிகள், நதி நீர் இணைப்பு ஆர்வலர்கள்க்கு..

சென்னை புத்தகக் காட்சியில் ஞாயிற்றுகிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றிய  உயர் திரு  ஏ பி ஜே அப்துல்கலாம்  கூறியது:

தமிழக நதிகளை இணைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

அவ்வாறு நதிகளை இணைந்தால் தண்ணீருக்காக, அண்டை மாநிலங்களை நம்பியிருக்க வேண்டிய அவசியம் ஏற்படாது

சி.பி - அப்போ ஆந்திரா, கேரளா பண்ற அழிச்சியாட்டங்களை வேடிக்கை பார்க்க சொல்றீங்களா? மத்திய அரசோ, கோர்ட்டோ கூட அவங்களை அடக்க வோ, நல்வழிப்படுத்தவோ கையாலாகாதுன்னு சொல்றீங்களா?

"இந்த வாரத்தில் 2 தமிழ் புத்தகங்களை அருமையான, வாழ்க்கைக்கு மிகவும் உபயோகமான புத்தகங்களை படித்தேன். ஒன்று விவசாயத்தைப் பற்றியது, எப்படி விவசாயம் ஒரு லாபகரமான தொழிலாக மாறி இருக்கிறது என்பதைப்பற்றியும், இன்னொரு புத்தகம், எப்படி செயற்கைக்கோள் தொழில் நுட்பம் நதிகளை பற்றி அறிந்து கொண்டு நம்மை வளப்படுத்த உதவுகிறது என்பதாகும். 

சி.பி - விவசாயம் லாபகரமான தொழில்னா ஏன் விவசாயிகள் தற்கொலை செஞ்சுக்கறாங்க? விவசாயிகளிடம் கம்மி விலைக்கு கொள்முதல் பண்ணி அதிக விலைக்கு மக்களிடம் விற்கும் இடைத்தரகர்கள் தான்  லாபம் பார்க்கறாங்க.. உழவர் சந்தை வாசலிலேயே இந்த அக்கிரமங்கள் நடந்துட்டுதான் இருக்கு..  

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தை சேர்ந்த முனைவர் இ. வடிவேல் தலைமையிலான ஆசிரியர் குழு உழுதவன் கணக்கு (துல்லிய பண்ணையத்தில் பயிர் பாதுகாப்பு அனுபவங்கள்) என்ற ஒரு அருமையான புத்தகத்தை எழுதியிருக்கிறார்கள். இந்த புத்தகத்தில் எனக்கு மிகவும் பிடித்த பகுதி, துல்லிய பண்ணைய திட்டத்தின் மூலம் கடைப்பிடிக்கப்பட்ட சிறு சிறு தொழில்நுட்ப மாற்றங்கள், பெரும் செலவை குறைத்தது மட்டுமின்றி அதிக விளைச்சலையும், நஞ்சற்ற உணவையும் பெற உறுதுணையாக இருந்தது என்பதைப்பற்றி விளக்குகிறார்.

எப்படி ஓரு புதுமையான திட்டத்தை வேளாண்மையில் புகுத்தி அதைக்கடைப்பிடிப்பதினால் விவசாயிகளின் வாழ்க்கையில் மாற்றத்தை கொண்டுவர இயலும், அது மட்டுமல்ல அவர்களின் தனிநபர் வருமானத்தை உயர்த்த முடியும் என்பதைப்பற்றி மிகவும் அழகாக எழுதியுள்ளார்.

1. உளிக்கலப்பை உழவு கோடையில் செய்தால் கோரை முழுமையாக கட்டுப்படுவதுடன், மழை நீர் சேகரிப்பு, நிலத்தடி நீர் மட்டம் உயருதல், மழை நீர் தேங்காமல் இருப்பதால் வேரழுகல், வாடல் மற்றும் பூச்சிகள் இவற்றிலிருந்து விடுதலையும் கிடைத்தது என்கிறார். 2. சொட்டு நீர் அமைப்பு மூலம் நீர் வழங்குவதால் தேவையான நீர் மட்டுமே செடிக்கு கிடைக்கும். இதனால் நீர் விரையம் தவிர்க்கப்பட்டு களை, பூஞ்சாமை மற்றும் பூச்சிகள் வளர்ச்சி குறைக்கப்பட்டது என்கிறார்.

2. துல்லிய பண்ணையத்தில் நிலம் தயார் செய்ய உளிக்கலப்பை, கொக்கிக்கலைப்பை, சட்டிக்கலைப்பை மற்றும் உழவின் முடிவில் மேட்டுப்பாத்தி அமைப்பதாலும் மண் பொலபொலப்பாக இருப்பதாலும் முதல் பயிரின் முடிவில் அடுத்த பயிர் நடவுசெய்யலாம். குறிப்பாக தக்காளிக்கு பின்னர் பீன்ஸ், டபுள் பீன்ஸ், பீர்க்கன், பாகல், வெள்ளரி, நடவு செய்வதால் அடுத்த உழவு செய்யவேண்டிய அவசியம் இல்லை. இதனால் குறைந்தது ஏக்கருக்கு ரூ 2000 முதல் ரூ 2800 வரை சேமிக்கலாம் என்கிறார்.

3. களைகளை கட்டுப்படுத்தபடுவதால் 25-30 சதம் உரம் விரயமாவது தடுக்கப்பட்டு 5-10 சதம் வரை கூடுதல் மகசூல் பெற முடிந்தது. பெரும்பாலான பூச்சி, வைரஸ், பூஞ்சானங்களுக்கு களைகள் புகலிடமாக திகழும். ஆனால் துல்லிய பண்ணையத்தில் களைகள் முற்றிலும் அகற்றப்படுவதால், பூச்சி மற்றும் நோய் சேதம் படிப்படியாக குறைக்கப்பட்டு இறுதியில் கட்டுக்கள் கொண்டு வரமுடியும் என்கிறார்.

4. சொட்டுநீர் அமைப்பு மூலம் தண்ணீரும், உரமும் செல்வதால் தேவையற்ற உரம் விரயமாவது தடுக்கப்படுகிறது. பயிரின் வளர்ச்சிக்கேற்ப உரம் தரப்படுவதால், நோய் மற்றும் பூச்சி வளர்ச்சிக்கேற்ப உரம் தரப்படுவதால், நோய் மற்றும் பூச்சி எதிர்ப்பு திறன் பெற்று கூடுதல் மகசூல் கிடைக்கவும் எதிர்ப்பு திறன் பெற்று கூடுதல் மகசூல் கிடைக்கவும் ஏதுவாகிறது. சாதாரண முறையில் உரமிடுவதால் 20 சதம் வரை விரையமாக அதிக வாய்ப்புள்ளது. ஆனால் இங்கு 95 சதம் வரை உரம் செடிக்கு நேரிடையாக சென்றடைகிறது.

இந்த மாதிரி புத்தகங்கள் படித்த விவசாயிகளின் வாழ்க்கை எப்படி விஞ்ஞானமும், தொழில் நுட்பமும் விவசாயியின் வாழ்க்கைக்கு ஒரு வளமான மாற்றத்தை கொண்டுவர முடியும் என்பதை விளக்குகிறது. அப்படி ஒரு மாற்றத்தை ஒரு புத்தகம் கொண்டுவரும் என்றால், அப்படிப்பட்ட புத்தகம் தான், அதைப்படிக்கும் ஒருவருக்கு அள்ள அள்ள குறையாத கற்பக விருட்சகமாக இருக்க முடியும்.

புத்தகம் நம் வாழ்வில் ஒவ்வொரு பகுதியிலும் இன்றியமையாததாக இருக்கிறது, நம்முடன் நம் வாழ்க்கப்பயணத்தில் நடந்து வருகிறது, இன்ப துன்பத்தில் பங்கு பெற்று, நம்பிக்கை விதையை விதைத்து, வாழ்வை செவ்வனே நடத்த நம்மை செம்மைப்படுத்துகிறது, நமது வாழ்க்கையை மேம்படுத்த அறிவையும், தொழில்நுட்பத்தையும் கொடுக்கிறது, வாழும் முறையை அனுபவத்தின் அடிப்படையில் சொல்லிக்கொடுக்கிறது, நமது கலாச்சாரத்தை, வரலாற்றை, அடுத்த அடுத்த தலைமுறைக்கு எடுத்து செல்கிறது, சமூக பொருளாதார சித்தாந்தத்தை, வளர்ச்சிக்கான அரசியலை சொல்லிக்கொடுக்கிறது.

எவ்வளவு தூரம் கடந்திருக்கிறோம் என்பதில் நம் ஊக்கம் மலர்வதில்லை, இன்னும் எவ்வளவு தூரம் கடக்க இருக்கிறோம் என்கிற சிந்தனைதான் ஊக்கத்தை மலரச் செய்கிறது. நமக்கான வழிகளைப் புலரச் செய்கிறது. அந்த சிந்தனைகளை, வழிகளை நமக்கு புலப்படுத்தும் கருவிதான் புத்தகங்கள்.

இப்படி புத்தகத்தின் பயன்கள் கணக்கிலடங்கா. எனவே தினமும் புத்தகம் படிப்பது வாழ்வில் இன்றியமையாதது ஆகும். தற்காலிக சந்தோஷங்களுக்குத் தலை கொடு்த்து விடாமல் அபாரமான சாதனைகளை நிகழ்த்த முனைபவர்களால்தான் உலகின் வளர்ச்சி உவப்படைகிறது. உலகின் வளர்ச்சியில் உங்கள் பங்கு அவசியம்தானே, அபாரமான சாதனைகளுக்கு அச்சாரமிடுங்கள், புத்தகங்களை படிப்பதன் மூலம்.

நதிநீர் இணைப்பு...

சமீபத்தில் நான் படித்த இரண்டாவது புத்தகம், காந்திகிராம கிராமிய பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் டாக்டர் சோம. இராமசாமி அவர்கள் எழுதிய செயற்கைக்கோள்களின் பார்வையில் தமிழக நதிகளியல் என்ற ஒரு அற்புதமான ஆய்வுக்கட்டுரையை மக்களுக்கு புரியும் விதத்தில் எளிமையாக புத்தகமாக வெளியிட்டுள்ளார்.

அதாவது அவர் சொல்கிறார், நதிகளை நாம் ஒரு நீர் வழங்கும் இயந்திரம் என்ற அளவிலேதான் பார்க்கிறோமேயொழிய நதிகளின் வாழ்க்கை வரலாறுகளைப் பற்றியும் அதன் இயங்கியல் பற்றியும் (River histories and Dynamics) அதனால் உள்ள பல்முனை நன்மைகளைப்பற்றியும் நாம் சிந்திப்பதே இல்லை.

நதிகளின் பிறப்பு, அவை ஒடும் விதம், அவற்றின் பாதைகளிலே ஏற்படும் மாற்றங்கள், மலைப்பகுதி, சமவெளிப்பகுதி மற்றும் கடலோரப்பகுதி ஆகியவற்றில் நிகழும் நதிகளின் செயல்பாடுகளை நாம் ஆராய்ந்து கணித்தோமேயானால், இந்நதிகள் நீர்வழங்கும் அமுத சுரபி மட்டும் அல்ல, அவை பூமியின் மேற்பரப்பியல் மற்றும் அவற்றில் ஏற்படும் மாற்றங்கள், பூமிக்கு கீழே நடைபெறும் புவியியல் மாற்றங்கள், கனிம வளம், பூமி நகரும் தன்மை மற்றும் பூகம்பம், கடலுக்கும் நதிகளுக்கும் இடையே நடைபெறும் செயல்பாடுகள், கடல்மட்ட மாறுதல்கள், கடந்த கால வெள்ளங்கள் மற்றும் எதிர்கால வெள்ளங்களின் கணிப்பு, காலநிலை மாற்றம், பண்டைய நாகரீகம், அணைகள், நீர்த்தேக்கங்கள் அமைக்க ஏதுவான இடங்கள் ஆகியவற்றைப் பற்றிய உண்மைகளையும் மற்றும் சான்றுகளையும் தன்னிடத்தே கொண்டுள்ளன என்பது புலனாகும்.

ஆகவே நதிகளின் வாழ்க்கையில் குறுக்கிடாமலும் அவற்றின் வளம் குன்றாமல் நதிகளின் வளத்தைப்பயன்படுத்தினால் நதிகளைப் பாதுகாப்பதோடு எதிர்காலச் சந்ததியினருக்கு விட்டுச் செல்ல முடியும் என்பதை மிகவும் அழகாக, செயற்கைக்கோள் படங்களின் மூலம் இன்னும் எவ்வளவு நாம் அறிந்து கொள்ளவேண்டும், நதிகளைப்பற்றி புரிந்து கொள்ளவேண்டும் என்பதை மிகவும் அருமையாக விளக்குகிறார்.

இதில் என்னைக்கவர்ந்த ஒரு பகுதி காவிரி ஆற்றைப்பற்றியது. அவரது எண்ணங்களின் படி செயற்கைக்கோள்கள் மூலம் காவிரி வடிநிலத்தில் வடதமிழ் நாட்டில் ஆராய்ந்தவை பல வியத்தகு உண்மைகளை வெளிக்கொணர்ந்துள்ளன.

காவிரி ஆரம்பத்தில் கொகனேக்களில் இருந்து 8000 ஆண்டுகட்கு இடைப்பட்ட ஒரு காலக் கட்டத்தில் உருவாகி, 3000 ஆண்டுகட்டு முன்பு வரை ஒடியிருக்கிறது.
மங்களூர் - பெங்களூர்-சென்னைப் பகுதியில் பூமி ஆர்ச் போன்று உயர ஆரம்பித்ததால் கொஞ்சம் கொஞ்சமாக 5 முறை தடம் மாறி தெற்கே நகர்ந்து தடம் மாறி ஒடியிருக்கிறது. பூமியின் உயர்வுக்கு ஈடு கொடுக்க முடியாததால் முதல் பாதையை விட்டு விட்டு இரண்டாம் பாதை ஆக மேற்கே மேட்டூர் நீர்த்தேக்கதிலிருந்து கிழக்கே கடலூர் வரை 2700-2300 ஆண்டுகள் காலகட்டத்தில் தற்காலப் பொன்னையாற்றின் பாதையில் ஒடி, கடலூரில் கடலில் கலந்திருக்கிறது.

கடலூர் பகுதியில் அலைகள், ஆழிப்பேரலைகள், பிற நதிகளால் வெள்ளம், பூமி கீழே செல்வதால் காவிரி பாதை 2ல் ஏற்பட்ட தடுமாற்றம், வடக்கு தெற்காக உருவாகி வரும் வெடிப்புகளின் தாக்கம் மற்றும் தெற்கிலிருந்து வளர்ந்து வந்த அமராவதியின் உபநதியின் கையகப்படுத்துதல் ஆகியவற்றால் பாதை 2ஐ முற்றிலுமாக விட்டு விட்டு பாதை 3ஆன திருச்சிராப்பள்ளி சமவெளியை அடைந்திருக்கிறது. திருச்சிராப்பள்ளியில் 12 தடங்களில் தெற்கே புதுக்கோட்டையிலுருந்து வடக்கே, தற்கால கொள்ளிடத்திற்கு தெற்கே வரை இன்றிலிருந்து 2300 ஆண்டுகள் முதல் 900 ஆண்டுகள் வரை ஒடியிருக்கிறது.

ஆரம்பத்தில் திருச்சியிலிருந்து புதுக்கோட்டை வழியாக இப்போதைய வெள்ளாற்றில் தடம் 7 ஆக ஒடிய காவிரி கொஞ்சம் கொஞ்சமாக வடக்கே நகர்ந்து தற்கால அம்புலியாறு, அக்னியாறு, வெண்ணாறு, வெட்டாறு, குடமுருட்டி ஆறு, பழம்காவிரி ஆகிய பல தடங்களின் வழியாக ஒடி பின்னர் கொள்ளிடத்தில் தடம் மாறி 750 ஆண்டுகட்கு முன்பு நிலை கொண்டுள்ளது.

இப்படி பாதை மாறும் பொழுது, வாழ்க்கை முறை மாறுகிறது, ஏற்றத்தாழ்வு ஏற்படுகிறது, விவசாய முறையில் மாற்றம் வருகிறது, கலாச்சாரம் மாறுகிறது. அதைப்பற்றி படிக்கும் போது எப்படி நதிகள் நம் வாழ்க்கையில் ஒன்றியிருக்கிறது என்பது புரியும். அதன் தன்மைகளை புரிந்து கொண்டேமேயானால், நதிகளை இணைந்து, தமிழகத்திலேயே நீர்வழிச்சாலைகளை அமைத்து நாம் நம்மை வளப்படுத்திக்கொள்ளலாம்.

அடுத்த மாநிலத்தை நம்பி தமிழகம் இருக்க தேவையில்லை. வருடா வருடம் வெள்ளம்போல் ஒடும் காவிரிமூலம், வைகையையும், பாலாற்றையும், தாமிரபரணியையும் இணைந்து நீர்வழிச்சாலையை ஏற்படுத்தினால், வெள்ளத்தை தேக்கிவைக்கும் நீர்வழி அணையாக அது செயல் படும். அந்த நீரை தமிழகமே, வேண்டிய பகுதிக்கு திருப்ப முடியும். அதில் கிட்டத்தட்ட 100 டி.யெம்.சி நீரை வருடாவருடம் தேக்கிவைக்க முடியும். அப்படி தேக்கி வைக்கும் பட்சத்தில், வரண்ட தமிழகம் வருடம் தோறும் வளமான தமிழகமாக கண்டிப்பாக மாறும்.

அப்படிப்பட்ட ஒரு தொலை நோக்கு திட்டத்தை, கண்டிப்பாக செய்ய முடியும். அப்படி செய்ய முடியும் என்ற மனப்பான்மை கொண்ட தலைமையாலும், அதை செயல்படுத்த கூடிய இளைஞர்களை கொண்ட தமிழக தொழில் நுட்ப வல்லுனர்களைக்கொண்டு, சாதிக்க முடியும் என்ற எண்ணம் கொண்ட தமிழக அரசு அதிகாரிகளைக்கொண்டும், ஒரு Public Private Partnership உடனும், உலக வங்கியின் உதவியுடனும், மத்திய அரசின் உதவியுடனும், தமிழக அரசு செயல் படுத்த நினைத்தால் தமிழகம் கண்டிப்பாக என்றைக்கும் வற்றாத வளமான நாடாக மாறும் என்பது திண்ணம்.

அப்படிப்பட்ட ஒரு வளமான தமிழகத்தை 2020க்குள் கண்டிப்பாக நான் காண்பேன் என்ற கனவு எனக்கு இருக்கிறது. அதே கனவு தமிழக மக்களுக்கும், தமிழக அரசிற்கும், தமிழக அரசியல் கட்சிகளுக்கும், அரசு அதிகாரிகளுக்கும், தொழில் நுட்ப வல்லுனர்களுக்கும் ஏற்படும் என்று நம்புகிறேன். அந்த கனவு, கனவு நினவாகும் வரை அவர்களை தூங்கவிடாது,"

12 comments:

ராஜி said...

படிச்சுட்டு வரேன்

ராஜி said...

சென்னை புத்தகக்கண் காட்சி - அப்துல்கலாம் உரை - விவசாயிகள், நதி நீர் இணைப்பு ஆர்வலர்கள்க்கு..
>>
ஆர்வலர்கள்க்கு இல்லை சிபி சார். ஆர்வலர்களுக்குன்னு இருக்கனும். டியூசன் ஃபீஸை என் அக்கவுண்ட்ல கட்டிடுங்க.

Agarathan said...

கேட்கறதுக்கு நல்லா இருக்கு சிபி சார் ஆனா இதெல்லாம் நம்ம நாட்டுல நடக்குமா.....

kowsy said...

அற்ப்புதமான பதிவு. நதி மூலம் பார்த்திருக்கின்றீர்கள்.. உண்மையில் நீரருவியில் நீராடினால். உடல் நோய்கள் தீரும் என்பது யாவரும் அறிந்ததே. நீர்வளம் நிறைந்த இந்திய நாட்டில் அவ்வளத்தைச் சரியான முறையில் பயன்படுத்தினால் எத்தனையோ பலன்களில் அடையலாம். காவிரி பற்றிய அறிவைத் தந்திருக்கின்றீர்கள் . மிக்க நன்றி

இராஜராஜேஸ்வரி said...
This comment has been removed by the author.
sutha said...

ஒவ்வொரு தமிழனும் சிந்திக்க வேண்டிய விஷயம் இது - நல்ல பதிவு. பதிவின் இடையே சிபி கமெண்ட் நச். நானும் ஒளிமயமான தமிழ் நாட்டை காண விழைகிறேன்

sutha said...

சென்னைக்கு எப்போ போனீங்க - சொல்லவே இல்லை?

வவ்வால் said...

சி.பி,

நன்றாக எழுதியுள்ளீர்கள்!.

முதலில் மரபு வழி விவசாயம் சரி இல்லைனு தீவிர பண்ணையம்னு சொல்லி இரசயண உரம் போட சொன்னாங்க. , அப்புறம் சஸ்டெய்னபில் அக்ரி -நீடித்த பண்ணையம் சொன்னாங்க ,அப்புறம் ஒருங்கிணைந்த பண்ணையம் சொன்னாங்க, நடுவில ஸீரொ காஸ்ட் விவசாயம்னு பேசினாங்க, இபோ துல்லிய பண்ணையம் சொல்றாங்க. நெல்லுக்கு செம்மை நெல் சாகுபடி சொல்றாங்க.

இப்படி ஓரு முறையைப்பத்தி சொல்லிட்டு ,அது விவசாயிகளால் பெரும் அளவு பின்ப்பற்றப்படுவதற்குள் அடுத்து ஒன்றைப்பேசும் இந்த அறிவாளிகளை நம்பி எதுவும் செய்ய முடியாது.

சொட்டு நீர்ப்பாசனத்தை எப்படி நெல்லுக்கு செய்வாங்களாம்? தமிழ் நாடு முழுக்க தோட்டப்பயிரா செய்ய சொல்லுறாரா துல்லிய பண்ணையம் மூலம்?


நதிகள் எதுவும் தேசிய மயமில்லை. ஒரு மாநிலம் நினைத்தால் தான் பாட்டுக்கு இணைக்கவோ, அணைக்கட்டவோ முடியாது.அதுக்கு நடுவண் அரசு தான் வழி செய்யணும் என்பது ஒரு முன்னால் அதிபருக்கு தெரியாமல் போச்சே :-))

என்னோட இந்த விவசாயப்பதிவுகளையும் பாருங்க,


1) விவசாயி படும் பாடு-1

2)விவசாயி படும் பாடு-2

இந்தப்பதிவுகளையும் பார்க்கவும்.

1)பஞ்ச கவ்யம்

2)காணாமல் போகும் நாட்டுக்காளைகள்-1

3)காணாமல் போகும் நாட்டுக்காளைகள்-2

4)நடவு எந்திரம்

5) ஒருங்கிணைந்த விவசாயம்

mozhiinfys said...

இன்னும் 4 பதிவுகளில் 1000 த்தை தொட போகும் உங்களுக்கு முன் (advance) வாழ்த்துகள்

Anonymous said...

இன்னும் 4 பதிவுகளில் 1000 த்தை தொட போகும் உங்களுக்கு முன் (advance) வாழ்த்துகள்

Anonymous said...

1000 மாவது பதிவு என்ன? என்ன்? என ஆவலுடன் எதிர்பார்க்கும் பதிவுலக மன்னன் சிபி சார் ரசிகர்கள்..... 1000 நாளைக்கா? நாளை மறுநாளா?

RAMA RAVI (RAMVI) said...

மிக அருமையான பதிவு. சிறப்பான இரண்டு புத்தகங்களை எங்களுக்கு அறிமுகம் செய்து இருக்கீங்க, நன்றி.